1. வேறுபெயர்கள்: கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய்
2. தாவரப்பெயர்: Myristica Fragran Ce, Myristicaceae, Myristice Faeglos
3. வளரும் தன்மை: மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 1000 டன்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இது செம்புறைமண், தோமிலிமண், களிமண் கலந்த தோமிலிமண் பயிர் செய்ய ஏற்றது.
ஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளான தென்மேற்கு மலை ஓரங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் உகந்தது. மண்ணின் அங்ககப் பொருட்கள் அதிகமாக இருந்தல் மிகவும் அவசியம். இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமைமாறா மரம். இவை சுமார் 10-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய பளபளப்பான இலைகளையுடையவை. இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாகக் காணப்படும். ஜாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் என தனித்தனியாகக் காணப்படும். இதை 6 வருடங்கழித்து அவை பூக்கும் போதுதான் காண முடியும்.
விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை முளைக்க 6 வாரம் ஆகும். பின் ஆறு மாத கன்றுகளைத் தொட்டிகளுக்கு மாற்றி, ஒரு வருடம் முடிந்தவுடன் நடவுக்குப் பயன்படுத்தலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் 7-8 வருடங்களில் மகசூலுக்கு வருகின்றன 10-12 வருட மரங்கள் ஒரு மரத்திலிருந்து 2000-3000 காய்கள் கிடைக்கும். ஓட்டுக் கன்றுகள் நட்டபின் 4வது வருடத்திலிருந்து மகசூலுக்கு வருகின்றன.
4. பயன்படும் உறுப்புகள்: ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ போன்ற பகுதிக்கு ஜாதிப்பத்திரி என்று பெயர். இரண்டையும் தன்னடக்கியுள்ள சதைப்பற்றான பகுதிக்கு ஜாதிக்காய் ஆப்பிள் என்று பெயர். மேல் ஓடு வெடிக்கும், அதுவும் பயன்படும்.
5. பயன்கள்: ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஜாதி எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.
“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”
அகத்தியர் குணவாகட பாடல் குறிப்பிடுவது போல் ஜாதிப் பத்திரியானது தாப சுரம், பேதி, நீர்க் கழிச்சல், வாதம், தலைவலி, இருமல், வயிற்றுவலி, மாந்தம் போன்றவற்றைக் குணமாக்கும் தன்மையுடையது.
ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம், ஓக்காளம் ஆகியவற்றைப் போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.
எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும். 10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும். ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.
ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.
ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும்.
ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, மணமூட்டி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது.
நன்றி : திரு.குப்புசாமி
No comments:
Post a Comment