KILIYANUR ONLINE

Tuesday, 11 January 2011

பெட்ரோல் விலை உயர்வு ஏன்? புதைந்துள்ள மர்மங்கள்...

8 வது முறையாக பெட்ரோல் விலையேற்றம். ஒவ்வொரு முறை விலை ஏற்றத்தின் போதும் எதிர்கட்சிகள், லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்துவார்கள் பின்பு அரசு அதைப்பற்றி முடிவு சொல்லும் போது இது தேவையானது சர்வதேச சந்தையில் விலை உயர்வு அதனால் பெட்ரோல் விலை உயர்வு என அறிவிப்பார்கள் இது அனைவருக்கும் தெரிந்தது. இதைப்பற்றி முபமையாக தெரிந்து கொள்ளும் ஆவலில் நண்பரிடம் கேட்டேன் அவர் துக்ளக் இதழில் ஓர் கட்டுரை இதைப்பற்றி வந்து இருக்கு என எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். அக்கட்டுரை உங்களுக்காக...


பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அந்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யின் விலை உயர்வையே காரணமாக அரசு காட்டுகிறது. ஆனால் முழுமையான காரணம் அதுவல்ல.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையில், அரசு விதித்த வரிகளே பாதிக்கும் அதிகமாகும். வரி வசூல் மூலம் நிதி திரட்ட உகந்த ஒன்றாக பெட்ரோலை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

எல்லா நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் விலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக வரிகளுக்கே செல்கிறது. கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி, மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம், துறைமுகக் கட்டணம், மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி(தமிழ்நாட்டில் இது 30 சதவிகிதம்) கல்வி வரி, மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகளின் மூலமே பெட்ரோலின் விலை பூதாகாரமாக உயர்கிறது.

அரசு தனது சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வரி விதிப்பின் மூலம்தான் வருவாய் திரட்ட முடியும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. என்ன நோக்கங்களுக்காக வரி விதிப்பின் மூலம் வருவாய் திரட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றனவா?

உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. 2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.

அதே 2009-2010-ல் பெட்ரோலிய நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன்(ONGC) ரூ.16,767 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.10,220 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1301 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1,837 கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.2,610 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த நிறுவனங்களின் ஒட்டு மொத்த லாபம் ரூ.32,735 கோடி ரூபாய். இது இறுதியில் அறிவிக்கப்பட்ட லாபம். ஆனால் உண்மையான லாபம் இதைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. அந்தத் தொகை எங்கே போயிற்று..?

எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் ஆடம்பரமான செலவுகளைச் செய்கின்றன. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் வேறு எந்தத் துறையிலும் கற்பனை செய்ய முடியாதது.

உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.

எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.

மக்களுக்கு மான்ய விலையில் தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள். அரசுக்கு நிதிச் சுமை என்கிறார்கள். கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களின் மீது சுத்திகரிப்புச்செலவு, அவற்றின் மதிப்புக்குரிய வகையில் பிரித்து, மதிப்புக் கூட்டப்படுகிறதா..?

எத்ரேஆலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..?

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..!?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 5,515 கோடி ரூபாயை மான்யமாகத் தந்திருப்பதாக அறிவிக்கிறார்.

எண்ணெய் விநியோக நிறுவனங்கள் 3,661 கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ள காலாண்டில் எதற்காக மான்யம் தரப்பட வேண்டும்..? கூடுதலான விலையில் விற்றிருக்கும் எண்ணெயை குறைந்த விலையில் அந்த நிறுவனங்கள் விற்றனவாம். அதனால் அந்த இழப்பை ஈடுகட்ட ONGC மான்யம் தருகிறதாம்.

விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?

மான்யம் என்பது என்ன..? அதிக விலைக்கு ஒரு பொருளை கொள்முதல் செய்து, அதைக் குறைந்த விலைக்கு மக்களுக்கு விநியோகம் செய்யும்போது ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்றுக் கொள்வதுதானே மான்யம்..

உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரிசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட தெளிவான முறை பெட்ரோலியப் பொருட்களின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், இவ்விஷயத்தில் மான்யம் என்று எதையும் அரசு தரவில்லை. மாறாக, வரிகள் என்ற பெயரால் லாபம் மட்டுமே அடைகிறது. அதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில், உண்மை நிலை என்ன என்பதை நிபுணர்கள் ஆராய்வது அவசியம்.

பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுப்பாட்டை இப்போது அரசு நீக்கிவிட்டது. அதனால் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இனி பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்கிறது அரசு. கச்சா எண்ணெய் விலை ஏறினால், பெட்ரோல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று இதற்கு அர்த்தம்.

ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.

No comments:

Followers