KILIYANUR ONLINE

Tuesday 7 December 2010

ஏழ்மை அழகு

திருமணவீடு.

விரிந்த மலர்களாய்

மகிழ்ந்த முகங்கள் .

உறவுகள் - நட்புகள்

புதுப்பிக்கப்படும் உற்சாகம்.

மணமக்களோ இளம்மயக்கத்தில்.

பெரியவர்களோ

வரவேற்பதில் - விசாரிப்புகளில்.

ஓர் ஓரத்தில்

திருமணப்பந்தலின் கால்பிடித்து

ஓடிவிளையாடி ஆடிப்பாடும் சிறுமிகள்.

வண்ணத்துப் பூச்சிகளாய்

வானவில்லை உடுத்தியதுபோல்

புத்துப்புது ஆடையில் அவர்கள்.

ஒருத்தி சொன்னாள்

அடியே நஜீஹா ....

என் டிரஸ் துபாய் மாமா அனுப்பியது

அனார்கலி மாடல்.


பானுசொன்னாள்...

என் டிரஸ் ""லாச்சா''வாக்கும்

இந்திப்பட மாடல்.


நேற்றுதான் கடைக்கே வந்ததாம்

இந்தப் புதுமாடல் டிரஸ் என்று

தன் ஆடைகாட்டி

அனீஸா கர்வப்பட்டாள்.

அங்கே வந்தாள் ஒரு சிறுமி.

தைக்கப்பட்ட அவள் கவுனில்

இரண்டு ஒட்டுக்கள் -

ஏழ்மையின் வடுக்கள்.


ஆயிஷா பாரடி இவள் டிரஸ்ஸை.....

ஒட்டுப்போட்ட புதுமாடல்


கடையில் கூட இப்படிக்கிடைக்காது....

ஷாஹீன் ஏளனமாய்

வார்த்தையால் இடித்தாள்.

சிறுமிகளின் ஆமோதித்தல்...

கைதட்டல்.... ஆரவாரம்.


ஏழைச் சிறுமி

சிறுமைப்பட்டாள்

ஏமாற்றம்-அவமானம்.

இவர்களை கவனித்த

வயதில் பெரியவர்அருகில் வந்தார்.

ஏழைச்சிறுமியின் தலையை

அன்பாய் வருடியபடியே சொன்னார்....


பிள்ளைகளே ! கிள்ளைகளே!

ஏளனம் கூடாது....ஆணவம் ஆகாது.

உங்கள் ஆடைகயளல்லாம்

சினிமா வடித்த மாடல்

நடிகைகள் உடுத்திய மாடல்....

ஆயினும்

இந்தச் சிறுமியின் ஆடை

யாருடை மாடல் அறிவீரா?

சுவனத்தலைவி

சுந்தர ஃபாத்திமா

அணிந்த மாடல்.

அல்லாஹ்வும் அவன் திருத் தூதரும்

அழகென மெச்சிய மாடல் என்று.

சிறுமிகள் மனம் உணர்ந்தனர்

குணம் திருந்தினர்.

ஏழைச் சிறுமியின்

தோளில் கைசேர்த்து

தோழியாகினர்

பேதமற்ற நட்போடு.
-(கலீபா, ஆலிம் புலவர் S.ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் மன்பயீ)

No comments:

Followers