KILIYANUR ONLINE

Tuesday 30 November 2010

மனதைத் தோண்டி பணத்தை எடுங்கள்! (ஹலால்)

உங்களை முழுமையாக பணக்காரராக்கும் ஒரு ஆற்றல் தொடர்

எப்போதெல்லாம் வேண்டுமோ அப்போதெல்லாம் உங்களால் அதிக பணத்தை அள்ளிக் கொள்ள முடியும்.

பணக்கார வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் போது உங்கள் நினைவுக்கு வருவதென்ன?

பல்வேறு ஆடம்பர, பணக்காரர்கள் வாழ்க்கையெல்லாம் கண் முன் வந்து போகிறதல்லவா? நல்லது.

சற்று நேரம் மௌனமாக நீங்கள் மிகப்பெரிய பணக்காரராக இருந்தால் எப்படி இருப்பீர்கள் என நினைத்துப் பாருங்கள். உங்கள் விருப்பப்படியே, உங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளுக்கேற்ப நீங்கள் செல்வம் படைத்தவராக இருந்தால்…

நீங்கள் எப்படி உங்கள் நேரத்தைச் செலவிடுவீர்கள்? யாருடன் பயணம் போவீர்கள்? எதைப் பற்றியெல்லாம் சிந்திப்பீர்கள்? எதையெல்லாம் தினமும் செய்வீர்கள்? எந்தெந்த பொருட்களையெல்லாம் வாங்குவீர்கள்?

நீங்கள் ஏற்கெனவே நல்ல உயர்ந்த தரமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் ஏற்கெனவே பணக்காரராகி விட்டீர்கள்!

அப்படி நீங்கள் இன்னும் பணக்கார வாழ்க்கையை மேற்கொள்ளவில்லையென்றால், அது உங்கள் தவறல்ல; உங்கள் பெற்றோர் தவறுமல்ல; சமூகத்தின் தவறுமல்ல; அது அரசாங்கத்தின் தவறுமல்ல; அது விதியுமல்ல. மாறாக தற்போது நீங்கள் ஏற்படுத்தி வைத்துள்ள பணத்துக்கான விதிகளும் திட்டமிடலும் சரியில்லை என்று மட்டுமே அர்த்தம். உங்கள் தலையிலுள்ள சாப்ட்வேர் எப்படி இருக்கிறதோ அப்படித்தானே உங்களைச் செல்வத்திற்கு அது இட்டுச் செல்லும் வழியும் இருக்கும்!

ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன் மிகவும் புகழ்பெற்ற ஆண்ட்ரூ கார்னகி, தான் செல்வத்தை அடையும் உண்மையான வழியைக் கண்டுபிடித்து விட்டேன் என உறுதியாக நம்பினார். உலகின் 400 தலைசிறந்த பணக்காரர்களை இண்டர்வியூ செய்வதற்காக நெப்போலியன் ஹில் என்ற இளம் பத்திரிகையாளரை நியமித்தார். அந்த 400 பேர்களும் தான் நினைத்தபடிதான் செல்வந்தர்களாகியிருக்கக் கூடும் என்பது அவரது நம்பிக்கை.

நெப்போலியன் ஹில் தனது பொன்னான 20 ஆண்டுகளை இந்த வேலைக்காக செலவிட்டார். எவ்வித சந்தேகமுமின்றி ஒவ்வொரு பணக்காரரும் அதே பார்முலாவைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதை அறிந்து ஆச்சர்யமடைந்தார். பின் நாளில் ‘Think and Grow Rich’ என்ற விற்பனையில் மிகப்பெரிய சாதனை படைத்த புத்தகத்தை எழுதினார். அந்த இரகசியம் இதுதான்:

எல்லா செல்வங்களும் மனித மனத்தில்தான் உருவாக்கப்படுகின்றன என்பதுதான் அந்த உண்மை.

உங்களைச் சுற்றிப் பாருங்கள்! நீங்கள் காணும் பல பொருட்கள் யாருடைய மனத்திலேயோ தோன்றிய அற்புதமான படைப்பு. நீங்கள் பயன்படுத்தும் பேனா முதல் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி வரை எல்லாமும் யாரோ ஒருவருடைய கலை வண்ணத்திலும் கைவண்ணத்திலும் உதித்தவையே. நீங்கள் என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் அது ஒரு தனித்துவம் வாய்ந்த ஒருவருடைய உள்ளத்தில் உதித்ததே.

