KILIYANUR ONLINE

Monday, 27 June 2011

ஏ.டி.எம் தெரிந்துகொள்ள வேண்டியவை ?

வங்கி துறையின் வளர்ச்சியில் மிக முக்கிய மைல்கல்லாக ஏ.டி.எம் எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தின் அறிமுகத்தை குறிப்பிடலாம்.
வங்கி எப்போது திறக்கும் என்று பார்த்திருந்து... திறந்தவுடன் நீண்ட நேரம் காத்திருந்து... பணம் பெறும் தொல்லைக்கு முடிவு கட்டியது இந்த இயந்திரம். வீதிக்கு வீதி பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.க்கள், 24 மணி நேர சேவை, நள்ளிரவிலும் பணம் எடுக்கும் வசதி போன்றவற்றால் இந்த இயந்திரம், வங்கி வாடிக்கையாளர்களின் உற்ற தோழனாக உருவெடுத்து விட்டது.

வசதிகள் பெருக பெருக, பிரச்னைகளும் பெருகும் என்பது இந்த இயந்திரத்திற்கும் பொருந்தும். இன்று கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பவர்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, மாத துவக்கத்தில், ஊதியத்தை எடுப்பதற்காக ஏ.டி.எம் செல்பவர்கள் கசப்பான அனுபவங்களை சந்தித்து வருகின்றனர். முதலாவதாக, மாத துவக்கத்தில் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் "பணம் இல்லை; இயந்திரம் வேலை செய்யவில்லை' என்ற அறிவிப்புகள் தான் வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன. இதற்கு, அந்த மையங்களில் போதிய பணம் இருப்பு வைப்பதில்லை அல்லது முன்னதாக வருவோர் பணத்தை எடுத்து விடுவது ஆகியவை தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏ.டி.எம் மையங்களில், பணத்தை இருப்பு வைக்கும் பொறுப்பை, சில வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளன. இந்த நிறுவனங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏ.டி.எம் மையங்களில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பணத்தை இருப்பு வைக்கின்றன. அதுவும் பண்டிகை மற்றும் விடுமுறை நாள்களில், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் போடுவதில்லை. இதனால், இதுபோன்ற நாள்களில், பணம் உள்ள ஏ.டி.எம்.க்களை தேடி அலைய வேண்டியுள்ளது. அப்படியே அலைந்து திரிந்து, அட்டையை செருகினால், 100 ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கப்பட மாட்டாது என்ற பதில் தான் கிடைக்கிறது. அதனால், 500 ரூபாய்க்கு குறைவாக பணம் எடுக்க வருபவர்கள் பாடு திண்டாட்டம் தான். அவர்கள், ஒவ்வொரு ஏ.டிஎம்.மாக தேடி அலையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அடுத்ததாக, ஒவ்வொரு ஏ.டி.எம் இயந்திரமும் ஒவ்வொரு வகையாக செயல்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. கனரா வங்கியின் ஏ.டி.எம் மையத்தில், கார்டு உள்ளே இழுத்து கொள்ளப்படுகிறது. ரகசிய எண்ணையும், எடுக்க வேண்டிய தொகையையும் குறிப்பிட்டால், கார்டு வெளியே வந்து விடுகிறது. பணம் வராமல், கார்டு மட்டும் வருகிறதே என்று சிந்தித்து முடிவெடுப்பதற்குள், கார்டு திரும்பவும் உள்ளே சென்று விடுகிறது. பணமும் வருவதில்லை. இதை தொடர்ந்து "உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்' என்று அறிவிப்பு திரையில் தோன்றுகிறது. இதனால், அவசர தேவைக்கு பணம் எடுக்க ஏ.டி.எம் வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர். அது மட்டுமின்றி, "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல், குறிப்பிட்ட தொகை வங்கி கணக்கில் இருந்து கழிக்கப்பட்டதாக இயந்திரத்தில் இருந்து ரசீது வரும். ஆடிப்போகும் வாடிக்கையாளர்கள், உடனடியாக வங்கிக்கு ஓடி பிரச்னையை தெரிவித்தால், குறைந்தபட்சம் இரு வாரத்திற்கு பின்தான் புதிய கார்டு வழங்கப்படும். "சஸ்பென்ஸ்' தொகையும் கணக்கில் சேர்க்கப்படும்.

"சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம் இயந்திரங்கள், டெபிட் கார்டை உள்ளே இழுத்துக் கொள்வதில்லை. செருகி விட்டு எடுக்கக் கூடிய வசதி கொண்டவை. இந்த இயந்திரங்களில் பணம் தீர்ந்து போனால், அது பற்றிய சமிங்ஞை சம்பந்தப்பட்ட ஏஜன்சிக்கு தானாகவே தெரிவிக்கப்படும். அந்த ஏஜன்சி உடனடியாக ஆட்களை அனுப்பி பணத்தை நிரப்பி விடும்' என, இவ்வங்கியின் துணை பொது மேலாளர் (கார்ப்பரேட் வர்த்தகம்) பி.வாதிராஜன் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, ஒரு சிலர், ஏ.டி.எம்.மில் கார்டை செருகி விட்டு, ரகசிய எண்ணை தவறாக குறிப்பிட்டு விடுவர். அதனால், கார்டு திரும்பி விடும். தொடர்ந்து மூன்று முறை முயன்றால், ஏ.டி.எம் இயந்திரம் கார்டை திரும்ப அளிக்காமல் உள்ளேயே வைத்து கொள்ளும். அந்த கார்டை பெறுவதற்கு, வங்கி கிளையை அணுக வேண்டும். வங்கிகள், புதிய கார்டு வழங்க குறைந்தபட்சம் 150 ரூபாய் வ‹லிக்கின்றன. இது தவிர, ஏ.டி.எம்.மில் கார்டை செருகி, தொகையை குறிப்பிட்டால், சில சமயங்களில் பணம் வராது. ஆனால், தொகை கழித்து கொள்ளப்பட்டதற்கான ரசீது மட்டும் வரும். இது குறித்து வங்கியில் புகார் தெரிவித்தால், மீண்டும் வங்கி கணக்கில் பணம் போட 15 நாள்களாகும். "இதுபோன்ற குளறுபடிகளுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பில் ஏற்படும் தடங்கல் தான் காரணம். ஏ.டி.எம் பரிவர்த்தனைக்கு செயற்கைக்கோள் வாயிலான தொலைத்தொடர்பு வசதி அவசியமாகும். அதனால், இந்த தொடர்பில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், ஏ.டி.எம்.மில் கார்டு அல்லது பணம் வராமல் போக வாய்ப்புள்ளது' என, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளர் (ஏ.டி.எம் பிரிவு) சுரேஷ் கூறினார்.

