KILIYANUR ONLINE

Sunday 8 April 2012

மீன் வியாபாரம் ஓர் அலசல்

மீனள்ளி வந்தோம், மிகக்கொள்வீர்!

துள்ளிக் குதித்தாடும் மீன்களைப் பார்க்கும்போதெல்லாம் இத்தனை அழகானதையா நாம் சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் தோன்றும். ஆனாலும் மீன் குழம்பின் ருசி, மற்ற அசைவ ருசிகளை விட தூக்கலானதுதான். மீன் குழம்பை இரண்டு நாட்களுக்குக் கூட வைத்து சாப்பிடலாம். ருசிகூடுமே தவிர குறையாது. மீன் சந்தைக்குப் போய் மீன் வாங்கும்போது விற்பவர்கள் விலை அதிகமாக சொன்னால் நாம் பேரம் பேசி சண்டை கூட போடுகிறோம். ஆனால் மீனவர்களையும் அவர்களிடம் மீனை வாங்கி வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளையும் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. கடலில் தினமும் வலை வீசிக் காத்திருந்து கரை சேர்த்த மீன்களை விற்று வாழும் மீனவர்களின் நிலையை மீன் குழம்பின் ருசி நம்மை மறக்கச் செய்கிறது.
மீனைப் பிடிப்பவர் ஒரு சாரார், அதை வாங்கி வந்து விற்பவர் ஒருசாரார், அதை சுவைப்பவர் பலர். இந்த வரிசையில் மீன் விற்பனையாளர்களின் அன்றாட வியாபார நடவடிக்கைகள் குறித்து யாரும் தெரிந்துகொள்வதில்லை. மீனை வாங்கினோமா சமைத்து உண்டோமா என்று இருந்துவிடுகிறோம். நாள் முழுதும் நுகர்வோர்களிடம் , தாங்கள் கொண்டுவந்த மீனை விற்று வருமானம் பார்ப்பதற்குள் அவர்களின் செயல்பாடுகள் என்னென்ன என அறிய முயற்சித்தோம்.
நிறைய கூச்சல் இருந்தால் ‘என்ன மீன் சந்தைபோல இருக்கிறது?’ என்று வழக்கமாகக் கூறுவோம். மீனை உணவாக உட்கொள்ளும் நாம் அதன் தரத்தை மீன்பிடிப்பதிலிருந்து விற்பது வரை கடை பிடித்தால் மட்டுமே தரமான மீனை ருசிக்க முடியும். சுகாதாரமான முறையில் மீனைக் கையாளுவது என்பது மிகமிக அவசியமானதாகும்.
கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன், கிணற்று மீன் இப்படி பல வகையான மீன்களைக் கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு நல்ல வருமானம் கிடைத்தாலும் அவர்கள் தினமும் அல்லல்படுகின்றனர். சென்னையில் உள்ள ஒரு மீன் சந்தைக்குச் சென்று மீன் விற்பனையாளர்களிடம் பேசியபோது அவர்கள் பின்வருமாறு கூறினர்.
“மீன்களை வாங்க ஒருநாள் விட்டு ஒருநாள் நள்ளிரவு ஒரு மணிக்கு இராயபுரம்,காசிமேடு பகுதிகளுக்குச் சென்று விடுவோம். அங்கு அதிகாலை வரை காத்திருப்போம். உப்புக் காற்றில் தூக்கமும் வராது. அதிகாலையில் மீனவர்கள் படகுகளில் கரை திரும்பியதும் அவர்கள் பிடித்து வந்த மீன்களை முதலில் வகை பிரிப்பார்கள். அதன் பிறகு பங்கு பிரிப்பார்கள். பிறகு நாங்கள் போய் மீன்களை வாங்குவோம். கூடைக் கணக்கில்தான் மீன்களைத் தருவார்கள்.
கடைக்கு மீன் வாங்க வருபவர்கள் எப்படி பேரம் பேசுகிறார்களோ அதைப்போல நாங்களும் மீனவர்களிடம் பேரம் பேசி மீன்களை வாங்குவோம். காலை ஆறு மணிக்கெல்லாம் கடைக்கு வந்து மீன்களை விற்க ஆரம்பிப்போம். மீன்களை வாங்க வேனில் செல்லும்போதே பனிக் கட்டிகளை கொண்டு செல்வோம். மீன் வாங்கும் இடம் கடற்கரை என்பதால் உப்புக் காற்றில் பனிக் கட்டிகள் விரைவில் கரைந்து விடும். அதனால் சரக்குந்துகளின் டியூபுகளை வாங்கி அதில் பனிக் கட்டிகளை வைப்போம். மீன்களைக் கொண்டுவர வண்டி வாடகை ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும்.
பெரும்பாலும் சீலா, கொடுவா, வஞ்சிரம், வவ்வால், சங்கரா, கட்லா, சுதும்பை, வெள்ளை கிழங்கான், கெண்டை, காலா இந்த வகை மீன்களைத்தான் அதிகம் வாங்கி வருவோம். காரணம் மக்களுக்கும் இந்த வகை மீன்கள் விலை குறைவு (வஞ்சிரம் தவிர) மற்றும் விருப்பம், அதனால் எங்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். விரால், இறால் போன்ற மீன்களின் விலை அதிகம். இந்த மீன்களை எப்போதாவதுதான் வாங்கி வருவோம். பெரும்பாலும் நாங்கள் வாங்கி வரும் மீன்கள் அனைத்தும் விற்பனை ஆகிவிடும். சில நேரங்களில் மீதமான மீன்களை நாங்கள் சமைத்து சாப்பிட்டு விடுவோம். மீன்கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதுதான் மிக சிரமம். மீன்கள் கெட்டுப்போவதற்குள் விற்பனை செய்துவிடவேண்டும்.
