இன்று நினைத்தாலும் அந்த நிகழ்ச்சிகள் பசுமையானவையாக மனதில் படிந்திருக்கின்றன. சிறிதளவு கனத்த உடலானாலும் எப்போதும் சுறுசுறுப்பாக மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் தோற்றமளிப்பார். எவரோடும் எதார்த்தமாகப் பழகுவார். இனிய சொற்களாலேயே எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்துவார். மனம் சோர்ந்துவிட வாழ்க்கையில் தளர்ந்து போன எவரையும் உட்சாகப்படுத்தி ஊக்கமளிப்பார். உண்மையையும், நேர்மையையும் நேசித்தவர். அவற்றைத்தன் எழுத்துக்களிலும், மேடைகளிலும், தனிப்பேச்சுகளிலும் தயங்காமல் வெளிப்படுத்துவார். தன்னால் இயன்றதைப் பிறருக்குத் தானே முன்வந்து செய்வார். நல்லது என்று அவருக்குத் தோன்றினால் அதை வலியுறுத்திச் சொல்லத் தயங்கமாட்டார். அவரைப் பார்க்கும் அந்தக் கனத்திலேயே எவருக்கும் மனதில் மகிழ்ச்சி அரும்பிவிடும். சமுதாய ஈடுபாடுள்ள எவரையும் சந்தித்துப் பேசி மகிழ்வார். வாழ்க்கையை உடன்மறைக் கண்ணோட்டத்துடன் பார்த்துப் பழக வேண்டும் என்பார். முயற்சித்து முன்னேற வேண்டும் என்று சொல்லுவதோடு மட்டுமல்லாமல் தன்னால் இயன்றதைச் செய்வார்.
சென்ற 1988ம் ஆண்டு என்னுடைய நாவல் ‘அங்குத்தாய்’ வெளியானது. அதன் ஒரு பிரதியை எங்களூர் நண்பர் ஒருவர் வாயிலாக அவருக்குக் கொடுத்து அனுப்பினேன். அந்த நண்பர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அப்போது பணியாற்றி வந்தார். அந்த நாவலைப் படித்துவிட்டு அதற்கு ஒரு வெளியீட்டு விழா நடத்த வேண்டுமென்று விருப்பப்பட்டார். அதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால் அமரர் இல.செ.க. தானே முன் முயற்சி எடுத்து விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம் அவர்களை விரும்பி வேண்டி அதன் வெளியீட்டு விழாவை நிகழ்த்த ஏற்பாடு செய்தார். அதே சமயத்தில், காவ்யா பதிப்பக வெளியீடாக என்னுடைய சிறுகதைத் தொகுப்பான, ‘ரி வோல்ட்’-ம் வெளியானது. இரண்டுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் வெளியீட்டு விழா நிகழ்ந்தது. பல அறிஞர்களும், படைப்பாளிகளும் பங்கு கொண்டனர். கோவை செஞ்சிலுவைச் சங்கத்தில் நடந்த அந்த விழாவில் தாமே முன்வந்து அவர் அந்த நாவலை வெளியிட்டார். டாக்டர் மனோகர் டேவிட் ‘ரி வோல்ட்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. அதற்குப் பிறகு என்னுடைய படைப்புக்கள் எவ்வளவோ வெளியாகின. அதுதான் முதலாவதும், கடைசியானதுமான எனது படைப்பு வெளியீட்டு விழா.
தாமே ஒரு சிறந்த எழுத்தாளர் என்றாலும் என்னைப் பாராட்டிப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் அவருக்கு இருந்தது. ஒரு தாயின் கருணையைப் போன்ற உணர்வாகவே அது இருந்தது.
ஒருமுறை என்னைத் தனியே அழைத்து வைத்து எனக்குத் தேவையானதை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சுட்டிக்காட்டினார். மார்க்சியச் சிந்தனையில் தோய்ந்துபோன என்னை வாழ்க்கையை உடன்மறைக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்பதை அடையாளம் காட்டினார். அந்தக்கருத்து என்னை மேலும் கூர்மைப்படுத்தியது. வாழ்க்கையையும், சமுதாயத்தையும் அவற்றின் வளர்ச்சிப்போக்கில் அறிவியல் ரீதியாக அணுகக் கற்றுக்கொண்டேன். இதே முறையில் அவர் பலரை நெறிப்படுத்தியிருப்பதை நான் அறிவேன்.
