இஸ்லாமியர் கடமையாக கருதப்படும் ஹஜ்ஜை நிறைவேற்ற பாடப்பட்ட இஸ்லாமிய பாடகரின் பாட்டு தான் தலைப்பாக தந்துள்ளேன். ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த அரபு நாட்டிலோர் தியாகச் செம்மல் நபி இபுராஹம் (அலை) அவர்களின் ஏகத்துவ துணிவினை சோதித்த அல்லாஹ் கட்டளைக்கிணங்க அருமை மகனார் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்து பலியிட நினைத்த போது தடுத்து நிறுத்தி அன்னை ஹாஜிரா மனம் குளிர மகனுக்குப் பதிலாக கொழுத்த ஆட்டினை சம்பிராயத்திற்காக பலியிட்டு குர்பானி என்ற சடங்கினை செய்து முடித்து உற்றார் உறவினர், ஏழை எளியோர் பகிர்ந்து உண்டு மகிழும் தியாகப் பெருநாள் தான் ஹஜ் பெருநாளாகும். அண்ணை ஹாஜிரா தனது அருமை மகனார் இஸ்மாயில்(அலை) அவர்களின் தாகத்தினை தீர்க்க ஓடி அலைந்து களைத்திருந்த நேரத்தில் மகனின் காலுக்கடியில் உலக ஹாஜிகளின் தாகம் தீர்க்கும் ஒரு வெள்ள பிரளயம் தான் ஜம் ஜம் நீருற்று. அய்யாமே ஜாகிலியா என்ற இருண்ட காலத்தில் கஃபா என்ற இறை ஆலயத்தில் ஏக இறைக்கு மாறு செய்யும் முன்னூற்றறுபது சிலைகள் வைத்து ஜோவடித்து வணங்கிய போது அண்ட அகிலம் படைத்து அனைத்திற்கும் வாழ்வளிக்கும் இறைவன் அல்லாஹ் ஒருவனே என்று ஓங்கி சப்தம் எழுப்பும் ஏகத்துவத்திற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்ததே கஃபா.
மது, மாது என்று மயங்கிக் கிடந்து, ஞானம் இழந்து, அஞ்ஞானித்தின் ஆணிவேராக திகழ்ந்த காட்டரபியர்களை நல்வழிப்படுத்த, இருளைக் கிழித்து அருமை நபி முஹம்மதுஸல்) அவர்கள் உதித்தார்கள். அல் அமீன் என்ற நம்பிக்கைக்கு பாத்திரமான நல் நபியவர்கள் நாட்டில் நடக்கும் அனாட்சாரங்களை கண்டு மனம் வெதும்பி ஹிராக் குகையில் தனித்திருந்து தவமிருந்து, வானவர் கோமான் ஜிப்ரீல(;அலை) அவர்கள் பெருமானாருக்கு இறைவன் அருளிய ஞானக்கடலினை வாரி வழங்கி, இறை தூதராக அறிவித்து, இன்று 150 கோடி முஸ்லிம்கள் வாழ வித்திட்டு, சரித்திர புகழ் வாய்ந்த மகிமை மிக்க மக்கா மதினா நகர் நோக்கி லட்சோப லட்ச மக்கள் ஹஜ் என்ற புனித யாத்திரை அமைதிப் படையெடுக்க அடித்தளமிட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அல் குர்ஆனிலும், ஹதீஸ_களிலும் வருகிற மக்கா மதீனா நகரங்களின் சிறப்புகளை படித்த, மற்றும் பள்ளிகளில் இமாம்கள் வாயிலாக கேள்விப்பட்ட, புனித ஹஜ் செய்த புன்னியவான் ஹாஜிகள் கூறும் அதிசய ஹஜ் அனுபவங்களைக் கேட்ட முஸ்லிம் மக்கள,; ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லாது வாழ்வில் ஒரு நாளாவது அந்த உலக மக்கள் ஒன்று கூடி ஒற்றுமை கீதம் பாடும் உன்னத நகரங்களை பார்த்து விட்டு மடிய வேண்டும் என்று நிய்யத்து செய்கின்றனர். அவர்களின் வசதிக்காக அரேபிய அரசு தாராளமான 30 லட்சம் விசாக்களை வழங்கி யாத்திரிகையர்கள் அருளோட வழிபட சிறப்பான ஏற்பாடுகளை ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து தருவதினை கண்கூடாக பார்க்கின்றோம். ஒவ்வொரு இஸ்லாமிய நாடும் மற்றும் மத சார்பற்ற நாடுகளும் ஹஜ் பயனத்திற்காக பல்வேறு சலுகைகளையும் வழங்குகின்றன. இந்தியாவினை பொறுத்த மட்டில் இதற்காக மத்திய ஹஜ் கமிட்டியும், மாநில ஹஜ் கமிட்டிகளும் உள்ளன. அரசு வழி ஹஜ் கமிட்டிகள் ஹாஜிகளுக்கு தங்கும் இடங்களை தேர்வு செய்து மானியமும் வழங்குகிறது. அதே போன்று செல்வந்தர்கள், வயதான வசதி படைத்தவர்கள் அரசு நிர்ணயிக்கும் செலவினை விட இரு மடங்கு செலவு செய்து ஹஜ் செய்ய சிறப்பு ஏற்பாடுடன் கூடிய தனியார் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனங்களும் உள்ளன என்பதினை அனைவரும் அறிவர். இது போன்று சர்வீஸ்களை நடத்தும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அளவு அரசால் ஹாஜிகள் பயணச்சீட்டு ஒதுக்கப்படுகிறது என்பதினை அனைவரும் அறிந்ததே!
