“ரோம் நகரில் நீ வாழும்போது ரோமானியன் நாட்டைச் சேர்ந்தவர்போல வாழப் பழகு” – என்பது ஒரு புகழ்பெற்றஆங்கிலப் பொன்மொழியின் கருத்தாகும். அதாவது – “ரோம் நகருக்குச் சென்று நீ வாழுகின்றஒரு சூழல் ஏற்பட்டால் அந்த நாட்டவரைப்போலவே உன்னுடைய நடை, உடை, பாவனைகளை மாற்றி அவர்களுடைய வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொண்டு அவர்களின் வாழ்க்கை நெறிகளை பின்பற்றமுயற்சிசெய்ய வேண்டும். அப்போதுதான் உன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்” என்பது அந்த பொன்மொழி நமக்கு உணர்த்தும் பாடமாகும்.
எந்த ஊருக்கு நாம் செல்லுகிறோமோ அந்த ஊரில் உள்ள சூழ்நிலைக்கேற்ப ஓரளவு மாறுவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்.
“எங்கள் ஊரில் இப்படி இல்லை”
“எங்கள் நாட்டின் கலாச்சாரம் வேறு”
“எங்கள் மாநில பண்பாட்டின்படி நாங்கள் இப்படித்தான் நடப்போம்” – என்று எங்கு சென்றாலும் தங்கள் நாட்டு பழக்கவழக்கங்களை அடுத்த இடத்தில்போய் நடைமுறைப்படுத்துவது சிலவேளைகளில் பிரச்சினையை உருவாக்கிவிடும்.
பண்பாடு என்றும் கலாச்சாரம் (Culture) என்றும் அழைக்கப்படும் வார்த்தை, மக்களுடைய பழக்கவழக்கத்தின் (Habits) அடிப்படையில் அமைகிறது. மக்களின் பழக்கவழக்கம் தானாக ஒரேநாளில் தோன்றுவதில்லை. தொடர்ந்து வழக்கமாக அதனை செயல்படுத்தி வருவதன்மூலமே அது பழக்கவழக்கமாக மாறுகிறது. அதாவது – பழக்கம் ‘ வழக்கம் ‘ பழக்கவழக்கம் என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்தப் பழக்கவழக்கங்களெல்லாம் தொடர்ந்து அனைவராலும் கடைபிடிக்கப்படும்போது அது “பண்பாடு” அல்லது “கலாச்சாரம்” ஆக மாறுகிறது.
இந்த கலாச்சாரமெல்லாம் ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறாக அமைகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவளர்ந்த நாடுகளின் கலாச்சாரத்தை ‘மேல்நாட்டு கலாச்சாரம்’ என்கிறார்கள். மேல்நாட்டில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்கள்தான். ஆனால் அவை – அனைத்துமே மேன்மை தருகின்றசிறப்புகளை வழங்குகின்றகலாச்சாரங்கள் என நாம் முடிவுசெய்துவிடமுடியாது.
குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் தங்கள் உடலின் குளிரைப்போக்குவதற்காக மதுவை அருந்தத் தொடங்கினார்கள். அதுவே அவர்களது பழக்கமானது. பின்னர் பழக்கவழக்கமாகி கலாச்சாரமாக மாறிவிட்டது. ஆனால் நமது நாட்டில் வெயில் அதிகம். குளிர்காலம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தான். ஆனால் ‘கத்திரி’ வெயில் அடிக்கும் கடுங்கோடைகாலத்தில்கூட மதுவை குடித்துவிட்டு மதிமயங்கி அலைகின்ற’கலாச்சாரம்’ இங்கு பெருகிவருவது தமிழ் பண்பாட்டுக்கே இழுக்கு அல்லவா!
வெளிநாட்டில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து படிப்பு செலவுகளுக்காக பணம் வாங்குவதில்லை. பகுதிநேர வேலைகளில் (Part time Jobs) தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அதிலிருந்துவரும் வருமானங்களிலிருந்து அவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். “டீன் ஏஜ்” பருவம் வந்ததும் தனியாக தங்கி, தனக்கு வேண்டிய செலவுகளுக்காக உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். கல்வி நிலையங்களில் படிக்கும் நேரம்தவிர மற்றநேரங்களில் இவர்கள் தினமும் சுமார் 8 மணிநேரம் அதிகமாக உழைக்கிறார்கள். சனிக்கிழமைகளில்கூட பணம் சம்பாதிப்பதற்காக வேலை செய்கிறார்கள். ஞாயிற்றுகிழமைகளில் ஓய்வுநேரம் கிடைக்கும்போது நண்பர்களுடன் சிறிய அளவு மதுவை அருந்துவதற்கு மூன்று அல்லது நான்கு மணிநேரங்கள் செலவிட்டு தங்கள் ‘டென்ஷனை’ குறைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் இங்கு நடப்பது என்ன?
இங்கு குளிர் அதிகமாக இல்லை. பாடச்சுமைகள் அதிகம் இல்லை. படிப்புக்காக கட்டணம் எதுவும் தான் சம்பாதித்து செலுத்தவேண்டிய அவசியமில்லை. ஆயிரக்கணக்கில் பெற்றோர்களே பணம் செலவிட்டுவிடுகிறார்கள். உடை வாங்குவதற்கும், தங்குவதற்கும் வேளாவேளைக்கு உணவைத் தருவதற்கும் பெற்றோர்கள் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். எந்தக்குறையும் தனது பிள்ளைக்கு வராதவாறு பெற்றோர்கள் காவலாக இருக்கிறார்கள். இந்தச்சூழலில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மதுக்கடைகளில்போய் மயங்கி கிடப்பது எந்த விதத்தில் நியாயம்?
