உலகில் ஒவ்வொருவரும் அவரவருக்கு அவசியமானத் தேவைகளை சொல்லி இறைவனிடம் கேட்கிறோம்.
தற்போது என்ன தேவைப் படுகிறது? நாளை என்னத் தேவைப்படும்? என்பதை சிறிதளவு நம்முடைய புலனுக்கு எட்டுகின்ற வரையில் மட்டுமே கேட்போம்.
இதைவிடவும் ஒவ்வொருவருடைய தற்போதையத் தேவை என்ன? எதிர்காலத் தேவை என்ன? என்பதுடன் மேலதிகமாக மரணித்தப் பின் குடியேறுகின்ற வீட்டின் (கப்ரின்) நிலை என்ன? நிரந்தரமான மறுமையின் (சொர்க்கமா, நரகமா என்ற) நிலை என்ன? என்பவற்றை துல்லியமாக அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மேற்காணும் மூன்று கட்டங்களில் சிறந்தவைகளை அடைந்து கொள்வதற்காக தொழுகையின் ஊடே வலிமையான துஆக்களை கேட்க வைத்து நிறைவேற்றிக் கொடுக்கிறான்.
தொழுகையின் முதல் நிலையில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுகிறோம்.
1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
3. தீர்ப்பு நாளின் அதிபதி.
4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
5. எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
6. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. 7. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.
மேற்காணும் திருமறைக்குர்ஆனின் வசனங்களை ஒருவர் தொழுகை;கு வெளியில் ஓதினால் எழுத்துக்குப் பத்து நன்மைகள் இதையே அவர் தொழுகையில் ஓதினால் அவரது தலை எழுத்தையே மாற்றும் வலிமை வாய்ந்த துஆவாக மாறிவிடுகிறது, வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு திருப்பி விடும் சக்தி வாய்ந்த துஆவாக மாறிவிடுகிறது.
மாற்றிக் காட்டிய வரலாறு. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த வழிகெட்ட மக்கள் இறையில்லம் கஃபாவில் நிர்வாணமாக நின்று சீட்டி அடித்து, கைதட்டி இறைவணக்கம் செலுத்தினார்கள் அந்த இறைவணக்கம் அவர்களை நேர்வழியில் செலுத்த வில்லை, செலுத்தவும் முடியாது. ஆனால் அதே மக்கள் இஸ்லாத்தை தழுவியப் பின் அவர்களை மேற்காணும் வலிமை வாய்ந்த துஆ வுடன் கூடிய தொழுகை வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு மாற்றியது.
எந்தளவுக்கென்றால் சிறிது காலத்தில் அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பொழுது இந்த வெற்றி வீரர்கள் தங்களது வெற்றியை கொண்டாடுவதற்கு மக்கமா நகர வீதிகளில் பட்டாசுகளை கொளுத்திப் போட்டு ஆனந்தக் கூத்தாடுவார்கள், கண்ணில் கண்டவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்துவார்கள், சிறை பிடிப்பார்கள் என்ற வழமையான பீதியில் மக்களெல்லாம் தங்களது வீடுகளை இழுத்துப் பூட்டிக்கொண்டு உள்ளே பதுங்கிக் கொண்டனர்.
ஆனால் இவர்களோ அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக இறையில்லம் கஃபாவில் இறைத் தூதருடன் வெற்றியை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தொழுது ஸஜ்தாவில் வீழ்ந்து கிடந்தார்கள்.
இதைக் கண்டு நெகிழ்ந்து போன அந்த மக்கள் அவர்களை மனிதர்களாக மாற்றிய வழியில் நடை போட தங்களை தயார் படுத்திக் கொண்டு சத்திய தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதி பிரமானம் எடுத்துக் கொள்வதற்காக பூட்டிய கதவுகளைத் திறந்து கொண்டு ஆனந்தமாய் ஓடி வந்து அணி, அணியாய் திரண்டனர். அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும்.
மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர்.
மேற்காணும் அருள்மறை வசனங்கள் வலிமை மிக்க துஆவாக இருப்பதால் தான் இமாம் அந்த வசனங்களை ஓதி முடித்ததும் வானவர்கள் அணிவகுத்து நின்று ஆமீன் கூறுகின்றனர் என்று அவர்களுடன் நாமும் ஆமீன் கூற வேண்டும் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள்.
'இமாம் ' கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்' எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன்இ மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 782
மேற்காணும் திருமறைக்குர்ஆனின் வசனங்களை தினந்தோறும் தொழுகையில் ஓதுபவர்களின் முன் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டு தனது அருளைப்பெற்ற நல்லடியார்கள் சென்ற வழியில் பயணிக்கச் செய்கிறான்.
அல்லாஹ்வின் அருளுக்குரிய நேர்வழிப் பெற்ற அந்த மக்கள் யார் ? என்பதை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் கீழ்காணுமாறுப் பட்டியலிடுகின்றனர்.
4 :69. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
இறiவா ! என்னை உனது அருளைப் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர் தியாகிகளுடன் நல்லோர்களுடன் இணைத்து வைப்பாயாக ! என்று இறைத்தூதர் இறைவனிடம் கேட்டதை நான் செவியுற்றேன் என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார் புகாரி: 4586.
மறுமையில் ஒரு சாட்டை அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகை விட, உலகின் செல்வங்களை விட சிறந்தது என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள் புகாரி: 6415
ஆனால் தொழுகையாளிகள் மறுமையில் இருக்கும் இடமோ அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், உயிர்தியாகிகள், உண்மையாளர்கள், நல்லோர்களுடனாகும் இதை விட வேறு பாக்கியம் எதாவது உண்டா ? சிந்தியுங்கள் சகோதரர்களே !
