KILIYANUR ONLINE

Tuesday, 24 January 2012

மழை நீரை சேமிக்கலாம் வாங்க!

Rain Water Harvesting


மழை நீர் சேகரம்
பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்பு முறைகள்.

சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

சேகரிக்கும் முறைகள்:
நெரிசலான பெரு நகரங்களில், வீடுகள், கட்டிடங்களின் கூரையில் விழும் மழை நீரை குழாய்கள் மூலமாக பூமியில் அமைக்கப்படும் 'சம்ப்' நீர்தொட்டியில் சேகரிக்கலாம். மழை பருவத்திற்கு முன் கூரைகளை சுத்தம் செய்வதும், பொதுவாகவே கூரை, மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.

உறிஞ்சு குழிகள் (Percolation Pits):
தற்போது நகரங்களில் அபார்ட்மெண்ட் கட்டிடங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி காம்பவுண்டு சுவர் வரை சிமெண்ட் தளங்கள் அமைத்து விடுவதால் அங்கு பெய்யும் மழை முழுவதுமாகவே பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள் மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் இவை முழுவதுமாக கடலில் சென்று கலந்து விடுகிறது.

இதை தவிர்த்து நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடங்களச் சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, அவற்றை கூழாங்கல், மணல் முதலிவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட 'சிலாப்'கள் கொண்டு மூடி விடலாம்.

இந்த முறையில் சுமார் ஒரு கிரவுண்டு (ஐந்தரை செண்ட்) இடத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி சுமார் 5 அல்லது 6 உறிஞ்சு குழிகள் அமைப்பது நிலத்தடி நீரின் அளவையும், தரத்தையும் உயர்த்த உதவும். சாதாரணமாக இவ்வாறு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்ட பின் அருகிலுள்ள வற்றிய கிணறுகளில் நீர் மட்டம் உயர 2 வருடங்கள் ஆகும்.

மகாத்மா காந்தி பிறந்த வீட்டில் மழை நீர் சேகரிக்கப்பட்ட முறை.
போர்பந்தரில் (குஜராத் மாநிலம், இந்தியா) மஹாத்மா காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக வீட்டின் மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் இருபதாயிரம் காலன்கள் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில் மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி வந்தனர்.

பருவ மழை தொடங்குமுன் மேல் தளங்களின் கூரையை கவனமாக கழுவி விடுவார்கள். இங்கு விழும் மழைநீர் குழாய்கள் வழியாக கீழே இறங்கி, குழாய் முனையில் சுண்ணாம்பினால் வடிகட்டி சுத்தம் செய்யப்பட்ட பின் கீழ்த் தொட்டிக்கு செல்லும். இந்த வீட்டில் தான் ஐந்து தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

Source : Center for Science and Environment, New Delhi

No comments:

Followers