வெளிநாட்டில் டென்ஷனைக் குறைப்பதற்கு மாணவர்கள் எப்போதாவது மது அருந்துகிறார்கள். நம்நாட்டில் சில மாணவர்கள் மது அருந்திவிட்டு அத்தனைபேருக்கும் டென்ஷனை உருவாக்கிவிடுகிறார்கள். ஆங்கில கலாச்சாரத்தைப்பார்த்து அடிவயிற்றில் சூடுபோட்டுக்கொள்வது நல்லதுதானா! திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்படும் காட்சிகளை அப்படியே உள்வாங்கி அதையே கலாச்சாரம் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு செயல்படுவது சிக்கல் அல்லவா!
உலகமயமாக்கல் (Globalisation) மூலம் உலகமே ஒரு குடையின்கீழ் வந்துவிட்டது என்று நாமெல்லாம் பெருமைப்படுகிறோம். ஆனால் கலாச்சார மாற்றங்கள் மெதுவாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. வெளிநாட்டு கலாச்சாரங்களெல்லாம் தமிழ்நாட்டில் மெதுவாக வேரூன்றத் தொடங்கிவிட்டன. இருந்தபோதும் மேற்படிப்பிற்காகவும், வேலை செய்வதற்காகவும் அயல்நாட்டிலிருந்து இங்கே வந்தவர்கள் கலாச்சாரம் என்றபெயரில் கண்டபடி நடப்பதை நாம் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டிலுள்ள ஒரு பல்கலைக்கழக மாணவ – மாணவிகளால் ஏற்பட்ட ஒரு ‘நிகழ்வு’ பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது.
அந்தப் பல்கலைக்கழகத்தில் கென்யா, ருவாண்டா, தென் ஆப்பிரிக்கா நாடுகளைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்துவருகிறார்கள். அவர்கள் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியிருந்தனர். நகரின் முக்கிய வீதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் ருவாண்டா நாட்டைச்சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுகூடி, மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். ஆபாச நடனம் ஆடி கூச்சலிட்டார்கள். இதுபற்றி தகவல்தெரிந்த சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவர்களைக் கலைந்துபோகும்படி கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் போலீசாரை மாணவர்கள் தாக்கவும் முயற்சி செய்தார்கள். இந்த நிகழ்வு இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் ஒரு சாதாரணமான நிகழ்வு அல்ல. திட்டமிட்டு நகரின் மையத்திலுள்ள திருமண மண்டபத்தில்கூடும்போதுதான் அங்கு பிரச்சினை உருவாக ஆரம்பித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் மது குடித்து நடனம் ஆடுவதும், அவர்களோடு மாணவிகளும் இணைந்துகொள்வதும் நமது கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல. இந்த சம்பவம் மற்றவர்களின் கவனத்தையும் அவர்கள் பக்கம் திருப்பி ஒழுங்கு நடவடிக்கை ஏற்படுத்துவதற்குக் காரணமாகிவிட்டது.
வெளிநாட்டில் இருந்து படிக்க வருபவர்களும் தங்கள் நாட்டின் விழாக்களை நம் நாட்டில் கொண்டாடுவது தவறல்ல. மாணவர்களாக இருப்பதால் அவர்கள் நாட்டுக்குச்சென்று விழாக்களைக் கொண்டாட முடியாத நிலையில் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் அருகில் கொண்டாடுவதும் தவறல்ல. ஆனால் அந்த “கொண்டாட்டம்” என்பது அடுத்தவர்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கும் அளவுக்கு இருந்தால் அது நடவடிக்கைக்கு உட்படுத்தவேண்டிய செயல்தானே?
“இது சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் எப்படியும் நடந்துகொள்ளலாம்” என்று சிலர் பேசித்திரிகிறார்கள்.
சுதந்திரம் என்பது நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் உரியதுதான். “நான் சுதந்திரமாக இருக்கிறேன்” என்று எண்ணிக்கொண்டு ஒருவர் தனது கையை மேலும், கீழும், பக்கவாட்டிலும் வேகமாக அசைக்கிறார் என வைத்துக்கொள்வோம் அப்போது அவரின் கை அருகில் இருந்த ஒருவரின் முகத்தில்பட்டுவிடுகிறது. அவர் கோபத்துடன் அடிக்க வருகிறார். கையை வீசியவரின் பல் உடைந்துபோகிறது.
இதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம்.
“நமது சுதந்திரம் அடுத்தவரைப் பாதிக்காத அளவுக்கு அமையவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது உண்மையான சுதந்திரம் ஆகும். நமது சுதந்திரம் அடுத்தவரைப் பாதித்தால் அது நம்மை பாதிக்கின்ற விளைவுகளை ஏற்படுத்திவிடும்” – என்றபெரியோரின் வாக்கு வெளிநாட்டு மாணவர்களுக்குப் பொருந்தும் அல்லவா!
-நெல்லை கவிநேசன்
Thanks - thannabikkai
No comments:
Post a Comment