KILIYANUR ONLINE

Tuesday 30 November 2010

விடா முயற்சிக்கு ஒரு பாடம்!

இல்லை’ என்று யாராவது சொன்னால், அதற்கு ‘ஆமாம்’ என்று அர்த்தம் நம்மால் கொடுக்கமுடியுமா? ஆமாம் டார்பி அப்படித்தான் ஒரு வியாக்கியானத்தைக் கற்பித்தார்.


ஹார்ட் நாக்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பு முடித்த கையோடு டார்பி தனது தங்கச் சுரங்க அனுபவத்திலிருந்து ஒரு புதிய உத்தியை உருவாக்கி அதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என புதிய கோட்டை கட்ட ஆரம்பித்தார். இந்த புதிய உத்தியை உருவாக்குவதற்கு முன் அவரை முற்றிலும் மாற்றிய அற்புதமான நிகழ்வு இது. தற்செயலாக நடந்த அந்த நிகழ்வு அவரது வாழ்க்கையையே முற்றிலும் புரட்டிப்போட இருக்கின்றது என்பதை அவர் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

அந்த பாடம்தான், ‘இல்லை’ என்பதற்கு ‘ஆம்’ என்றுகூட ஒரு பொருள் இருக்கிறது என்ற அற்புதமான ஓர் உண்மையை டார்பிக்கு நெத்தியடிபோல் உணர்த்திய சம்பவம்.

ஒரு நாள் மதிய வேளையில் கோதுமையை அரைத்துக் கொண்டிருந்த தனது மாமாவுக்கு டார்பி உதவி செய்து கொண்டிருந்தார். அந்த மாமாவின் மிகப் பெரிய வயல்காட்டில் ஏராளமான கருப்பின மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மெல்ல கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு டார்பி அங்குத் திரும்பிப் பார்த்தார். அந்தக் கதவை தைரியமாக திறந்து, அந்த கருப்பின வேலையாட்களில் ஒருவரின் சின்னஞ்சிறிய மகள் ஒருத்தி பால் வடியும் முகத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

இதை மெல்ல திரும்பிப் பார்த்த டார்பியின் மாமா கடுங்கோபம் கொண்டு “என்ன வேணும்?” என எரிந்து விழுந்தார்.

“எங்கம்மாவுக்கு 50 சென்ட் அவசரமாக வேணுமாம்,” என்றாள் கனிந்த முகத்துடன் ( 50 சென்ட் என்பது ஒரு டாலரில் பாதி பணம். )

“கொடுக்க முடியாதுன்னு சொல்லு. உடனே இங்கிருந்து ஓடிப் போயிடு.” என்றார் மாமா.

“சரி சார்” என்று பதிலளித்தாள் அந்தச் சிறுமி. ஆனால் அவள் மனம் அங்கிருந்து நகர மறுத்தது. அவள் திரும்பிச் செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

டார்பியின் மாமா அவள் சென்று விட்டாள் என நினைத்துக் கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தார். மீண்டும் அவர் தற்செயலாக திரும்பிப் பார்த்தபோது அவள் அங்கிருந்து போகாததைக் கண்டு மீண்டும், “நான்தான் உன்ன வீட்டுக்குப் போகச் சொன்னேனே. மரியாதையா ஓடிப்போயிடு.” என்றார் கொடூரமான குரலில்.

அந்தச் சிறுமியோ, “சரி சார்” எனச் சொன்னாளே தவிர அங்கிருந்து ஒரு அடிகூட நகரவேயில்லை.

அந்தச் சிறுமியை அடித்துவிட வேண்டும் என்ற முடிவில் ஓடிச்சென்ற அந்த மாமா அவளை நெருங்குவதற்கு முன்பாக அந்தச் சிறுமி மிகவும் தைரியமாக அவரை எதிர் கொள்ளும் விதமாக ஒரு அடி முன்னால் சென்று “இந்த இடத்தைவிட்டு நகரவே மாட்டேன்.” என்று மிரட்டும் தோரணையில் உரக்கக் கத்தினாள்.

டார்பியின் மாமா அப்படியே உறைந்து போய்விட்டார். மெல்ல தன் கையிலிருந்த இரும்புத்துண்டை கீழே வைத்துவிட்டு தன்னை அறியாமலேயே தனது பாண்ட் பாக்கெட்டுக்குள் கையையைவிட்டு கையில் கிடைத்த 50 சென்ட் காசை எடுத்து அவளது பிஞ்சுக் கரங்களில் மெல்ல வைத்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார்.

