KILIYANUR ONLINE

Tuesday 30 November 2010

பணம் செய்ய விரும்பு (ஹலால்)

வெற்றியை மட்டுமே தங்கள் கண்முன் நிறுத்தி வாழ்பவர்கள் வெற்றியைத் தவறவிட்டதில்லை.

தோல்வி பயத்தாலே எதையும் முயற்சிக்காதவர்கள் பக்கம் வெற்றி திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.

நீங்கள் மிகப்பெரிய பணக்காரராகப் போகிறீர்கள்!

அது இருந்தா இது இல்லே;

இது இருந்தா அது இல்லே.

இதுவும் அதுவும் சேர்ந்திருந்தா

அவனுக்கிங்கே இடமில்லே.

பொதுப்பணியில் செலவழிக்க நினைக்கும் போது பணமில்லே;

பணமும் பொருளும் சேர்ந்து வந்தா பொதுப்பணியில் நினைவில்லே;

போதுமான பணமும் வந்து, பொதுப்பணியில் நினைவும் வந்தா

கூட இருக்கும் கூட்டாளிகள் சரியில்லே.

– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

வாழ்க்கையில் இருக்கும் யதார்த்தமான முரண்களைப் பற்றித்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இப்படிப் பாடி வைத்தார். முரண்பாடான நம்பிக்கைகளை ஒருசேர நம்மிடமே வைத்துக் கொண்டு, வாழ்வில் வெற்றி கிட்டவில்லை எனப் புலம்புபவர்கள் ஏராளம். வெற்றியை மட்டுமே தங்கள் கண்முன் நிறுத்தி வாழ்பவர்கள் வெற்றியைத் தவறவிட்டதில்லை. தோல்வி பயத்தாலே எதையும் முயற்சிக்காதவர்கள் பக்கம் வெற்றி திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. இத்தகையோரைப் பார்த்துதான் பட்டுக்கோட்டை மற்றொரு பாடலில்,

“நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்-சிலர்

அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு

அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்.

விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்.

உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்.” என்று பாடினார்.

நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வீண்போகாது என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லி, பாட்டாலே புத்தி சொன்னவன் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம். ஆனாலும், ‘பணமிருந்தா குணமிருக்காது, குணமிருக்குமிடத்தில் பணமிருக்காது’ என்று பெரியோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவையிரண்டையும் ஒரு சேரப் பெற்றவர்களை மிகப்பெரிய வெற்றியாளர்கள் அல்லது சாதனையாளர்கள் என்றே கூறலாம்.

குணத்தோடு பணத்தையும் எப்படிச் சேர்ப்பது? அத்தகைய சாதனையை எப்படி உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்துவது என்பதை ஆணித்தரமாக நிரூபித்து, உங்களை அந்த வழியில் தொடர்ந்து இட்டுச் செல்வதே இந்தத் தொடரின் நோக்கம். உண்மையில் நீங்கள் மிகப்பெரிய பணக்காரராகப் போகிறீர்கள். பணத்திலும் சரி, குணத்திலும் சரி!

ஆம்! நீங்கள் மிகப் பெரிய பணக்காரராகப் போகிறீர்கள்!

இப்போது நீங்கள் எந்தப் பொருளாதார நிலையில் இருந்தாலும் சரி, எத்தகைய தடைகளை வாழ்வில் எதிர்கொண்டிருந்தாலும் சரி, எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், எவ்வளவு குறைவான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் வாழ்க்கையையும் பொருளாதாரச் சூழலையும் எளிதாக மாற்றி, இன்று முதல் உங்கள் பொருளாதார நிலையை உச்ச நிலைக்குக் கொணர முடியும்.

இதற்கு முன் வெளிவந்துள்ள கருத்துகளைவிட இது முற்றிலும் மாறுபட்டது. இது அதிக பணத்தைத் திடீரென உருவாக்கித் தரும் அதிசயத் திட்டமில்லை. இதைச் செய்யுங்கள்; அதைச் செய்யுங்கள் என வெறுமெனே வாய்ச்சவடால்களைக் கட்டவிழ்த்து விட்டுக் காலை வாரி விடும் அறிவுரைத் தொடருமல்ல. இருப்பதை விட்டுவிட்டு இல்லாததற்கு ஆசைகாட்டி மனத்தை மாற்றி மாயவலை விரிக்கும் தொடருமல்ல. இருப்பதை வைத்து எப்படிப் பணக்கார வாழ்க்கை வாழலாம் என்பதற்கான அடிப்படை மனநிலையை ஒரே தவணையிலேயே உருவாக்கித் தரும் அற்புதமான தொடர்.

