KILIYANUR ONLINE

Wednesday 22 December 2010

மனம் மகிழுங்கள் - 3

உற்சாகத் தொடர் - 21

பனிப்பாறை (iceberg) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டைட்டானிக் எனும் பெரியதொரு கப்பல் அதில் இடித்துக் கவிழ்ந்து போனதே? துருவ மண்டலங்களுக்கு நெருக்கமாயுள்ள கடல்களில் மிதக்கும். ராட்சத மலை போன்ற இவை கடல் நீர் மட்டத்துக்கு மேல் சிறு பாறைபோல் மட்டுமே தென்படும். அப்படித் தென்படுவது ஒன்பதில் ஒரு பங்கு. மீதமுள்ள எட்டுப் பங்கு? அது நீருக்குக் கீழே சமர்த்துப் பிள்ளையாய் மிதந்து கொண்டிருக்கும்.


சரி, அதற்கு என்ன இப்போ?

உணர்வு உள்ள நம் அனைவருக்கும் உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. கண்ணால் யாரும் பார்த்ததில்லை எனினும் "ஆமாம், இருக்கிறது!" என்று பொத்தாம் பொதுவாய் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு எல்லோருக்கும் ஓர் அபிப்ராயம் உண்டு. மறுப்பாளர்கள் பண்டிகை நாளன்று தொலைக்காட்சியில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு "உள்ளுணர்வு உண்மையா பொய்யா?" என்பதைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த உள்ளுணர்வு என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, என்பதை விவரிக்கச் சொன்னால்... அது சிரமம். அதற்காகச் சாமான்யர்கள் நாம் வருத்தப்பட ஏதுமில்லை. உள்ளுணர்வு பற்றியும் அது நம்மை இயக்குவது பற்றியும் மனோவியலாளர்கள் மூளையைச் சொறிந்துக் கொண்டு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து சுருக்கமாய்க் காப்பி அடித்துக் கொண்டால் நமக்குப் போதும்.

"மனதின் ஆழ்மனம் சக்தி வாய்ந்தது. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அடைய வழிவகை செய்து விடுகிறது. அந்த ஆழ்மனதின் ஆதிக்கமும் பயனும் நம்மை முழுவதும் ஆலிங்கனம் செய்யக் கூடியது." இதுதான் சாராம்சம்!

உள்ளுணர்வெனும் அந்த ஆழ்மனச் சக்தியைத்தான் மேலே சொன்ன பனிப்பாறையை உவமையாகக் கூறி விவரிக்கிறார்கள். நாம் உணர்ந்த, அறிந்த நம் வெளியுணர்வு வெளியே தெரியும் பனிப்பாறை அளவே (tip of the iceberg). வலிமையான மீதம் நம்முள்ளே புதைந்திருக்கும் நம் உள்ளுணர்வு! பிரமிப்பாயில்லை?

வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் பனிப்பாறைக்கு எங்கு செல்வது; எப்படிப் புரிந்து கொள்வது? எனவே நாம் வேறு சில உதாரணங்களை ஊருக்குள் தேடுவோம்.

சைக்கிள் ஓட்டப் பழகுவதற்குப் பெரும் பிரயத்தனம் தேவைப்படும்; கவனித்திருப்பீர்கள். சைக்கிளின் கைப்பிடியை ஆட்டாமல் பிடிக்க வேண்டும் என்பார்கள்; முதுகைச் சாய்க்கக் கூடாது என்பார்கள்; பேலன்ஸ் தவறாமல் பெடலை மிதிக்க வேண்டும் என்பார்கள்... விழுந்து சில்லறை எண்ணாமல் சைக்கிள் ஓட்டக் கற்றவர்கள் மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும். அப்படிப் பலவற்றையும் மனமானது உள்வாங்கி, உடலானது செயல்படுத்தி, சைக்கிளானது நம்மைச் சுமந்து கொண்டு ஓடத் துவங்கியபின், கற்பதற்குச் சிந்தனை செலுத்திய அத்தனையும் பொருட்டின்றி மறைந்துபோய், சைக்கிள் ஓட்டனுமா நீங்கள் ஏறி உட்கார்ந்தால் போதும்; செயல்படுத்துவது உங்கள் உள்மனமே. உங்கள் வெளியுணர்வு பழகி உணர்ந்த அனைத்தும் உள்மனதில் ஆழப்பதிந்து, நீங்கள் சைக்கிளில் எவ்விதச் சிரமமுன்றிச் சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரையும் அதைத் தின்று கொண்டிருக்கும் மாட்டையும் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டியதுதான்.

பிரக்ஞையுடன் கூடிய நமது சிந்தனைகள், நமது உடலின் செயல்பாடுகள், மனோபாவம், செயல் திறன் ஆகியன எல்லாம் உள்ளுணர்வுக்குள் பலமாய் பதிக்கப்பட்டுவிடுகின்றன. இவை நம்முடைய உள்ளுணர்வை வடிவமைக்கின்றன. அது தன்னிச்சையாய் நம்மை இயக்குகிறது.

