KILIYANUR ONLINE

Thursday, 5 May 2011

இல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும். இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது. இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது.

“நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.”(அல்குர்ஆன் 30:21)
இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித்தலைகுனியக் கூடிய விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் சென்று விடக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
பெண் ஷைத்தானைப் போலவே (மனதை மயக்கும் விதத்தில்) அணுகுகின்றாள், இன்னும் ஷைத்தானால் பீடிக்கப்பட்ட (மனதை மயக்கும் விதத்தில்) நிலையிலேயே வெளியேறுகின்றாள். உங்களில் ஒருவர் மனதை மயக்கும் விதத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பீர்கள் என்றால், அவன் அவளது மனைவியிடம் செல்லட்டும், ஏனென்றால், மற்ற பெண்களிடம் உள்ளது போலவே உங்கள் மனைவியிடம் உள்ளது. அவன் தனது இச்சையை ஆகுமான வழியில் தீர்த்து திருப்தி கொள்ளட்டும். (முஸ்லிம்)
இரண்டாவதாக, திருமணத்தின் மூலம் வாரிசுகள் உருவாகி, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. முறையான திருமண உறவு முறையின் மூலம் பெற்றெடுக்கின்ற மழலைச் செல்வங்களின் மூலம், இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தையும் நாம் நிறைவேற்றியவர்களாகின்றோம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,”திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் (மறுமை நாளில்) மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண நான் விரும்புகின்றேன்.” (பைஹகி).

இவை தான் இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கமெனினும், இன்னும் பல சிறப்பு அம்சங்கள் அதனுள் பொதிந்து கிடக்கின்றன.

அதாவது ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவது, ஒருவர் மற்றவர் மீது கருணையோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வது, இன்னும் ஒருவர் மற்றவரின் கெடுதல்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வது, அது மட்டுமல்ல இருவரும் இல்லறத்தை நல்லறமாக மாற்றுவதன் மூலம் நன்மையான பல காரியங்களை இணைந்து செய்வதற்கான சூழல் அங்கு நிலவ ஆரம்பிக்கின்றது, இருவருது அன்புப் பிணைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயம் ஒரு பாதுகாக்கப்பட்ட சமுதாயமாக, பாதுகாப்புணர்வு கொண்ட சமுதாயமாக பரிணமிப்பதோடு, அங்கு பழக்க வழக்கங்களில் நன்னடத்தையும், சமூகம் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றது.

துரதிருஷ்டவசமாக, மற்ற சமுதாயங்களைப் போலவே இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்திலும் மணவிலக்குகள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
இன்றைக்கு நீங்கள் வாழக் கூடிய சூழலில் இவ்வாறான மணவிலக்குகள் அதிகமில்லாதிருந்தாலும் கூட, மேலே நாம் சொன்ன திருமணத்தின் காரணமாக விளையக் கூடிய நன்மைகள் தானாக விளைந்து விடுவதில்லை. மாறாக, அன்பு, பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், முயற்சிகள், இன்னும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுதல், இவை அனைத்தையும் விட அற்பணிப்பு மனப்பான்மையுடன் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலமாகத் தான் அத்தகைய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, தானாக எந்த நன்மையும் விளைந்து விடுவதில்லை. அனைத்திற்கும் நமது முயற்சி இன்றியமையாததொன்றாக இருக்கின்றது.

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுவது போல, “உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;” (அல்குர்ஆன் 30:21)
கணவன் மனைவிக்கிடையே காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் விடைபெற்று விடுமென்று சொன்னால், அதனை மீட்டிக் கொண்டு வருவதற்கு அங்கு கருணையும், சகிப்புத் தன்மையும், ஒருவர் மற்றவருக்கிடையே தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும், இவை மூலம் விடைபெற்றுச் சென்ற காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டுக்களும் அங்கு தலைத்தோங்க ஏதுவாகும். ஊடலுக்குப் பின் கூடல் என்பதுதான் உறவை இருகச் செய்யும் சாதனமாகும்.

தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது என்பது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அம்சமாக இருக்கின்றது. நீங்கள் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி, சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுது, அந்தச் சூழலில் வாழக் கூடிய உங்களது குழந்தைகளும் இத்தகைய நற்பழக்கங்களைக் கற்றுக் கொண்டு, தங்களது வாலிப நாட்களில் அதனைக் கடைபிடிப்பதற்கான முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஆய்வுகள் கூறும் முடிவுகளாகும். இன்னும் அமைதியான சூழ்நிலைகள் நிலவக் கூடிய இல்லறத்தில், வாழ்வின் வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். இது ஒன்றும் கடிமான விஷமுமல்ல, இதற்கென நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமுமில்லை, உங்களது பழக்கவழக்கங்களில் சற்று மாறுதல்களைக் காண்பித்தாலே போதும், இல்லறத்தில் நல்லறங்கள் பூக்க ஆரம்பித்து விடும். அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் :

ஒருவர் மற்றவர் உரிமைகளை மதித்து நடப்பது
உங்களது திருமணம் வெற்றிகரமான திருமணமாக பரிணமிக்க வேண்டுமென்றால், திருமணமான ஆண்-பெண் இருவரும், ஒருவர் மற்றவர் மீது என்னனென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதுடன், அவற்றை மதித்து நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கணவனின் மீது உள்ள உரிமைகள் என்னவென்றால், தன்னை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் போன்றவர்களுக்கான வாழ்வியல் தேவைகளை அதாவது, உடை, உணவு, உறையுள், கல்வி இன்னும் பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அதற்கான பொருளாதாரத்தைத் திரட்டிக் கொடுப்பது.
இன்னும் குடும்பத் தலைவன் என்ற முறையில் குடும்பப் பராமரிப்பு அத்துடன் மார்க்க வழிகாட்டுதல்கள் மற்றும் குடும்பத்தினரிடையே ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை கணவன் மீதுள்ள இன்றியமையாத கடமைகளாகும். இவை யாவும் அவன் மீதுள்ள தவிர்க்க முடியாத கடமைகளாகும்.

மனைவியைப் பொறுத்தவரையில், இறைவன் அனுமதித்துள்ள வரம்புகளைப் பேணுவதும், அதற்காக கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவளது இன்றியமையாத கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. இன்னும் பல பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடியவளாக அவள் இருந்தாலும், மேலே சொன்னவைகள் தான் அவளுக்குரிய அடிப்படைக் கடமைகள் என்பதை அவள் மறந்து விடக் கூடாது. இவற்றை அவள் நிறைவேற்றத் தவறுவாளாகில், அந்தக் கணத்திலிருந்து குடும்பத்தில் குழப்பங்கள் தலைதூக்க ஆரம்பித்து விடும், குடும்பச் சூழ்நிலை பாழ்பட ஆரம்பித்து விடும். குடும்பத்தில் அமைதி நீங்கி, புயல் வீச ஆரம்பித்து விடும். இத்தகைய சூழ்நிலைகளினால் அங்கு அன்பு அழிந்து, கருணையை இழந்து, ஒருவர் மற்றவரைப் பிணைக்கக் கூடிய நற்பண்புகளையும் இல்லாமலாக்கி விடும்.

எனவே தான், கணவன் மனைவி இருவரும் தங்களுக்குரிய கடமைகள் என்னவென்பதை ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மீது காட்டக் கூடிய அலாதியான அந்த அன்பு, அவர்களது இதயத்தைப் பிணைப்பதோடு, இறைவன் நாடினால் மேலும் மேலும் வசந்தம் வீசக் கூடிய தளமாக இல்லறம் மாறவும் வாய்ப்பு ஏற்படும்.