காசு கிடைத்த பிறகும் அந்தச் சிறுமி தான் வெற்றி கொண்ட டார்பியின் மாமாவை வைத்தகண் மாறாமல் பார்த்தவாறே பின்பக்கமாக அடி எடுத்து வைத்தவாறு சென்று மறைந்தாள். அவள் சென்ற பின்பும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் டார்பியின் மாமா சற்று நேரம் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார்.

இதையெல்லாம் கூர்ந்து கவனித்த டார்பிக்கு அது அவரது வாழ்க்கையையே மாற்றும் நிகழ்வாக மாற்றியது. அதுவரை ஒரு கருப்பினத்தவர் யாரும் வெள்ளையர்களைப் பார்த்து அத்தகைய உறுதியுடன் பேசியதில்லை. அதிலும் அந்தக்க கருப்பினச் சிறுமியால் எப்படி ஒரு ஆணவம் படைத்த உயர்ந்தவர்களான வெள்ளையரை அடிபணிய வைக்கமுடிந்தது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எங்கிருந்து அவளுக்கு அந்த உறுதி வந்தது? அடங்க மறுத்த மிகவும் மிடுக்கான ஆணவக்காரரான அவரது மாமாவை எது உண்மையில் அடிபணிய வைத்தது? இப்படிபட்ட செயலை தைரியமாகச் செய்ய எந்த சக்தியை அந்தச் சிறுமி பெரிதாக நம்பியிருந்தாள்? இப்படிப் பல வகையான கேள்விகள் அவரது மனதை ஊடுருவிச் சென்ற வண்ணமிருந்தன. ஆனால், அவரால் இதற்கு எந்தப் பதிலும் காணமுடியவில்லை.

இந்தச் சம்பவம், இப்படி அவரை அலைகழித்துக் கொண்டிருந்த வேளையில் எந்த அதிகாரத்தால் அந்தச் சிறுமியால் அவரது மாமாவைக் கட்டிப்போட முடிந்தது என்ற கே;ள்வியை மட்டும் அவர் தொடர்நது கேட்கத் தொடங்கினார்.

டார்பி கேட்ட இந்தக் கேள்விக்கான விடைதான் இந்த கட்டுரைத் தொடர் முழுக்க உங்களுக்கு கிடைக்க இருக்கின்றது. பல்வேறு விதமான பணம் சம்பாதிக்கும் முறைகளில் ஈடுபட்டு முனைப்போடு வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு டார்பியின் அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்கள் நிறைய இருக்கின்றன. இந்தப் பாடங்களே வாழ்வில், தொழிலில் வெற்றி பெறுவதற்கான வெற்றிச் சூத்திரங்கள். இந்த வெற்றிக்கான தாரக மந்திரங்களை இந்தத் தொடரின் வெவ்வேறு பகுதிகளில் நீங்கள் காண்பீர்கள்.




உங்கள் புலன்களை எப்போதும் திறந்தே வைத்துக் காத்திருங்கள். எந்த உடனடிச் சிந்தனையால் உந்தப்பட்டு அந்தச் சிறுமி தன் பிரச்சினைக்கான தீர்வை அடைந்தாளோ, அந்த வெற்றியின் சூத்திரம் உங்கள் மனதிற்கும் நிச்சயம் புலப்படும்.

அந்த அனுபவத்திற்குப் பிறகு டார்பி இன்சூரன்ஸ் வேலையை ஆரம்பித்து மிகப்பெரிய பணக்காரரான கதையை அறியாதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். இன்சூரன்ஸ் கம்பெனியை ஆரம்பித்து 30 ஆண்டுகளாக அதை வெற்றிகரமாக நடத்தி வந்த பெருமை அவரைச் சாரும். மூன்று அடி தூரத்தில் தங்கத்தைக் கோட்டை விட்ட அவர், 30 ஆண்டுகள் வெற்றி நடை போட்டதன் பின்னணியை பல ஆண்டுகள் கழித்தே அவராலேயே கண்டுபிடிக்க முடிந்தது.