அதாவது?

படுவேகமாய்த் தட்டச்சு செய்யும் திறன் கொண்ட ஒருவரிடம் எந்த எழுத்து எங்கிருக்கிறது என்று கேட்டால் அவரால் உடனே சொல்ல முடியாது. கீ போர்டை நைஸாய் அவர் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கும். அல்லது மேசையில் தன் விரல்களால் தட்டச்சுவது போல் பாவனை செய்தே சொல்ல வேண்டியிருக்கும். வியப்பாயில்லை? இது உள்ளுணர்வின் மகிமை என்கிறார்கள்.

க்ளாட் பிரிஸ்டல் (Claude Bristol) தன்னுடைய The Magic of Believing என்ற புத்தகத்தில், "உள்ளுணர்வு நம் வலிமைக்கு மூலம்" என்கிறார்.

நாம் நடப்பது, பேசுவது, சட்டென சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நம்மை நோக்கி ஓடிவரும் எருமை மாட்டினிடமிருந்து சரேலென விலகுவது என இப்படிப் பலவற்றிற்கும் நம் மனதின் உள்ளே ஆழ்மனதில் கச்சிதமான ப்ரோக்ராம் ஒன்று அமர்ந்து கொண்டு நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.

தினசரி நமக்கு எழும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியன சிறிது சிறிதாக உள்மனதில் பதிவாகிப் பதிவாகி, நம்மைத் தன்னிச்சையாய் வலிமையுடன் இயக்கிக் கொண்டே இருக்கின்றன. எந்த அளவிற்கு? நம்முடைய வெற்றி தோல்விகளின் காரணிகளை நிர்ணயிக்கும் அளவிற்கு!

உங்களது உள்ளுணர்வு உண்மையென்று நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, உங்களது உள் மனம் தயாராகியுள்ளதற்கு ஏற்பவே நீங்கள் வாழ்க்கையின் இலக்கினை அடைவீர்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

அதனால்தான் "வெற்றி" என்பதைக் குறிக்கோளாய்க் கொண்டவருக்கு வெற்றியை எட்டுவதே உள்மனதின் எதிர்பார்ப்பாக மாறிப்போய், அது ஆழப் பதிந்துவிடுகிறது. அதற்கேற்ப அந்த வெற்றியின் இலக்கிற்கு அவரது ஆழ்மனம் அவரைச் செலுத்துகிறது. அதற்கு எதிர்மறையான எண்ணம் கொண்டவருக்கு மனதின் எதிர்பார்ப்பும் மாறிப்போகிறது.

ஆழ்மனம் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் அசாதரணமான ஆற்றல் கொண்டது. ஏதோ ஒரு பிரச்சனை; என்ன செய்வதென்று தெரியாமல் தூக்கமும் வராமல் புரண்டுக் கொண்டிருப்பீர்கள். ஒருநிலையில் அலுத்துப்போய், "சரி நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று தூங்கியும்போய் மறுநாள் எழும்போது திடீரென்று ஒரு வழி தோன்றியிருக்கும்.

இதையே, "ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலோ, ஏதோ ஒன்றைத் தேர்வு செய்வதிலோ குழப்பம் இருந்தால் அதை ஒத்திப்போடுங்கள்; இன்னம் உசிதம் இரவு தூங்கிவிட்டுக் காலையில் எழுந்து பாருங்கள்; சட்டெனத் தெளிவான ஒரு முடிவை நீங்கள் அடைய முடியும்," என்று நெதர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் சமீபத்தில் நிகழ்த்திய ஆராய்ச்சியின் மூலம் மேலும் உறுதிப்படுத்துகிறார்கள்.

இது எவ்விதம் நிகழ்கிறது? இதுதான் என்று அடித்துச் சொல்ல முடியாது. மூளை என்பது மிகவும் சிக்கலான, மனிதனால் முழுதும் பிரித்துப் போட்டு ஆராய முடியாத ஒரு சதை. அது இன்னும் மனிதனுக்குப் புதிரே! எனவே வெளியுணர்வற்ற ஆழ்மன சிந்தனா நிலையினால் நிகழ்கிறது என்று மட்டும் அறிந்து கொள்ளலாம்.

மனதில் உள்ளது தானே வார்த்தையில் வரும்! மிகவும் புழக்கத்தில் உள்ள வாசகம். இங்கு அந்த மனம் ஆழ்மனம்!

நமது எண்ணங்களே நமது ஆழ்மன உணர்வை நிர்ணயிக்கின்றன. ஆழ்மனமே நம்மை நடாத்துகிறது. எனவே நமது எண்ணம் தூய்மையாய் இருப்பது,

மனதிற்கு நல்லது!

உடம்பிற்கு நல்லது!

சூழ்ந்திருக்கும் சுற்றத்துக்கும் நட்புக்கும் நல்லது.


உற்சாகத் தொடர் - 22

22 - கற்பனை செய் மனமே!

