KILIYANUR ONLINE

Friday 3 December 2010

உறக்கமும் ஒழுக்கமும்!!!

மல்லாக்கப் படுப்பது

‘நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பள்ளிவாசலில் தனது இரு பாதங்களில் (உள்ளங்கால்களில்) ஒன்றை மற்றொன்றின் மீது வைத்தவர்களாக மல்லாக்கப் படுத்திருந்ததை நான் பார்த்தேன்’ என்று தன் சிறிய தந்தை கூறியதாக அப்பாதுப்னு தமீம் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

இது பொதுவாக மல்லாக்கப் படுப்பது நபிவழி என்பதை அறிவித்தாலும் கூட வேஷ்டி போன்ற திறந்த ஆடை அணிந்த நிலையில் தன் மறைவிடங்கள் தெரியும் முறையில் மல்லாக்கப் படுக்கக் கூடாது என்பதை பின்வரும் நபிமொழி தெளிவு படுத்துகிறது.

‘உங்களில் ஒருவர் (தன் முதுகின் மீது) மல்லாக்கப் படுத்திருக்கும் பொழுது தனது கால்களில் ஒன்றை மற்றொன்றின் மீது தூக்கி வைத்துக் கொள்ளக் கூடாது’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

அதாவது, தூங்குகின்ற பொழுதும், எந்த நிலையிலும் வெட்கஸ்தலத்தைப் பிறர் பார்த்து விடாத அளவுக்கு பேணுதலாக இருப்பது முஸ்லீம்களின் கட்டாயக் கடமை. கைலி, பேண்ட் அணிந்து தூங்கினாலும் கூட இவ்விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேஷ்டி கட்டி தூங்குபவர்கள் எப்படி கவனமாக இருப்பது என்பதை நாம் இங்கு சொல்லத் தேவையில்லை. பெரும்பாலும் வேஷ்டி கட்டுவதால் தொடை தெரிய வாய்ப்புள்ளது. எனவே அதை தவிர்ப்பது அவசியம்.

ஒருக்கணித்துப் படுக்கலாமா?

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் தூங்குகின்ற பொழுது தன் வலப்புறத்தில் ஒருக்கணித்துப் படுப்பார்கள். ஆனால் (தஹஜ்ஜுதுக்குப் பிறகு) ஸுப்ஹுக்கு சற்றுமுன் சிறுதூக்கம் மேற்கொள்ளும்போது, தன் முழங்கையை நட்டி வைத்து, உள்ளங்கைமீது தலையை வைத்தவர்களாகத் தூங்குவார்கள்’ என்ற அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: ஷரஹுஸ் ஸுன்னா)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் இடப்புறத்தின் மீது ஒருக்கணித்தவர்களாக ஒரு தலையணையின் மேல படுத்திருந்ததைத் தான் பார்த்ததாக ஜாபிர ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் ஹதீஸ் திர்மிதீயில் பதிவாகியுள்ளது.

இந்த இரு ஹதீஸ்கள் மூலம் வலப்புறத்தின் மீதும், இடப்புறத்தின் மீதும் படுப்பது நபி வழியே என்று உணரலாம். ஆயினும், முதன்முதலில் வலப்புறத்தின் மீது படுப்பது விரும்பத்தக்கது. ஏனெனில், அனைத்துக் காரியங்களிலும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பியிருக்கிறார்கள். எனவே, முதன் முதலில் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பித்து அதன்பிறகு தம் வசதிக்கேற்ப, மல்லாந்து படுப்பதும், இடப்புறம் திரும்பிப் படுப்பதும் கூடும்.

குப்புறப்படுப்பது கூடாது

ஆனால், குப்புறப்படுப்பது மட்டும் கூடாது. ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவர் குப்புறப் படுத்திருப்பதைப் பார்த்தவுடன் அவரைக் கண்டித்து, இந்த முறையில் படுப்பதை அல்லாஹ் விரும்புவதில்லை – கோபிக்கின்றான் என்று எச்சரித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

வெட்ட வெளியில்.....

மேற்கூரையில்லாத ஓர் இடத்தில் (மாடியில் - திறந்த வெளியில்) எவரும் படுத்துத் தூங்கினால் அவரிடமிருந்து அல்லாஹ்வின் பொறுப்பு (பாதுகாப்பு) நீங்கிவிட்டது என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள். (நூல்: அபூதாவூது, நஸாயீ)

விரிப்பின் அகலம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விரிப்பு கப்ரில் வைக்கப்படும் அளவுக்குத்தான் இருந்தது. அவர்களிகளின் தலைமாட்டில் தொழும் (திசை - கிப்லா அல்லது தொழும்) விரிப்பு இருக்கும் என்று மற்றொரு ஹதீஸ் கூறுகின்றது. (நூல்: அபூதாவூது)

அதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விரிப்பு மிகவும் சிறியதாகவே ஓர் ஆள் படுக்கும் அகலத்திலும் நீளத்திலும் தான் இருந்திருக்கிறது. அதே சமயம் எப்போதும் இரவுத் தொழுகைக்கு தயாராகவே இருப்பார்கள். தலைமாடு கிப்லாவின் திசையிலும் தொழுகை விரிப்பு தலைமாட்டிலும் எப்போதும் ரெடியாக இருக்கும் என்று இந்த ஹதீஸ் விளக்ககிறது.

இன்று நமது இல்லங்களில் எவ்வளவு வசதியான, அகலமான கட்டில் மெத்தைகள்! ஆனால் தொழுகை தான் இல்லை!(www.kiliyanur.blogspot.com)

No comments:

Followers