KILIYANUR ONLINE

Friday 5 April 2013

நாயுருவி.

1. மூலிகையின் பெயர் :- நாயுருவி.


2. தாவரப்பெயர் :- ACHYRANTHES ASPERA.

3. தாவரக்குடும்பம் :- AMARANTACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- எல்லா பாகமும் (சமூலம்)பயனுடையவை.

5. வேறு பெயர்கள் :- காஞ்சரி, கதிரி,மாமுநி, நாய்குருவி, அபாமார்க்கம் முதலியன.

6. வளரியல்பு :- நாயுருவியின் பிறப்பிடம் சைனா. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தானே வளரும் செடி. தரிசு நிலங்கள் வேலியோரங்களில், காடு மலைகளில் தானே வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவமாக இருக்கும். இதன் தண்டிலிருந்து கதிர் போல் செல்லும், அதில் அரிசி போல் முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதன் பூக்களில் பச்சை நிரமும் கலந்து காணப்படும். இதன் காய்களில் ஐந்து விதைகள் இருக்கும். விதை ஒட்டும் தன்மையுடையதால் விலங்குகள், மனிதர்களின் துணிகள் மீது ஒட்டிக்கொண்டு சென்று வேறு இடங்களில் விழுந்து முளைக்கும். எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி. இவற்றின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். செந்தாயுருவியே அதிக மருத்துவப்பயன் உடையது.  புதன் மூலிகை என்பர். அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர்.  விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் :- நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும்.

நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.

நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

கதிர்விடாத இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவில் நீர் கலந்து காய்ச்சி நாளும் மூன்று வேளை 3 மி.லி. அளவு 5-6 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இதனால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. சூதகக்கட்டு-மாதவிலக்கு தடைபடுவது நீங்கும். பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை, குருதி மூலம் ஆகியன குணமாகும்.

இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.

ஆறாத புண்-ராஜ பிளவை, விடக்கடி ஆகியவற்றிக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வர குணமாகும்.

இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரல் பற்றிய சளி, இருமல் குணமாகும்.

விட்டுவிட்டு வரும் சுரத்திற்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுக்கக்குணமாகும்.

மூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர இதம் தரும்.

இதன் இலைச்சாறு 100 மி.லி.+100 மி.லி.எள் நெய் சேர்த்துக் காய்ச்சி சாறு சுண்டியவுடன் வடித்து வைக்கவும். காதில் வலி, எழுச்சி, புண், செவிடு ஆகியன குணமாக இதனைச் சொட்டு மருந்தாக இரு வேளை காதில் விடவும். மூக்கில் சளி, புண்ணுக்கும் இச்சொட்டு மருந்தினைப் பயன் படுத்தலாம்.

இதன் இலைச் சாறு பிழிந்து 30-50 மி.லி.அளவு குடித்து 7 நாள் உப்பில்லாப் பத்தியம் இருக்க வெறி நாய்கடி, பாம்புக்கடி விடம் தீரும். அரைத்துக் கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

இதன் இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும்.

நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.

துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.

விதையைச் சோறு போல் சமைத்து உண்ணப் பசி இராது. ஒரு வாரம் ஆயாசமின்றி இருக்கலாம். மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.

நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும்,  காப்பி, டீ, புகை, புலால் கூடாது.

நாயுருவிச் சாம்பல், ஆண் பனை பூ பாளை சாம்பல் சம அளவு சேர்த்து நல்ல நீர் விட்டுக் கரைத்து 1 பொழுது ஓய்வாய் வைத்திருக்க நீர் தெளிந்திருக்கும். அதை அடுப்பேற்றிக் காய்ச்ச உப்பு கிடைக்கும். இவ்வுப்பில் 2 அரிசி எடை தேன், நெய், மோர், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி, நீரேற்றம், குன்மம், பித்தப்பாண்டு, ஆஸ்துமா ஆகியவை தீரும். தூதுவேளை, கண்டங்கத்திரி, ஆடாதொடை இவற்றின் குடிநீர்களை துணை மருந்தாகக் கொள்ளலாம்.

இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும். இதன் சாம்பலில் பொட்டாஸ் உள்ளதால் இதை அழுக்குத் துணி துவைக்கப் பயன் படுத்திவர்.

இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.

இதன் இலைச்சாற்றில் ஏழுமுறை துணியைத் தோய்த்து உலர்த்தி திரி சுற்றி விளக்குத்திரியாகப் போட்டு நெய் தடவி எரியும் புகையை அதில் படிய பிடிக்கவும், புகைக் கரியை ஆமணக்கு நெய் விட்டு மத்தித்து கண்ணில் தீட்ட கண் பார்வைக் கோளாறு தீரும். குளிர்ச்சி தரும்.

வயிற்றுவலி, அஜீரணம், புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் நாயுருவி வேரைக் காசாயமிட்டு அருந்தி வருவது நல்லது.

சிறுநீர் அடைப்பு உள்ளவர்கள் நாயுருவி சமூலத்தைக் குடிநீரிட்டு 60 மி.லி. முதல் 120 மி.லி. வீதம் அருந்தி வர சிறுநீரைப் பெருக்கும்.
நன்றி: மூலிகை வளம் திரு.குப்புசாமி அவர்களுக்கு...

Thursday 4 April 2013

வாழை இலையின் பயன்கள்


 
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்
நன்றி:தைக்கால்.காம்

Wednesday 3 April 2013

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

“திரு’ – வாசகம்!

1

ஆறறிவு படைத்தவர்கள் சொல்கிறார்கள்,
“”இந்தப் பெண்கள் போத்திக்கொண்டு போனால்
பிரச்சினையே இருக்காது…”

தாம் அய்ந்தறிவு படைத்ததற்காய்
நிம்மதி பெருமூச்சு விடுகின்றன
அம்மணமாய்த் திரியும்
ஆடு, மாடு, கோழிகள்…

2

பேசுகிறாய்…
“பிரா நூல் தெரிவதால்
என்னைத் தூண்டுகிறது”என்று
பறக்கும் பைக்கின் வெற்றுடம்பில்
பூணூல் தெரிகிறது,
எந்தப் பெண்ணும் பிராண்டியதாய்
தகவல் இல்லை!

3

ஒன்றுக்கும்
குனியமுடியவில்லை பெண்,
உற்றுப் பார்க்கிறான்.
என்னத்தைச் சொல்ல!
பால் கொடுக்கும் நாய்
பதறி ஓடுது.

4

வெறித்துப் பார்ப்பதில்
வேறெந்த மிருகமும் இப்படியில்லை…
கருவே கலையும்படி
இருக்கிறதவன் கண் புணர்ச்சி!

5

எதிரே வரும் ஆண் புலி பார்த்து
எந்தப் பெண் புலியும் அஞ்சுவதில்லை,

( Word deleted )

உடனுறையும் பாம்பைப் பார்த்து
எந்தப் பாம்பும் பயப்படுவதில்லை,
பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம்
பள்ளிச்சிறுமியை விட
பயப்படுகிறாள் பெண்.
என்ன இருந்தாலும்
நீ ஆம்பளதான்டா!

6

விளக்குமாறு தொட்டு
வீடு கூட்ட மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

நான் தின்ன தட்டை
நானே கழுவ மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

பெத்தப் பிள்ளையாயிருந்தாலும்
காலு கழுவி விடமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

முக்கியமா,
என் ஜட்டியை
நானே துவைக்கமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

எந்தப் பொண்ணப் பாத்தாலும்
லுக்கு விடுவேன்,
எந்திரிச்சக் கையோட – பெண்ணை
நோட்டம் விடுவேன்,
ஏன்னா நான் ஆம்பள!

ஒன்று தெரியுமா?
வயிற்றிலே உதைத்தப் போதும்
வளர்த்துவிட்டு
உன்னை கருவிலேயே கலைக்காமல்
இவ்வளவுக்கும் பிறகு
சோற்றிலே விசம் வைக்காமல்
உன்னை விட்டு வைத்தாளே
அவ பொம்பள!