நாம் பிறந்து அழ ஆரம்பித்து, அதற்கடுத்தச் செயலாய் தாயின் முலைக்காம்பில் பால் குடித்த நொடியிலிருந்து ஆறு ஆண்டுகளில் நமக்குத் தேவையான எழுபது சதவீத விஷயங்களைக் கற்றுக் கொண்டு விடுகிறோம் என்று ஆய்ந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். மீதம் உள்ள முப்பது சதவீதத்தைத்தான் சொச்ச வாழ்நாளுக்கும் மாய்ந்து மாய்ந்து கற்றுக் கொள்கிறோமாம்!

‘இதென்ன கணக்கு? அப்படியானால் மன்மோகன் சிங் தமது ஆறாவது வயதிலேயே எழுபது சத பிரதமரா?’ என்று என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். சதவீதம், இடஒதுக்கீடு போன்ற அரசியலுக்குள் எல்லாம் நுழையாமல் இந்த ஆய்வு சொல்லும் செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு நாம் ஓடிவிடுவோம்.


“குழந்தைப்பருவத்தில் இருக்கும் அந்த ஆரம்பக் காலங்களில் ஒருவிஷயத்தை உட்கிரகிக்கும் நம் மனோசக்தி அத்தனை வலுவானது; அந்தப் பருவத்தில் நமது கற்பனைத் திறன் அந்தளவு செழிப்பானது!“ என்பதே அந்த ஆய்வின் அடிநாதச் செய்தி.


குழந்தைகளிடம் உள்ளதெல்லாம் மாசுமருவற்ற கற்பனைத் திறன். அல்பம், அபத்தம், மேதாவித்தனம் என்ற பாகுபாடெல்லாம் வகுத்துக் கொள்ளாமல் தம்மிஷ்டத்திற்கு அவர்களால் கற்பனை செய்ய முடியும்.

அவர்களுக்கு முன் தீர்மானங்கள் இருப்பதில்லை; கயமைத்தனம், களவாணித்தனம், குதர்க்கம், சூதுவாது இன்னபிற கெட்ட வார்த்தைகள் எதுவும் தெரிந்திருப்பதில்லை. கற்றுக் கொள்கிறார்கள்! காண்பது, கேட்பது என்று எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். நல்லது, கெட்டது என்று இனம்பிரிக்காமல் கற்று உள்வாங்கிக் கொள்கிறார்கள்!

இதையெல்லாம் நாம் குழந்தைகளிடம் காணும்போது நமது மனதிற்குப் பிடித்தால் , “ஜுஜ்ஜும்மா... புஜ்ஜுக்குட்டி” என்று உச்சி முகர்ந்து கொஞ்சுகிறோம்; பிடிக்காவிட்டால் முதுகில் சாத்துகிறோம்.

ஆக, குழந்தைகளிடம் மண்டியிட்டு ஆய்ந்த ஆய்வாளர்கள் கண்டு கொண்டது, “கற்பனைத் திறன் கற்பதற்கு முக்கியம்!”

சிறந்த கற்பனைத் திறன் விரைவாகவும் எளிதாகவும் எதுவொன்றையும் கற்பதற்கு உதவி புரிகிறது. கற்பனையை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்; ஆக்கபூர்வக் கற்பனைக்கே இடமளிக்க வேண்டும். அத்தகைய ஆக்கபூர்வக் கற்பனையைத் தூண்டித் தூண்டி வளர்க்க வேண்டும். அப்படிச்செய்தால்?

நல்லது! அறிவிற்கும் மனதிற்கும் மகிழ்விற்கும் நல்லது!

சில குழந்தைகளுக்கு அசாத்தியக் கற்பனைத் திறன் இருக்கும். நானறிந்த ஒரு பெண் குழந்தை -- ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். படு சரளமாய்க் கற்பனை மொழியொன்றில் பேசுவாள். “தத்தக்கா.. பித்தக்கா.., தட்டுத் தடுமாறி“ என்பதைப் போலெல்லாம் இல்லாமல், கேட்பவர்களுக்கு அவள் உண்மையிலேயே ஏதோ ஓர் அன்னிய மொழியில் பேசுவதைப் போலிருக்கும். அவ்வளவு துல்லியமான கற்பனை. கேட்டு அசந்திருக்கிறேன்.

குழந்தைகளின் இத்தகு கற்பனையைக் காணும் சில பெற்றோர்கள் என்னவோ ஏதோவென்று வருந்துவார்கள். வேறு சில பெற்றோர்கள் அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, குழந்தையை அதற்கேற்ப ஊக்குவித்து வளர்க்க....... வளர்ந்ததும் சாதனையாளன் அல்லது சாதனையாளி.

கற்பனைத் திறன் கற்பதற்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் உதவும் ஓர் அசாதரண உபகரணம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலம், வெளி (time, space) ஆகியனவற்றைப் பற்றிய தமது அறிவியல் தீர்மானத்திற்குத் தம்மை விண்ணைத் தாண்டிக் கற்பனை செய்து கொண்டார். கோளங்களுக்கு இடையே கற்பனையிலேயே பயணம் செய்தார். தம்மைக் குழந்தைபோல் பாவித்து அவர் செய்து கொண்ட கற்பனைகள்தாம் அவர் சிறந்த அறிவியலாளராக உருவாக உதவின.

