KILIYANUR ONLINE

Saturday, 23 April 2011

தற்பெருமை

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி) (அபூதாவூத்)

நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: “இறை நம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு “அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் ”என்று அண்ணலார் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி) (அபூதாவூத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன் பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். ( கருணைப் பார்வை பார்க்கமாட்டான் )” அறிவிப்பாளர்: இப்னு உமர்

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் வினவினார்கள்: “நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டி தளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனா? ” அதற்கு அண்ணலார், “இல்லை, நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். என்று பதிலளித்தார்கள். (புகாரி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.” அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (புகாரி)

By
Abdul Hakkeem .R

No comments:

Followers