ஏ.டி.எம். இயந்திரங்களில் தவறாக கழிக்கப்பட்ட தொகையை 12 நாள்களுக்குள் வாடிக்கையாளருக்கு தர வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. காலதா மதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் சம்பந்தப்பட்ட வங்கி 100 ரூபாய் வழங்க வேண்டும். இதுகுறித்து வாடிக்கையாளர் கோரிக்கை விடுக்கவில்லையென்றாலும், அவரது கணக்கில் அந்த தொகை வரவு வைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உறுதியாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நடைமுறையை எந்த வங்கியும் கடைபிடிப்பதில்லை. "பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற விதிமுறை இருப்பது தெரிவதில்லை. அதனால் அவர்கள் வங்கியில் காலதாமத கட்டணத்தை கோருவதில்லை' என்கிறார் தமிழ்நாடு முதலீட்டாளர் நலச்சங்கத் தலைவர் நாராயணன்.

இது தவிர, தனியார் துறையை சேர்ந்த சில முன்னணி வங்கிகள், எந்த வகையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை கறக்கலாம் என்று "ரூம் போட்டு' யோசித்து, சில விதிமுறைகளை வைத்துள்ளன. இதன்படி, ஏ.டி.எம். இயந்திரத்தில் ஞாபக மறதியாக, கணக்கில் உள்ள இருப்பை விட கூடுதல் தொகையை குறிப்பிட்டு விட்டால், "போதுமான தொகை இல்லை' என்ற பதில் வருவது மட்டுமின்றி, அவரது கணக்கில் 28 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இதுபோல் எத்தனை முறை தவறாக பணத்தை குறிப்பிடுகிறோமோ அத்தனை முறை பணத்தை பிடித்து கொள்கின்றன. அதனால், இதுபோன்ற வங்கிகளின் ஏ.டி.எம் பயன்படுத்தும் போது, கணக்கில் உள்ள இருப்பை முதலில் தெரிந்து கொண்டு, அதன்பின் பணம் எடுப்பது நல்லது. மேலும், மாற்று வங்கியின் ஏ.டி.எம்.மில் ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும், 20 ரூபாய் கணக்கில் பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது. ஏ.டி.எம் பயன்பாட்டில் உள்ள பிரச்னைகளையும், குறைபாடுகளையும் களைய வங்கிகள் முன்வர வேண்டும். அதே சமயம், வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகள் முன்வர வேண்டும். இது இரு தரப்பிற்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்த வழிவகுக்கும்.

* வங்கி சேவைக்கான ஏ.டி.எம் இயந்திரத்தை உருவாக்கியவர் டொனால்டு வெட்செல்.

* நியூயார்க்கின் கெமிக்கல் வங்கியில், 1969ம் ஆண்டு, முதன் முதலாக ஒருங்கிணைந்த ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்டது.

* உலகில் தற்போது 20 கோடி ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளன.

* சொகுசு கப்பலில் கூட ஏ.டி.எம் வசதி உள்ளது.

* இந்தியாவில், 1987ம் ஆண்டு முதன் முதலாக எச்.எஸ்.பி.சி வங்கி ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தியது.

* பாரத ஸ்டேட் வங்கி 26 ஆயிரத்துக்கும் அதிகமான ஏ.டி.எம்.களை கொண்டு முதலிடத்தில் உள்ளது.

* எச்.எம்.ஏ டைபோல்டு, என்.சி.ஆர் இந்தியா போன்ற நிறுவனங்கள் ஏ.டி.எம் இயந்திரங்களை தயாரிக்கின்றன.

* ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புதல், பராமரிப்பு பணிகளையும் இந்நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

ஏ.டி.எம்.மில் கவனிக்க வேண்டியவை

* அவ்வப்போது கிரெடிட், டெபிட் அட்டைகளுக்கான ரகசிய எண்ணை மாற்றிக் கொள்ளவும்.

* ரகசிய எண்ணை யாரிடமும் தெரிவிக்காதீர்கள்.

* கார்டின் பின்புறம் ரகசிய எண்ணை எழுதி வைக்காதீர்கள்.

* அட்டை தொலைந்து விட்டால், உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு, வங்கி கணக்கை முடக்கவும்.

* இயந்திரத்தில் அட்டை சிக்கினாலோ, பணம் தவறுதலாக கழிக்கப்பட்டாலோ ரசீதுடன் வங்கியில் புகார் தெரிவிக்கவும்.

* கிரெடிட், டெபிட் அட்டைகளின் எண்களை குறித்து வைத்து கொள்ளவும்.

* பரிவர்த்தனை முடித்து, திரையில் ஹோம் பேஜ் வந்த பிறகே மையத்தை விட்டுச் செல்ல வேண்டும்.Source: http://www.gnanamuthu.com/2011/05/blog-post_7167.html

No comments:

Followers