தனிமைச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குதல்
இன்றைய உலகம் என்பது அவசர உலகம். அதனால் வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட நேரமில்லாமல் வாழக் கூடிய நிலைமையில் தான் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இருக்கின்ற 24 மணி நேரம் போதவில்லை என்று அங்கலாய்ப்பவர்களைத் தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்த 24 மணி அலுவல்களுக்கிடையிலும் உங்கள் மனைவிக்காகவும் சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அதில் அவளுடன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் அவசியமில்லாத முக்கியத்துவமில்லாத எத்தனையோ விஷயங்களுக்காக நாம் நம் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால் திருமணம் எனும் பந்தத்தில் நம்முடன் இணைந்த அவளுடன், வாழ்நாள் முழுவதும் நம்மையே நம்பி வாழ்ந்து வரக் கூடிய அவளுக்கென சில மணித்துளிகளை செவழிப்பதற்குத் தயங்குகின்றோம்.
சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தனிமையில் சந்திப்பதே ஒரு சில நிமிடத்துளிகள் தான். எனக்கு நேரமில்லை, நேரமில்லை, காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, அடுத்து வேலைக்குச் செல்வது, மாலையில் வீட்டுக்கு வருவது, உடன் அடுத்தடுத்த பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவது இப்படியாக காலத்தை நகர்த்தக் கூடிய நாம், மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எந்தளவு நேரத்தை ஒதுக்கினோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது.

இன்றைக்கு பணம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. பணம் தான் எல்லாம் என்ற மனநிலை மக்கள் மனதில் நோயாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்களது உணர்வுகளை பணத்தைக் கொண்டு திருப்திபடுத்தி விட முடியாது என்பதைப் புரியாதவர்களாக மனிதர்கள் மாறி விட்டிருக்கின்றார்கள். இதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு உங்களது நேரங்களைத் திட்டமிட்ட அமைத்துக் கொள்ளுங்கள். நேர முகாமைத்துவம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவசியம். அவசர கால ஓட்டத்தில் உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில நேரத்துளிகளை ஒதுக்கித் தரும் பொழுது, பணம் தராத சுகத்தை உங்களது அருகாமை அவர்களுக்கு வழங்கும்.

அதிகாலை பஜ்ர் தொழுகைக்குப் பின் குடும்பத்தினர் அனைவருடனும் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது இரவு சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் குடும்பத்தினருடன் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்தளவு பரபரப்பானவராக இருந்தாலும் சரி, குடும்பத்தினருக்காகவென ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் உங்களைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி நீங்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்பதையும் உணர்த்த முடியும். உணர்வுகள் தான் மனிதனை உச்சத்திற்கும் கொண்டு செல்லும், அதே உணர்வுகள் தான் மனிதனை தாழ்நிலைக்கும் கொண்டு செல்லும்.

கவனிப்பு அல்லது அக்கறை
உங்களது திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது.
உங்களது மனைவி சற்று தாகமெடுக்கின்றது என்று சொன்னால், உடனே சென்று ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்து அவளுக்கு வழங்குங்கள். இல்லை, உங்களது கணவன் களைப்பாக இருக்கின்றது என்று சொன்னால், அவனது களைப்பு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டு அதற்கான ஆறுதலைக் கூறுங்கள். எனவே, ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறும் தளமாக மாறிக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் மற்றவரது சுமைகளைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும். குடும்ப அலுவல்களில் மனைவிக்கு உதவுவது கணவனின் உதவி என்றால், கணவனின் அலுவல்களுக்கு இடையூறாக இல்லாமல், அவனது சிரமங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்குண்டான ஊக்கத்தை வழங்குவது மனைவி புரியக் கூடிய உதவியாக இருக்கும்.
ஒருவர் மற்றவரது அலுவல்களின் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம், வேலைப் பளு குறைவதோடு, இணக்கமான சூழ்நிலையும் நிலவ ஆரம்பித்து விடும். இதுவே உங்களது பிணைப்பை உறவை வலுப்படுத்தும்.

அமைதியாகப் பேசுவது, கவனமாகச் செவிமடுப்பது
தம்பதிகளுக்கிடையே பிரச்னை உருவாகுவது என்பது இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமாகும். அதாவது உங்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.

