KILIYANUR ONLINE

Saturday, 15 January 2011

அப்துல் ரஹ்மான் எம்.பி பிறைமேடை தலையங்கம்

மடியில் கணம் இல்லை; நம் பயணம் தொடர்கிறது!பிடியில் தளர்வு இல்லை; நம் முழக்கம் ஓங்குகிறது! - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி பிறைமேடை தலையங்கம்



பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!

வல்ல இறைவனின் அளப்பரிய பேரருள் நம் அனைவர் மீதும் இலங்கட்டுமாக! சமுதாயத்தில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் தீர்வுகளை நோக்கி ஏக்கத்தில் மூழ்கி இருப்பதை நாம் நன்கறிவோம். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில், ஒரே கோணத்தில் பார்க்க முடியவில்லையென்றாலும் அவைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து, நிரந்தர தீர்வுகளைக் காண வேண்டிய பொறுப்பிலிருந்து எந்நிலையிலும் பின்வாங்காமல், தொடர்ந்து பணியாற்றி அதன் இலக்கை அடைவது என்பது நமது தாய்ச்சபை முஸ்லிம் லீகின் தொடர் வரலாறு. சமுதாயம் சந்திக்கும் இப்பிரச்சினைகளைக்கூட முன்னுரிமை தரப்பட வேண்டிய முறையைப் பின்பற்றியே எப்போதும் கையாள்கிறோம்.

அந்த வகையில் ஆங்காங்கே சிறு சிறு அத்தியாயங்களைக் கொண்ட முறையீடுகளைப் பெற்று அவைகளுக்கான தகுந்த பரிகாரங்களையும், தீர்வுகளையும் பெற்றாலும் சில முக்கியமான பிரச்சினைகளின் அம்சங்களையும், அவசியங்களையும் சொல்லிக் காட்டியே ஆகவேண்டும் எனத் தோன்றுகிறது.

அண்மையில் நாம் சந்தித்த �கட்டாயத் திருமணச் சட்டம்� நமக்கு ஒரு பெரும் சவாலாக இருந்தது. இச்சட்டத்தின் பிடியிலிருந்து மீளுவதற்கும், நமக்கென்று பிரத்தியேகமாக சில சட்டமாற்றங்களைப் பெறுவதற்கும் நாம் எடுத்துக் கொண்ட பகீரத முயற்சிகளும், அறிவுப்பூர்வமான அணுகுமுறைகளும் ஏராளம். அவைகளையெல்லாம் நான் முன்பே எழுதிக் காட்டியிருக்கிறேன். மாண்புமிகு முதல்வரைச் சந்தித்தது; துணை முதல்வரைக் கேட்டுக் கொண்டது; சட்டத் துறை அமைச்சரோடு கலந்துரையாடல் செய்தது; சட்டத் துறை அதிகாரிகளோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது; தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டு அடிக்கடி நினைவூட்டிக் காரியம் ஆற்றச் செய்தது என்று ஏராளமான இடைவிடாத முயற்சிகள். அயரவில்லை; ஐயம் கொள்ளவில்லை; ஆர்ப்பரிக்கவில்லை; அமைதியாகச் சிந்தித்தோம், நிதானமாக அணுகினோம். சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்களிடம் எடுத்துரைத்துக் காரியமாற்றினோம். நிறைவாக சென்ற 27.08.2010&ல் நாம் எதிர்பார்த்தபடி சட்டதிருத்தங்களைப் பெற்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம். அதன் விளைவுதான் ��காலம் காலமாக நம் நடைமுறையில் இருந்துவரும் ஜமாஅத் முறையிலான நிக்காஹ் பதிவே எந்த மாற்றமும் இல்லாமல் தொடரலாம்; அந்தப் பதிவிவில் பதியப்படும் தகவல்களே அரசுத் தகவல்களாகக் கொள்ளலாம்�� என்ற அறிவிப்பு அரசு ஆணையாக வெளிவந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

