KILIYANUR ONLINE

Thursday 16 December 2010

நீதியும் நிர்வாகமும் !!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.


முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.


நான் குறைஷியரின் தூதுக் குழுவில் ஒருவனாக முஆவியா(ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள், 'விரைவில் கஹ்தான் குலத்திலிருந்து அரசர் ஒருவர் தோன்றுவார்' என்று அறிவிப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் கோபம் கொண்டு எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள்.

இறைவனை துதித்த பின் கூறுகிறேன்: உங்களில் சில பேர் அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கவும் படாத செய்திகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறிவீனர்கள் ஆவர். நீங்கள் உங்களை வழிதவறச் செய்துகிற வெற்று நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாமென உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'குறைஷியரிடையே தான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக் கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டிவரும் வரை இந்நிலை நீடிக்கும்' என்றார்கள்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையே தான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல். மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்களின் பிரச்சினைகளுக்குத்) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள். என அனஸ்(ரலி) அறிவித்தார்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்தாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.

No comments:

Followers