KILIYANUR ONLINE

Wednesday, 24 March 2010

கிளியனூர் வரலாறு (KILIYANUR)



நஞ்சை வளமிக்க தஞ்சை மாவட்டத்தின் கிழக்கு பகுதியினை நிர்வாக வசதிக்காக காயிதேமில்லத் நாகை மாவட்டம் என்று பிரித்தனர்.

அச்சுக்கலையை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப் படுத்திய டச்சுக்காரர்களின் துறைமுகப் பட்டிணமாகிய தரங்கம்பாடி தாலுக்காவில் காவிரியின் உபநதியாகிய வீரசோழன் ஆற்றின் வடகரையில் உள்ளடங்கி அமைந்த ஊர் தான் கிளியனூர்.

மயிலாடுதுறை தான் அருகிலுள்ள நகர் அரசுடையமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், பல்வேறு பள்ளி, கல்லூரி, கல்விச் சாலைகள், நூற்றுக் கணக்கான வர்த்தக நிறுவனங்கள் சூழ்துள்ள அழகிய நகர் தான் மயிலாடுதுறை.

1967 முதல் பொறையாறு வீரப்பாபிள்ளையின் சத்திவிலாஸ் தொடங்கி இன்று அரசுடமையாக்கப்பட்ட போக்குவரத்து பேருந்துகள் வரை மட்டுமின்றி பல்வேறு சிற்றுந்துகள் (மினி பஸ்) வரை கிளியனூருக்கும் மயிலாடுதுறைக்கும் பாலமாக விளங்கி வருகின்றன.

30.10.1953 முதல் கிளியனூர் மின்சார வசதி பெற்ற ஊராக விளங்கி வருகிறது.

1955 ஆண்டு முதல் முற்றிலும் ஊர்ஜமாஅத்தார்களால் கட்டி முடிக்கப்பட்ட லோக்கல் பண்டு மருத்துவமனை இன்று அரசு மருத்துவமனையாக இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கி வருகிறது.

கிளியனூர் ஜமாஅத்துக்குச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் தான் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளியனூர் புதுத் தெருவிலும் பிறகு ஐ.எப்.எஸ். மெயின் ரோட்டிலும் இயங்கி வந்த ஆரம்பப் பள்ளிக்கூடம் 1960க்குப் பிறகு அரசு மருத்துவமனைக்கு அருகில் கட்டப்பட்டு முதல்வர் கர்மவீரர் காமராஜ் திறந்தார்.

அமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் திறந்து வைத்த இடைநிலைப் பள்ளிக்கூடமும் கிளியனூர் ஆற்றங்கரை பாலமும் 1959ல் திறந்து வைக்கப்பட்டது. பிறகு வேளாண்துறை அமைச்சர் மண்ணை நாராயணசாமி அவர்களால் 1972-ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளியாக ஏற்றம் பெற்று வலிவும் பொலிவும் பெற்று அறிவொளி பரப்பி வருகிறது.

கிளியனூர் பள்ளிக்கூடம் என்பது நூற்றாண்டை கடந்த வரலாறாகும். பள்ளிக்கூடத்து பாய் வீடு என்று பள்ளிவாசல் தெருவில் ஒரு குடும்பம் இருப்பதை அறிவோம். பள்ளிக்கூடத்து பாய் ஜனாப் இலியாஸ், ஜனாப் இஸ்மாயில் சகோதரர்களின் தாத்தா ஜனாப் முஹம்மது யூசுப் அவர்கள் தான் கிளியனூர் பள்ளிக்கூடத்தின் முதல் தமிழ் ஆசிரியர் என்பதும் மெயின்ரோடு ஓ.எம்.ஏ.ஹிதயத்துல்லா கப்பங்காரங்கவீட்டு நூர்தீன் இவர்களின் தாத்தா தமிழ் புலவராக இருந்தவர் என்பதும் கிளியனூர் சரித்திரம்.

இடைநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக ஏற்றம் பெற மவுண்ட்பேட்டன் அவர்களின் குமாரர்கள் கவிஞர் ஜனாப் அல்ஹாஜ் எஸ்.ஏ.வஹாப், ஜனாப் அப்துல்ரஹிம், ஜனாப் ஷம்சுதீன் ஆகியோர் 1989ல் 12500 ரூபாய் வழங்கியுள்ளார்கள் என்பது நன்றியோடு நினைவு கூறத்தக்கது.

பள்ளிக்கூடத்தின் பிரமாண்டமான இரண்டு பெரும் கட்டிடங்களை நமதூர் பெருந்தனக்காரர் கொடைவள்ளல் எஸ்.ஏ.மஜீது அவர்களின் பொருளாதாரத்தின் துணைக்கொண்டு ஹாஜியார் ஓ.முஹம்மது ஷரீப் அவர்கள் கட்டி கொடுத்ததையும் நம்மால் மறக்க இயலாது.

அதைப் போன்றே 1959ம் வருடம் கிளியனூர் பெரிய ஹஜ்ரத் மவுலானா மவுலவி அல்ஹாஜ் ம.அப்துல் ஹமீது பாஜில் நூரீயி (வலியுல்லாஹ்) அவர்களை முதல்வராக் கொண்டு கொடைவள்ளல் அல்ஹாஜ் எஸ்.ஏ.மஜீது அவர்கள் “மத்ரஸதுர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி” யை கட்டி வக்பு செய்த வரலாறும்.

கிளியனூரின் நலத் திட்டங்களுக்கெல்லாம் சீனா அனா – வாரி வழங்கிய கொடைத்திறனும் கிளியனூர் மக்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறத்தக்க நிகழ்வுகளாகும்.

கிளியனூரின் தெருக்கள்

முதலில் பெரியப்பள்ளிவாசல் தெரு என்பது அலியார் மேடையைத் தாண்டி கீழத்தெரு ஹாஜா நஜ்முதீன் பி.எஸ.சி. வீடுவரை நீண்டது.

அலியார் மேடையிலிருந்து ஆட்டுக்காரர் வீடுவரை தெற்கு தெருவும்,
பெண்கள் மத்ரஸாவிலிருந்து ஏ.முஹம்மது யாக்கூப் வீடாகிய சாந்து வீடுவரை ஒரு மாநில மாநாடே நடத்தக்கூடிய அகலத்துடன் பரந்து விரிந்து கிளியனூரின் விஐபிக்களான சீனா அனா ஹாஜியார் போன்றவர்களின் வசிப்பிடம் அமைந்த நடுத்தெருவும்,
சின்னப்பள்ளிவாசலிருந்து ஹஸன் முஹம்மது வீடுவரை அமைந்த சின்னப்பள்ளிவாசல் தெரு வீடு குளத்தங்கரையிலிருந்து முஹம்மது சுல்தான் வீடுவரை மேற்கில் அமைந்த புதுத்தெரு
மற்றும் மேற்கு கிழக்கில் அமைந்த மெயின்ரோட்டில் 1970ல் வீடு கட்டிய ஹாஜி ஜே.கமாலுதீன் அவர்களின் இல்லத்திலிருந்து மேற்கே கல்லுக்கடை மதகுவரையும் கிழக்கே கே.எம்.ஏ.வஹாப் அஜீஸ் வீடுவரையும்,
அமைந்த நீண்ட நெடிய தெருக்கள் மற்றும் அகரவல்லம் ஆகக்கூடிய பத்து பன்னிரெண்டு தெருக்களாக இருந்த கிளியனூர் காயிதேமில்லத் தெரு, ஹாஜியார் தெரு தொடங்கி இன்று சுமார் முப்பது தெருக்களை உள்ளடக்கிய மாபெரும் கிராமாக பல்கிப் பெருகிவிட்டது.

தெற்குத்தெரு ஆட்டுக்கார வீட்டின் எதிரில் தாண்டுவெட்டி ஆங்கில Y வடிவில் இருக்கும் பெரம்பூர் எடக்குடி மக்கள் கிளியனூர் உள்ளே வர தாண்டுவெட்டியைத்தான் பயன்படுத்தி வந்தனர்.மாட்டு வண்டிகள் எல்லாம் வல்லம் கிராமம் வழியாகவோ கடக்கம் கிராமம் வழியாகவோ வரவேண்டி இருந்தது.

