KILIYANUR ONLINE

Saturday, 26 November 2011

கேரளாவின் அடுக்கடுக்கான அத்துமீறல் நடவடிக்கைகள்

முல்லைப் பெரியாறு அணை - உடைகிறது ஒருமைப்பாடு!


‘‘தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப்பொருட்கள் கேரளாவுக்கு வருகின்றன. பணப்பயிர்களான தென்னையும், கொப்பரையும் பயிர் செய்யும் மலையாளிக்கு, அரிசி முதல் அத்தனையும் தமிழகத்தில் இருந்துதான் வருகிறது. ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்துக்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூட, தமிழக விவசாயிகளுக்குத் தர மறுக்கும் கேரள அரசை கண்டனம் செய்கிறேன்.

இப்போது பவானியின் குறுக்கே அணை கட்டி, தமிழக விவசாயிகளுக்கு மேலும் நெருக்குதல் தர திட்டமிடுகிறது கேரளம். காவிரி, பெரியாறு, பவானி என சுற்றிச் சுற்றி தண்ணீர் தராமல், தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச்செயல்களுக்கும் மத்தியில், நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதையும் அருகாமை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் தமிழனின் உயர்ந்த குணம்...’’

- கேரளாவின் அடுக்கடுக்கான அத்துமீறல் நடவடிக்கைகள் கண்டு கொந்தளித்து வெடித்த நமது குமுறல் வார்த்தைகள் அல்ல இவை. மலையாள மொழியின் ஆகச்சிறந்த எழுத்தாளரும், தேசிய அளவில் குறிப்பிடத்தகுந்த இலக்கியவாதியும், சாகித்ய அகாடமி உள்ளிட்ட உயர் விருதுகள் பெற்றவருமான பால் சக்காரியாவின் வார்த்தைகளே இவை. பால் சக்காரியா மட்டுமல்ல... மனச்சாட்சி உள்ள மலையாளிகள் அத்தனை பேரின் குரலும் இதுவே.

கேரளம் கொஞ்சம் வித்தியாசமான மாநிலம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச அரசு அமைந்த உலகின் முதல் நிலப்பரப்பு என்ற பெருமை அதற்கு உண்டு. ‘எல்லாமும்... எல்லோருக்கும்’ என்ற உலக சகோதரத்துவம் பேசும் உயர்ந்த கம்யூனிசக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து, குறுகிய இன, மொழிவாத அரசியலாக கம்யூனிசத்தை மாற்றிய தோழர் கூட்டம் வாய்க்கப்பெற்ற பெருமையும் அந்த மாநிலத்துக்கே சொந்தம்.

முல்லைப் பெரியாறு என்கிற ஒரு அணை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு 1979ம் ஆண்டில் இருந்து அந்த மாநில அறிவுஜீவிகள் அடித்து வரும் கூத்து... ஜனநாயக, சகோதரத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் யாராலும் சகித்துக் கொள்ளமுடியாதது. தமிழகத்தின் சிவகிரி மலைப்பகுதியில் பெரியாறு நதியாக உற்பத்தியாகி, தமிழக நிலப்பரப்புக்குள் 16 கிமீ தூரத்துக்கு ஓடி முல்லை ஆற்றுடன் கலந்து... முல்லைப் பெரியாறு அணையாக இருக்கிற அந்த நிலப்பகுதியும் ஒரு காலத்தில் தமிழகத்துக்கு சொந்தமானதே. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கிற காலத்தில் நடந்த நயவஞ்சக நாடகங்கள், அந்த மலைப்பிரதேசங்களை நம்மிடம் இருந்து நகர்த்திச் சென்று விட்டன.

தென் தமிழகம் பாலைவனமாகாமல் காப்பாற்றும் மிக உன்னத நோக்கத்தில் தனது சொந்த சொத்துக்களை விற்றுச் சேர்த்த பணத்தில், கர்னல் பென்னிகுக் என்ற ஆங்கில பொறியாளரால் 1886ல் துவங்கி, 1895ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. உலகின் மிகச்சிறந்த கட்டுமானப்பணிகளின் ஒன்றாக, இன்றளவும் மதிக்கப்படுகிறது. அந்த அணை பலவீனமாகி விட்டது. எந்த நேரமும் உடைந்து பல லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கும் அபாயம் உருவாகி விட்டது என்ற கூக்குரல் முதன்முதலில் ஒலிக்கத் துவங்கியது 1979ம் ஆண்டில்.