இந்தத் தொடரைப் படித்து, அதை நடைமுறைப்படுத்துவதாலேயே செல்வச் செழிப்பில் வாழ்வதற்கான அடித்-தளத்தை ஆணித்தரமாக அமைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதற்கும் மேலாக வளமான திறமைகளையும், அதற்கு அடிப்படையாக இருக்கும் மனப்பக்குவத்தையும் சேர்த்தே வாங்கியிருக்கிறீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

இந்தத் தொடரின் முதல் பகுதி பணம், செல்வம் இவற்றின் இயங்குவிதிகளைப் பற்றிப் பேசுகின்றது. இவை செல்வத்தைப் பெருக்கி வளமாக வாழத் தேவையான கொள்கைகள், நம்பிக்கைகள், அதற்குத் தேவையான மனப்பக்குவம் போன்றவற்றை விளக்குகிறது.

இத்தொடரின் இரண்டாம் பகுதியில், நடைமுறையில் பணம் பண்ணுவதற்கான செயல்பாடுகளை அட்சய பாத்திரம் போன்று கொடுத்துள்ளேன். நீங்கள் தொடக்க நிலையில் இருந்தாலும் சரி, அல்லது ஏற்கெனவே அந்தப் பயணத்தைத் தொடங்கியிருந்தாலும் சரி இதன் ஒவ்வொரு அத்தியாயமும் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்களா என்று பார்க்க உதவும். அப்படிச் செல்லாமல் செல்வத்தின் பாதையைத் தவறவிட்டிருந்தால், உங்களைச் கரம்பிடித்து அந்தப் பாதைக்கு மீண்டும் அழைத்துச் செல்லும். இனி உங்களால் பணம் பண்ணாமல் இருக்க முடியாது.

இறுதி அத்தியாயத்தில் செல்வச் செழிப்பில் வாழ்வதன் இரகசியங்களைக் கற்றுக் கொடுப்பேன். உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவுத் தொகை இருந்தாலும் சரி, பணமே இல்லாமல் போனாலும் சரி நீங்கள் செல்வச் செழிப்பில் வாழலாம். மேற்கூறிய சிந்தனையில் நீங்கள் முன்னேறத் தயாரானால், உண்மையில் உங்கள் தேவைகள் என்ன என்பதை நீங்களே சரியாக கண்டுணர்வீர்கள். நீங்கள் அதிகம் தேடி அலையும் விலைமதிக்க முடியாத, உண்மையான மகிழ்ச்சியையும் உள்மனச் சுதந்திரத்தையும் இறுதியில் அடைந்தும் விடுவீர்கள்!

இறுதியாக ஒன்று…

இந்தத் தொடரின் சில கருத்துகள் உங்களுக்கும், உங்கள் சிந்தனைக்கும் சவால் விடுவதை அனுமதியுங்கள்! அந்தச் சவால்களை எதிர்கொள்ளுங்கள். அவற்றை உதறித் தள்ளிவிடாதீர்கள்.

தயாராகி விட்டீர்களா? நீங்கள் இதுவரை காணாத புதிய, உங்கள் மற்றொரு உண்மையான பக்கத்தை இன்னும் கொஞ்ச காலத்தில் கண்டடையப் போகிறீர்கள்.

உங்கள் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும், நீங்கள் அடையப் போகும் செல்வத்திற்கும் என் வாழ்த்துகள்!

ஆசையை வென்றவன்!

எட்வின் சி. பார்ன்ஸ் என்பருக்கு ஒரு தீராத ஆசை. ஆனால் இந்த ஆசை அவருக்குத் திடீரென முளைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆசை அவரைக் கொள்ளை கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கொள்ளை கொண்ட ஆசையை அவர் எப்படிக் கொள்ளை கொண்டார் என்பதே இந்தக் கதை.

