KILIYANUR ONLINE

Saturday 11 December 2010

படைக்கும் படைப்பினம்

(Created creator)

காட்சிகள் இல்லை. காண்பவர் இல்லை.
ஓசைகள் இல்லை. செவிகளும் இல்லை.
ஓவியன் சிந்தையில் எல்லாம் இருந்தன.
ஓவியத் திறமை புதையலாய் இருந்தது.
புதையலின் நாவுகள் ஆசையை பேசிட
உணர்ந்திட்ட ஒவியன் கேட்ட வரம் தந்தான்.

புதையலின் ஆசையால் வான்,புவி வந்தது.
மலை, கடல் வந்தது. மான்,மயில் வந்தது.
புல்லினம் தொடங்கி வானவர் வரையில்
அத்தனை அழகும் அவன் புகழ் சொல்லுது.
ஒருமையின் அர்த்தம் சொல்ல பன்மைகள் வந்தது.

ஓவிய ஆசை உச்சத்தில் சென்றது.
படைக்கும் தன் முகம் பார்த்திட கேட்டது.
‘ஓவியக்’ கண்ணாடி காட்சிக்கு வந்தது.
முத்திரை படைப்பாய் மானுடம் என்றது.

சின்னத் துளியிலே வரைந்திட்ட சித்திரம்.
சித்திரக் கண்ணாடியில் ஓவியன் தரிசனம்.
கவிதைகள் சொல்லுது, காவியம் சொல்லுது
கப்பல்கள் செய்து கடலில் மிதக்குது.
வானில் பறக்குது. வையத்தை ஆளுது.
படைக்கும் படைப்பினம். படைத்தவன் அற்புதம்.
படைக்கும் படைப்புகள். படைத்தவன் புகழ் சொல்லும்.

காட்ட வந்த கண்ணாடி தன் நிலை மறந்தது.
சாட்சியாய் வந்திட்ட சங்கதியும் மறந்தது.
காட்சியில் வந்ததை ‘நான்’, ‘நான்’ என்றது.
தன் புகழ் பாடியே தருக்கி திரியுது.

வானமும், பூமியும்
உன் வசமானது.
சக்தனின் சக்தி நீ.
வித்தகன் வித்தை நீ
உயிர் தரும் வித்தையும் உன்னில் உறங்குது
உயிர் விடும் நாள் முன்பே
உறக்கம் களைந்திடு!.
நன்றி
http://onameen.blogspot.com

No comments:

Followers