ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்று கூறுவார்கள்.மாயூரத்தின் பக்கபலமாக இருக்கிற ஊர்களில் கிளியனூருக்கு மட்டும் பெரும் சிறப்பு உண்டு.
1955 ஆம் ஆண்டிலேயே சுய தேவை பூர்த்தியில் தன்னிறைவு அடைந்த இந்திய கிராமங்களின் வரிசையில் முதலிடம் பெற்ற கிராமமாக மாதிரி கிராமம் என்ற சிறப்பை பெற்று அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் கரங்களால் நேருவிருது வாங்கிய பெருமை நமது கிளியனூருக்கு மட்டுமே உண்டு.
சும்மா வந்துவிடவில்லை இந்த பெருமை.முற்றிலும் உள்@ர்காரர்களின் தன்னலமற்ற உழைப்பால் சி.அ.முதலாளி எஸ்.ஏ.மஜீது அவர்களின் கொடை உள்ளத்தால் ஹாஜியார் மர்ஹ_ம் ஓ.முஹம்மது ஷரீப் அவர்களின் கடுமையான முயற்சியால் சைக்கிள் இராவுத்தர் மர்ஹ_ம் முஹம்மது இபுராஹிம் அவர்களின் சிறப்பான நிர்வாகத்தால் கம்பீரமான கட்டிடங்களை சுயமாகக் கொண்ட பள்ளிக்கூடம் மருத்துவர் குடும்பத்தோடு சகல வசதிகளோடு தங்கும் மருத்துவமனை எல்லா வாகனங்களும் எளிதில் சென்று வரதக்க கப்பிச் சாலைகள் அமைந்த அழகியத் தெருக்கள் ஊரையே வளைத்துப் போட்டதைப் போன்ற அழகிய பெரிய குளம் எழில் கொஞ்சும் பள்ளிவாசல் என ஊரின் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேறிய மாதிரி கிராமத்தை உருவாக்கிய சிற்பிகள் எஸ்.ஏ.மஜீது அவர்களும் ஹாஜியாரும் தான் என்றால் மிகையாகாது.
சின்னப்பராவுத்தரின் மகனாகப் பிறந்த சிங்கப்பூர் கடை வீதிகளில் தோளில் துணிகளைச் சுமந்து விற்று நகரின் குறிப்பிடத்தக்க ஜவுளி வியாபாரிகளில் ஒருவராக உயர்ந்த வணிக வள்ளலாக சிறப்படைந்த எஸ்.ஏ.மஜீது முதலாளி அவர்களுக்கு ஹை ஸ்டீரீட் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு தியாங்பார் ஆகிய இடங்களில் துணிவணிகம் கொடிகட்டிப் பறந்தன.சுமார் நூறு பணியாளர்களுக்கு மேல் பணியாற்றிய அந்தக் கம்பெனியில் பெரும்பாலோர் கிளியனூர் வாசிகள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.கூத்தூர் சம்சுதீன், கிளியனூர் ஹாஜி எஸ்.ஹஸன் முகம்மது போன்ற மேலாளர்கள் கவிஞர் ஆர்.அப்துல்சலாம், ஹாஜி அபுபக்கர் போன்ற கணக்காளர்கள், எஸ்.ஏ.வஹாப் போன்ற தலைமை விற்பனையாளர்கள் போன்ற பல விற்பன்னர்களால் எஸ்.ஏ.மஜீது கம்பெனி சிங்கப்பூரின் முதல்தர தொழிலாக உயர்ந்து நின்றது.ஓங்கி வளர்ந்தது அதைப்போன்றே மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜலான் மஸ்ஜித் இந்தியா அருகில் துங்கு அப்துல்ரஹ்மான் சாலையில் பூந்தோட்டம் எஹ்யா அண்ணன் அவர்கள் மூலம் கிளை நிறுவனம் ஒன்றும் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
உழைப்பில் விளைந்த பொருட் செல்வத்தை எல்லாம் தானே உண்டு களித்திடாத பெருந்தகை சினாஅனா அவர்கள்.நாடிவந்த நல்லுள்ளங்கள் மகிழ வாரி வழங்கி மகிழ்ந்தார்கள்.
தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் கூட அவர்காலத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களுக்கு கணிசமாக வழங்கி களிப்பூருவகை அடைந்தார்கள்.