நீங்கள் உங்களுக்கிடையே உரையாடும் பொழுது, நீங்கள் இருவரும் தம்பதிகளாக இருக்கின்றீர்கள், அவள் மனைவி, இவன் கணவன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் பேசும் பொழுது சப்தமிட்டு, உரத்த குரலில் பேசுகின்றீர்களா? அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றீர்களா? ஒருவர் பேசும் பொழுது மற்றவர், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானித்து கவனிக்கின்றீர்களா? அல்லது அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற அலட்சியப் போக்கில் இருக்கின்றீர்களா?
ஒருவர் மற்றவரிடம் பேச்சுக் கொடுக்க வரும் பொழுது, அவள் என் மனைவி, இவன் எனது கணவன், அவன் அல்லது அவள் என்னிடம் அர்த்தமுள்ள பேச்சைத் தான் பேச வருகின்றான் அல்லது வருகின்றாள் என்ற உணர்வுடன், ஒருவர் மற்றவரது பேச்சை அக்கறையுடன் செவிமடுக்க வேண்டும்.

அவள் அல்லது அவன் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானத்துடன் கவனித்து, அதனை முழுவதுமாக கிரகித்து, அதற்கான பதிலை அல்லது ஆலோசனைகளை வழங்க வேண்டும். அந்த ஆலோசனைகள் கூட அறிவுறுத்தலாக இருக்க வேண்டுமே ஒழிய, கட்டளைத் தொணியில் இருக்கக் கூடாது. இதன் மூலம் வற்புறுத்தல் இல்லாத நிலை உருவாகுவதோடு, இருவருக்குமிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். புரிந்துணர்வே பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.
இறைவனிடம் உதவி கேளுங்கள்

திருமணத்தின் மூலம் உங்கள் இருவரையும் கணவன் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியன், அல்லாஹ் தான், அவனே உங்கள் இருவருக்குமிடையே அன்பையும், பாசப் பிணைப்பையும் உருவாக்கி வைத்தான்.

இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்திலிருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தானிடமிருந்து வந்தது, அவன் தான் உங்களுக்கு அல்லாஹ் எதனை ஆகுமாக்கி வைத்திருக்கின்றானோ அதன் மீது வெறுப்பைத் திணிக்கின்றான்…எனவே, உங்கள் மனைவி மீதுள்ள அன்பு குறைகின்றதென்றால், நீங்கள் அல்லாஹ்வின் புறம் திரும்புங்கள், அவனே அனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்..! இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்..! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள், அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
திருமணம் என்பது இஸ்லாமிய சமுதாய வாழ்வில் தவிர்க்க முடியாத, இன்றியமையாத சாதனமாகும். ஒவ்வொரு நாள் சுமையிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடிய தளமாக திருமணம் எனும் பந்தம் இருக்க வேண்டும். அது குளிருக்குக் கதகதப்பானதாகவும், வெயிலுக்கு இதமான குளிர்ந்த தென்றலாகவும் திகழ வேண்டும். அதன் மூலம் அன்பும், பாசமும் தளைத்தோங்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியான அளவில் புரிந்துணர்வு கொண்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் பாசப்பிணைப்பில் மேலும் இறுக்கம் ஏற்பட வேண்டும்.

உங்கள் குடும்பங்கள் புயல் வீசுகின்ற தளமாக இருக்குமென்றால், மேலே சொன்ன அறிவுரைகளைச் செயல்படுத்திப் பாருங்கள், உங்களுக்கிடையில் இருக்கின்ற தவறுகளைக் களைந்து, கருணை எனும் இறக்கையைத் தாழ்த்திப் பாருங்கள். வசந்தம் எனும் வானம்பாடி பாடித்திரியும் நந்தவனமாக, பாச மலர்க் கூட்டமாக உங்கள் இல்லம் திகழக் கூடும். இறைவன் நாடினால்..!

எல்லாவற்றுக்கும் மேலாக அவனிடமே கையேந்துங்கள். அவனே, இதயங்களைப் புரட்டக் கூடியவனாக இருக்கின்றான்
Regards
Peer Mohamed.

No comments:

Followers