தொடர்ந்து சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தில் நம் சமுதாயம் பெரும் ஏமாற்றத் திற்குள்ளானதன் வெளிப்பாடாக உருது மற்றும் அரபி மொழிப் பாடங்கள் இப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அரசிடம் முன்வைத்தோம். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களோடு பலமுறை சந்தித்து உரையாடினோம். நமக்கே உரிய அதே அணுகுமுறை, அதே நடைமுறை, அதே செயல்முறை. அதன் உச்சகட்டமாக சென்ற 11.12.2010 அன்று சென்னையில் நாம் நடத்திய பிரம்மாண்டமான மாநில மாநாட்டில் முதல் கோரிக்கையாக எடுத்து வைத்தோம். கனிவோடும், இணக்கத்தோடும் நமது கருத்துக்களை உள்வாங்கிய மாண்புமிகு முதல்வர் அவர்கள் �உருது மற்றும் அரபி சிறுபான்மை மொழிப்பாடங்கள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும்� என்கிற உறுதிமொழியை லட்சோபலட்ச மக்கள் வெள்ளத்தில் பிரகடனப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நான்கே நாட்களில் 15.12.2010 அன்று அரசு ஆணையும் வெளியாகியது. அந்த அரசு ஆணையின் வாசகத்தில் �இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று�� என்று குறிப்பிட்டே நம்மை பெருமைப்படுத்தியிருப்பது நம் சமுதாயத்தைப் பெருமைப்படுத்தியதாகவே பொருள். நம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் வேறு; சமுதாயம் வேறு என்று யாராலும் எந்த காலத்திலும் பிரித்துப் பார்க்க முடியாத உயரிய லட்சியம் அரசாங்க ஆணையிலும் பிரதிபலிக்கிறது என்றால் & என் பாசமிகு பிறைநெஞ்சே! யாருக்குண்டு இந்த தகுதியும் தகைமையும்? எவருக்குண்டு இந்த சங்கையும் சிறப்பும்? எந்த அமைப்புக்குண்டு இந்த கண்ணியமும் கரிசனமும்? உன் உயிரும் உதிரமும் சமுதாயச் சிந்தனையால், உணர்வுத் துடிப்பாய்ப் பிரதிபலிக்கும் முஸ்லிம் லீக் என்கிற தாய்ச்சபை பேரியக்கம் மட்டும்தானே சாதித்திட இயலும்! எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே.

இதிலே நமக்கு ஆணவம் இல்லை; அகம்பாவம் இல்லை; முஸ்லிம் லீக் என்ன செய்தது? என்ன செய்கிறது? என்று கேட்பவர்களுக்கு மட்டுமே இந்த கேள்வி. உயிரணைய பிரச்சினைகள் என்று சமுதாயம் சந்திக்கிறபோது ஓடி மறைந்து கொள்வதும் அல்லது வெளிரங்கத்தில் போராடுவதைப்போல பாசாங்கு செய்து தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் சினிமா பாணியில் விளம்பரம் செய்து தங்களது தொடர் வசூல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதும்தான் மற்றவர்களுக்கு வாடிக்கை. இத்தகைய சுயநலப் போக்கில் நமக்கு என்றைக்குமே உடன்பாடு கிடையாது. கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் காலந்தொட்டு, சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத், இன்றைய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள் வரை நமக்கு வழிகாட்டிய நெறிமுறைகளும், செறிவூட்டிய சிந்தனைகளும் நேரிய பண்பாட்டு உணர்வுகள்; இஸ்லாமிய ஒழுக்கச் சட்டங்கள்; விழுமிய மார்க்க மாண்புகள். இவற்றிலிருந்து கிஞ்சிற்றும் மாறாமல், மறையாமல் இருப்பதால்தான் வல்ல அல்லாஹ் இவை போன்ற சாத்தியங்களை சத்திய வழிமுறையாக நம் பேரியக்கத்திற்கு வழங்குகிறான்.

சட்டரீதியாக, அரசியல் ரீதியாகப் பெற முடிந்த இத்தகைய இரண்டு தீர்வுகளையும் �சமுதாயப் பணிகள் ஆற்றுகிறோம்� என்று விளம்பரம் தேடுகிற எந்த அமைப்பாவது நடத்திக் காட்டிட இயலுமா? வல்ல அல்லாஹ்வின்மீது முழுமையாய் நம்பிக்கை வைத்தவர்களாகச் செயல்பட்ட நாம் இதனைப் பெற முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். நல்ல சிந்தனையாளர்கள், சிறந்த பார்வையுடையவர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள் அத்தனை பேரும் தயக்கமின்றி போற்றுகிறார்கள்; பாராட்டுகிறார்கள். துஆ செய்கிறார்கள். மாஷா அல்லாஹ்.

நாம் ஆற்றியிருக்கும் பணிகளின் வரிசை நீளமானது. ஒரே இதழில் வரிசைப்படுத்த இயலாது என்பதால் தொடர்ந்து எழுகிறேன். இன்ஷா அல்லாஹ்.

பிறைநெஞ்சே! பணிகள் ஏராளம் உள்ளன;

மடியில் கனம் இல்லை & நம் பயணம் தொடர்கிறது.

பிடியில் தளர்வு இல்லை & நம் முழக்கம் ஓங்குகிறது.

என்றும் உன்னோடுதான்.

No comments:

Followers