சமீப காலங்களில் ஹஜ் சர்வீஸில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களில்
ஏற்பட்ட சில குழப்பங்கள் கவலை தருவதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் 1999- 2000 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் சாகுல் ஹமீது என்பவர் ஹஜ் சர்வீஸ் நடத்தி பலரின் பணத்தினை பெற்றுக் கொண்டு ஹஜ்ஜூக்கு அனுப்ப முடியாமல் போனதும், அது சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டியில் ஒரு வழக்கு நிலுவையிலிருந்ததும,; அதன் பின்பு அவர் பெங்களூர் லாட்ஜில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ததும் மிகவும் அதிர்ச்சி தந்த செய்தியாகும். அந்தக் கடிதத்தில் தான் ஹஜ்ஜூக்காக வசூல் செய்த பணத்தினை மண்ணடியில் தொழில் செய்த ஒரு ஏமாற்றுப் பேர்வழியிடம் ஏமாந்து பறி கொடுத்ததாகவும் எழுதியிருந்தது பரபரப்பான செய்தியாக இருந்தது சிலருக்கு ஞாபகம் இருக்கும். காலப்போக்கில் ஆறின கஞ்சி பழைய கஞ்சி கதையாக பலருக்குத் தோனலாம். ஆனால் ஈமானுள்ள எவருக்கும் அந்த பரிதாபமான நிகழ்சி பசு மரத்தில் அடித்த ஆணிபோன்று என்றும் பசுமையாக இருக்கும் என்று ஐயமில்லை.
அது போன்ற தவறு இந்த வருடமும் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டு அதற்கான விளக்கங்களை அந்த ஹஜ்ஜூ பயண ஏற்பாடு செய்தவர்கள் பத்திரிக்கையாளர் மன்றத்தில் விளக்கம் அளித்ததும், அதனையடுத்து 23.11.2010 அன்று தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையினை வைத்து ஒரு சமூக அமைப்பு சென்னை மெமோரியல் ஹாலில் ஆர்ப்பாட்டம் செய்தது பொது சிந்தனையாளர்களை அதிர வைத்தது. இது போன்ற ஒரு வழக்கு கேரள உயர்நீதி மன்றத்தில் தனியாருக்கு ஹஜ் சர்வீஸ்களுக்கு இடம் ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டி ஒரு வழக்கினை விசாரிக்க அனுமதித்ததாகவும் ஒரு செய்தி 7.4.2010 அன்று அனைத்து பத்திரிக்கையிலும் வெளியானது.
இந்திய நாட்டிலிருந்து ஏறத்தாழ 1,20,000 இந்திய ஹாஜிகள் ஹஜ் பயணம் செய்ததாக செய்தி கூறுகிறது. ஒரு பத்திரிக்கையில் ஆற்காடு நவாப் வசதியுள்ளவர்கள் மட்டும் ஹஜ் செய்யவேண்டும் வசதியில்லாதவர்கள் அரசு மானியத்துடன் ஹஜ் செய்வது கூடாது என்று அறிக்கை விட்டார். அரசு பணம் அனைத்து மக்கள் வரிப்பணம். அரசுகள் மக்களுக்கு பல்வேறு மத வழிப்பாட்டிற்கு சலுகைகள் செய்து கொடுக்கின்றன. உதாரணமாக திபேத் பக்கத்தில் மலையடி வாரத்தில் உள்ள மன்ஸ்ரோவர் யாத்திரைக்கு பயணச்சலுகை வழங்கியுள்ளது. ஏன் காஷ்மீர் பக்கத்திலுள்ள பத்திரிநாத் கோயில் பயணத்திற்கு பல சலுகை செய்து கொடுக்கிறது. அப்படியிருக்கும் போது அரசு சலுகையினை வசதியில்லாத முஸ்லிம்கள் பெறக்கூடாது என்று வசதியுள்ள கோமான்கள் சொல்வது எந்தளவிற்கு நியாயமாகும்?