அதற்கு மிக முக்கியக் காரணமும் இருக்கிறது. கேரள மாநிலத்தின் மின் உற்பத்தியை மனதில் கொண்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு 50 கிமீ தொலைவில் இடுக்கி அணை கட்டப்பட்டது. 1970ல் திட்டமிடப்பட்டு 1976ல் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட நீர் மின்திட்ட அணை இது. கட்டி முடிந்ததும், ‘இடுக்கி நீர் மின்திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. இதன் பலனாக, கேரள அரசின் மின் உற்பத்தி அளவு 150 சதவீதத்துக்கு அதிகமாக உயர்ந்தது.

முல்லைப்பெரியாறு அணையை விட ஏழு மடங்கு பிரமாண்டமான இடுக்கி அணையை கட்டி முடித்தப் பிறகுதான் தெரிந்தது.... அணையை நிரப்புகிற அளவுக்கு நீர்வரத்து இல்லை என்கிற விஷயம். முழு அளவில் நீர் மின்சாரம் தயாரிக்கவும் வழியில்லை. அப்போதுதான், கேரள அரசியல்வாதிகளின் பார்வை அப்பாவி முல்லைப்பெரியாறு அணை மீது திரும்பியது. அதை உடைத்து தகர்த்து விட்டால், அங்கு சேரும் தண்ணீரை அப்படியே, இடுக்கி அணைக்கு திருப்பி விடலாம். எந்தக்காலத்திலும் தண்ணீர் பிரச்னை இருக்காது.

அதன் பிறகு ஆரம்பித்தது கேரள அரசின் நிலநடுக்க நாடகங்கள். திடீர், திடீர் நில நடுக்கங்களால் முல்லை பெரியாறு அணை பலவீனமாகி விட்டது. எந்த நேரமும் உடைந்து விழுந்து விடும். இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் பல லட்சம் அப்பாவி மக்கள் ஜலசமாதி ஆகிவிடுவார்கள் என அடுக்கடுக்காய் கதைகளை அள்ளி இரைக்க ஆரம்பித்தார்கள். உச்சக்கட்டமாய், தோழர் அச்சுதானந்தன் முதல்வராக இருந்த காலத்தில், அணை உடைந்தால் அழிவு எப்படி இருக்கும் என கிராபிக்ஸ் படம் தயாரித்து, குறுந்தகடுகளை வீடு, வீடாக விநியோகம் செய்து இனப்பகையை மக்கள் மனதில் விதைக்கிற பணியை ஆரம்பித்தார்கள்.

முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கிற நச்சுக்கருத்தை மலையாள மக்கள் அனைவரது மனதிலும் விதைக்கிற பணியை கம்யூனிஸ்ட்டுகளும் சரி; காங்கிரஸ், பாரதிய ஜனதா என நீக்கமற சகல அரசியல்கட்சிகளும் சிரமேற்கொண்டு செய்யத் துவங்கினர். ஏறக்குறைய அதில் வெற்றியும் பெற்று விட்டனர். இன்று முல்லைப்பெரியாறு அணையை, தங்கள் உயிருக்கு உலை வைக்கிற அணு உலையாக கருதுகிற மலையாள மக்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் அந்த வேலையைச் செய்வதைக் கூட சகித்துக் கொள்ளமுடிகிறது. ஆனால்... இனம், மொழி என்கிற கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட, கருத்து சுதந்திரப் பிதாமகன்களான கலைத் துறையினரும் அந்த கேவலமான சிந்தனைகளுக்கு ஆட்படுவது ஆபத்தான விஷயம். சோகன்ராய் என்கிற மலையாள சினிமா இயக்குனர்.... உருவாக்கியுள்ள ‘டேம் 999’ என்ற சினிமா, முல்லை பெரியாறு என்ற அணையை அல்ல; இந்திய ஒருமைப்பாட்டை உடைப்பதற்காக வைக்கப்படுகிற வெடி என்றால், அது மிகைப்படுத்துதல் அல்ல.

