-ஆளுரான் M.S அமானுல்லா,
M.A(Eng);M.A(soc);ML.I.S;M.Phil(Eng);M.Phil(LIS)
மனிதன் தான் கண்டதையும் தனக்கு தேவையானவற்றையும் தன்னையொத்த மாந்தருக்கு அவன் தெரிவிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
அவ்வுந்துதல் விளைவாக தன் கருத்தில் பட்டவற்றை முதலில் சைகையாலும், அடுத்து மெல்ல, மெல்ல ஒலியெழுப்பி கூக்குரலிட்டும் புலப்படுத்த முற்பட்டான்.
பின்னர் அவன் தான் கண்டதைக் களிமண்ணில் உருவாக்கியும், கல்லில் செதுக்கியும் உருவங்களைப் படைக்க முயன்றான்.
பின்னர் வளர்ச்சியுற்ற மனிதன், தன் எண்ணத்தையும் கருத்தையும் மரப்பட்டையிலும், ஓலையிலும், தோலிலும், துணியிலும் பதிக்கலானான்.
பின்னர், மனிதன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை நூல்களில் பதிவு செய்தது மனித நாகரிக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். நூலைப் படைத்தவன் ஒரு நாள் இறப்பான். ஆனால், நூல்கள் “சாகா” வரம் பெற்றவை.
புத்தகங்கள் மகத்தான சக்தி படைத்தவை. புதிய சிந்தனைகள் உருவாகவும், நொடிக்கு நொடி புதிய கருத்துக்கள் தோன்றவும் புத்தகங்கள் தான் ஆதாரம்.
சிந்திப்பவனே மனிதன். அத்தகைய சிந்தனையை செம்மையாக்க உதவுபவை நூலகங்கள் ஆகும். தகுதி, வாய்ந்த தலைவர்கள் சிறந்த தொண்டர்கள், சீருடைய செம்மல்கள், சிறப்பான வேந்தர்கள், வீரத்தளபதிகள், பேரறிஞர்கள், பாவலர்கள், நாவலர்கள் முதலியோரை தோற்றுவிக்க உதவும் நூல்கள் ஆதரவற்றவர்களுக்கும் உரிய நண்பனாக விளங்குகின்றன. புத்தகங்கள் தொட்டறியக்கூடிய பயன்படுத்தவும் உதவ வேண்டும்.
நூலகப் பணிகளை மேம்படுத்த நூலகர், வாசகர் வட்டம் அமைத்து சிறப்பு சொற்பொழிவு நடத்த வேண்டும். அறிஞர்கள் மேதைகள் பிறந்த நாட்களில் அவர்கள் சம்பந்தமான நூல்கள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். கலந்துரையாடல் வழி நுலகத்தின் எதிர்கால திட்டத்திற்கு வழி வகுக்க வேண்டும்.
மத்திய அரசு மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் தேறுவதற்கு (I.A.S;I.P.S;UPSC TNPSC etc) தேவைப்படும் புத்தகங்கள், குறிப்புதவி, நூல்கள், கல்வி வழிகாட்டும் நூல்கள் இடம் பெற செய்ய வேண்டும். உயர்கல்வி சம்பந்தமான வலைத்தளங்கள் மேற்படிப்பு கையேடுகள், கல்விக்கடன், கல்வி ஊக்கத்தொகை அளிக்கும் நிறுவனங்களின் பட்டியல் தயாரித்து மாணவர்களுக்கு வாசகர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
“சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்ற வரிகளுக்கேற்ப படிக்கும் பழக்கத்தினை வளர்க்க வேண்டும். ஒரு மனிதருடைய அறிவு வளர்ச்சியில் நூலகங்கள் பெரிதும் துணை புரிகின்றன. நல்ல நூல்களை நாம் வாசிக்கும் போது நற்பண்புகளும், நற்குணங்களும் நம்மிடம் வளர்ந்து கொண்டேயிருக்கும்.
‘நவில்தொரும் நுல்நயம் போலும்’ நல்ல நூலின் நற்பொருள் கற்க மேலும் இன்பம் தருவது என்கிறார், வள்ளுவர்.
லண்டன் நூலகத்தில் தன்னுடைய ஆய்வை மேற்கொண்டதினால் தான் காரல் மார்க்ஸ் பின்னாளில் பொதுவுடைமை தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.
'தான்’ வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கியிருப்பதால் அதை முடிக்கும் வரை தமக்கு நடைபெறவிருந்த உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட முடியுமா’ என்று டாக்டர் மில்லரிடம் கேட்டாராம் அறிஞர் அண்ணா.
எனவே நம் சமுதாயத்தில் நிலவிவரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நல்ல தரமான நூலக சேவை மூலம் நிவர்த்தி செய்யலாம்.
புத்தகங்களால் தங்களது வாழ்க்கையை மாற்றி கொண்டவர்கள், உயர்த்தி கொண்டவர் பல லட்சக்கணக்கானோர் உண்டு. எனவே நம் இளம் தலைமுறையினர் இளமையிலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதானது வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்; வளம் பெறச்செய்யும் என்பது திண்மை.
“அறிவு அற்றம் காக்கும் கருவி செருவார்க்கு
உள்ளழிக்க லாகா அரண்” என்பதை உணர்ந்து நூலகர்கள் தம் அறிவையும் நிர்வாகத் திறமையையும் பெருக்கி கற்றோர் மெச்ச தம் கல்வித் தொண்டை தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.
கல்லாமை இல்லாமை ஆக்குவோம். வீட்டிற்கொரு நூலகம் அமைப்போம். வாசிப்போம்; வளம் பெறுவோம்.
No comments:
Post a Comment