குறிப்பாக கடையநல்லூர் தென்காசி பூந்தோட்டம் போன்ற ஊர்களிலுள்ள பள்ளிவாசல்களை சி.அ.அவர்களைக் கொண்டே பூர்த்தியானதாகச் சொல்கிறார்கள்.
அதுமட்டுமின்றி 1954 ஆம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபாய் (தற்போது ஒரு கோடிக்கு சமம்)வழங்கிய வரலாறும் மறக்கவோ மறைக்கவோ இயலாத ஒன்று.
திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரிக்கும் கணிசமாக நிதி வழங்கியுள்ளார்கள்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறைந்த ஜஸ்டிஸ் பஷீர் அஹமது அவர்கள் எஸ்.ஐ.இ.டி.பெண்கள் கல்லூரி தொடங்க சிங்கை வந்தபோது 1954 ஆம் ஆண்டு ரூ.35000 வழங்கியதோடு மட்டுமின்றி பெரும் வணிக வள்ளல்களிடமும் வசூல் செய்து கணிசமானத் தொகை வழங்கி எஸ்.ஐ.இ.டி.கல்லூரி(ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சையித் கல்லூரி)உருவாகக் காரணமாக இருந்தார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தனிப்பெரும் தலைவர் கண்ணியத்திற்குரிய பெருந்தகை காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் கிளியனூர் பெயரைக்கேட்டாலே அவர்களின் சிந்தனையில் சினாஅனா அவர்களை நினைவுக் கூறுவார்கள்.
அவர்கள் ஒருமுறை கூறும்போது எனது முதலாளி ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களுக்கும் பிறகு நான் நேசித்த செல்வந்தர் மஜீத் சாஹிப் எல்லோராலும் ஏற்கதக்க கண்ணியமான சுபாவம் கொண்ட கருணையுள்ளத்திற்கு சொந்தக்காரர் அவர்.அவரால் கிளியனூருக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே பெருமை என்றார்கள்.
ஒருமுறை கிளியனூர் இளைஞர்கள் சுற்றுலா சென்ற சமயம் திருவண்ணாமலை வந்ததும் இரவு உணவை முடித்துவிட்டு ஓய்வெடுக்க விரும்பி தங்கும் விடுதிகளின் கதவை தட்டியபோது சீசன் காலம் ஆனதால் எல்லா விடுதியும் நிரம்பி வழிந்தன.
திருவண்ணாமலை பள்ளிவாசலில் இரவு தொழுகையை முடித்தபோது கூட்டத்தைப்பார்த்த முத்தவல்லியும் மற்றவர்களும் மகிழ்ச்சியடைந்து இந்தப் பள்ளிவாசல் உங்கள் சினாஅனா முதலாளியின் நன்கொடை நீங்கள் எல்லோரும் இந்தப்பள்ளியிலேயே படுத்து ஓய்வு எடுங்கள் என்று தலையணையைக் கொண்டுவந்து குவித்தார்கள்.
சினாஅனா அவர்களின் கொடை உள்ளம் எல்லா எல்லைகளையும் கடந்து விரிந்தது என்பதை அறிந்து மகிழ்ந்தோம்.
கிளைகளும் இலைகளும் மரங்களுக்குரியது.அது தரும் காய்களும் கனிகளும் மற்றவர்களுக்கு உரியது.அதனால் தான் மரங்களும் பிறருக்குத் தரும் காய்களாலும் கனிகளாலும் அழைக்கப்படுகிறதுபோலும்.
கனிகளை வழங்கிய கற்பகத் தருவாக வாழ்ந்தவர்தான் சினாஅனா எஸ்.ஏ.மஜீது அவர்கள் 1964 அக்டோபர் 30ஆம்தேதி வெள்ளிக்கிழமை வரலாறு ஆனார்கள்.(இன்னாலில்லாஹி...வா இன்னா இலைஹி ராஜிஊன்)சிங்கப்பூரில் பிடார் அவென்யூவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரின் பிள்ளைகளில் ஒருவர் இலியாஸ் மஜீது லண்டனில் படித்து சட்டம் பயின்று பார்-அட்-லா பட்டம் பெற்றவர்.டாக்கடர் ஹாஜா கே.மஜீது எம்.பி.பி.எஸ். எப்.ஏ.ஜி.இ. சென்னையில் பிரபல மருத்துவர் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியருக்கான சான்றளிக்கும் மருத்துவர் தமிழ்நாடு ஹாஜ் கமிட்டி வக்ஃபு வாரிய உறுப்பினர் சமுதாயப் புரவலர்களில் ஒருவர்.