பார்ன்ஸின் ஆசை தீவிரத்தில் வெள்ளிடை மலையாகத் தெரிந்தது அவரது கூர்மையான, தெளிவான, உறுதியான ஆசை. அவர் எப்படியாவது எடிசனுடன் வேலை செய்ய ஆசைப்பட்டார். பேராசைப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். இங்கு நன்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் எடிசனுடன் வேலை செய்ய ஆசைப்பட்டார், எடிசனுக்காக வேலை செய்ய விரும்பவில்லை. இதுதான் அவர் மனதிலிருந்த மிகத் தெளிவான, கூர்மையான, முற்றுறுதியான ஆசை. இவையிரண்டிற்குமான வித்தியாசத்தை அவர் நன்கு தெரிந்திருந்தார். எடிசனுக்காக வேலை செய்ய நினைத்திருந்தால் அவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு மாறாக, எடிசனுடைய ஆசையையே நிறைவேற்றியிருப்பார். மாறாக, எடிசனுடன் வேலை செய்து தன் மனதிலிருந்த நீங்காத ஆசையை நிறைவேற்றவே எண்ணியிருந்தார்.

இது கொஞ்சம் ‘டூ மச்’ தான் என்றாலும், அது பேராசைப் பேர்வழி என்ற பெயரைப் பெற்றுத் தந்து அவருக்குத் தோல்வியைத் தருவதற்கு மாறாக, மிகப்பெரிய வெற்றியை அள்ளித் தந்தது.

இவருடைய ஆசை பேராசை என்பதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். முதல் காரணம், அவருக்கு முதலாவதாக எடிசனைத் தெரியவே தெரியாது. இதற்கு முன்பு அவருடன் பழகியதுமில்லை. இந்தக் குற்றத்தைக் கூட மன்னித்துவிடலாம் என்றே தோன்றும். அடுத்த காரணம், அவரைப் பார்ப்பதற்கு இரயிலில் ஏறிச் செல்வதற்குக் கூட அவரிடம் பணம் கிடையாது. ஒரு சல்லிக் காசுக்குக்கூட பிரயோசனமில்லாத ஆள் என்று கூறுவோமே, அத்தகைய ஆசாமிதான் உண்மையில் நம் போராசைக்கார ஆசாமி பார்ன்ஸ். இப்போது சொல்லுங்கள் அந்த ஆசாமியின் கனவு நனவாக வாய்ப்பு இருக்கிறதா என்று.

ஆனால், அவர் நினைத்ததைச் சாதித்தார் என்றால் நம்பமாட்டீர்கள். எடிசனையும் தெரியாமல் அவரைப் பார்க்க ஆரஞ்ச், நியூ ஜெர்சி நகரத்திற்குச் செல்ல சல்லிக் காசுகூட இல்லாத நபர் ஒருவர், எடிசனைச் சந்தித்ததோடல்லாமல், அவருடன் வேலை செய்யவும் ஆரம்பித்துவிட்டார். நம்மில் யாருக்காவது இத்தகைய சிக்கல் இருந்திருந்தால், நிச்சயமாக நம் ஆசைகளை வெறும் பகற்கனவாக நினைத்து ஓரங்கட்டிவிட்டு, ‘நம்ம வேலையைப் பார்க்கலாம்’ என ஓடிப்போயிருப்போம். ஆனால், பார்ன்ஸ் தனது கூர்மையான ஆசையை அடையும் வரை விடவில்லை.

சரக்கு இரயிலில் ஏறி, எடிசனின் சோதனைக்கூடத்திற்கு நேராகச் சென்று, உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளரான எடிசனிடம் ‘நான் உங்களுடன் சேர்ந்து தொழில் செய்ய விரும்புகிறேன்’என்று தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின் எடிசனே பார்ன்ஸைப் பற்றிக் கூறுகையில், “ அவர் எனக்கு முன் திடீரெனத் தோன்றினார். ஒரு சாதாரண பரதேசி போன்று இருந்தார். ஆனால், அவரது கண்கள் அவர் நினைத்ததை அடையாமல் விடமாட்டார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டன. மிக ஆழமான, தீராத ஆசை கொண்டிருக்கும் யாரும், அதை அடைவதற்காக ஒரே அடியில் தத்தம் எதிர்காலத்தையும் புரட்டிப் போடத் துணிந்துவிட்ட நிலையில், அவர் வெற்றி பெறுவார் என்பதை எனது பல ஆண்டுகால அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். நானும் அவர் விரும்பிய அந்த வாய்ப்பை அவருக்குக் கொடுத்தேன். ஏனென்றால், அவர் நினைத்ததில் வெற்றியடையும் வரை அந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அதைத் தொடர்ந்து நடந்த ஒவ்வொரு சம்பவமும் இதையே நிரூபித்தன.” என்றார்.