தவிர, வளமான கற்பனை சிறப்பான நினைவாற்றலுக்கும் முக்கியம் ஆகும்.

வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறைந்திருப்பது, அவர்கள் தங்களுடைய கற்பனைத் திறனைத் தேயவிடுவதால் என்கிறார்கள் உளவில் வல்லுநர்கள்.. “காப்பி சாப்பிட்டாச்சா?” என்றால் கண்ணெதிரே ஈரம் உலராமல் கப் இருக்க அவர்கள் பதிலுக்கு யோசிக்கக்கூடும்.

நம்முடைய நினைவு வங்கிகளில் தகவல்களைச் சேமித்து வைக்க, நாம் படங்களாகவே கற்பனை செய்து பதிகிறோம். “காண்டாமிருகம்” என்று நினைத்துப் பாருங்கள், கச்சாமுச்சாவென்ற சருமத்துடன் அசந்தர்ப்பமாய் மூக்கிற்கு மேலே கொம்புடன் ஒரு மிருகம்தான் மனதில் ஓடுமே தவிர “கா..ண்..டா..மி..ரு..க..ம்” என்ற எழுத்துகள் அல்ல. எவ்வளவு சிறப்பாகப் படத்தை நாம் மனக்கண்ணில் உருவாக்குகிறோம் என்பதைப் பொறுத்தே அத்தகவலை நினைவிலிருந்து மீட்பது எளிதாகிறது. கற்பனைவளம் குறைவாய் இருப்பவர்கள் மனதில் செய்திகள், தகவல்கள் பச்சக்கென்று படம் போல் ஒட்டிக் கொள்வதில்லை.

இவ்விடத்தில் நினைவில் நிறுத்த வேண்டிய முக்கியமான விஷயமொன்றுண்டு.. கற்பனை என்பது ஆரோக்கியமானதாய் இருக்க வேண்டும். இல்லையெனில் கெட்டுக் குட்டிச்சுவராகப் போக வேண்டியதுதான்.

குற்றத்திற்கும் கொடுங்கோலுக்கும் கற்பனையைப் பிரயோகித்தால், கற்பது களவு, இழப்பது மகிழ்வு! நாள்தோறும் நடைபெறும் குற்றங்களைப் பாருங்கள் – கொள்ளையாகட்டும், கொலையாகட்டும், களவொழுகுவதாகட்டும் - ஒவ்வொரு கிரிமினலும் விதவிதமாய்க் கற்பனை செய்துதானே குற்றமிழைக்கிறான்?

நல்ல வளமான கற்பனையே நமது உடலையும் மனதையும் மகிழ்வாய் வைத்துக்கொள்ள உபயோகப்படும்!

மெரீனா பீச்சில், கடலலை எதிரே அமர்ந்து, கால் நீட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே சுண்டலும் மிளகுவடையும் தின்பதை உங்களால் உள்ளார்ந்து கற்பனை செய்ய இயலுமென்றால் உங்களால் உங்கள் மனதைத் தளர்ச்சியின்றி, பதட்டமின்றி வைத்துக் கொள்வது எளிது. அத்தகைய கற்பனையெல்லாம் ஒருவருக்குக் கடினமாய் இருப்பின் அவர் தம்மைத் தாமே ரிலாக்ஸ் செய்து கொள்வது கடினமாம்.

ஆகவே உடற்பயிற்சி போல் கற்பனைக்கும் பயிற்சியளிக்கச் சொல்கிறார்கள். கற்பனை எந்தளவு வளர்கிறதோ அந்தளவு பிரச்சனைகளைத் தீர்க்கும் சாமர்த்தியமும் நினைவாற்றலும் பெருகும்.

கற்பனையுடன் இணைந்த மற்றொரு சமாச்சாரம் இருக்கிறது – இட்லியும் சட்னியும் போல! கனவு!

கனவென்றால் பகல் கனவு, தூக்கத்தில் கானும் கனவு, வெட்டிக் கனவு அல்ல. ஆரோக்கியக் கனவு! வேறுவிதமாய்ச் சொல்வதென்றால் இலட்சியக் கனவு! கனவும் கற்பனையும் பின்னிப் பினைந்தவை.

பிராணிகள் குலத்தில் எப்படியோ தெரியாது; ஆனால் மனிதகுல வரலாற்றில் இதற்கு நிறைய முன்மாதிரிகள் உள்ளன. லியானார்டோ டாவின்ச்சி தெரியுமா? அவருக்குத் தமது பன்னிரெண்டு வயதில் கனவொன்று இருந்தது. என்னவென்று? “நான் ஒருநாள் உலகின் தலைசிறந்த ஓவியனாக உருவாவேன். அரசர்கள், இளவரசர்கள் ஆகியவர்களுக்கு இணையாய் வாழ்வேன்.” விளைவு? உலகம் வியக்க மோனோலிசா புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்.