அவரது வெற்றியின் இரகசியத்தைப் பற்றிக் கேட்ட போது, “ ஒவ்வொரு முறையும் யாராவது, “வேண்டாம்” என என்னை திருப்பியனுப்பியபோது அந்தச் சிறுமிபோல் நான் நிற்பதாக உணர்ந்தேன். நான் எனக்குள்ளேயே, “நான் இந்த விற்பனையைச் செய்தே தீருவேன்,” என எனக்குள் தீர்க்கமாகச் சொல்லிக் கொள்வேன். நான் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதி மக்கள் தத்தம் வீடுகளிலிருந்து எனது இன்சூரன்ஸை வாங்க மறுத்து கதவைத் தாழிட்ட பிறகுதான் நடந்தது. அவர்கள் ‘இல்லை’ எனக்கூறிய பிறகும் நான் என்னை அறியாமலேயே அந்தச் சிறுமிபோல் தொடர்ந்து அவர்கள் ‘ஆம்’ என எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டேன். அவர்கள் கூறிய ஒவ்வொரு ‘வேண்டாம்’ என்ற வார்த்தையும் ‘வேண்டும்’ என்றுதான் என் காதுகளில் விழுந்தன. மூன்றே அடிகளில் நான் தங்கச் சுரங்கத்தையே கோட்டை விட்டது எனக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்தது. அந்த நிகழ்வுதான் என்னைத் தொடர்ந்து தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்ற வாழ்க்கையின் கடினமான பாடத்தைக் கற்றுத் தந்தது.

டார்பியின் இந்த வாழ்க்கை நிகழ்வு, அவருடைய மாமாவின் தங்க வேட்டை மற்றும் சிறுமியின் அபார வெற்றிச் சூத்திரம் இவையனைத்தும் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு வெறும் கதையாக இல்லாமல், உங்கள் வாழ்க்கையையும் உங்கள் விற்பனை திறனையும் மாற்ற வல்ல அபார சக்தி படைத்தவை என உணர வேண்டும். இவைதான் பல கோடி மதிப்புள்ள இன்சூரன்ஸ்களை எளிதாக விற்க டார்பிக்கு உறுதுணையாக நின்றன.

வாழ்க்கை என்பது மிகவும் புதிரானது. இந்தப் புதிரான வாழ்க்கையின் விதிகள் நம் அன்றாட வாழ்வில் நடக்கும் எளிய சம்பவங்களில்தான் இருக்கின்றன. டார்பியின் வாழ்வில் நடந்த பெரும்பாலான நிகழ்வுகள் நம் வாழ்விலும் அன்றாடம் நடப்பவைதான். ஆனால், நம் தலைவிதியையே நிர்ணயிக்க வல்ல வாழ்க்கைச் சூத்திரங்களை உள்ளடக்கியவை.

டார்பியின் ஒவ்வொரு தோல்வியும் அவரை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு வந்து நிறுத்தின. அந்த தோல்விகளை அவர் கூறுபோட்டுப் பார்த்து சரியான கணிப்புகளை ஏற்படுத்தியதால், தோல்வி ஒவ்வொன்றும் வெற்றிக்கான படிக்கட்டாக உருவெடுத்து நின்றன.

பணம் பண்ணுவதற்கான அடுத்த படிகளுக்குச் செல்வதற்கு முன் இந்த ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்தே ஆகவேண்டும். வெற்றி உங்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டால் அல்லது செல்வம் உங்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டால் அது தொடர்ச்சியாகவும், உடனடியாகவும், ஏராளமாகவும் வந்து குவிந்துவிடும் என்பதே அந்த உண்மை. தோல்விகள் அடுக்கடுக்காக வருகிறதென்றால், அவை தொடர்ச்சியாக வர இருக்கின்ற வெற்றிக்கான முன் அடையாளம் என்றே கருதலாம்.