உயர்கல்வி கற்றிருந்தாலும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்த எனக்கு வழிமுறை காட்ட அவர் வந்தார். வேளாண்மை குடும்பத்தைச் சேர்ந்த என்னை ஒரு மாட்டுப்பண்ணை வைத்து நடத்தத் தூண்டினார். அது என்னுடைய வருமானத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்றும் ஆலோசனை கூறினார். அதற்குத் தாமே ஏற்பாடு செய்வதாகச் சொல்லி என்னை வேளாண் பல்கலைக் கழகத்திற்கு வந்து சந்திக்கும்படி சொன்னார். அதற்கு இசைந்த நான் அவர் விரும்பியபடி அவரைச் சந்தித்தேன். தாமே முன்வந்து என்னை வேளாண் பல்கலைக்கழக மாட்டுப்பண்ணைக்கு அழைத்துச் சென்று காட்டி விவரங்களைச் சொன்னார். ஒரு கல்வியாளன் அறிவுத் துறையில் மட்டுமல்லாமல் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது அவருடைய கருத்து.
ஒருமுறை எமது நண்பரான கவிஞர் மு. மேத்தா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவைக்கு வந்திருந்தார். கோவை ஏ.பி. லாட்ஜில் அவருக்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் தங்கியிருந்த அறைக்கு வெளியே அந்நேரத்தில் அமரர் இல.செ.க. அவர்கள் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அறைக்குள் கவிஞர் தூங்கிக் கொண்டிருந்தார். அவருடைய தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்று அவர் வெளியில் காத்திருந்தார். அவர் தன்னுடைய வருகையைக் கவிஞருக்குத் தெரிவித்திருந்தால் கவிஞரே தூக்கத்தைத் தவிர்த்துவிட்டு வெளியில் வந்திருப்பார். கவிஞர் மு. மேத்தா கோவையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரை எம்.ஏ. பட்டம் பெற வழிகாட்டியவர் அமரர் இல.செ.க. அவர்கள்.
அந்த நேரத்திலும் அமரர் இல.செ.க. எழுதிக் கொண்டிருந்தார். கவிஞர் தாகூரைப் பற்றித் தாம் எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறியதோடு தாகூரைப் பற்றி என்னுடைய கருத்துக்களைக் கேட்டார். நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். அதன் பிறகுதான் நேரம் கழித்து கவிஞர் அறையைத் திறந்து கொண்டு வெளியில் வந்தார்.
நேரத்தை முறையாகப் பயன்படுத்துவதும், மனிதர்களை நேசத்தோடு அணுகுவதும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதும் அவருடைய இயல்பு. தன்னுடைய மேதைமையைக் குறித்து எந்த விதமான கர்வமும் கொள்ளாத பெருந்தன்மையாளர் அவர். மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பவர். தன்னுடைய கருத்துக்களைத் தயங்காமல் வெளிப்படுத்துபவர்.
வானம்பாடிக் கவிஞர் குழுவை வேளாண் பல்கலைக் கழகத்திற்கு அழைத்து மாணவர்கள் முன்னிலையில் ‘கவி இரவு’ நிகழ்ச்சியை நடத்துவதற்கான முயற்சிகளைச் செய்தார். மாணவர் மன்றம் அந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்த எல்லாவிதமான வசதிகளையும் செய்தது.
காட்சிக்கு எளியவராகவும் கடுஞ்சொல் சொல்லாதவராகவும் இருந்து எல்லோரையும் அவர் மகிழச் செய்தார். அதில் தானும் மகிழ்ந்தார். தன்னைப் போலவே ஒவ்வொரு மனிதரும் உயர்வடைய வேண்டுமென்று உளமாற விரும்பினார். அவரைப் பற்றிய நினைவுகள் நிலையானவை.
thanks - thannabikkai
No comments:
Post a Comment