சிறுவன் நெப்போலியனுக்குக் கனவு இருந்தது. ஐரோப்பாவை மனக் கண்ணாலேயே கைப்பற்றுவான். தனது படையை எப்படி நிர்வகிப்பது, வழிநடத்துவது என்று அவன் மனதில் கனவு ஓடிக்கொண்டேயிருக்கும். அக்கனவுகள் இன்றைய பள்ளிக்கூடப் புத்தகத்திலெல்லாம் பாடமாகிவிட்டது.

அன்றைய ரைட் சகோதரர்களின் கனவு இன்று உலோகம் இறக்கைக் கட்டிப் பறக்கிறது.

ஐன்ஸ்டீன் சொன்னாராம், ”கற்பனை என்பது அறிவைவிட முக்கியமானது.”

இதைப் பெரிய திரை, சின்னத் திரை படைப்பாளிகளெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டதுதான் பிரச்சனையாகிவிட்டது. அவர்களது ஆக்கங்களில் இருப்பது கற்பனை மட்டுமே!


உற்சாகத் தொடர் - 24

யானையின் பலம் எதிலே?
தும்பிக்கையிலே!
மனிதனோட பலம் எதிலே?
நம்பிக்கையிலே!

- என்று தமிழ்க் கவிஞரொருவர் எழுதியிருந்தார்.

நம்பிக்கை!

அது நம் ஒவ்வொருவருக்கும் உண்டு; எக்கச்சக்கமாய் உண்டு. மறுப்பவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது அதற்குள்ளோ தங்களது விரல் நகங்களில் தீட்டப்படும் கறுப்பு மையை உற்றுப் பார்த்துக் கொள்ளலாம். என்றாவது, எப்படியாவது, யாராவது ஓர் ஆட்சியாளர் நீதி, நேர்மையுடன் நம்மை ஆளத்தான் போகிறார் என்று நம்பவில்லை?


தவிர, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் அமைந்திருந்தாலும் “இந்த முறை கணவன் தன்னை எப்படியும் முதல்முறையாக ப்ஃளைட்டில் ஏற்றி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறான்,” என்று ஒரு நடுத்தரவர்க்க மனைவிக்கு நம்பிக்கை. “வரதட்சணையா? அதென்ன கற்கால வழக்கம்? பெண்ணை மட்டும் தாருங்கள்” என்று ஒரு ராஜகுமாரன் குதிரையிலோ, குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவிலோ வந்து நிற்கப் போகிறான், என்று பெண்ணைப் பெற்றவருக்கு நம்பிக்கை.

எதிர்மறையாய் வேறொரு வித நம்பிக்கையும் உண்டு.

மூட நம்பிக்கை!

தேர்விற்காக விடியவிடியப் படித்து, மாய்ந்து மாய்ந்து தயாராகி, தேர்வுத் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முழுகி, கடைசியில் கப்போர்டிலுள்ள பச்சைக் கலர் பேனாவைக் கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு “தேர்வை இந்தப் பேனாவில் எழுதினால் நிச்சயம் நான் பாஸ்,” என்று சின்னப்ப தாஸுக்கு ஒரு நம்பிக்கை.

தேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், “அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்,” என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.

பூனை குறுக்கே ஓடினால், “ஆஹா! சகுனம் சரியில்லையே!”

கிளம்பும்போது “எங்கே போகிறீர்கள்?” என்று யாராவது கேட்டுவிட்டால், “போகும் காரியம் உருப்பட்டாற் போலத்தான்.”

காக்கை கத்தினால், "விருந்தாளிகள் வரப்போகிறார்கள் பார்" என்று நினைக்க, விருந்தாளிகள் வந்து சேருவார்கள். அடுத்த முறை ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும்முன் மெயில், போன், எஸ்.எம்.எஸ்., என்று எதுவும் முயலாமல் நேரடியாய்ச் சென்று இறங்கி, திகைத்து நிற்பவரிடம் “என்ன காக்கை கத்தவில்லையா?” என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ, இப்படியான மூடநம்பிக்கைப் பட்டியல் நூறு பக்க நோட்டு அளவிற்கு நீளம்!

மனவியலாளர்கள் இதை மாற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உங்கள் மனம் எதை நினைக்கிறதோ – நல்லதோ கெட்டதோ - அதை அடைந்துவிடும் தன்மை கொண்டது!

“எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் தலைவலி வரும்” என்று நினைத்தால் அது உங்களைத் தவறாமல் வந்தடையும். “கூடுதலாய்க் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எனக்குத் தங்காது,” என்று நினைப்பவர்களுக்குப் பணம் ஏதும் உபரியாய்க் கிடைத்தாலே அது உடனே செலவாகிப் பர்ஸ் காலியாவது நிச்சயம் என்று தலையில் அடித்து “காட் ப்ராமிஸ்பா,” என்கிறார்கள்.