எடிசனுடனான சந்திப்பு பார்ன்ஸூக்கு உடனே, தன் முதல் சந்திப்பிலேயே கிடைக்கவில்லை. முதலில் அவருடைய அலுவலகத்தில் சாதாரண சம்பளத்திற்கு வேலை செய்யும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அந்த வாய்ப்பு பார்ன்ஸின் வாணிப நுட்பத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியது. இதை எடிசனால் நன்கு உணர முடிந்தது.

பல மாதங்கள் நகர்ந்தன. பார்ன்ஸ் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. ஆனால் எதிர்பாராத ஒன்று பார்ன்ஸூக்குள் நடந்து கொண்டிருந்தது. அதுதான் அவரது ஆசையில் ஏற்பட்ட மாற்றம். அவருக்கிருந்த சாதாரண ஆசை மிகப்பெரிய வெறியாக மாறிக்கொண்டிருந்தது. இந்த ஆசை மிக உக்கிரமான நிலையை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. எடிசனின் தொழில் அசோசியேட்டாக மாறுவதுதான் அந்த ஆசை, இல்லை வெறி.

தன்னுடைய அந்த உன்னதமான கனவிலிருந்து கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல், தன்னால் முடியவில்லையே என்று சலித்துக் கொள்ளாமல் தனது உச்சகட்ட நிலையிலேயே கனவையும் நிலைநிறுத்தியிருந்தார். “பேசாமல் வெறும் விற்பனை செய்யும் நபராக மாறிவிடலாம்,” “விரலுக்கேத்த வீக்கம் தேவை,” என்றெல்லாம் தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்ளாமல், தன்னை மாற்றிவிடும் எந்த நிகழ்வோடும் கருத்தோடும் சமரசம் செய்து கொள்ளாமல் வைராக்கியத்தோடு வாழ்ந்தார் பார்ன்ஸ்.

“நான் எடிசனோடு தொழில் செய்ய வந்திருக்கிறேன். என் வாழ்வு முழுவதும் அதற்காக செலவழிக்க நேர்ந்தாலும் அதற்கு நான் தயார்” என்று தன்னையே முழுமையாக நிலைநிறுத்திக் கொண்டார்.

தான் வைத்திருந்த அந்த ஒற்றை ஆசை மட்டுமே தன் வாழ்வில் வரும் எதிர்ப்புகளைத் தகர்த்து எறியும் என்பதை அன்று, அந்த இளம் வயதில் பார்ன்ஸ் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தபோது, அவருக்கு அது வாய்ப்பாகத் தெரியவில்லை. அந்த வாய்ப்பு அவரது வாசலை வேறு விதத்தில் வந்து தட்டியது. முன்வாசலில் வாய்ப்புக்காக காத்திருந்த அவரது வீட்டிற்கு, வாய்ப்பு பின் வாசல் வழியாக கிடைத்தது.

இத்தகைய எதிர்பாராத வாய்ப்புகள் பல நேரங்களில் அசம்பாவிதமாகவோ, தற்காலிக தோல்வியாகவோ வந்து சேர்வதை யாரும் எதிர்பார்ப்பதில்லை. பெரும்பாலும் இத்தகைய இறுதி வாய்ப்புகள் நமக்குத் தோல்விக்கான அறிகுறிகளாகவே தென்படும். அவைதான் பிரச்சினைகளின் இறுதி நிலை என்பதை, அத்தகைய இக்கட்டான தருணங்களில் யாரும் உணர்வதில்லை. வாழ்வில் விதியின் விளையாட்டு இப்படித்தான் இருக்கும் என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை. இதனால்தான் நம்மில் பலர் தோல்வியையே தழுவுகிறோம். அரிய வாய்ப்புகளைத் தவறவிடுகிறோம்.