கெடுக இப்பாழ் சிந்தை!

7

காவிப் பாம்பு வேதம் ஓதுகிறது,
“அண்ணா” என அழைத்திருந்தால்
அந்த மாணவியை
விட்டிருப்பார்களாம்,
டெல்லி காமுகர்கள்.
அதை உன் சீதை செய்திருந்தால்
ராமாயணமே இல்லையடா!
தொலைந்திருக்கும்
ராம நாமத் தொல்லையடா!


“பையா, பையா” எனக் கை கூப்பி
கதறிய பெண்களை
பர்தாவைக் கிழித்துக் குதறிய
ஆர்.எஸ்.எஸ், மிருகங்களே
யாருக்கு உபதேசம்!

8

போலிசை வைத்து
பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்!
லேடிஸ் ஆஸ்டலுக்கு
வாட்ச்மேன் சங்கராச்சாரியா?
மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர்
நித்யானந்தாவா?
குற்றத்தை விட,
தீர்வு பயங்கரம்!

9

படுக்கவும், சுகிக்கவும்
நீ சிதைக்கவுமோ பெண்?
மனித இனத்தையே
படைத்தவள், காத்தவள் பெண்ணடா!
அவள் மட்டும்
ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணடா!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
ஏன் உன் கடவுளுக்கே
“ஃபிரம் அட்ரஸ்” பெண்ணடா!
மாமிசத் துண்டல்ல – பெண்
சக மனிதரென்று எண்ணடா!
பாலியல் உணர்வின் ஆண் திமிரை
வர்க்க உணர்வால் வெல்லடா!

10

இறந்தபின்பு தன் கண்களை
தானம்தரச் சொல்லி இருக்கிறாள்
ஆசிட் வீச்சில் பலியான வித்யா,
அவள் கண்களில் விழிக்க
அருகதை ஆவோமா ஆண்கள்!

11

பெரிய திரைகளில்
மனிதக்கறி உரிக்கும்


குத்துப் பாடல்கள்…
சின்னத் திரைகளில்


எண்ணத்தை இசையவைக்கும்
கள்ள உறவு சீரியல்கள்…

நினைவில் வெறியாடும்
‘மெமரி’கார்டு வக்கிரங்கள்…
இலவச லேப்-டாப்பில்


விரியும் பாலியல் வலைகள்…
என்ன கண்டுபிடித்தாலும்
பெண்ணை விற்று காசு பார்க்கும்


முதலாளித்துவ வியாபாரிகள்!
இத்தனைக்கும் காவலிருக்கும்


இந்த அரசுதான்
பெண்ணின் பெரும் எதிரி!

12

இது போலி ஜனநாயகம் மட்டுமல்ல
இது காலி ஜனநாயகம்!

இங்கு போலிஸ்டேசன் சுவர்களுக்கும்
காமவெறி கண்ணிருக்கும்…

ராணுவ முகாம்களோ
“தேகப்’ பயிற்சியில் திளைத்தவை.

நீதிமன்றங்களோ
சட்டத்தின் ஆணுறைகளில்
முளைத்தவை.

ஊடகங்களோ

பெண்ணின் சதை விற்கும்
“டைம் பாஸ்கள்”

அரசின் உறுப்புகள் அனைத்தும்

(Word Deleted ) ஆன நாடு இது!

இனி
சமூகப்புரட்சி மட்டுமே
பெண்ணுக்கு பெருந்துணை!

ரவிக்கை போடுவது தொடங்கி
செருப்பு போடுவது வரை
போராடியே கிடைத்தது!

ஆண்டைகளின் சாதியச் சட்டங்களை
வர்க்கப்போராட்டம் வெளுத்த வெளுப்பினால் தான்
முதலிரவு உரிமையும் கிடைத்தது.

பெற்ற தாயின்
முதல் பாலையும்
பறித்துக்கொண்ட நிலவுடமை ஆதிக்கத்தை
எரித்த வர்க்கத்தீயில் தானடா?
உனக்குத் தாய்ப்பாலும் கிடைத்தது.