அரசு மானியம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட முஸ்லிம்களுக்குத் தான் ஹஜ் கமிட்டி மூலம் கொடுக்க முடியும். வசதியுள்ள முஸ்லிம்கள் அரசு மானியமில்லாது ஹஜ் பயணம் செய்ய தனியார் நிறுவனங்களையும் அனுமதித்திருக்கிறது. அது போன்ற தனியார் ஹஜ் சர்வீஸ்களை தடை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வது எலித் தொல்லையாக இருக்கிறது என்ற வீட்டையே கொளுத்திய கதை தான் என்றால் மிகையாகுமா? தனியார் ஹஜ் சர்வீஸில் எந்த தவறும் நடந்தால் அதனை களைய என்ன வழிகள் என்று ஆராய வேண்டுமே தவிர முஸ்லிம்கள் அதிகமாக ஹஜ் யாத்திரை செய்ய தடைக்கல்லாக எந்த சமூக அமைப்பும் இருக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் எழுதுகிறேன்.
ஒரு குற்றச் சாட்டு சில தனியார் ஹஜ் சர்வீஸ்கள் முறைகேடுகளுடன் நடக்கிறது என்பது, அடுத்தக் குற்றச் சாட்டு ஒரு சில தனியார் ஹஜ் சர்வீஸ்களுக்கு பாரபட்சம் கேரள உயர் நீதி மன்றத்தில் தாக்கப்பட்ட வழக்கு போன்றது ஆகும். அதுவும் ஒரு சில இமாம்கள் ஹஜ் சர்வீஸ்கள் நடத்துவதாக கூறி ஹாஜிகளை நட்டாற்றில் விட்டு விடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் போன்ற வளைகுடா நாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் கள்ளத்தோனியில் மும்பை மூலமாகவும், இலங்கை மூலமாகவும் செல்வர். அவர்களை அழைத்துச் சென்றவர்கள் வளைகுடா நாடுகளின் கழுத்தளவு தண்ணீரில் இறக்கி விட்டு மகனே உன் சமத்து என்று நடுகடலில் விட்டு விட்டு சென்று விடுவர். அவ்வாறு தான் சிலர் ஹஜ் சர்வீஸ் நடத்துகிறோம் என்று சொல்லி ஆசை வார்த்தை கூறி பணம் வசூல் செய்து விட்டு பின்பு போதிய விசா வரவில்லை என்று வாதிடுவது முறையில்லாத செயலாகும அதுவும் பள்ளிவாசலில் இமாம் சேவை செய்ய வேண்டியவர்கள் தங்களது தலையாய பணியினை விட்டு விட்டு ஹஜ் சர்வீஸில் ஈடுபடுகின்றனர். அந்த இமாம் வெள்ளிக்கிழமை தோறும் குத்பா பிரசங்கம் நடத்துவதினை ஒரு தமிழ் டி.வி டிக்கார்டிங் செய்து அதனை கேசட்டாக விற்கப்படுகிறது. அதனை வீடியோ எடுப்பவர் பள்ளிவாசல் நடுவில் தொழுகை நடத்துபவர்களுக்கிடையே ஸ்டூலில் ஏறி நின்று ரிக்கார்டிங் செய்கிறார். அவர் வேற்று மதத்தினவர் என்று அவரிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன். இளையாங்குடி. வெப்சைட்டில் ஹஜ் பெருநாள் தொழுகையினை பள்ளிவாசலுக்குள்ள செல்போனில் படம் பிடித்து வெளியிட்டவர்களுக்கு கண்டனக்கனைகள் எழுப்பப்பட்டன. ஏன் இளையாங்குடி பள்ளிவாசல் வளாகத்தில் நடக்கும் திருமண வைபவங்களை யாரும் வீடியோ எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு கூட இருக்கும்போது சென்னை மாநகர் மத்தியில் இருக்கும் பள்ளியின் நடுவே இருந்து முஸ்லிமல்லாதவர் வீடியோ ஸ்டூல் மீது ஏறி நின்று எடுப்பது எவ்வாறு நியாயம் என்று தெரியவில்லை. சென்னை சீப் ஹாஜி சலாவுதீன் அவர்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கு நிக்காஹ் துவா ஓத வரும்போது யாரும் வீடியோ எடுத்தால் அதனை