எடிசன் அப்போதுதான் எடிபோன் (Ediphone) என்ற ‘‘Dictating machine” ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார். எடிசனின் விற்பனை உதவியாளர்கள் அதை விற்க முடியாது என்று அவநம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால் சலிப்படைந்து கொண்டிருந்தார்கள். காரணம், அதை விற்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்திருந்தார்கள். மிகப்பெரிய முயற்சி எடுத்தால் மட்டுமே விற்பனை வாய்ப்புகள் கொஞ்சம் இருக்கும் என உணர்ந்திருந்ததால் அதைக் கைவிடவே எண்ணியிருந்தர்கள். இந்த அவநம்பிக்கையான சூழலைத்தான் பார்ன்ஸ் தனது வெற்றியின் நுழைவாயிலாகக் கருதினார். முதலில் அந்த இயந்திரத்தின் மீது ஒருவருக்கு மட்டுமே நம்பிக்கை இருந்தது. இப்போது இன்னொருவருக்குள்ளும் அதே நம்பிக்கை தொற்றிக் கொண்டது. அவர்தான் பார்ன்ஸ்.

இன்றைய காலகட்டத்தில் செல்வத்தின் ஊற்று மற்றும் மூலதனம் வெறும் பொருள் மட்டுமல்ல. உண்மையான மூலதனம் என்பது மனித மன ஊற்று, மனித ஊக்கம், மனித கற்பனைத் திறன் மற்றும் எதிர்காலத்தின் மீது நாம் வைத்துள்ள எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமேயாகும்.

ஸ்டீவ் ஃபார்ப்ஸ்,

பதிப்பாளர்.

அந்த இயந்திரத்தை விற்க முடியும் என பார்ன்ஸ் நம்பினார். அதை ஆணித்தரமான வார்த்தைகளால் எடிசனிடம் வெளிப்படுத்தினார் பார்ன்ஸ். அவற்றை வெற்றிகரமாக விற்று, தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். எடிசனும் நாடு முழுவதும் அவற்றைச் சந்தைப்படுத்தும் மற்றும் விற்கும் உரிமையை பார்ன்ஸூக்குக் கொடுத்தார். ஒவ்வொரு இயந்திரத்தையும் விற்பவர்களின் இடத்தில் நிறுவுகின்ற போது அந்த இயந்திரத்தில், “ தயாரித்தவர் எடிசன்; நிறுவியவர் பார்ன்ஸ்” என்ற வரிகளையும் பிரபலமாக்கினார்.

இப்படியாக முப்பதாண்டுகளுக்கும் மேலாக, இந்தத் தொழில் முறை உறவு பலமாக பின்னிப் பிணைந்திருந்தது. தன்னை மிகப்பெரிய பணக்காரராக நிலைநிறுத்திக் கொண்டார் பார்ன்ஸ்.

எவ்வளவு பணம் சம்பாதித்திருப்பார் என உறுதியாக நம்மால் புரிந்து கொள்ளமுடியாவிட்டாலும், நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை அவர் சம்பாதித்திருக்கக் கூடும் என்பதை அறியமுடிகிறது. பயணத்திற்குக் கூட வழியில்லாத ஒரு நபர், தன் வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து வெற்றி வெளிச்சத்திற்கு வந்த கதை இன்று அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. உண்மையிலேயே பார்ன்ஸ் ஆசையை வென்றவர்தான்.

அடி தூரத்தில் தங்கச் சுரங்கத்தைக் கோட்டைவிட்டவன்!

பார்ன்ஸ் தனது ஏழ்மை நிலையிலிருந்து எப்படி முன்னுக்கு வந்தார் என்பதைப் பார்த்த நமக்கு, மிகவும் வேதனையைக் கொடுக்கும் உண்மைக் கதை இது.