புதிய உணவு வகையிலிருந்து நீங்கள் படுத்துறங்கும் மிருதுவான பஞ்சணை வரை எங்கு பார்த்தாலும் யாரோ சிலரின் படைப்பாற்றல் மிக்க கற்பனையில் பிறந்தவையாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் கற்பனையாக இருந்து, பின்னர் நிஜமாகியிருக்கும் மனிதக் கண்டுபிடிப்புகள் ஏராளம்.

அடுத்து எந்தப் புதியவகை கண்டுபிடிப்பு வரப்போகின்றது? யார் அதைப் பயன்படுத்துவார்கள்? அதைவிட மிகமுக்கியமான கேள்வி: நீங்கள் ஏன் அதற்குச் சொந்தக்காரராக இருக்கக்கூடாது?

பணக்காரர்களெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் என்றும், அவர்கள் மிகவும் கடினப்பட்டு உழைகிறார்கள் அதனால்தான் அவர்களால் மிகஉயர்ந்த நிலைக்கு வரமுடிகிறது என்றெல்லாம் மக்கள் பலமுறை பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மை மிகவும் எளிமையானது. பணக்காரர்கள் தங்கள் சொந்த சிந்தனையின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஏழைகளில் பலர் அப்படி வைக்கவில்லை என்பதே உண்மை.

இந்தக் கட்டுரையில் நாம் ஏழை மக்கள் என்றோ, பணம் படைத்தவர்கள் என்றோ யாரையும் குறிப்பிடுவதைவிட, ஏழ்மைச் சிந்தனையுடையவர்கள் என்றும் செல்வச்சிந்தனை உடையவர்கள் என்றும் குறிப்பிடுவதே சரியானதாக இருக்கும். ஏனென்றால், ஒருவரை அவர் வைத்திருக்கும் கார், வீடு மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை வைத்து மட்டும் எடை போட்டுவிட முடியாது.

ஏழ்மைச் சிந்தனையுடையவர்கள் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும், பெரிய மாட மாளிகைகளைக் கட்டியிருந்தாலும், ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்திருந்தாலும் தங்கள் செல்வத்தைப் பற்றியும் தங்கள் எதிர்காலம் பற்றியும் அவநம்பிக்கையும் அச்சமும் கொண்டிருப்பதால், பணம் வைத்திருப்பதன் பலனை அனுபவிக்காமல் போகிறார்கள். எவ்வளவோ சொத்து சுகமிருந்தும் அவற்றை அனுபவிக்காமல் போகிறார்கள். அதனால் என்ன பயன்?

செல்வச் சிந்தனையுடையவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்களாக இருப்பார்கள். இயல்பிலேயே திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் பணத்தைப் பற்றி முற்றிலும் வித்தியாசமான சிந்தனை கொண்டிருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதென்பது மிகச்சாதாரண திறமை மட்டுமே. அதை அவர்கள் ஏதோ யாருக்கும் கிடைக்கமுடியாத அரிய பொக்கிஷமாகப் பார்ப்பதில்லை. அந்தத் திறமையை நீங்களும் பெற்றுவிட்டால் எளிதாக பணம் சம்பாதித்து விடலாம். அது உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, என்ன நடந்தாலும் சரி, உங்களால் அதை எளிதாக சம்பாதித்துவிட முடியும்.

புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தை நிறுவி அதன் தலைவராக புகழ் பெற்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ், அவர் இணைந்து உருவாக்கிய நிறுவனத்திலிருந்தே விரட்டி, வெளியேற்றப்பட்ட கதையை அண்மையில் ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் அவரே கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது இன்டர்நெட்டில் யூ டியூபில் பார்த்திருப்பீர்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாஸ்னிக் என்பவரோடு இணைந்து தனது பெற்றோரின் கார் ஷெட்டில் தனது இருபதாவது வயதில் ஆப்பிள் கம்பெனியை நிறுவினார். பத்து ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து 4000 தொழிலாளர்களைக் கொண்ட, 2 பில்லியன் டாலர் செத்துக்களைக் கொண்ட கம்பெனியாக அவர் அதை உருவாக்கினார். உலகப் புகழ் பெற்ற முதல் மாக்கின்டோஷ் கம்ப்யூட்டரை முதன்முதலாக அப்போதுதான் அவர் வடிவமைத்திருந்தார். ஆனால், திடீரென அவர் அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேற்றப்பட்டார். சில மாதங்களுக்கு வாழ்க்கையில் என்ன செய்வதென அறியாமல் திகைத்தார். ஏமாற்றமும் தோல்வியும் அவரைத் தொடர்ந்தன. அந்த வேலையையே முழுமையாக விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்றெல்லாம்கூட அவர் முடிவெடுத்துவிட்டார். ஆனால், திடீரென அவரது மனத்தின் எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கை உதயமானது. அவர் மனதில் உறங்கிக் கொண்டிருந்த அனைத்து நம்பிக்கையும் துளிர்விட ஆரம்பித்தது. அவர் மீண்டும் தனது 5 ஆண்டுகால உழைப்பில் ‘நெக்ஸ்ட்’ என்ற கம்பெனியைத் துவங்கினார். ‘பிக்ஸர்’ என்ற மற்றொரு கம்பெனியையும் துவங்கினார். வெற்றி மேல் வெற்றி குவிய ஆரம்பித்தது. ஆப்பிள் கம்பெனி ‘நெக்ஸ்ட்’ கம்பெனியை வாங்கத் தயாரானது. மீண்டும் தன்னை விரட்டிய ஆப்பிள் கம்பெனிக்கு மீண்டும் பொறுப்பெடுத்தார். இன்று உலகம் வியந்து பாராட்டும் தொழிலதிபராக விளங்கி பல மாற்றங்களைக் கொண்டு வருவதில் முன்னணியில் இருந்து வருகிறார்.

சில பணக்காரர்களிடமிருந்து எல்லா சொத்தையும் பறிமுதல் செய்துவிட்டாலும் அவர்கள் விழவிழ மீண்டும் எழுந்து விடுவார்கள். புதிதாக தங்களை மீண்டும் கட்டமைப்பு செய்து கொள்வார்கள். காரணம் அவர்கள் செல்வச் சிந்தனையுடையவர்கள். அவர்கள் மனம் செல்வச் செழிப்பில்தான் எப்போதும் இருக்கும். அவர்கள் வறுமையிலும் வாழ்வார்கள்; வளமையிலும் வாழ்வார்கள். எப்படியாயினும் மகிழ்ச்சியாக செல்வச் செழிப்பில் வாழ்வார்கள். ஏனென்றால், எல்லா சொத்துக்களையும் எடுத்துவிட்டாலும் அவர்கள் மனதிலிருக்கும் செல்வச் சிந்தனையை யாராலும் அகற்றிவிட முடியாது.

முதல் பயணத்தில் செல்வச்செழிப்பை எட்டிப்பிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால், அதை வழக்கமான ஒன்றாக மாற்றிவிட்டால் பணம் பண்ணுவது எளிதான ஒன்றாக மாறிவிடும். பரிச்சயமில்லாத இருட்டறையில் நீங்கள் முதல் முறையாக நடக்கும் போது தட்டுத்தடுமாறி நடந்து செல்வீர்கள். ஆனால் பலமுறை அந்த இருட்டறையில் நடக்க ஆரம்பித்துவிட்டால், நம்மால் எப்படி எளிதாக நடக்க முடிகிறதோ அப்படியே செல்வத்தை அடைவது குழப்பம் நிறைந்ததாக, புரியாத புதிராக இருக்கும். ஆனால் அதுவே நமக்குப் பழக்கப்பட்ட ஒன்றாக, பரிச்சயப்பட்ட ஒன்றாக மாறிவிட்டால் மிகவும் எளிதானதாக மாறிவிடும். கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் பயணம் செய்தாலும் உங்கள் அகக்கண் உங்களுக்குச் சரியான வழியைக் காட்டிவிடும். ஏனென்றால், அந்தச் செல்வத்திற்கான வழி உங்களுக்குள்ளேயேதான் இருக்கின்றது.

இதுதான் இந்த அத்தியாயத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படையான கருத்து. உங்கள் சொத்துக்கள் எங்கோ ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட வில்லை. அவை உண்மையான சொத்துக்கள் அல்ல. மாறாக, உண்மையான உங்கள் சொத்து உங்களுக்குள்ளேயே யாரும் தொடமுடியாத வகையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே அதை யாராலும் அபகரிக்க முடியாது. பணம் என்ற புதையலை எடுக்க நீங்கள் தோண்ட வேண்டிய இடம் மண் அல்ல, மனம். உங்கள் மனத்தைத் தோண்டி பணத்தை எடுங்கள்!

No comments:

Followers