அசைவ உணவு விற்கும் இடங்களில் எங்களுக்குத் தேவையான வசதியை, குறிப்பாக துப்புரவை மாநகராட்சி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். ஈக்களும், கொசுக்களும் எப்போதும் மொய்த்துக் கொண்டேயிருப்பதால் அவற்றை விரட்டுவதில் இரவெல்லாம் எங்களுக்கு கை வலி எடுக்கும். மீன்கள் மீது எப்போது தண்ணீர் தெளித்துக் கொண்டிருப்பதால் உள்ளங் கை மரத்துப் போனதுபோல் ஆகிவிடும்.
15 ஆயிரம் ரூபாய்க்கு மீனவர்களிடம் மீன்களை வாங்கினால் அதை விற்பனை செய்வதில் மின் கட்டணம், பனிக் கட்டிகள் வாங்குவது மற்றும் இதர செலவுகள் போக ஐந்தாயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். கார்த்திகை மார்கழி மாதங்களில் தான் விற்பனை நிறைய பாதிக்கப்படும். அதேபோல் மீன் பிடிக்கத் தடை செய்யப்படும் காலங்களில் மீன்கள் நிறைய வராததால் விற்பனையும் இருக்காது.
மீன் வைக்கப் பயன்படுத்தப்படும் பெட்டிகள் துருப்பிடிக்காததாக, நீர் ஒட்டும் தன்மையற்றதாக, விரிசல்களின்றி இருக்க வேண்டும்.பெட்டியின் அடிப் பகுதியில் பனி உருகினால் வரும் தண்ணீர் வெளியேற துளைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட பெட்டிகளில்தான் மீனைத்தரமானதாக கெட்டுப்போகாமல் வைக்க முடியும். இப்படி மீன் விற்கும் தொழிலில் இத்தனை வேலைகள் இருக்கின்றன.” இவ்வாறு மீன் விற்பவர்கள் கூறினார்கள்.
மிதிவண்டியில் தெருக்களில் மீன் விற்பவரிடம் பேசியபோது, “காலை ஆறு மணி முதல் காலை பத்து மணி வரைதான் நான் மீன் விற்பேன். அதன் பிறகு வேறு வேலைக்குச் சென்று விடுவேன். இந்த நாலு மணி நேரத்தில் இருநூறு ரூபாய் வரை எனக்கு வருமானம் கிடைக்கும். நான் செலுத்தும் முதலீடு ஆயிரம் ரூபாய். மீன் சந்தைக்குச் சென்று மீன் வாங்க முடியாதவர்களுக்கு என் போன்ற வியாபாரிகள் வீட்டுக்கே வந்து விற்கிறோம். ஒரு கிலோவுக்கு ஐந்து, ஆறு ரூபாய் கிடைத்தாலே எனக்குப் போதும்” என்று கூறினார்.
மீன் விற்பது சிறு தொழில்தான். ஆனால் உழைப்பு நிறைய வாங்கும் தொழில் இது என்பது மீன் விற்பவர்கள் சொன்ன தகவல்களிலிருந்து தெரிந்தது. மீன் பிடிக்கும் தொழிலில் இருக்கும் உழைப்பில் பாதியளவு உழைப்பு மீன் விற்கும் தொழிலிலும் இருக்கிறது என்று அவர்களை சந்தித்ததில் உணர முடிந்தது.
மீன் சந்தைக்கு அருகில் அமர்ந்துகொண்டு மூன்று நான்கு பெண்கள் மீன்களை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீனை சுத்தம் செய்யும் வேகமும் லாவகமும் அலாதியாய் உள்ளது. மீன் செதில்களை நீக்குவதும் தேவையற்ற பகுதிகளை அகற்றுவதும் அவர்களின் பேச்சுக்களிடையே சாதாரணமாய் நடந்துகொண்டிருந்தது. நான் மீன் ஆயக் கொடுத்தவரிடம் பேச்சுக் கொடுத்து, ‘இதுதான் உங்களுக்கு முழு நேர தொழிலா?’என்று கேட்டோம்.
அதற்கு அவர், “என் பெயர் சத்யா. சனி ஞாயிறு கிழமைகளில் மட்டும் முழு நேரமும் இந்த மீன் ஆயும் வேலையைச் செய்வோம். மற்ற நாட்களில் வேறு வேலைக்குச் செல்வோம். காலையிலும் மாலையிலும் மட்டும் வந்து இந்த மீன் சுத்தம் செய்யும் வேலையைச் செய்வோம். இந்த நாட்களில் ஒரு நாளைக்கு 150, 200 ரூபாய் கிடைக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் 300, 350 ரூபாய் கிடைக்கும். இந்த மீன் சுத்தம் செய்யும் சிறிய வருமானம், கட்டிட வேலை கிடைக்காத நாட்களில் எங்களுக்கு உதவியாக இருக்கிறது.” என்று சொன்னார்.
அதற்குள் நாம் கொடுத்த மீனை சுத்தம் செய்துவிட்டு என்னிடம் கொடுத்தார். எவ்வளவு ரூபாய் என்று கேட்டதற்கு, ‘ஒரு கிலோ மீனா 15 ரூபாய் கொடு’ என்றார். கொடுத்துவிட்டு, பரவாயில்லை அடித்தட்டு மக்கள் வாழ இதுபோன்ற சிறு சிறு தொழில்கள் இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டோம். மீன் பிடித்தல், அதை வாங்கி விற்பது, அதை சுத்தம் செய்தல் இப்படி ஒன்றோடு ஒன்று உள்ள தொடர்பால் அடித்தட்டு மக்களுக்கு வருமானம் கிடைப்பது மன ஆறுதலைத் தருகிறது.

சிறகு சிறப்பு நிருபர்

No comments:

Followers