உறக்கமா ? கலக்கமா ?
இருள் சூழ்ந்த நம்முடைய தாயின் கருவறையில் நிம்மதியாக உறங்கி விழித்தைதைப் போல் இருள் சூழ்ந்த கப்ருக்குள் எந்த பீதியும், அச்சமுமின்றி மறுமை கூட்டப்படும் வரை நிம்மதியாக உறங்கி எழுவதற்காக இதேத் தொழுகையின் அத்தஹயாத்தின் இறுதி இருப்பில் பெருமானார்(ஸல்)அவர்கள் நான்கு கோரிக்கைகள் அடங்கிய வலிமை வாய்ந்த துஆ ஒன்றையும் ஓதி அல்லாஹ்விடம் உதவி தேடும்படி கூறி இருக்கின்றார்கள்.
'அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத்இ வமின் ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால்.
பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும்இ கப்ரின் வேதனையிலிருந்தும்இ வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும்இ தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 924
மேற்காணும் நேர்வழிக்கான அல்லாஹ்வின் அருள்மறை வசனத்தையும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அத்தஹயாத் இருப்பின் துஆவையும் தொழுகையில் ஓதாமல் வெளியில் இருந்து கொண்டு ஓதினால் பயன் தராது.
காரணம் மறுமையில் முதலில் விசாரிக்கப்படுவது தொழுகை தான் என்றும் அது முறையாக இல்லை என்றால் அதற்கடுத்து விசாரனைக்குட்படுத்தப்படும் அனைத்தும் பாழ்படுத்தப்பட்டிருக்கும் என்றும் பெருமானார்(ஸல்)அவர்கள் கூறிவிட்டதால் மேற்காணும் வலிமை மிக்க துஆக்களை தொழுகையில் ஓதினால் மட்டுமே பயனுள்ளதாக அமையும்.
இன்னும் இறைவன் தன் திருமறையில் யார் என்னை நினைவு கூறுகின்றாரோ அவரை நான் நிணைவு கூறுகிறேன் என்றும் பொறுமையுடன் தொழுகையில் என்னிடம் உதவித் தேடுங்கள் என்றுக் கூறுகிறான்.
எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். 2:152.,153.
வீட்டில் இருந்து கொண்டு, ரோட்டில் நடந்து கொண்டு. சுந்தைக் கடையில் நின்று கொண்டு இறைவனை நினைவுக் கூற முடியாது இறைவனை நினைவுக் கூருவதற்கு ஏற்ற இடம் பள்ளிவாசல் தான், அவனிடம் உதவித் தேடுவதற்கு சிறந்த தருனம் தொழுகை தான் என்பதால் மேற்காணும் வலிமை மிக்க துஆக்களை தொழுகையில் ஓதினால் பயனுள்ளதாக அமையும். வெளியிலும் கேட்கலாம் ஆனால் அவ்வாறு கேட்பவர்கள் தொழக் கூடியவர்களாக இருப்பார்கள்.
மனித மிருகங்ககளாக இருந்த மக்காவாசிகளை மனிதாபிமானமிக்க உயர்ந்த மனிதர்களாக மாற்றியது அவர்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இறைவனிடம் கேட்ட உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம் , எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. என்ற வலிமை மிக்க துஆவாகும்.
அல்லாஹ்வை தொழுகிறோம் என்றுக்கூறி நாம் பள்ளிக்குச் சென்றாலும் தொழுகையின் வாசகங்களில் அடங்கி இருக்கும் வார்த்தைகளில் தொழப்படும் இறைவனைப் புகழ்வதை விட தொழுவோரின் தேவைகளுக்கான வார்த்தைகள் அதிகம் அடங்கி இருப்பதை கவனிக்க வேண்டும்.
மேற்காணும் சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்தின் 7 வசனங்களில் இறைவனைப் புகழ்வது 3 வசனங்களும், மனிதனின் தேவைளுக்காக கேட்கப்படுவது 4 வசனங்களுமாகும்.
அத்தஹயாத்தின் நீண்ட இருப்பில் ஓதப்படுகின்ற வார்த்தைகளில் ஓரிரு வார்த்தைகளே அல்லாஹ்வைப் புகழ்வதாக இருப்பதும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் கூறுவதாகவும் இருக்கிறது மீதி அனைத்தும் நம்முடைய உலக வாழ்க்கை, கப்ரு வாழ்க்கை, மறுமை வாழ்க்கைக்காக அமைந்திருப்பதை கவனிக்க வேண்டும்.
இதன் மூலம் இஸ்லாம் மனிதனின் முன்னேற்றத்திற்காகவே அருளப்பட்ட அல்லாஹ்வின் அருட்கொடை என்பது தெளிவாகும்.
யார் மேற்காணும் நேர்வழிக்கான அல்லாஹ்வின் அருள்மறை வசனத்தையும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அத்தஹயாத் இருப்பின் துஆவையும் தொழுகையில் ஓதவில்லையோ அவரது பாதங்கள் தாமாக அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானோர் வழியில் திரும்பிக் கொள்ளும். இந்த துர்பாக்கிய நிலையிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காக்க வேண்டும்.
வல்ல அல்லாஹ் நம் அனைவருடைய பாதங்களையும் அவனின் அருளை அடைந்த நல்லடியார்கள் சென்ற வழியில் திருப்பி விடுவதுடன், இறப்பின் சோதனையிலிருந்தும், கப்ரு வேதனையிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் காத்தருள்வானாக !
No comments:
Post a Comment