DR.MOHAMED RILA (டாக்டர் முஹம்மது ரிலா அவர்கள்)
சினாஅனா அவர்களின் பேரர் டாக்டர் முஹம்மது ரிலா அவர்கள் உலகின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் இலண்டனில் வசிக்கிறார்.அறிவியல் அறிஞர் முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சந்திக்க விரும்பியவர் டாக்டர் முஹம்மது ரிலா.
தகவல் ஒலிபரப்பு முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜன் குண்டடிப்பட்டு கல்லீரல் பழுதுப்பட்டிருந்த போது சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து தனி விமானத்தில் மும்பை வந்திறங்கிய டாக்டர் முஹம்மது ரிலா.
மருத்துவ பயிற்சிக்கும் இங்கிலாந்து செல்லும் தென்னந்தியாவின் பிரபல மருத்துவ நிபுணர்களும் கிங்ஸ் மருத்துவமனைக்குச் சென்று நமதூர் டாக்டர் ரிலா அல்களை சந்திக்காமல் திரும்புவதில்லை.
கல்விக்காக தனது பாட்டனார் சினாஅனா செய்த அறச்செயல்களுக்கான அறுவடையை தனது கடின உழைப்பாலும் தேர்ந்த மதிநுட்பத்தாலும் டாக்டர் முஹம்மது ரிலா அவர்கள் செய்து வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல.
தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க மேதைகளால் உஸ்தாத் என்று அழைக்கப்பட்ட மௌலானா மௌலவி மர்ஹ_ம் ஹாஜி அப்துல் ஹமீது பாஜில் நூரிய்யி அவர்களின் மேலான ஆலோசனையின் பேரில் கிளியனூரில் மதரஸத்தூர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியை 1959ஆம் ஆண்டு பிரமாண்டமான கட்டிடத்தில் தொடங்கினார்கள்.அதில் பயிலும் மாணவர்களுக்கு உணவும் கல்வியும் இருப்பிடமும் 100 ஏக்கர் நஞ்சை நிலத்தையும் வாங்கி வக்பு செய்தார்கள்.1964 வரை எஸ்.ஏ.மஜீது அவர்களே நிர்வகித்து வந்தார்கள்.அதன் பிறகு அவர்களின் மூத்த மகனார் அல்ஹாஜ் எஸ்.ஏ.சம்சுதீன் அவர்கள் காலம்வரையில் மதரஸா நிர்வாகத்தை நடத்தி வந்தார்கள்.
இன்று உலகம் முழுவதும் ரஹ்மானியாவில் பட்டம் பெற்ற உலமாக்கள் பலர் இன்றும் கூட கிளியனூரையும் சினாஅனா முதலாளியையும் நினைவு கூர்ந்த வண்ணம் நம் எல்லோருக்கும் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இன்ஷாஅல்லாஹ் இன்னமும் எதிர்வரும் காலங்களிலும் துஆ செய்வார்கள்.
கிளியனூரை மாதிரி கிரமமாக உருவாக்க மருத்துவமனை பள்ளிக்கூடம் கப்பிச்சாலை ஆற்றுப் பாலம் அரபிக் கல்லூரி போன்றவற்றிற்கு வாரிவழங்கிய வள்ளல்.பல பள்ளிவாசல் புணர் நிர்மானம் செய்ய கனிசமான தொகை வழங்கிய மனிதப் புனிதர். 1904 ல் கட்டி முடிக்கப்பட்ட கிளியனூர் பள்ளிவாசலை அகலப்படுத்தி அழகுப் படுத்திய பெருமகன்.நகரின் மையப் பகுதியில் இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் எழில் மாளிகையை உருவாக்கி அதில் மௌலானா முஹம்மது அலி ஜெவஹர் பெயரில் அறிவொளி பரப்பும் அற்புத நூல்நிலையம் அமைத்து பின்புறம் முஹம்மது அலி ஜின்னா பூப்பந்தாட்ட மைதானம் நிர்மானித்த மத்ரஸத்துர் ரஹ்மானிய்யாவின் ஸ்தாபகர் வாழும் போதே வரலாறாக ஆன வள்ளல் பெருந்தகை சினாஅனா எஸ்.ஏ.மஜீது அவர்களாவர்.
No comments:
Post a Comment