நச்சுக்கருத்துக்களை தாங்கிப் பிடிக்கிற அந்த சினிமாவின் டிரெய்லரை பார்க்கிற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. துப்பாக்கியை எடுத்து தனக்குத்தானே தலையில் சுட்டுக் கொண்டு சாகிற செயலும், இந்த அணையை விட்டு வைக்கிற செயலும் ஏறக்குறைய ஒன்று என்று தெள்ளத்தெளிவாக தனது நோக்கத்தை வெளிப்படுத்துகிறார் சோகன்ராய். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மொழி, இனபேதங்கள் கூடாது என்பது உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகிற மாண்பு. ஆனால், மலையாள சகோதரர்கள் அந்த மாண்புகளை மறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

நடிகர் கமலஹாசனுக்கு கேரள அரசு நடத்திய பாராட்டு விழாவின்போது, ‘மலையாள நடிகர்கள் ஆயிரம் பேர் இருக்க, தமிழனுக்கு பாராட்டு விழாவா’ என்று ஒருமைப்பாட்டை உடைத்துப் போடுகிற தீக்கங்குகளை அள்ளிக் கொட்டி... மம்முட்டி, மோகன்லால் துவங்கி அத்தனை நடிகர்களும் அந்த விழாவை அடியோடு புறக்கணித்த சம்பவம் நமக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த நாகரீகம் அது. தமிழகத்துடனான முல்லைப்பெரியாறு அணையின் 999 ஆண்டுகால ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டும் விதமாக ‘டேம் 999’ என பெயரிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தியா முழுமைக்கும் தடை செய்யப்படுவதே ஒருமைப்பாட்டுக்கு உகந்த விஷயம்.

இந்த சினிமாவை அனுமதித்தால், அது ஏற்படுத்துகிற பின்விளைவுகள் ஆபத்தானதாக அமைந்து விடும். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் இருக்கிற ஒரு விஷயம், கேரள அரசின் முழு ஆதரவுடன், பணம் மற்றும் பக்கபலத்துடன் தயாரிக்கப்படுகிறது என்றால், அரசியல் சாசனச் சட்டங்களின் மீது கேரளத்தவர்கள் வைத்திருக்கும் மரியாதையை யாரும் புரிந்து கொள்ளமுடியும். முதலில், இதுபோன்ற நச்சுக்குப்பைகளுக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுத்த புண்ணியவான்கள் மீது விசாரணை நடத்தவேண்டும்.

இன, மொழிவாத, கீழ்த்தர அரசியல் நடத்தும் மலையாள அரசியல்வாதிகள் தவிர, முல்லைப்பெரியாறு அணையின் பலத்தில் யாருக்கும் துளியளவும் சந்தேகம் இல்லை. நாட்டின் மிக உயர்ந்த அறிவியல் நிபுணர்கள், மத்திய நீர்வள கமிஷன் ஆய்வாளர்கள், சர்வதேச நிபுணர்களும் ஒருமுறைக்கு பல முறை ஆய்வு செய்து, அணை படு பலமாக இருக்கிறது என்று உறுதி செய்து விட்டார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் 2006 பிப்ரவரி 27ம் தேதி, ‘அணை மிகவும் பலமாக இருக்கிறது. நீர்மட்டத்தை 142 அடிக்கு தாராளமாக உயர்த்தலாம்’ என இந்தியாவின் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகவே தீர்ப்புக் கூறி விட்டது.

கேரளாவும் தன்பங்குக்கு இன்றளவும் பல மாநிலங்களில் இருந்தும் நிபுணர்களை வரவழைத்து அணையை சோதனை செய்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஆய்வு முடிவுகளை இன்றளவும் பகிரங்கப்படுத்தவே இல்லை. படுத்தவும் முடியாது. காரணம், சுயநலமற்று, சொத்துக்களை விற்றுக் கட்டிய பென்னிகுக், பல தலைமுறைகளையும் கடந்து நிற்கிற அளவுக்கு பலமுள்ளதாய் கட்டி வைத்த அணை அது. அது பலவீனமாக, உடைந்து போகிற அளவில் இருக்கிறது என்று கேரள அரசியல்வாதிகள் தவிர, இதுவரை எந்த நிபுணருமே ஒரு வார்த்தை குறை கூறவில்லை.