அமெரிக்காவில் கார்ல் சிமன்டண் (Dr. O. Carl Simonton) என்றொரு டாக்டர் இருந்தார். புற்றுநோய் மருத்துவர். தம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். ஒரே அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் இரு விதமான விளைவுகள் தென்பட்டன. “ஏன்?” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா! மனதிற்கும் உடல்நலனிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது,” என்றவர், புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்குக் கூட மருத்துவத்துடன் சேர்த்து மனப் பயிற்சி அளிக்கும்போது அவர்களது மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அவர்களது சொச்ச வாழ்நாளுக்கு உற்சாகத்தையும் மனக்கட்டுப்பாட்டுத் தரத்தையும் உயர்த்த முடியும் என்று ஆராய்ந்து நிரூபித்தார்.

தமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், “நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்.” அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.

வாழ்க்கையில் உங்களது மனம் எதை நம்புகிறதோ அதுவே உங்களுக்கு நிகழும். “என்னை யாரும் கண்டு கொள்வதில்லை; என்னிடம் சரியாகப் பழகுவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்,” என்பது உங்கள் மன நம்பிக்கையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது; என்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்,” என்று நம்புகிறவருக்கு அவர் வாழ்க்கையில் அவ்விதமே நிகழ்கிறது.

உங்கள் மனம் உங்களது கட்டுப்பாட்டில்! எதைச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தாம் முடிவடுக்கிறீர்கள். உங்கள் மனதிற்குள் எதைத் திணிப்பது என்பதையும் நீங்கள்தாம் முடிவெடுத்து நிகழ்த்துகிறீர்கள்.

நல்லதை நம்பி மனதிற்குள் நல்ல எண்ணங்களையே திணித்தால் வாழ்க்கையில் அகமும் முகமும் மகிழ்வுடன் திகழும்.


உற்சாகத் தொடர் - 25

அச்சந் தவிர்

- நூருத்தீன்

ம் மனமானது எதை நினைக்கிறதோ அதை நோக்கி நகரக்கூடிய தன்மையுடையது. இதைப் பற்றி முந்தைய அத்தியாயம் ஒன்றில் படித்தோம். அதைச் சற்று விரிவாக இங்கு பார்ப்போம்.

“வறுமையில் உழல்வதே என் தலையெழுத்து.”

“என் உடம்பிற்கு ஏதாவது ஒரு நோய்; பாடாய்ப் படுத்திக் கொண்டேயிருக்கும். முழுசாய் ஒருவாரம் நான் ஆரோக்கியமாய் இருந்ததில்லை; மருந்துக் கடைக்கு மொய் எழுதாத நாள் இல்லை.”


இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்களுடன் நோயைப் பற்றியே பேசி, எந்நேரமும் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பவர்களை, அவர்கள் அறியாமலே அவர்களின் ஆழ்மனது அத்தகைய சூழ்நிலையின் பக்கம் இழுத்துச் சென்று விடுகிறது;அவர்களை நோயாளிகளாகத் தயார்படுத்துகிறது.

ஆனால் வெற்றியாளர்கள் எந்நேரமும் வெற்றியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா, அதனால் அவர்களது ஆழ்மனது வெற்றியை நோக்கி அவர்களை இட்டுச் சென்று விடுகிறது. வெற்றியாளர்கள் வெற்றியை நோக்கி ஓடுகிறார்கள் என்றால், தோல்வியாளர்கள் தோல்வியிலிருந்து விலகி ஓட முயல்கிறார்கள்.

தோல்வியாளர்களை வெற்றியை நோக்கித் திசை திருப்ப மிக எளிய உபாயம் ஒன்று உண்டு. அது, “உங்களுக்கு எது தேவையோ அதைச் சிந்தியுங்கள்,” என்பதை உணர்த்துவது.

அப்படியெனில்?

எது வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேயிருக்கிறீர்களோ அதை நோக்கித்தான் உங்கள் மனது நகரும். அதைப்போலவே எது வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை நோக்கியும் மனம் நகரும். மனதிற்கு எதிர் திசையில் நகரும் ஆற்றல் இல்லை. அதனால், “உங்களுக்கு எது தேவையோ அதைச் சிந்தியுங்கள்.”

தேவையில்லாத சிந்தனைகள் விட்டொழிக்கப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு, காலையில் எழுந்து, பல் துலக்கி, தலை சீவி, சட்டையை மாட்டிக் கொண்டு தெரு முனையில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்று, “எனக்கு ஒரு கிலோ சர்க்கரை வேண்டாம், கால் கிலோ டீத்தூள் வேண்டாம், ஒண்ணேகால் கிலோ உளுத்தம் பருப்பு வேண்டாம்...” என்று சொல்வீர்களோ? கடைச் சிப்பந்தியும் மற்றவர்களும் உங்களை எந்தக் கோணத்தில் பார்ப்பார்கள், எப்படிச் சிரிப்பார்கள் என்பதெல்லாம் வேறு விஷயம்.