எனவே பணம் நம்மிடம் வந்து குவியும் முன்பே அதுபற்றிய தெளிவு நம் மனதில் உருவாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அது வருவதை நம்மால் புரிந்து கொள்ள இயலாமல், அந்தச் செல்வத்தின் அல்லது வெற்றியின் வரவை நாம் உணர்வதற்குள் அந்த செல்வத்தையும் ;வெற்றியையும் நாம் இழந்துவிடுவோம். எனவே நமக்கு இங்கு அதிகம் தேவைப்படுவது ‘வெற்றி மனநிலை’ அல்லது ‘பணக்கார மனநிலை’ மட்டுமே. செல்வமும் வெற்றியும் பிறகு எளிதாக தானாக நம்மை வந்து சேரும். இப்போது உங்களுக்கு ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்ற பாடல் வரியின் பொருள் நன்றாகப் புரிந்திருக்கும். நம்புங்கள் வெற்றி இன்னும் சில காலத்தில் உங்கள் கண்முன் தெளிவாக தென்பட இருக்கின்றது. அது இப்போதே உங்கள் அருகாமையில் வரத் தொடங்கிவிட்டது என நம்புங்கள்.

‘என்னால் முடியாது’, ‘அதெல்லாம் நடக்காது’ என்று அடிக்கடி பேசும் சமூகச் சோம்பேறிகள் அதைத்தான் நம்புகிறார்கள். அவர்கள் நம்புவது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. அதையே அவர்கள் நம்புவதால் அதைத்தாண்டிய செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. வெற்றியாளர்கள் தோல்விக்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதில்லை. மாறாக, வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே தங்கள் மனத்தில் நிறுத்தி அதையே சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சாமானியர்களின் கண்களுக்குப் புலப்படாத வெற்றியின் இரகசியங்கள் அனைத்தும் அவர்களின் கண்களுக்கும் மனதிற்கும் மட்டுமே புலப்படுகின்றது. தோல்வி மனநிலையாளர்களுக்குத் தோல்வி வருவது உறுதி. வெற்றி மனநிலையாளர்களுக்கு வெற்றி கிடைப்பது உறுதி.

மற்றுமொரு உண்மை என்னவென்றால், வெற்றியையும் செல்வத்தையும் தங்கள் கண்ணோக்கிலேயே பார்ப்பது. தங்கள் அனுபவங்கள், தங்கள் நம்பிக்கைகள் இவற்றின் அடிப்படையிலேயே தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எண்ணுவது. பல நேரங்களில் உங்கள் அருகிலேயே வெற்றி வேறொரு வடிவத்தில் வந்து காத்திருக்கும். ஆனால் அத்தகைய வெற்றியைப் பார்த்து பழக்கப்படாத கண்களுக்கு அந்த வெற்றி புலப்படுவதில்லை. வெற்றி நம்மை எளிதாக உதாசினப்படுத்திச் செல்லும். வெற்றியைப் பற்றி நினைப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். செல்வத்தைப் பற்றியோ பணத்தைப் பற்றியோ வாழ்க்கையில் ஒரு நாள் மட்டும் நினைத்துவிட்டால் போதாது. அதுவே நம் பேச்சாகவும் மூச்சாகவும் நம் அன்றாடச் சிந்தனையாகவும் மாற வேண்டும்.

டார்பிக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி, அவர் எதிர்பார்த்த தங்கச் சுரங்கத்திலிருந்து கிடைக்க வில்லை. மாறாக, மக்கள் வைத்திருந்த பணச் சுரங்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேறு வடிவில் கிடைத்தது. அது தங்கமான அவருக்குக் கிடைக்க வில்லை. மாறாக, அது டாலராக அவருக்குக் கிடைத்தது.

தங்கச் சுரங்க அனுபவத்திலிருந்தும் அந்தச் சிறுமியின் அனுபவத்திலிருந்தும் அவருக்கு வெற்றி பற்றிய ஆழமான புரிதல் மட்டுமே கிடைத்தது. விரும்பினால் மட்டுமே பணம் கிடைக்கும், வெற்றி கிடைக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை உணர்த்தும் விதமாக ‘பணம் செய்ய விரும்பு’ என்ற இந்தத் தொடர் உங்களை உந்தித் தள்ளுகிறது. இதைப் படித்தாலே போதும். அது உங்களை அதிசயக்கும் விதத்தில் உங்களைப் பணத்திற்கு அருகே, செல்வத்திற்கு அருகே, வெற்றியின் அருகே கொண்டு வந்து சேர்த்துவிடும். அதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அருகிலிருக்கும் வெற்றியை, செல்வத்தை உங்கள் கைகளால் அள்ளி எடுப்பது மட்டுமே.

வெகு விரைவிலேயே அந்தச் செல்வத்தை நீங்கள் அள்ளி எடுக்கப் போகிறீர்கள்.

தொடரும்….

No comments:

Followers