KILIYANUR ONLINE

Wednesday 2 February 2011

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று
அன்றைக்குச் சொல்லிவைத்த பழமொழிகள் எதற்கு?
அடுப்பூதும் வழக்கங்கள் இன்றில்லை! பெண்கள்
அடிமைபோல் அடங்கிவிடும் நிலையுமில்லை இன்று!

அண்ணல்நபி சொல்லிவைத்த அறிவுமொழி உண்டு
“ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி கடமை” என்று
கண்ணியத்தைப் பெண்களுக்கு கொடுக்கவேண்டு மென்றால்
கட்டாயம் கல்விகற்க வைத்திடுவீர் நன்று
கற்றவராய்க் கட்டாயம் ஆக்கிடுவீர் நன்று

அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளாட்டோரூஷோ என்று
அகிலத்து அறிஞர்கள் பட்டியலும் உண்டு!
அறிவான பெண்ணினத்தை உருவாக்க எவரும்
அறவழிகள் கண்டதில்லை; உலகறியும் இன்று!
அறிவுரைகள் சொன்னதில்லை

ஆணுக்குக் கல்வியினைக் கற்பித்தல் கொண்டு
அறிவாளி ஒருவன்தான் உருவாவான் – பெண்ணில்
ஞானத்தை உருவாக்கி அறிவுக்கண் திறந்தால்
நிச்சயமாய் உலகெல்லாம் அறிவொளியால் திகழும்

பெண்ணென்ற சொல்லுக்குப் பேதையென்ப தல்ல!
பெண்ணுக்குள் பூமணமும் பூகம்பமும் உண்டு!
கண்ணுக்குக் கண்ணாகப் பெண்மணியைப் போற்றிக்
கல்வியினை ஊட்டிவைத்தால் பூவுலகே வெல்லும்
கல்விக்கண் திறந்துவைப்பீர் கடமையெனக் கொண்டு

அறிவுதரும் கல்விக்கு ஆண்பெண் எனக் கூறி
அறிவுலகைக் குடத்துக்குள் மறைத்திடவா போறீர்?
அறிந்திடுவீர்! பெண்மைக்குள் பேரறிவும் உண்டு!
அறையுலகில் வெளித்தருவீர் கல்வியினைக் கொண்டு

கல்விக்கு இணையாக எதுவுமில்லை – உலகில்
கற்றோர்க்கு இணையாக எவருமில்லை
செல்வத்துள் சிறந்த செல்வம் கல்வியென்போம் – அதை
சிறியவரும் பெரியவரும் கற்றிடுவோம் கற்றுவெல்வோம்

கற்றவர்கள் பதவிகளில் உயர்ந்து நிற்பார் – கல்வி
கல்லாதார் பலவகையில் தாழ்ந்திருப்பார்!
பெற்றவரும் மற்றவரும் போற்றும் செல்வம் – உலகில்
பெருமைமிகு மாசற்ற கல்விச்செல்வம்.

செல்வத்தைச் செல்வந்தர் சுமக்கிறார்கள் – கல்விச்
செல்வமதோ கற்றவரைச் சுமந்து செல்லும்.
செல்வத்தை மனிதர்களே காக்கின்றார்கள் – கல்விச்
செல்வமதோ மனிதர்களைக் காத்து நிற்கும்.

செல்வத்தால் இழிவுதரும் பகையும் வரும் – கல்விச்
செல்வத்தால் உயர்வுவரும் உறவும்வரும்!
செல்வத்தால் சிலநேரம் உயிரேபோகும் – கல்விச்
செல்வத்தால் உயிரேபோயின் பெயரோ வாழும்.

செல்வத்தால் மடியிலே பயமிருக்கும் – கல்விச்
செல்வத்தால் மனதினிலே பலமிருக்கும்
செல்வத்தில் பொருட்செல்வம் அழியும் செல்வம் – உலகச்
செல்வத்தில் அழியாது கல்விச்செல்வம்.
அள்ள அள்ளக் குறைந்துவிடும் பிறசெல்வம் – கல்வி
அள்ளினாலும் குறையாத பெரும்செல்வம்.
உள்ளத்தை வெள்ளையாக்கும் கல்விச்செல்வம் – இது
உண்மையிலும் உண்மையான உண்மைச்செல்வம்


முதுவைக் க‌விஞ‌ர்
ம‌வ்ல‌வி அல்ஹாஜ்
ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் பாஜில் ம‌ன்ப‌யீ
( த‌லைவ‌ர், திட‌ல் ப‌ள்ளிவாச‌ல், முதுகுள‌த்தூர் )

No comments:

Followers