இறுதியாக சில விசயங்கள்....

கேரள அரசின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்காமல் இருப்பது தமிழர்களின் பெருந்தன்மையே அன்றி, பலவீனம் அல்ல. யாதும் ஊரே; யாவரும் கேளீர் என்ற மிக உயர்ந்த மாண்புகளை மக்களுக்கு கற்றுத் தந்திருக்கிறது தமிழ் நாகரீகம். நிலநடுக்கத்தால், முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்றால், அதற்கு 50 கிமீ தொலைவுக்கும் அருகாமையில் இருக்கிற இடுக்கி அணைக்கு ஆபத்து வராதா? நியாயமாக பார்த்தால், முல்லைப்பெரியாறு அணையை விட பல மடக்கு பெரியதான இடுக்கி அணைதான் கேரள மக்களுக்கும், இடுக்கி மாவட்ட மக்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். அந்த அணை ஒருவேளை உடையுமானால், இடுக்கி மாவட்டத்தில் ஈ, எறும்பு கூட மிஞ்சாது. ஆகவே, கேரள அரசியல்வாதிகள், கடப்பாறையும் கையுமாக முதலில் செல்லவேண்டிய இடம் இடுக்கி அணை.

தவிர, அவர்கள் குற்றம் சாட்டுவது போல, முல்லைப்பெரியாறு அணை உடைந்தால், பல லட்சம் மக்கள் மாண்டு போவார்கள் என்கிற குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது. ஒரு பொய்யை உண்மையாக்கவேண்டுமானால், அதை திரும்பத் திரும்பச் சொல்லவேண்டும் என்கிற கோயபல்ஸ் தத்துவத்துவம் அது. கடல் மட்டத்தில் இருந்து முல்லைப்பெரியாறு அணை 2 ஆயிரத்து 889 அடி உயரத்தில் இருக்கிறது. அது உடைந்தால் அழிந்து போகும் என சொல்லப்படுகிற நிலப்பரப்புகளான குமுளி கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 100 அடி உயரத்திலும், வண்டிப்பெரியாறு 3 ஆயிரத்து 350 அடி உயரத்திலும், பாம்பனாறு 3 ஆயிரத்து 750 அடி உயரத்திலும், ஏலப்பாறை 4 ஆயிரத்து 850 அடி உயரத்திலும் இருக்கின்றன.

இரண்டாயிரத்து 889 அடி உயரத்தில் இருக்கிற அணை உடைந்தால், அதில் இருந்து வெளியேறுகிற தண்ணீர், 4 ஆயிரத்து 850 அடி உயரத்தில் இருப்பவர்களை மூழ்கடித்து, அழித்து விடும் என்று யாராவது சொன்னால், அவர்களை பைத்தியக்காரர்கள் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஆனால், கேரள சகோதரர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். கீழே இருக்கிற தண்ணீர், 2 ஆயிரம் அடி மேலே எழுந்து போய், அங்கிருக்கிற மக்களை எப்படி அழிக்கமுடியும்? ‘காம்ரேட்’ அச்சுதானந்தன் தயாரித்த கிராபிக்ஸ் சி.டி.யிலும், சோகன்ராய் தயாரித்த ‘டேம் 999’ திரைப்படத்திலும் மட்டுமே அது சாத்தியம்.

அணையை உடைக்கிறேன்... அணையை உடைக்கிறேன் என்ற பெயரில், இந்தியாவின் ஒருமைப்பாட்டை உடைத்துப் போடுகிற முயற்சியில் இறங்கியிருக்கிற கேரள அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களை மத்திய அரசு தட்டி வைக்க இதுவே கடைசி வாய்ப்பு. இதையும் தவற விட்டால், அவர்கள் உடைத்தே விடுவார்கள்... அணையை அல்ல; ஒருமைப்பாட்டை!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்

3 comments:

boopathy perumal said...

The Mullai Periyar DAM Problem Hidden Truths & Solutions
http://vimeo.com/18283950

Anand said...

மிக சிறப்பான கட்டுரை. இனி ஒவொன்றுக்கும் தமிழர்கள் போராடதுவங்கவேண்டும்.

thiyagarajan namasivayam said...

please translate in english and post
nandri

Followers