KILIYANUR ONLINE

Tuesday 30 November 2010

உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்" அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ

முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற
முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற
அற்புதமாம் குர் ஆனே உன்கையில் இருக்கையிலே
அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?

கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன்
கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு
சால்மிகுந்த சங்கைநபி வாழ்வுமுறை உனக்கிருக்க
சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை?

பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும்
புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும்
கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும்
கருணை நபி ஹதீஸ்இருக்க உனக்கென்ன மனக்கவலை?

துன்பத்தில் துயரத்தில் இன்பத்தில் இலட்சியத்தில்
தொடராக விளைகின்ற சோதனையில் வேதனையில்
புண்பட்ட மனத்தவரும் பண்பட்டு நடை பயில
புகழ்ஸஹாபி வாழ்விருக்க உனக்கென்ன மனக்கவலை?

உண்ணுகிற உணவுக்கும் உடுத்துகிற உடைகட்கும்
இன்னதுதான் ஆகுமென்றும் இதுவெல்லாம் ஆகாதென்றும்
கண்ணியமாய்ப் பிரித்தெடுத்து சட்டங்கள் சமைத்தெடுக்கும்
ஷரீஅத்தின் தெளிவிருக்க உனக்கென்ன மனக்கவலை?

இருளுக்கு ஒளிவிளக்கு! இல்லார்க்கு அருள்விளக்கு!
இம்மைக்குச் சுடர்விளக்கு! மறுமைக்குத் தொடர்விளக்கு!
அருளுக்கு அருளான இஸ்லாமே இருக்கையிலே
அல்லாஹ்வின் அடியாளே! உனக்கென்ன மனக்கவலை?

நன்றி : குர்ஆனின் குரல் ( நவம்பர் 2010

No comments:

Followers