தங்க மோகம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைப் பெருமளவில் ஆக்கிரமித்திருந்த காலம் அது. ஆர். யு. டார்பி என்பவருடைய மாமா ஒருவருக்கும் திடீரெனத்

தங்க மோகம் வந்து விட்டது. அதனால் தங்கத்தைத் தோண்டியெடுத்து எப்படியாவது பணக்காரனாகிவிடலாம் எனக் கிளம்பியேவிட்டார் நம்பிக்கையோடு. ஆனால், அவர் தேடுகின்ற தங்கம் எங்கிருக்கின்றது, என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே கிளம்பிவிட்டார். தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடித்து அதைத் தோண்டி எடுத்து, பணக்காரனாகிவிடவேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கம். ஆனால், பணக்காரனாவதற்குத் தேவையான தங்கச்சுரங்கம் பூமியில் இல்லை. மாறாக அது, அவரவர் மனங்களிலேயே இருக்கின்றது என்ற ஒரே ஒரு உண்மையை மட்டும் அவர் தெரிந்து கொள்ளத் தவறிவிட்டார்.

ஆயினும், மிகவும் கடினப்பட்டு ஒரு இடத்தைப் பார்த்து தோண்டினார்.

சில வாரங்கள் மிகவும் கடினப்பட்டுத் தோண்டியபின் அவர் எதிர்பார்த்த தங்கச் சுரங்கத்தின் ஒரு நரம்பு கண்ணில் பட்டது. அந்தப் படிவத்தைப் பின்பற்றி தோண்டிக் கொண்டேயிருந்தால் ஒட்டுமொத்த தங்கச்சுரங்கத்தையும் தோண்டி தங்கத்தை எடுத்துவிடலாம் என எண்ணினார். ஆனால், அவருக்குத் தேவையான விலை உயர்ந்த கருவிகள் ஏதுமின்றி, தோண்டுவது கடினம் என்பதை உணர்ந்தார். அதனால் தங்கச் சுரங்கத்தை யாரும் கண்டுபிடித்துவிடாதபடி அதை மீண்டும் மூடிவிட்டு, மேரிலேண்டிலுள்ள வில்லியம்ஸ்பர்க் என்ற தனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார்.

தங்கச் சுரங்கத்தின் ஒரு நரம்பைக் கண்டுபிடித்த செய்தியைத் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் சிலருக்குத் தெரிவித்தார். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சுரங்க வேலைக்குத் தேவையான கருவிகளை வாங்கப் பணத்தைச் சேகரித்து அனுப்பி வைத்தார்கள். டார்பியின் நாணயமான, நம்பிக்கையான நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை வைத்து, அவரது நண்பர்கள் இந்த முயற்சிக்காக டார்பிக்குத் தேவையான பணத்தைச் சேகரித்து அனுப்பி வைத்தனர். டார்பியும் அவரது மாமாவும் சேர்ந்து மீண்டும் சுரங்க வேலைக்குச் சென்றார்கள்.

வண்டி நிறைய தங்கம் கொட்டிக் கிடந்த மண்ணை அள்ளி உருக்காலைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்குக் கிடைத்த பணத்தை வைத்துப் பார்த்தால், கொலராடோவிலேயே மிகவும் விலை உயர்ந்த தங்கச் சுரங்கம் அவர்கள் வசம் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இன்னும் கொஞ்சம் வண்டிகள் தங்கம் நிறைந்த மண்ணை ஏற்றி, ஆலைக்கு அனுப்பிவிட்டாலே அவர்கள் செலவழித்த பணத்தைத் திரும்ப எடுத்துவிடலாம் என்ற நிலையில், நடக்கக்கூடாது ஒன்று நடந்தது. அவர்கள் கண்டுபிடித்த தங்கச் சுரங்கத்தின் நரம்பு திடீரென மறைந்து போனது. அவர்கள் எதிர்பார்த்த தங்கப்பாதைக்கு வழிதெரியாமல் போனது. நான்கு திசைகளிலும் தோண்டிப் பார்த்தும்; அது மீண்டும் சிக்கவேயில்லை. எல்லாம் வீணாய் போனது.

இறுதியாக, தோண்டும் வேலையைக் கைவிட்டனர். தங்களிடமிருந்த சுரங்கக் கருவிகளைக் கொஞ்சம் டாலர்களுக்குப் பழைய இரும்புக் கடைக்காரன் ஒருவனிடம் விற்றுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு இரயிலேறி புறப்பட்டுப் போய்விட்டனர்.