நம்மில் பெரும்பாலானவர்கள் தங்களிடம் என்ன இல்லையோ அதையே அங்கலாய்த்துக் கொண்டிருப்பார்கள்; என்ன தேவையில்லையோ அதையே பேசிக் கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் போகாத ஊருக்கு வழி!

நமக்கு எது தேவையோ அதை, அதை மட்டும் சிந்திக்கப் பழக வேண்டும்.

இதைப் போல் நம்மிடம் மற்றொரு தன்மை உண்டு. அது “இழப்பு பயம்.”

இழந்து விடுவோமோ என்று ஏதாவது ஒன்றை நாம் நினைத்து பயந்தால் அந்த ஒன்றை நாம் இழப்பதற்கு நம் மனம் நம்மைத் தயார்படுத்திவிடுகிறது; அதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தி விடுகிறது. அந்த ஒன்று, கணவன், மனைவி, பர்ஸ், கிரிக்கெட் மட்டை, செருப்பு என்று எவராகவும் எதுவாகவும் இருக்கலாம்.

மனித உறவுகளினிடையே இந்த பயம் மிகவும் பலமுள்ளதாய்ச் செயல்படுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். ஒருவர் உங்களிடம் பாசமாய் இருக்கிறார். ஆனால் அவருடைய அன்பையும் பாசத்தையும் இழந்து விடுவோமோ என்று அச்சங்கொள்ள ஆரம்பித்தால் அத்தகைய ஆபத்திற்கு நம் மனது நம்மைத் தயார்படுத்தி விடுகிறதாம். அதற்கு மாறாய் “உங்கள் உறவுகளிடம் நீங்கள் அனுபவித்துவரும் அன்பையும் பாசத்தையும் உணர்ந்து, மகிழுங்கள். அதை இழந்துவிடுவோம் என்று ஒருபோதும் சிந்திக்கவே செய்யாதீர்கள்,” என்று அறிவுறுத்துகிறார்கள்.

நாளை நமக்கு இழப்பு ஏற்பட்டுவிடுமோ என்று கற்பனையாய் பயந்து நடுங்குவதைக்காட்டிலும் இன்று நம்மிடம் உள்ளதை உள்ளார்ந்து அனுபவிக்கப் பழக வேண்டும். ஒருவித பயத்திலேயே குடியிருந்தால் அது நமது தலையில் வந்து விழத்தான் செய்யும்.

சில நேரங்களில் அர்த்தமற்ற பயம் வாழ்க்கையில் நமக்கு மற்றொரு பாடத்தையும் கற்றுத்தரும். எப்படி?

எதை நினைத்து நீங்கள் பயந்தீர்களோ அது உங்களுக்கு நிகழ்ந்துவிட்டால், நீங்கள் அறியா உங்கள் உள்மன சக்தி அந்த அபாயத்தை எதிர்கொள்ளும் ஒருவித தைரியத்தை உங்களுக்குத் தந்துவிடுகிறது. ஒருவருக்கு வாழ்வா சாவா என்பது போன்று ஒரு சோதனை வந்து சேர்கிறது! உடனே அவர் என்ன செய்வார்? சரி செத்துப் போகலாம் என்று உறவினர்களுக்கெல்லாம் எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டுக் கால் நீட்டியா படுத்துக் கொள்வார்? தம்மாலான அனைத்து முயற்சிகளையும் காட்டுத்தனமாய் நிறைவேற்றிப் பார்ப்பாரா இல்லையா?

அதனாலேயே சில பயங்கள் எதிர்கொண்டு முறியடிக்கப்பட வேண்டியதாகின்றன. அப்படி எதிர்கொள்ளும்போது அதுவரை நம் மனதில் குடி கொண்டிருந்த பயம் அர்த்தமற்றதாகி மனம் இலேசாகிவிடும். அந்த பயம் காற்றில் கரைந்துவிடும்.

சொல்லக்கூடாத விஷயமொன்று நிகழ்ந்து விட்டது. அதற்காக பயந்து, அதை மறைத்துப் பொய் பேசுவதைவிட உண்மையைச் சொல்லிப் பாருங்கள், பிரச்சனை சுமுகமாய்த் தீரும்.

ஒரு கணவனுக்குத் தன் மனைவி தன்னை உதாசீனம் செய்து மரியாதையின்றி நடந்து கொள்வாளோ, எதிர்த்துப் பேசிவிடுவாளோ என்று பயமொன்று இருந்து கொண்டேயிருந்தது. அதனால் அவளுடன் பேசும்போதெல்லாம் மிரட்டல் தொணி அவனது பேச்சில் இயல்பாகிப் போனது. காலையில் எழுந்ததும், “நான் காபி குடித்து வருவதற்குள் குளிப்பதற்கு வெந்நீர் தயாராக இருக்க வேண்டும், இல்லையென்றால் நடக்கிறதே வேறே!” என்று மிரட்டல் அனல் பறக்கும். காலையில் எழுந்து காலில் வெந்நீர் கொட்டியதைப் போல் பரக்கப் பரக்க வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மனைவிக்குக் கணவன் என்ன செய்து விடுவாரோ என்று வெந்நீர் பயம். இப்படியே தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்க, பொறுக்க முடியாத அந்த மனைவி ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திருப்பிக் கேட்டாள், “இன்னிக்கு என்னால் வெந்நீர் வைக்க முடியாது. என்ன செய்வீர்கள்?”

