இயற்கையில் நானறிந்தது இரு வகை
ஒன்று தானாகவே அமைந்த இயற்கை
மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை
எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை
பூனை குறுக்கே செல்வது இயற்கை – அதனால்
வீணே காரியம் நிறுத்துவது செயற்கை
வீட்டில் பூனை குறுக்கிடும் ஆயிரம் முறை
ரோட்டில் ஒருமுறை குறுக்கிட்டாலே அது சறுக்கலாம்
எங்கே செல்கிறீர் என கேட்பது இயற்கை – சாவின்
சங்கே ஊதியது போல் அஞ்சுவது செயற்கை
மனதில் வெள்ளையை போற்றும் மனிதன்
உடையில் வெள்ளையை தரித்திரம் என்கிறான்
கல்லில் கால் தடுப்பது இயற்கை
முள்ளைபோல் உதறாமல் அல்லாடுவது செயற்கை
புல்லுருவிகள் கோள் சொல்வது இயற்கை
புல்லைபோல் எறியாமல் தோள்சுமப்பது செயற்கை
காக்கை கரைவது இயற்கை
விருந்தை எண்ணி கருமி கரைவது செயற்கை
மூக்குக் கண்ணாடி உடைவது இயற்கை
மூக்கே உடைந்தது போல் அலறுவது செயற்கை
தலையில் பல்லி விழுந்தால் இயற்கை
தலையே போனதுபோல் அழுதால் செயற்கை
ஒன்றிலிருந்து ஒன்பதுவரை எண்கள் – இயற்கை
அதில் சில அதிர்ஷ்டம் என்பது செயற்கை
செவ்வாய் தோஷம் - எதிர்காலத்தின் மோசம்
தோஷக்காரர்களின் வாழ்வே நாசம்
அறிவுக்கே ஒவ்வா ஒரு கோஷம்
ஆயுள் ரேகை கட்டை – அது இயற்கை
வாழ்வு குட்டை – இது செயற்கை
விமானத்தில் பிணமானவர்களைக் கேட்டேன்
புயலில் சுயம் இழந்தவர்களை படித்தேன்
கடல் நீரில் உடல் போனவர்களை வாசித்தேன்
சுனாமியில் சின்னாபின்னமானவர்களைக் கண்டேன்
அனைவரின் ஆயுள் ரேகை குட்டையுமில்லை
செவ்வாய் தோஷமுமில்லை
அதிர்ஷ்ட எண்களும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை
இயற்கை அளித்தது சிம்மாசன இருக்கை
மாற்றவில்லை மனிதன் தன் சிந்தனை போக்கை
No comments:
Post a Comment