KILIYANUR ONLINE

Saturday 9 March 2013

காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப்.

இந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாக்கிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. ஜின்னா இஸ்மாயில் சாஹிபிடம் "சாஹிப்! இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது" என்றார். கடும் கோபம் கொண்ட சாஹிப் "நண்பர் என அழைத்தீர்கள் என்றுதான் இங்கு வந்தேன். உங்களிடம் யாசகம் கேட்க அல்ல. என்று நாங்கள் வேண்டாம் என்று எங்களைப் பிரிந்து வந்தீர்களோ அன்றே நீங்கள் எங்களுக்கு அன்னியர். எங்கள் தேசத்தில் இந்தியர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இந்தியர்களான எங்களுக்குத் தெரியும். உம் உதவி எமக்குத் தேவையில்லை. விருந்துக்கு என்று அழைத்து என்னை அவமதித்து விட்டீர்கள், எனவே இந்த விருந்தில் இருந்து வெளியேறுகிறேன்" என உடனடியாக கைகழுவி வெளிநடப்பு செய்கிறார் கண்ணியத் தென்றல்.

நேருவை நம்ப வைத்து பின்னர் கழுத்தறுத்து இந்தியாவிற்கு எதிராக சீனா போர் துவங்கிய நேரம். ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை. இந்திய இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேவை என்று அழைப்பு விடுக்கின்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன். அழைப்பைக் கண்ட அடுத்த நொடி தனது இளம் மகனை அழைத்துப்போய் பரங்கிமலை ராணுவ கேம்பில் ராணுவத்திற்கு சேர்த்துவிட்டுத் திரும்புகிறார் பெருந்தகை காயிதேமில்லத்.

பாராளுமன்றத்தில் இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் மசோதாவின் மீதான விவாதம். தன் தாய்மொழியான தமிழின் தோற்றம், வளர்ச்சி, இலக்கண இலக்கியச் சிறப்புகள் ஆகியவற்றைத் தன் அழகுமொழியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்து "இந்திய துணை கண்டத்தின் ஆட்சிமொழியாக இருக்கும் தகுதியும்,உரிமையும் தன் தாய்மொழி தமிழுக்கே உண்டு" என்று முழங்கி இந்தியை தேசிய மொழியாக்கும் தீர்மானத்தைத் தோற்கடிக்கிறார் தலைவர் இஸ்மாயில் சாஹிப்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கண்ணியத் தென்றல் வெளியிட்ட அறிக்கை கருத்து குறித்து அண்ணாவிடம் பத்திரிக்கையாளர்கள் அண்ணாவின் கருத்தைக் கேட்கின்றனர். " அவரது அறிக்கையை நான் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் என்னிடம் இஸ்ரேல் முக்கியமா? இஸ்மாயில் முக்கியமா? என்று கேட்டால் நான் இஸ்மாயில்தான் முக்கியம் என்பேன்! எனவே அவர் எது சொல்லி இருந்தாலும் அதுதான் என் கருத்து" என்று பதிலுரைக்கிறார் அவரது ஆத்ம நண்பர் அறிஞர் அண்ணா.

பிறப்பால் இந்தியனாக, இனத்தால் திராவிடனாக, தாய்மொழியால் தமிழனாக, மதத்தால் முஸ்லீமாக.... இவற்றில் எது ஒன்றுக்கும் குறைவைக்காத பெருவாழ்வு வாழ்ந்தவர் காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் .

No comments:

Followers