நடப்பவை
சமூகக் குற்றங்கள் மட்டுமல்ல
இந்தச் சமூகமே குற்றம்!
புதிய சமூகத்திற்கான
புதிய ஜனநாயகப் போராட்டமே
நம் விடுதலையின் கர்ப்பம்!

ஆண்மை நீக்கம் எத்தனை பேருக்கு?
அனைத்தையும் சீரழிக்கும்


மறுகாலனியத்தை இந்த மண்ணை விட்டு நீக்கு!

- துரை. சண்முகம்

Tuesday 2 April 2013

நீங்கள் தேடும் புதையல் உங்களுக்குள்ளேயே உள்ளது !

( ஹாஜி. முசாபர் அப்துல் ரஹ்மான், நிறுவனர் டைம் டிரஸ்ட், இளையான்குடி )
  அது ஒரு பசுமை நிறைந்த பள்ளத்தாக்கு, ஓங்கி உயர்ந்த மரங்கள், அவற்றின் கீழ் கூட்டங் கூட்டமாக ஆட்டு மந்தைகள், கட்டுப்பாடற்று மேயும் சுகம், அதிலே லயித்து மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு மந்தையினூடே வழி தவறி வந்த பச்சிளம் சிங்கக்குட்டி ஒன்று சேர்ந்து கொண்டது. தன்னையும் ஒரு ஆடென்று நினைத்து ஆடுகளோடு ஆடாக அதுவும் சேர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு அந்தி மயங்கும் வேளை தூரத்திலிருந்து சிங்கத்தின் கர்ஜனை காற்றிலே மிதந்து வந்தது. அடுத்து வந்த வலுவான கர்ஜனை பள்ளத்தாக்கில் எதிரொலித்தது. ஆடுகளுக்கு இறைவன் வழங்கிய விழிப்புணர்வு அவற்றை சிலிர்க்க வைத்தது. அச்சத்தோடு அவை தலையை நிமிர்த்தி அங்கும் இங்கும் பயத்தோடு பார்வை சுழற்றிய காட்சி சிங்கக் குட்டியின் மனதில் ஒரு கிலுகிலுப்பை ஏற்படுத்தியது. என்னாலும் இப்படி கர்ஜிக்க முடியுமோ? அதன் உள்ளுணர்வு முடியும் கர்ஜித்துப்பார் எனக்கட்டளையிட, ஐயப்பாட்டோடு அது தணிந்த குரலில் கர்ஜித்துப் பார்த்தது. அதே கர்ஜனை தான் மீண்டும் அது ஓங்கிக் குரல் எழுப்ப சுற்றி நின்ற ஆட்டு மந்தை ஓட்டம் பிடித்தது. சிங்கக்குட்டி கர்ஜனை வந்த திசை நோக்கி ஓடிச் சென்று தன் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது.
  நம்மில் பலரும் இப்படித்தான் நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலை அறியாமல் அவலத்தில் உழன்று கொண்டுள்ளோம். நமக்குள் உள்ள மாபெரும் சக்தியினை தட்டியெழுப்ப முயற்சி ஏதும் செய்யாது வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என வாழ்ந்து கொண்டுள்ளோம்.