அவர் அனுமதிப்பதில்லை. ஏன் புளியந்தோப்பில் உள்ள ஹஜ் கமிட்டியில் நடக்கும் அனைத்து திருமங்களுக்கும் இது போன்ற முறை கடை பிடிக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பள்ளி இமாம் மட்டும் அதனை அனுமதிக்கிறார் ஏன் என்பது ஆச்சரியமாகயிருக்கிறது. அந்த இமாமை பற்றி நிர்வாகத்தினருக்கு 275 பேர் கையெழுத்திட்ட புகார்கள் கொடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு 800 பேர் ஆதரவு இருந்ததால் தன் பதவியினை தக்க வைத்துள்ளார் என்று நிர்வாகமே நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு வெளியானது. நான் அந்த பள்ளிக்குச் செல்லும்போது என்னிடமும் கொடுக்கப்பட்டது. அதனை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
இமாம்களுக்கு அரசு ஓய்வூதியம் கூட இருக்கும் போது இது போன்ற வியாரத்தில் சர்ச்சைகளுக்கு இமாம்கள் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
1) அரசு ஹஜ் கமிட்டிகள் தனியார் ஹஜ் கமிட்டிகளை விட இன்னும் சிறப்பாக செயல் படுத்து முடியும். மத்திய-மாநில ஹஜ் கமிட்டிகளில் பிரயாணம் செய்பவர்கள் தங்களுக்கான உணவினை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தனியார் நடத்தும் ஹஜ் கமிட்டிகள் அதற்கான ஏற்பாடினை அவர்களே செய்கின்றனர். இப்போது மத்திய ஹஜ் கமிட்டிகள் ஒவ்வொரு ஹாஜிகளுக்கும் அவர்கள் மக்கா போய் சேர்ந்ததும் கொடுக்கும் 2200 ரியால் பணத்தில் 700 ரியால் பிடித்தம் செய்து அந்த ஹாஜிகளுக்கு அவர்கள் தங்கும் இடத்தில் பேக்கிடு(கட்டப்பட்ட) சாப்பாடு மூன்று வேலைகளுக்கும் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களில் வழங்கலாம். பர்மா, பங்களாதேஷ். கேரளா, தமிழ்நாட்டினைச் சார்ந்த மெஸ் நடத்துபவர்கள் அங்கு ஏராளமாக இருக்கும்போது இது போன்ற வசதிகளைச் செய்யலாம். அல்லது ஹாஜிகளுடன் அலைத்துச் செல்லும் வழிகாட்டிகளுக்கு பதிலாக சமையல்காரர்கள் பாதிப்பேரை அழைத்துச் சென்று அவர்கள் உணவிற்கு ஏற்பாடு செய்யலாம்.
2) மினாலில் தங்கியிருக்கும் 5 நாட்களில் வெறும் பிஸ்கட், ரொட்டி, டீ தான் வழங்கப்படுகிறது. ஆகவே ஹஜ் கமிட்டியினர் ‘கப்ஸா’ என்ற மினி லஞ்ச் மக்கா உணவினை அவர்கள் வயிறார உண்ண வழங்கலாம்.
3) ஹஜ் நாட்கள் முடிந்ததும் ஹாஜிகள் தங்கள் இடங்களுக்குப் புறப்படும் விமானம் கிடைக்க காத்துக் கிடக்கும் நாட்களில் அவர்களை ஜெத்தா போன்ற நகரங்களுக்கு வண்டிகள் மூலம் கையிடுகள் துணையுடன் அழைத்துச் சென்று மக்கா திரும்பலாம். அல்லது ‘முகல்லிம’ அனுமதி பெற்று ஜெத்தா சென்றுவர அனுமதிச் சீட்டு மிசன் உதவியாளர்கள் மூலம் வழங்கலாம்.
4) ஹாஜிகள் திரும்பும் போது அவர்களுடன் அவர்கள் பயணம் செய்யும் விமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு ஜம், ஜம் தண்ணீர் எடுத்து வர அனுமதிக்கலாம். அதனை விட்டு விட்டு ஜம், ஜம் தண்ணீர் வேறு விமானத்தில் சில நாட்கள் கழித்து அனுப்புவதால் ஹாஜிகளை பார்க்கச் செல்பவர்களுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் போய் விடுகிறது.
