டாலர் மதிப்பு சரிவதைக் காரணம் காட்டி மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன பெட்ரோலிய நிறுவனங்கள். 98 உலக நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப் படுகிறது என இந்தியா உலக அரங்கில் மார்தட்டிக் கொள்ளலாம். வல்லரசான அமெரிக்காவில் பெட்ரோலின் விலை இந்தியாவை விடக் குறைவாம்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து விட்டது என காரணம் கூறி வந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது புதிதாக டாலர் மதிப்பு சரிந்து விட்ட காரணத்தையும் கண்டுபிடித்து பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தும் மொத்த பெட்ரோலின் அளவில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப் படுகிறது. இந்தியாவில் எடுக்கப் படும் கச்சா எண்ணெய்க்குச் சர்வதேசச் சந்தையோ அல்லது டாலர் சரிவோ வரப் போவதில்லை.
எனினும் இது குறித்த உண்மை நிலையை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பொது மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. காரணம் இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் கச்சா எண்ணெயின் லாபத்தை ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருவதுதான்.
அண்மையில் கூட கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீட்டுச் செலவைப் பலமடங்கு உயர்த்திக் காட்டி பல்லாயிரம் கோடி ரூபாய்களை பெட்ரோலிய அமைச்சகத்துக்குப் பட்டை நாமம் சாத்தியுள்ளது என தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக கணக்கு காட்டி கொள்ளையடித்த ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடான கணக்கு எழுத சொல்லிக் கொடுக்கவா வேண்டும்!.
குஜராத்தில் முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுனர் நியமித்து விட்டார் என்று மக்களவையை நடத்த விடாமல் ருத்ர தாண்டவம் ஆடிய பாஜக, ரிலையன்ஸ் குறித்த தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கைக் குறித்து வாய் திறக்கவில்லை.
சாதாரண அடித்தட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கக் கூடிய டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டிய மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆளாளுக்குத் தங்கள் பங்குக்கு வரிகளைப் போட்டு ரூ 30 க்கு விற்க வேண்டிய பெட்ரோலை ரூ 70 க்கு விற்று வருகின்றன. தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை விட பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் வரி அதிகம்.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆடம்பர ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரி விதிப்பே கிடையாது. ஆனால் அத்தியாவசிய பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி விதிக்காத எந்த மாநிலமாவது இந்தியாவில் உண்டா? 2004 ம் ஆண்டு ரூ 35 க்கு விற்ற பெட்ரோலின் இன்றைய விற்பனை விலை ரூ 71. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த 7 வருடங்களில் பெட்ரோலின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
எத்தனை அடித்தாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா என்ற நிலையில் இருக்கும் மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவ்வாறு அநியாய அரசியல் செய்பவர்களை மாற்ற முடியாது. ஏதோ சில அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதோடு நில்லாமல் இத்தகைய அநியாயங்களை எதிர்த்து மக்கள் ஒன்று திரள வேண்டும். ஊழலை எதிர்த்து மெழுகுவர்த்தி ஏந்துவதோடு எனது கடமை முடிந்து விட்டது எனக் கருதாமல் இத்தகைய மோசடித்தனங்களைப் பாமர மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பணியை ஒவ்வொருவரும் செய்ய முன்வரவேண்டும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல்,டீசல் விலை குறித்து வாயே திறக்காத நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிக்கும்போதும் கண்டுகொள்ளப்போவதில்லை. சாதாரண மக்களின் தினசரி வாழ்வைப் பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படையாக இருக்கும் எரிபொருளின் விலையினைக் கட்டுக்குள் கொண்டுவர தனியாரின் கையில் கொடுக்கப்பட்ட விலை நிர்ணயிப்பு அதிகாரத்தை அரசே திரும்ப எடுத்துக்கொள்ளும்வரை, மாதத்துக்கு மும்மாரி கொள்ளையடிக்கும் நிறுவனங்களின் இந்த அராஜகம் நிற்கப்போவதில்லை!
அத்தியாவசியம் - ஆடம்பரம், இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் வரிவிதிப்புக் கொள்கையை அமல்படுத்திக் கொண்டு இருக்கும் ஆட்சியாளர்களும், லஞ்சத்தைக் கட்சிகளுக்கு நன்கொடையாகவும், அரசியல்வாதிகளின் குடும்பத்தினர்களுக்குப் பங்குகளாகவும் தரும் தனியார் நிறுவனங்கள் கொளுத்து வளர அப்பாவி பொது ஜனங்களைச் சுரண்டும் ஆட்சியாளர்களும் இருக்கும் வரை இந்தியா ஒரு போதும் முன்னேற்றங் காணப் போவதில்லை என்பதை உரக்கவே சொல்லுவோம்.
No comments:
Post a Comment