  1969 ஆம் ஆண்டு ஜப்பானில் டோபோ சிற்றூர். அங்கே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மிக்கி மோட்டோ என்ற இளைஞன் வாழ்ந்து வருகிறான். நூடுல்ஸ் தயாரித்து விற்பது அவனது தொழில். சாமுராய் என்ற அவனுடைய ஆசிரியருக்கு அழகானதொரு மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிக்கி விழைந்தான். பேராசிரியருக்குத் தன் அன்பு மகளை ஒரு சிற்றுண்டி விற்கும் சாமானியனுக்குக் கட்டித் தர விருப்பமில்லை. காதலிலே தோற்றுப்போன கயஸாக மாறி விடவில்லை நமது நாயகன், அவனுள் உறங்கிக் கொண்டிருந்த பிரிதிவிராஜ் உயிர்த்தெழுந்தான். எப்பாடு பட்டாவது என் நிலையினை உயர்த்திக் கொள்வேன் என உறுதி பூண்டான்.
  நூடுல்ஸ் விற்பதை விட்டு விட்டு முத்துக்களை விற்கத் துவங்கினான். விரைவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அவனை விரட்டிக் கொண்டே இருந்தது. விற்பனைக்குத் தேவையான முத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவில்லை அவனுடைய தேடல் மும்முரமடைந்தது. குறைந்த விலையில் அதிக அளவில் இவற்றை எப்படி பெறுவது? இந்த முத்துக்கள் எப்படி உருவாகின்றன? அதிக அளவில் முத்துக்களைப் பெற என்ன செய்ய வேண்டும்?
  அறிவார்ந்த பெருமக்களை அணுகி ஆலோசனைக் கேட்டான். “ஒரு சிப்பிக்குள் வேற்றுப் பொருள் ஏதாவது ஒன்று சென்றுவிட்டால் சிப்பிக்குள் சுரக்கும் திரவம் ஒன்று அதைச் சுற்றிப்படற அது முத்தாகிறது” என அறிந்தான். இயற்கையாக நிகழும் இதை நான் செயற்கையாகச் செய்தால் என்ன? என முயற்சித்தான். ஜப்பானில் செயற்கை முத்துக்களின் உற்பத்தி பெருகியது. செய்கையாக வேற்றுப்பொருள் ஒன்றினை உட்செலுத்தும் போது சிப்பிகள் மாண்டுபோயின. அதேக் காலகட்டத்தில் அமெரிக்காவில் முத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்த ஜோசப் கோல்டு ஸ்டோன் இதற்குத் தீர்வு கண்டார். சிப்பிகள் மயக்க மருந்து கலந்த நீரில் மூழ்க வைக்கப்பட்டு வேற்றுப் பொருள் உட்செலுத்தப்பட்டது. விளைவு மாபெரும் வெற்றி. பேரழகுப் பெண்களுக்கு மேலும் பொலிவு கூட்ட நன்முத்துக்கள் வரம்பின்றிக் கிடைக்கும் வாய்ப்பு வந்தது.
  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மாபெரும் ஆற்றல் ஒன்று உறங்கிக் கொண்டுள்ளது. அதனைத் தட்டி எழுப்பியவர்கள் வெற்றி பெறுகின்றனர். அந்த உலகம் நமக்கு வாய்ப்புகள் பலவற்றை வரம்பின்றி வாரி வழங்கிக் கொண்டுள்ளது. அதனைக் கண்டறிந்து முறையாகப் பயன்படுத்தினால் வாழ்வில் நிச்சயமாக வெற்றி பெற முடியும். சும்மா இருப்பதே சுகம் என்பதை விடுத்து வாய்ப்புகளைத் தேடிக் கொண்டே இருங்கள்… நிச்சயமாக வெற்றி பெற முடியும்.
நன்றி : இளையான்குடி மெயில்  - பிப்ரவரி 2012

