KILIYANUR ONLINE

Wednesday 9 February 2011

மண்ணறை உமரை (ரஹ்) அழைத்து சொன்ன செய்தி

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் குடும்ப மரண நிகழ்வொன்றுக்கு போயிருந்தார்கள். ஜனாஸா நல்லடக்கத்தின் பின் மக்களைத் திரும்பிப் பார்த்துப் பேசினார்கள்.
மக்களே! என் பின்னாலிருந்து மண்ணறை என்னை அழைத்து சொன்னது. அது என்னிடம் சொன்னதை உங்களுக்கு சொல்லட்டுமா?
மக்கள் ‘ஆம்’ என்றார்கள்.
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) சொன்னார்கள்: கப்ர் என்னை அழைத்து உமரே! நீங்கள் நேசித்து வந்த மனிதர்களை நான் என்ன செய்திருக்கிறேன் என்று என்னிடம் கேட்க மாட்டீர்களா? அவசியம் சொல் என்றேன். அது சொன்னது; அவர்களின் கபன் துணிகளையெல்லாம் நான் உக்கச் செய்திருக்கிறேன். உடல்களைக் கிழித்து இரத்தத்தை உறிஞ்சிக் குடித்திருக்கிறேன். சதைகளை சாப்பிட்டு விட்டிருக்கிறேன்.
உங்கள் உறவுகளுக்கு நான் என்ன செய்திருக்கிறேன் என்று என்னிடம் கேட்டுப் பாருங்கள். ‘சொல்லும்’ என்றேன். அது சொன்னது: இரு மணிக்கட்டை முழங்கையிலிருந்தும் முழங்கைகளை புஜத்திலிருந்தும் இரு புஜங்களை தோற் பட்டையிலிருந்தும் கழட்டி எடுத்திருக்கிறேன். இடுப்பை தொடையிலிருந்தும் தொடைகளை முழங்காலிருந்தும் இரு முழங்கால்களை கரண்டைக் கால்களிலிருந்தும் இரு கரண்டைக் கால்களை பாதங்களை விட்டும் கழட்டி விட்டிருக் கிறேன்.
பின்பு உமர் அவர்கள் அழுதார்கள். பிறகு சொன்னார்கள் : அறிந்து கொள்ளுங்கள் உலகத்தில் தங்கியிருக்கும் காலம் மிகவும் சொற்பமானது. அதிலே கண்ணியமிக்கவன் இழிவடைகிறான். அதன் வாலிபர்கள் வயோதிபமடைகின்றனர். அங்கு வாழ நினைப்பவன் மரணத்தைத் தழுவுகிறான். அதனை ஏமாற்ற நினைப்பவன் ஏமாற்றப் படுகிறான்.
அங்கு பெரும் நகரங்களை நிர்மாணித்து வாழ்ந்த மனிதர்கள் எங்கே? அவர்களது உடல்களை மண் என்ன செய்துவிட்டிருக்கின்றது. புழுக்கள் அவர்களின் நரம்புகளையும் எலும்புகளையும் என்ன செய்திருக்கின்றது. அவர்கள் உலகத்திலிருந்தபோது சொகுசான கட்டிலில் தூங்கினார்கள். அவர்களுக்கென்று வசதியான வசிப்பிடமிருந்தது. பணிவிடைசெய்ய பணியாளர்களும் உதவி ஒத்தாசைக்கு குடும்பத்தவர்களும் இருந்தனர்.
நீங்கள் அவர்களைக் கடந்து சென்றால் அவர்களை அழைத்து கேட்டுப் பாருங்கள். உங்கள் மென்மையான தோல்களையும் அழகான முகத்தையும் மிருதுவான உடம்பையும் புழு பூச்சிகள் என்ன செய்துவிட்டிருக்கின்றன? அவை நிறங்களை அழித்து சதைகளை சாப்பிட்டிருக்கின்றன. முகங்களை அசிங்கப்படுத்தி அழகை அழித்து விட்டிருக்கின்றன. பிடரியை உடைத்துவிட்டிருக்கின்றன. அங்கங்களையெல்லாம் நாசம் செய்து நரம்புகளை பிய்த்தெடுத்திருக்கின்றன. எங்கே அவர்களது பணியாட்களும் அடிமைகளும்! அவர்கள் சேர்த்து வைத்தவைகளும் அவர்களின் பொக்கிஷங்களும் எங்கே போய்விட்டன!!
மீண்டும் அழுதார்கள். சொன்னார்கள் : நாளையின் கப்ர்வாசியே! உலகத்தில் எது உன்னை ஏமாற்றியிருக்கிறது? உன் மென்மையான ஆடைகள் எங்கே? உனது வாசனைகளும் வாசனைத் திரவியங்களும் எங்கே? கரடுமுரடான பூமியில் நீ எப்படி இருந்துகொண்டிருக்கிறாய்?
நான் ஒரு மயிராக இருந்திருக்கக் கூடாதா! உன் கன்னத்தின் எந்தப் பாகத்திலிருந்து புழுக்கள் வேலையை ஆரம்பிக்கப் போகின்றனவோ! நான் ஒரு மயிராக இருந்திருக்க வேண்டுமே! உலகை விட்டுப் பிரியும் தறுவாயில் அல்லாஹ்விடமிருந்து வரும் மலகுல் மவ்த் என்னை எப்படியான நிலையில் சந்திக்கப் போகிறார். எனக்கு என்ன செய்தியை கொண்டுவரப் போகின்றார்.
உமர் அவர்கள் கடுமையாக அழுதார்கள். அவர்களால் பேசமுடியாமல் போனது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். அதன் பிறகு ஒரு ஜும்ஆ வரைக்கும்தான் அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். பிறகு அவர்கள் மரணித்து விட்டார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக.
From: kaleelilmy@yahoo.com
iman

No comments:

Followers