ஹாஜியார் ஓ.முஹம்மது ஷரீப் அவர்கள் எஸ்.ஏ.மஜீது அவர்களின் பொருளாதார ஒத்துழைப்புடன் வீரசோழன் ஆற்றங்கரை வரை தெருவிலிருந்து புதிய கப்பிச் சாலை போட்டு அதற்காக நமதூர் ஜமாஅத்தார்களின் விளைநிலங்களை இலவசமாகவே பத்தா முஹம்மது யூசுப் கையகப்படுத்தி 1959ஆம் ஆண்டில் புதிய பாலமும் கட்டி முடிக்கப்பட்டது.அமைச்சர் பக்தவச்சலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டக் கலெக்டர் திருமிகு.ராமகிருஷ்ணன் ஐசிஎஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு அவர்களால் 1959ல் திறப்புவிழா கண்டது.அவ்வாண்டே ஹாஜியார் காலமாகி விட்டார்கள்.
அதைப்போன்றே மயிலாடுதுறையிலிருந்து கிளியனூருக்கு பேருந்து வசதி வேண்டும் என்பதற்காக பெருஞ்சேரி உள்ளடக்கிய சுந்தரப்பஞ்சாவடி வரையிலான கப்பிச்சாலையையும் ஹாஜியாரின் முழுமுயற்சியில் போடப்பட்டது.

கிளியனூர் சுந்தரப்பன் சாவடி இணைப்புச் சாலை அன்று முதல் இன்றுவரை ஹாஜியார் ரோடு என்றே அழைக்கப்படுகிறது. அதற்கான கல்வெட்டு சுந்தரப்பன் சாவடியில் நீண்டகாலம் இருந்தது. நாளடைவில் அது காணமல் போய்விட்டது.

கிளியனூரில் சாதிக்கப்பட்ட நலத்திட்டங்கள் பள்ளிக்கூடம், மருத்துவமனை, தபால்நிலையம் ,டெலிபோன் எக்சேஞ், ஐஒபி வங்கி, வசதிகள் மின்சார வசதிகள் எல்லாமும் கிளியனூருக்கு மட்டுமல்ல கிளியனூரைச் சுற்றியுள்ள கோவில்கிளியனூர், பழவலாங்குடி, கடக்கம், முத்தூர், கீழப்பெரம்பூர், வேலூர், மேலப்பெரம்பூர், கீழவல்லம், அகரவல்லம், எடக்குடி, வல்லம், பெருஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள தலீத் குடியிருப்புகள் உட்பட எல்லா சமூக மக்களும் பயன்படத்தக்கதாகவே விளங்கி வருகின்றன.


1956இல் தொடங்கப்பட்ட தபால் தந்தி அலுவலகத்தில் சிலவருடங்கள் முத்தவல்லி எஸ்.எம்.சுபைர் அவர்கள் தபால் தந்தி அதிகாரியாக இருந்தார்.1976 ஆண்டு கிளியனூருக்கு தொலைபேசி வசதி கிடைத்தது. ஒன்பது இணைப்புகளை மாஸ்டர் வீட்டு ஜனாப் இனயத்துல்லா பி.காம் அவர்கள் முயற்சியில் தொடங்கப்ட்ட கிளியனூர் தொலைப்பேசித்துறை இன்று ஆயிரம் இணைப்புகளை நெருங்கி வருகிறது.

ஆறுபாதி ஜி.ராஜேந்திரன் பி.ஏ. ஐஓபி வங்கி மேலாளராக இருந்தார்.அவர் கிளியனூர் இளைஞர்கள் பலரின் கல்லூரித் தோழர்.அவரின் ஒத்துழைப்போடு 1980 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளியனூரில் தனது 795வது கிளையை துவங்கியது.அல்ஹாஜ் எஸ்.ஏ.ஷம்சுதீன் அவர்கள் தன்னுடைய வசிப்பிடத்தை மேல்மாடிக்கு மாற்றிக்கொண்டு கீழ்தளத்தில் வங்கி சேவைக்காக தனது இல்லத்தை கொடுத்துதவினார்.

