KILIYANUR ONLINE

Wednesday 1 December 2010

இரகசியத்தை வெளியிடாதீர்!

இரகசியம் என்று சொன்னாலே அது இருவருக்கும் மத்தியில் மட்டும் உள்ளது. அதை மூன்றாம் நபர் கேட்டுவிட்டால் அது இரகசியம் என்ற நிலையைவிட்டு பகிரங்கமாகி விடுகிறது.

ஒருவர் ஒரு இரகசியத்தைச் சொன்னால் அதை கேட்டவர், சொன்னவரின் அனுமதியின்றி வெளியிடக்கூடாது. ஏனெனில் அது ஒரு அமானிதம் என்கிறது இஸ்லாம்.

பொதுவாக ஒருவர் ஒரு இரகசியத்தை வெளியிடாது மறைக்கும்போது அதைத் துருவித் துருவி என்னவென்று கேட்கக்கூடாது. ஆனால் நடைமுறையில் மற்றவர்களின் இரகசியத்தை தெரிந்து கொள்ள விழைவதில் அப்படி ஒரு ஆர்வம் மனிதனுக்கு! அதிலும், மற்றவர்களின் இரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆண்களைவிட பெண்களுக்கு ஆர்வம் இன்னும் அதிகம்.

இன்னும் ஒரு சிலர் வினோதமான குணம் படைத்தவர்கள். இவர்கள் மற்றவரிடம் ஒரு விஷயத்தை, ‘இது மிகவும் இரகசியம், உங்களிடம் மட்டும்தான் தெரிவிக்கிறேன், வேறு எவரிடமும் சொல்ல வேண்டாம்’ என்று சொல்லி விட்டு இவரே பலரிடம். இதே ‘டயலக்கை’ மனப்பாடமாக ஒப்பிப்பார்.

ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்தோம். எங்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு தேவையின் நிமித்தம் (ஒரு இடத்துக்கு) அனுப்பினார்கள். நான் திரும்பி வரும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதையில் ஓரிடத்தில் அமர்ந்து என்னை எதிர்ப்பார்த்தார்கள். நான் என் தாயார் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சற்று தாமதித்து விட்டேன். அப்போது அன்னையவர்கள் எங்கு சென்றாய்? என விசாரித்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பியுள்ளார்கள் எனக் கூறினேன்.
அது என்ன? என என் தாயார் வினவினார்கள்.

உடனே நான் அது இரகசியம். (சொல்ல மாட்டேன்) என்றேன். அப்போது உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்; ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரகசியத்தைப் பேணிக் கொள் (சொல்ல வேண்டாம்) எனக் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திரிமிதீ)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பண்புரிந்த ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சிறிய வயதிலும் சீரிய பண்பாடு அமையப் பெற்றிருந்தது இக்கால சிறுவர்களுக்கு படிப்பினையாக அமைய வேண்டும்.

பெற்றோர்கள்தான் இந்த நல்ல பழக்கத்தை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனெனில் சிறு வயதில் சொல்லக்கூடிய எந்த விஷயமும் எளிதில் மனதில் ஆழப்பதியும்) பொதுவாக சின்னஞ்சிறு வயதில் இரகசியத்தைப் பாதுகாப்பவர்களைப் பார்ப்பது மிக அரிது. அதிலும் தாயிடம் எல்லாவற்றையும் கக்கிவிடுவது இயற்கை தான்.

ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இதயத்தில் இனிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதுள்ள பாசம் ஈடு இணையில்லாததாக இருந்ததால் தன்னை ஈன்றெடுத்த தாயிடத்தில்கூட இரகசியத்தை வெளியிட மறுத்தார்கள். அது போன்று அந்தத் தாயும் அதை ஏற்றுக் கொண்டு இரகசியத்தை காப்பாற்றச் சொல்லி ஊக்குவித்தது எல்லா பெற்றோரிடமும் இருக்க வேண்டிய பண்பாடாகும்.

No comments:

Followers