சவுதியில் சாலை விதிகள்!! வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!!
சவுதி அரேபியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் வாகனவிபத்துகளை கட்டுப் படுத்த தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை சாலைகளில் சவுதி அரசாங்கம் நிறுவியுள்ளது.
இந்த கேமராக்கள் சவுதி அரேபியாவில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் கீழ் இயங்கும் தேசிய தகவல் மையத்துடன் இணைந்து செயல் பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் பெயர் தான் ‘ஸாஹர்’ (SAHER) http://www.saher.gov.sa/e_Default.aspx
கடந்த ஆண்டு தலை நகர் ரியாதில் நிறுவி வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து தற்போது கிழக்கு மாகாணம் 'தம்மாம்' மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களிலும் செயல்படத் தொடங்கியுள்ளது.
சவுதி அரசாங்கத்தின் புள்ளி விபரப்படி:
* ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருவர் வாகன விபத்தில் உயிரிழக்கிறார்.
* சராசரியாக 18 பேர் அன்றாடம் மரணிக்கிறார்கள்.
* ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருவர் விபத்தின் மூலம் ஊனமடைகிறார்கள்.
* 2009 ஆம் ஆண்டு மட்டும் 485931 விபத்துகள் பதிவாகியுள்ளன.
விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்தபோது 60% விபத்துகள் முரட்டுத்தனமாக வாகனங்களை ஒட்டியதாலும், 30% சிகப்பு விளக்கின் போது நிறுத்தாமல் போனதாலும், 8% அங்கீகரிக்கப் படாத வளைவுகளாலும் ஏற்பட்டது. என அறிக்கை கூறுகிறது. மேலும், நிர்ணயிக்கப் பட்ட வேகத்தை விட கூடுதலான வேகம், முன்னறிவிப்பின்றி திடீரென்று நிறுத்துதல், மொபைலில் பேசிக் கொண்டே வாகனம் ஒட்டுதல் போன்றவையே முக்கிய காரணங்களாகவும் புள்ளி விபரக் கணக்கு நமக்கு தெரிவிக்கின்றது.
பெற்றோர், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களை பிரிந்து பொருளாதாரம் தேடி நாம் இங்கு வந்திருக்கின்றோம். பொருளாதாரத்தை தேடி வந்த நம் மக்களில் எத்தனை பேர் இதே வாகன விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள் ? எவ்வளவு பேர் ஊனமுற்றிருக்கிறார்கள்? நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களை நாமும் நினைக்க வேண்டாமா?
இந்த நிலை மாற வேண்டுமானால் வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் நிதானம் கடைபிடிக்க வேண்டும். அதன் மூலமே விபத்துக்களை குறைக்க முடியும். எனவே, நாம் அனைவரும் தற்போது நிறுவப் பட்டிருக்கின்ற ‘ஸாஹர்’. திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும். அதன் விதிமுறைகளை மதிக்க வேண்டும்.
அதற்கு முன் 'ஸாஹர்' பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
‘ஸாஹர்’ என்பது உயர்தொழில் நுட்பங்களை கொண்ட தானியங்கி கேமராக்களின் மூலம் சாலைக் கட்டுப்பாடுகளை செய்கின்ற முறையாகும். வாகன நெருக்கடிகள், விபத்துகள், சிக்னல் விளக்குகளை மீறுதல், தடம் மாற்றி மாற்றி ஒட்டுதல், சாலைகளில் ஓரங்களில் ஒட்டுதல் போன்றவைகளை குறிப்பாக அறிந்து அதனை புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்டது.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டிராக்குகளில் வாகன ஓட்டிகள் தவறு செய்யும் போது, ஒரே நேரத்தில் அவைகளை படம் பிடிக்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. எவ்வளவு வேகமாக சென்றாலும், வாகனத்தின் எண்கள் உள்பட தெளிவாக படம் பிடிக்கும் உயர் தொழில் நுட்பம் கொண்ட கேமராக்கள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்த புகைப்படங்கள் உடனயாக தானியங்கி முறையில் தகவல் மையத்திற்கு தெரிவிக்கின்றன. அவை தேசிய தகவல் மையத்தின் ஆவணங்கள் மூலம் குறிப்பிட்ட வாகன ஒட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவை ஃபேக்ஸ் மற்றும் எஸ் எம் எஸ் மூலம் அவருக்கு தெரியப்படுத்துகின்றது.
அபராதத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அபராதம் அதன் மடங்குகளாகப் பெருகும் அபாயம் இருப்பதால், உடனடியாக அபராதத்தை செலுத்துவது புத்திசாலித் தனமாகும். எனவே மொபைல் எண், ஈ-மெயில் முகவரிகளை மாற்றக் கூடியவர்கள் அவ்வப்போது தங்களது தகவல்களை அருகிலுள்ள அருகிலுள்ள போக்குவரத்து தகவல் மையத்தில் தெரிவிப்பதன் மூலம் தங்களுக்கு அபராதம் விதிப்பதை உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் எந்தெந்த பகுதிக்கு சென்றிருக்கின்றன, எங்கு இருக்கின்றன போன்ற விபரங்களையும் கூடுதலாக அறிய முடியும். இதன் மூலம் வாகனங்களின் திருட்டை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அதே போல சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்கள் யாரின் பேரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவருக்கே அபராதம் விதிக்கப் படுவதால், வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றவர்கள் ஓட்டுவதற்கு தங்களின் வாகனங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
தங்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறதா என்பதை பின்வரும் முறையில் தேய்ந்து கொள்ளலாம்.
* 01 - 2928888 என்ற தொலைபேசி எண்ணுக்கு பேசுவதன் மூலம்.
* சவுதி உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்திற்கு செல்வதன் மூலம் www.moi.gov.sa/wps/portal
= *56* இக்காமா நம்பர் என்ற (ex : *56*1234567890) என்ற நம்பரை கீழ்க்கண்ட நம்பர்களுக்கு எஸ் எம் எஸ் செய்வதன் மூலம் :
= STC - 88993
= MOBILY - 625555
அபராதத்தை அவ்வப்போது அறிந்து அதை சரி செய்வதன் மூலம் அபராதம் இரட்டிப்பாவதை தவிர்க்கலாம்.
உலகெங்கிலும் சாலை விதிகளை கடைபிடிப்போம். விபத்துக்களை தவிர்ப்போம்.
**************************************************************************************************
- எம் அப்துல் காதர் "Nothing is impossible"
No comments:
Post a Comment