பிறகுதான் வங்கிக்கான நிரந்தர கட்டிடத்தை புதுத்தெரு ஜனாப் ஏ.கே.ஷம்சுதீன் பி.எஸ.சி கட்டிக் கொடுத்தார்கள்.அல்ஹாஜ் ஓ. அப்துல்கரீம் அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் 1971 அப்போது கலைஞர் மு.கருணாநீதி முதல்வராக இருந்தார். கழகத்தின் பொருளாளராக இருந்த எஸ்.ஜே.சாதிக்பாட்சா பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வகித்தார்.

1967 முதல் பேருந்து வசதி இருந்தும் கூட முறையான பேருந்து நிலையம் கட்டப்படவில்லை.1972க்குபப் பிறகு சங்கத்திற்கு எதிரில் கட்டப்பட்டு 1973ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி அமைச்சர் எஸ்.ஜே.சாதிக்பாட்சா அவர்களால் திறக்கப்ட்டது.

1967- ஆண்டுகள் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைப்பெற்று வந்த காரணத்தால் அதற்குப்பிறகு நடைப்பெற்ற பல்வேறு நலத்திட்டங்களுக்கு நமதூர் பி.கிருஷ்ணமூர்த்தி திமுகாவின் முக்கிய பிரமுகர் என்பதால் நாட்டாண்மை ஜனாப் மு.அபுல்ஹசன் அவர்களுடன் இணைந்து செயலாற்றியதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

கடைசிவரை கழகக் கண்மணியாக வாழ்ந்தாலும் சிறந்த மனிதராக திகழ்ந்தவர் திருமிகு.பி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். மயிலாடுதுறையில் குடியிருந்தாலும் கிளியனூர் பி.கிருஷ்ணமூர்த்தி என்றே தன்னை அழைப்பதை விரும்புவார். மேலும் ஜனாப் எஸ்.ஏ.சம்சுதீன் அவர்களின் பள்ளித் தோழர் என்ற போதும் எஸ்.ஏ.எஸ். ஆவர்களை முதலாளி என்றே மரியாதையோடு அழைப்பார்.அவரைப்போல் சமூக ஆர்வலர்களை காண்பது அரிது.

கிளியனூர் ஊராட்சி மன்றத்திற்கு பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தலைவர்கள் பதவிக்கு வந்துள்ளனர்.

கிளியனூர் முதல் ஊராட்சி மன்றத் தலைவர் என்றப் பெருமை ஜனாப் ஹசன் முஹம்மது ராவுத்தர் அவர்களையே சாரும். புணத்தோட்டம் ஜப்பார் அவர்களின் தந்தைதான் ஹசன் முஹம்மது ராவுத்தர். அவர்களைத் தொடர்ந்து ஹாஜியார் ஓ.முஹம்மது ஷரீப் பட்டாமணியார் ஜனாப் ஹாஜி அப்துல் ரெஜாக், ஜனாப் எஸ்.எம்.சுபைர், ஹாஜீ ஓ.அப்துல்கரீம் மறுபடியும் பத்தாண்டுகளுக்கு மேலாக ஊராட்சி தேர்தல் நடைபெறவில்லை மீண்டும் கடுமையான போட்டியில் வென்ற நாட்டாண்மை ஜனாப் மு.அபுல்ஹாசன் இவர் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவராகவும் ஏற்றம் பெற்றார்.அவர்தான் கிளியனூருக்கு கடக்கத்திலிருந்து கூட்டுறவு பண்டக சாலையை கொண்டுவந்தார். இண்டேன் எல்.பி.ஜி. கேஸ் விநியோக நிலையத்தை கிளியனூருக்கு கொண்டுவந்தவர்.

அதன் பிறகு ஜனாப் கே.எம்.ஏ.நியாஸ் அவர்களும் தற்போது இராஜேந்திரன் எம்.ஏ.அவர்களும் ஊராட்சியை அலங்கரிக்கிறார்கள்.