5) வயதானவர்கள், மாற்றுத்திரனாளிகள் வசதியாக ஹஜ் செய்ய தள்ளு வண்டிகளை அவர்கள் பயன்பாட்டிற்காக மத்திய ஹஜ் கமிட்டிகள் ஏற்பாடு செய்யலாம். இதனை ஒவ்வொரு மாநில அரசின், மத்திய அரசின் சமூக நலத்துறையே மாற்றுத்திரனாளிகளுக்கான மானியத்தொகை மூலம் அந்த வண்டிகளை வாங்க ஏற்பாடு செய்யலாம்.
6) மத்திய ஹஜ் கமிட்டிகள் தனியாருக்கு ஹஜ் சர்வீஸ் நடத்த அனுமதி வழங்கும் போது அந்த தனியார் கம்பொனிகளுடன் ‘கான்ட்ராக்ட் ரூல்ஸ் மற்றும் ரெகுலேஷன’; படி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தனியார் ஹஜ் சர்வீஸ_ம் ஒரு குறிப்பிட்ட தொகையினை பிணைத் தொகையாக செலுத்த உத்திரவிடலாம். ஏந்த தனியார் ஹஜ் சர்வீஸ் முறைகேடுகளில் ஈடுபடுகிறதோ அவர்கள் டெப்பாஸிட்டை பறிமுதல் செய்து அவர்கள் இனிமேல் ஹஜ் சர்வீஸ் நடத்த அனுமதி வழங்காமல் பார்த்துக் கொள்ளலாம். எப்படி டெல்லி மெட்ரோ ரயில் புராஜக்ட்டில் கட்டப்பட்ட தூண் இடிந்து விழுந்து அதனை கட்டிய கேமன் கட்டிட கம்பனி பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டதோ அதே போன்ற நடவடிக்கை எடுக்கலாம்.
7) தனியார் ஹஜ் சர்வீஸில் ஹாஜிகளுக்கு வாக்குறுதி கொடுத்த சர்வீஸை சரியாக செய்யவில்லையென்றால் அவர்களை கன்சூமர் நீதிமன்றம் மூலம் நஷ்டம் வழங்க இலவச சட்ட உதவி மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.
8) ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கீகரிக்கப் பட்ட ஹஜ் சர்வீஸ்களையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் இணைய தளத்திலும், பிரபலமான மாநில பத்திரிக்கையிலும் ஹஜ் கமிட்டி வெளியிட வேண்டும். எந்த தனியாரும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மேலாக பணம் வசூல் செய்யாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
9) எப்படி மாநில வக்ப் வாரியத்தில் உள்ள உறுப்பினர்கள் முஸ்லிம் அமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ அதே போன்று மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் அதன் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். இல்லையென்றால் வசதி படைத்த, அரசியல் செல்வாக்குள்ள சிலரே அந்த பதவிகளில் நியமனம் செய்யப்படுகின்றனர். தேர்நதெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தான் முஸ்லிம்கள் தஙகள் கருத்துக்களை எடுத்துச் சொல்லி ஹஜ் கமிட்டிகள் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
சப்தம் நிறைந்த உலகில் 30 லட்சம் ஹாஜிகள் மக்கா நகரின் இறையில்லத்தில் அழைக்கப்படும் ‘அஸ்கது அன்லாயிலாக இல்லலாஹ்-
அஸ்ஹது அன்ன முஹம்மதுர்ர ஸ_லல்லாஹ்’; என்ற பாங்குச் சப்தத்தினைக் கேட்டதும் ஒன்று கூடி அல்லாஹ_ அக்பர் என்று தக்பீர் கட்டி ஒரு குண்டூசி விழுந்தால் கூட சப்தம் கேட்கிறதோ அதே போன்று எந்தக் குறையும் இல்லாத ஹஜ்ஜினை இனி வரும் காலங்களில் நிறைவேற்றலாம் வாருங்களேன் முஸ்லிம்களே எனக் கூறி நிறைவு செய்கிறேன்.
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி.ஐ.பீ.எஸ்(ஓ)
1 comment:
ஹஜ் பயணிகளுக்கு அரசு எவ்வாறு வசதிகள்
செய்து கொடுக்கலாம் என்றும்
தனியார் ஹஜ் சர்வீஸ்களை அரசு எவ்வாறு
கட்டுப்படுத்திக் கண்காணிக்கலாம் என்றும்
பல நல்ல ஆலோசனைகள் தந்தீர்கள்.
அருமை!
Post a Comment