KILIYANUR ONLINE

Monday, 19 December 2011

முல்லைப் பெரியாறு அணை தீருமா பிரச்சனை?

அணை குறித்தான, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, தமிழகத்திற்கு சாதகமாக தான் வரும் ?

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்த, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு, கேரள அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "முல்லைப் பெரியாறு பிரச்னை, கேரளாவில் நடக்க உள்ள இடைத் தேர்தலுக்காக கிளப்பப்பட்டுள்ளது. அணை பாதுகாப்பு குறித்து, கேரள மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அணை குறித்தான, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, தமிழகத்திற்கு சாதகமாக தான் வரும் என நம்புகிறேன்' என்றார்.

இதையறிந்த, கேரளாவிலுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க., உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "மத்திய அமைச்சர் சிதம்பரம், இவ்வாறு பேசியிருக்க மாட்டார் என்று தான் முதலில் நினைத்தேன். பிறகு தான் அதை நம்பினேன். அவர் மீது, காங்கிரஸ் கட்சி தலைமையிடம் புகார் செய்யப்படும்' என, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, நேற்று கோட்டயத்தில் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கூறுகையில், "மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்' என்றார். "அவரது பேச்சு துரதிர்ஷ்டவசமானது. இவ்விஷயத்தில், பிரதமர் தலையிட்டு பிரச்னையை தீர்ப்பார்' என, கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார். இதேபோல், மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப், மாநில சட்டசபை எதிர்க்கட்சித் துணை தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் மாநில நீர்வளத்துறை அமைச்சர் என்.கே.பிரேமசந்திரன், பா.ஜ., மாநில தலைவர் முரளிதரன் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரளாவிற்கு, என்.எல்.சி.,யிலிருந்து மின்சாரம் அனுப்புவதை, உடனடியாக நிறுத்த வேண்டும் ?

""கேரளாவிற்கு மின்சாரம் அனுப்புவதை தடுக்க, எனது தலைமையில், என்.எல்.சி.,யை முற்றுகையிடுவோம்'' என, முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன் கூறினார்.



கடலூரில், நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முல்லைப் பெரியாறு அணை பிரச்னை காரணமாக, கேரளாவில் வாழும் தமிழர்களும், சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களும் தாக்கப்படுகின்றனர். தமிழக அரசு, இப்பிரச்னையை இதுவரை உணர்வுப்பூர்வமாகவே கையாண்டு வருகிறது.

தமிழக மக்களின் ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில், முதல்வர், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். மத்திய அரசு வழக்கம் போல், தமிழக அரசின் இத்தீர்மானத்தையும், குப்பைக் கூடையில் போடாமல், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு, உடனடியாக மத்திய அரசு, ராணுவப் பாதுகாப்பு அளித்து, தமிழக உரிமையை மீட்டுத் தர வேண்டும்.

இல்லையெனில், தற்போது, தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் திசைமாறும்.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காத கேரளாவிற்கு, என்.எல்.சி.,யிலிருந்து மின்சாரம் அனுப்புவதை, உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், எனது தலைமையில், கடலூர் மாவட்ட இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி, முன்னறிவிப்பின்றி, என்.எல்.சி.,யை முற்றுகையிட்டு, கேரளாவிற்கு மின்சாரம் அனுப்புவதை தடுத்து நிறுத்துவோம்.இவ்வாறு, முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன் கூறினார்.

தவறான தகவலால்தான் தமிழ்நாட்டில் மலையாளிகள் தாக்கப்படுகின்றனர் ?
‘‘கேரளாவில் தமிழர்களும், தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் தாக்கப்படுவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இதை தமிழ்நாட்டில் உள்ள யாரும் நம்ப வேண்டாம்’’ என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழகம், கேரளாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குமுளி, வண்டிப் பெரியாறு உட்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்துவதால், தினமும் ஏராளமான தமிழர்கள் கேரளாவில் இருந்து தப்பி தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு பதிலடியாக, தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மலையாளிகள் நடத்தும் கடைகள், நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.


இந்த நிலையில், கேரள முதல்வர் உம்மன்சாண்டி கொச்சியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை. வண்டிப் பெரியாறு, சப்பாத்து உட்பட சில இடங்களில், தொடக்கத்தில் சில விஷமிகள் கல்வீச்சு உள்ளிட்ட சில தீய செயல்களில் ஈடுபட்டனர். வேறு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.


கேரளாவில் கடந்த சில வாரங்களாக தமிழர்கள் மீதோ, தமிழக ஐயப்ப பக்தர்கள் மீதோ எந்த இடத்திலும் தாக்குதல் நடக்கவில்லை. ஆனால், தாக்குதல் நடத்தப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் தவறான தகவலால்தான் தமிழ்நாட்டில் மலையாளிகள் தாக்கப்படுகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்த தவறான தகவல்களை நம்பவேண்டாம். தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகள், மலையாளிகளின் நிறுவனங்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுப்பது பற்றி தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கேரள அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.

கடுமையான போராட்டங்கள் நடத்தி, இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்போம் ?
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, அணையில் 142 அடி தண்ணீர் தேக்காவிட்டால், கடுமையான போராட்டங்கள் நடத்தி, இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்போம், என தேனியில் நடந்த உண்ணாவிரதத்தில் சீமான் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: கேரள அரசு சட்டசபையை கூட்டி கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கிறது. கேரள அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்க மறுப்பதை மத்திய அரசும் வேடிக்கை பார்க்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, அணையில் 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான போராட்டங்கள் நடத்தி, இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்போம், என்றார்.
நன்றி: ஞானமுத்து.blog

No comments:

Followers