ஹாஜியார் அவர்களுக்குப்பிறகு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய செல்வாக்கோடு பதவி வகித்தவர் நாட்டாண்மை ஜனாப் மு.அபுல்ஹாசன் அவர்களே.
1936 ஆம் வருடம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சராசரி படிப்பாளியாக இருந்து சைக்கிள் இராவுத்தர் அவர்களின் சீடராக பணி செய்து சீனா அனா குடும்பத்தின் குறிப்பாக ஜனாப் ஸ்.ஏ.ஷம்சுதீன் அவர்களின் நெருங்கிய சகாவாக ஏற்றம் பெற்று கிளியனூரில் 1953க்குப் பிறகு நடந்தேறிய எல்லா நலத்திட்டங்களிலும், பொது நிகழ்வுகளிலும், இடம் பெற்று இன்று வரை அவரை தவிர்த்துவிட்டு கிளியனூரில் எந்த நிகழ்வுகளும் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்கிற அளவு தன்னுடைய கடுமையான பொதுநல சேவையாலும் ,நிர்வாகத் திறமையாலும் பிரகாசித்து வருகிறார். அடிமட்டத் தொண்டர்களிலிருந்து, அமைச்சர்கள் வரை, பியூனிலிருந்து கலெக்டர் வரை, கான்ஸ்டபிலிருந்து டிஐஜி வரை எல்லா மட்டத்திலும் தன்னுடைய தொடர்பை விரிவுப் படுத்திக் கொண்டுள்ளார்.இன்று நாகை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராக இருக்கிறார்.

இன்றும் கூட பதவியிலுள்ளவர்களை உண்மையில் வழிக்காட்டி கொண்டிருக்கிறார்.முன்னால் முத்தவல்லி ஜனாப் எஸ்.எம்.சுபைர் அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராயிருந்த காலத்திலிருந்து அதாவது கழக ஆட்சி தமிழகத்தில் கோலோட்சத் துவங்கிய 1967 ஆண்டிலிருந்து சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக நமதூரில் நிறைவேறிய எல்லா அரசு திட்டங்களிலும் பின்னணியில் ஜனாப் மு.அபுல்ஹாசன் அவர்களின் ஈடுபாடு கண்டிப்பாக நிறைந்து இருக்கிறது.

குறிப்பாக 1998 ஆம் வருடம் திறப்புவிழாக் கண்ட கிளியனூர் புதிய பள்ளிவாசல் கட்டுமானப் பணியிலும் குறிப்பாக நிதிவசூலிலும் அதன் திறப்பு விழாவிலும் அவரின் பங்களிப்பு அபரிதமானது என்பதை நம்மால் மறக்கவோ மறைக்கவோ இயலாது.பலவற்றை நடத்தி வைத்தவர் சிலவற்றை முடித்து வைத்தவர்.இந்த எழுபத்திரெண்டு வயதிலும் ஒரு இளைஞனைப்போல் செயலாற்றிக் கொண்டிருப்பதால் அவரை வாழ்த்தி வரவேற்போம்.

அகரவல்லத்தில் சைக்கிள் வீட்டு ஜனாப் நஜ்முதீன் அவர்கள் சவுதி அரேபியாவில் தான் ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை அழகான பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி திறந்து வக்பு செய்த பிறகு அங்கே புதிய குடியிருப்புகள் மட்டுமின்றி பல தெருக்களும் நகர்களும் உருவாகிவிட்டன.

குறிப்பாக ஓ.எம்.எஸ். நகர், சீதகாதி நகர், சிராசுல்மில்லத் நகர், பிஸ்மி நகர், ஜம்ஜம் நகர், பாத்திமா நகர், எம்.எம்.எஸ்.நகர் என்று விரிவடைந்துக் கொண்டே செல்கிறது.

கிளியனூரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருவதால் இவையெல்லாம் நகர் என்று அழைக்கப்டுகிறது போலும்.

No comments:

Followers