KILIYANUR ONLINE

Wednesday, 23 November 2011

தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..!

பத்திரப் பதிவு - அரசு வழிகாட்டி மதிப்புக்கான வரைவு திருத்தம்

- சி.சரவணன்

தமிழ்நாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு வழிகாட்டி மதிப்பு என்கிற கைடு லைன் வேல்யூ அதிகரிக்கப்படாமல் இருந்தது. புதிய அரசு, அதன் பல்வேறு திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை வரவே... இப்போது சுறுசுறுப்பாக மாநிலம் முழுக்க உள்ள ஒரு கோடி சர்வே எண்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது.

மனை மற்றும் வீட்டை பத்திரப் பதிவு செய்பவர்கள் அதன் அரசு வழிகாட்டி மதிப்பில் (8 சதவிகிதம் முத்திரைத் தாள் கட்டணம், ஒரு சதவிகிதம் பதிவுக் கட்டணம்) 9 சதவிகிதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். பெரும்பாலும் சந்தை மதிப்புக்கும் அரசு வழிகாட்டி மதிப்பும் இடையே வித்தியாசம் இருக்கும்.

தற்போது சந்தை மதிப்பு மற்றும் அரசு வழிக்காட்டி மதிப்பு இணையாக இருக்கும்படி அரசு புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. பல இடங்களில் தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட சுமார் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்போது ஒருவர் பத்திரப் பதிவுக்காக 20 ஆயிரம் ரூபாய் செலவிட்டால், இனி 2 லட்ச ரூபாய் செலவிட வேண்டி வரும்..!

இதற்கான வரைவு வழிகாட்டி மதிப்பு, புத்தகமாக தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுக்க பத்திரப் பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படிருக்கிறது. மேலும், தமிழக அரசின் பதிவுத் துறை இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. (இணைப்பு : http://www.tnreginet.net:80/DraftGuideline2011/gvaluemainpage2011.asp )

இதில், சந்தை மதிப்பை விட அதிகமாக அரசு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதை குறைக்கச் சொல்லி அரசுக்கு மனு கொடுக்கலாம். சாலை, குடிநீர், தெரு விளக்கு, பஸ் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்துக்கு அதிகமாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசு வழிகாட்டி மதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரைவு வழிகாட்டி மதிப்பு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட இருக்கிறது.

இந்த வழிகாட்டி மதிப்பை பார்த்து சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சொத்து வைத்திருக்கும் மற்றும் விரைவில் வாங்கப் போகும் அனைவரின் கடமையும் கூட..!

ஏன் சரிபார்க்க வேண்டும் என்பதற்கான விளக்கம் சிறிய உதாரணமாக தருகிறேன்.

ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?

இடத்தை விற்பவர் கணிசமாக விலையை குறைத்து கொடுத்தால் மட்டுமே வாங்குவார்கள். அப்படி நடக்கவில்லை என்றால், கடைசி வரைக்கும் சொத்து கைமாறுவது என்பதே இருக்காது. எனவே, அரசு வழிகாட்டி மதிப்பு இறுதி செய்யப்படுவதற்குள், அனைவரும் அவர்களின் சர்வே எண் அல்லது தெருவுக்கு என மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து மறுப்பு தெரிவித்து சரிசெய்வதே செய்ய வேண்டிய காரியம்.

எனவே, மறந்தும் இருந்துவிடாதீர்கள். இருந்தும் மறந்துவிடாதீர்கள்..!

நன்றி -From Vikatan.com

No comments:

Followers