Monday 1 April 2013

சிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்களை பெற இதோ ஒரு எளிய முறை !!

இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.

இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.

நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.

இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.
Sunday 31 March 2013

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்

அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும்
மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிறுநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை
குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

வல்லாரை சாறு – நரம்பு சம்பந்தபட்ட நோய்களை நீக்கும், ஞாபகசக்தியை அதிகரிக்கும்

வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு சம்பந்தபட்ட
நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைக்கவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு
உதவுகிறது.

கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அனைத்து ரத்த
சம்பந்தமான, வாயு சம்பந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய் சாறு - அழகு தரும் மருந்து.

துளசி சாறு - சளி மற்றும் சோம்பேரித்தனத்தை குறைக்க வல்லது. அளவுக்கு அதிகமாக துளசி
உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணப்படுத்தும்.

கடுக்காய் சாறு - முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு நல்லது

கல்யாண முருங்கை சாறு - உடல் எடை குறைக்க உதவும். இதை வாயில் மென்று நம் உமிழ்
நீருடன் கலந்து சாப்பிட்டால், உடனடியாக மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால்
கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

தூதுவளை சாறு - சளி தொல்லை நீங்கும்

ஆடாதோடா சாறு - ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது

கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வைக்கு நல்லது, முடி வளர்ச்சிக்கு நல்லது

நன்றி:நாவலன் தீவு வலைப்பூ

Saturday 30 March 2013

தெரிந்து கொள்வோம் வாங்க


*பெங்குவின் நின்ற நிலையிலிருந்தே முட்டையிடும். உப்பு நீரிலிருந்து நல்ல நீரைப் பிரிக்கும் அமைப்பு பெங்குவினின் மூக்கில் அமைந்திருக்கிறது. பெங்குவின் பறவை இனத்தைச் சேர்ந்தது. மேலும் அதனால் பறக்க முடியாது. ஆனால் நன்றாக நீந்தும்.
*கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும், மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை. பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும், குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள் உணர்ந்து விடும்.

*தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும் ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும். கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும். இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப் பயணிகள் திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்.

*பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி. ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.

*இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.

*ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை அதன் எடை சுமார் 0.24 கிராம்.

* *சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல் மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள் தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும்.

* இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள். இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுர கி.மீட்டர்.

* ஹோலி பண்டிகையின் இன்னொரு பெயர் வண்ணங்களின் பண்டிகை. இந்த வண்ணப் பொடி தேசு என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

* 25.1.1944-ம் தேதி மாஸ்கோவுக்குத் தூது என்ற ஆங்கில சினிமாப் படம் காந்தி அடிகளுக்கு விசேஷமாகத் திரையிடப்பட்டது. பாபுஜி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே திரைப்படம் இது தான்.

* காந்திஜி இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சையில் தேறிய பிறகு 10.6.1891-ம் தேதி பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டார். லண்டன் உயர்நீதிமன்றத்தில் 11.6.1891-ம் தேதி தன்னை பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டு 12.6.1891-ம் தேதி இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டார்.

* விண்வெளி ஆய்வைத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை வானில் பறக்கவிடப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 4,700-க்கும் மேல் ஆகும்.

* ஜெர்மன் சர்வாதிகாரி இட்லரை சந்தித்த ஒரே தமிழர் மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.

எலிக்காது வவ்வால்கள் அதிகம் காணப்படுவது ஐரோப்பா கண்டத்தில். குட்டிகள் பிறந்து சில நாட்கள் வரை தாய் இரை தேடச் செல்லும்போது குட்டியை சுமந்து செல்கின்றன. குட்டி வளர்ச்சியடைந்ததும் தாய், தனது இருப்பிடத்திலேயே தலை கீழாக தொங்கவிட்டுச் சென்றுவிடும். அதன் பிறகு குட்டிதான் இரைக்காக தனியே பறக்கவேண்டும்.

*********************

*வரிக்குதிரையானது தனது பலம் வாய்ந்த பின்னங்கால்களினால் தன்னைத் தாக்க வரும் சிங்கத்தை உதைத்து தள்ளிவிடும். ஆப்பிரிக்க மானும் காட்டு எருமையும் கூட தங்களது கூரிய கொம்புகளால் சிங்கத்தை தாக்கும். ஒட்டகச் சிவிங்கியும் சிங்கத்தை தனது பின்னங்கால்களால் உதைத்து தாக்கும்.


*********************

*ஆண் சிறுத்தைக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறக்கும் குட்டிக்குப் பெயர் `லியோன்பான்'. ஆண் சிங்கத்திற்கும் பெண் சிறுத்தைக்கும் பிறக்கும் குட்டிக்கு `லிபார்ட்' என்று பெயர்.  ஒரு பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறப்பது கோவேறுக் கழுதை.

********************
நன்றி: யாழ் இணையம் 

Followers