பழைய இரும்புக் கடைகாரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவனது மனதில் இனம்புரியாத ஆசை கிளம்பியது. நேராகச் சென்று, சுரங்கம் பற்றி நன்கு தெரிந்த இன்ஜினியர் ஒருவரை அழைத்து அந்தச் சுரங்கம் பற்றிய செய்தியைச் சொல்லி கருத்து தெரிவிக்குமாறு கேட்டான். அந்த இன்ஜினியரும் ‘தங்கச் சுரங்கங்களில் பொதுவாக வரும் தங்க நரம்பு மறைவு பற்றிய அறிவின்மையால்தான் அவர்கள் அதைத் தோண்டுவதை விட்டுவிட்டார்கள். திடீரென மறைந்த தங்கச் சுரங்கத்தின் நரம்புத் தொடர்ச்சி வெறும் மூன்றடி தூரத்தில்தான் இருக்க வேண்டும்’ எனக் கருத்து தெரிவித்தார்.

பழைய இரும்பு கடைகாரனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அந்த இன்ஜினியர் சொன்னது போலவே தங்கச் சுரங்கத்தின் தொடர் நரம்பு மூன்று அடி தூரத்திலேயே மீண்டும் தென்பட்டது.

பழைய இரும்பு கடைக்காரனுக்குத் தங்கமும் பணமும் கொட்ட ஆரம்பித்தது. ஆர்.யு. டார்பிக்கோ தான் செலவழித்த பணத்துக்கான கடனை அடைப்பதிலேயே காலம் நகர்ந்தது. காரணம், அந்த மாமாவுக்கு அப்போது இளைஞனாக இருந்த டார்பிதான் சுரங்கம் தோண்டுவதற்குத் தேவையான செலவினங்களுக்காக கடன் வாங்கியிருந்தான்.

இந்தச் சோக நிகழ்வு டார்பியைப் பெரிதும் பாதித்தது. ஆனால், பணம் ஈட்டுவது பற்றிய ஆசை மட்டும் அவனைவிட்டு விலகவேயில்லை. அந்த ஆசை அவன் கண் முன்னே நின்று கொண்டு அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது. அவனுடைய ஆசை வீண்போகவில்லை.

இந்த முறை தங்கச் சுரங்கம் இன்சூரன்ஸ் விற்பனையிலிருந்து வரப்போகின்றது என்பதை அந்நேரம் அவன் உணர்ந்திருக்கவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரிந்திருந்தான். தன் நெஞ்சுக்குள் பற்றி எரியும் பணம் மீதான ஆசை அவனை மீண்டும் வாழவைக்கும் என்பதைத் தெரிந்திருந்தான்; உணர்ந்திருந்தான். வாழ்க்கை என்பதேத் தேடல்தான். நல்லதையும், பயனுள்ளதையும், உயர்ந்ததையும் தொடர்ந்து தேடுவதுதான் உண்மையான வாழ்க்கை. முழுமையைப் பெற விரும்புபவர்கள் யாரும் தங்கள் தேடலை நிறுத்தியதேல்லை.

இம்முறை ஆசையே தங்கமாக மாறும் என்பதை அவனுக்கு உணர்த்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. வெற்றியாளர்கள் தேடுவதை விட்டுக் கொடுப்பதில்லை. விட்டுக் கொடுப்பவர்கள் வெற்றி பெறுவதில்லை என்பதை டார்பிக்கு நன்கு உரைக்கும் படி சம்மட்டியால் அடிப்பது போன்ற பாடத்தைக் கற்றுத் தந்தது அந்தச் சம்பவம்.

நடந்ததோ எளிய சம்பவம்தான். ஆனால் அந்த எளிமையான பாடங்களிலிருந்துதான் வாழ்வின் உன்னதமான வெற்றி இரகசியங்களை அறிய முடியும் என்பதை டார்பிக்கு உணர்த்தியது அந்தச் சம்பவம்.

மூன்றடிக்கு முன்னால் தன் வேலையை நிறுத்தியதால்தான் தங்கம் கிடைக்காமல் போனது. ‘இனி யார் இல்லை என்று சொன்னாலும் நான் நிறுத்தப் போவதில்லை’ என்ற நம்பிக்கையோடு இன்சூரன்ஸ் வேலைக்கு டார்பியைத் தள்ள வைத்தது அந்தச் சம்பவம் தான்.

தொடரும்…

No comments:

Followers