அதிர்ந்து போன கணவன் அமைதியாகப் பதில் சொன்னான், “நானே வைத்துக் கொள்வேன்.”


உற்சாகத் தொடர் - 26

‘காசுக்கேற்ற தோசை’ என்றொரு சொலவடை உண்டு; நமக்கெல்லாம் தெரியும். மனவியலாளர்கள் வேறொன்று கற்றுத் தருகிறார்கள் - “வார்த்தைக்கு ஏற்ற வாழ்க்கை”!

அது என்னவென்று மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் ஒரு வார்த்தை! இங்கு வார்த்தை என்பது நாம் பிறரை நோக்கிச் சொல்வதைப் பற்றியில்லை; நமக்கு நாமே சொல்லிக் கொள்வதைப் பற்றி!

நமது சிந்தனைகள் எப்படி நமது சுற்றத்தையும் நட்பையும் உருவாக்குகின்றன என்பதை முன்னர் பார்த்தோம். அதைப்போல் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் நமது மனப்பான்மையை உருவாக்குகின்றன. நாம் எதைப் பெறப்போகிறோம் என்பதை அவை நிர்ணயிக்கின்றன.


நாம் மனம் மகிழ வேண்டும் என்பதை மனதார, உண்மையாகவே விரும்பினால் அதற்கு முதல் வேலையாக நமது வாயைக் காத்துக்கொள்ள வேண்டும். எப்படி? வாயை ப்ளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டா? அப்படியில்லை! நம்மைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பேசவேண்டுமேயன்றி, ‘நான் ஒரு மொள்ளமாரி, கேப்மாரி, பேமானி’ என்றெல்லாம் சொல்லித் திரிவது தகாது. உண்மையிலேயே ஒருவர் சிலாக்கியமற்றவராக இருந்தாலும் இங்கு வார்த்தையைக் காப்பது என்பதை ‘நான் ஒரு யோக்கிய சிகாமணி’ என்று பாவ்லா செய்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.

நாம் நம்மைப் பற்றிய குறைகளையே முணுமுணுத்துக் கொண்டிருந்தால் சரிவராது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; நமக்கே நம்மைப் பற்றிய நல்ல சிந்தனை இல்லாது இருந்தால் ஊரும் உலகும் நம்மைப் பற்றி என்ன அபிப்ராயம் கொள்ளும்? யோசித்துப் பாருங்கள்!

உளவியலாளர் ஒருவரை அவரது நண்பர் சந்தித்தார். அந்த நண்பருக்கு ஏகப்பட்ட மன அழுத்தம். மகிழ்ச்சி என்றால் என்ன என்பதே அவருக்கு மறந்து போய்விட்டது. உளவியலாளரிடம் கேட்டார், “மகிழ்ச்சியற்று, மன அழுத்தத்துடன் இருந்து, இருந்து எனக்கு அலுத்துப் போய்விட்டது. எனது குடும்பத்திற்கு நான் ஒரு பெரும் சுமையாகி விட்டேன். நான் மகிழ்வாய் இருக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

“நல்ல முடிவு. நீங்கள் மன மகிழ்வாய் இருக்க வேண்டும் தானே? அது ரொம்ப ஸிம்பிள். வாயைத் திறக்காதீர்கள். நல்லதாக, ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் மட்டும் வாய் திறந்து வார்த்தையை உதிருங்கள். மற்றபடி ‘கப்சிப்’ உங்களது மொழி. எப்படி மாற்றம் ஏற்படப் போகிறது என்று பாருங்கள்.”

ஒருவாரம் கழிந்தது. யதேச்சையாக இருவரும் மீண்டும் சந்தித்தனர். அந்த நண்பர் இன்னமும் சரியாகாமல் இருந்தார். “நான் மகிழ்வாய் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் என்னிடம் மகிழ்வில்லை. என்னதான் செய்வது?”

“அதான் சென்ற வாரம் நல்லதொரு அறிவுரை கூறினேனே?”

“ம்ஹும்! அப்படியும் மகிழ்வில்லை.”

அந்த நண்பர் தமது வார்த்தைகளை அடக்கியாள்வதாக நினைத்துக் கொண்டிருந்தார். ‘இல்லை’ என்பதை உளவயிலாளர் அவருக்கு இப்படிச் சொன்னார் -

“புரிகிறது! நீங்கள் மகிழ்வாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இன்னமும் தீவிரமான தீர்மானத்திற்கு வரவில்லை. என்றிலிருந்து அப்படித் தீவிரமாக நம்புகிறீர்களோ அன்று முதல் நீங்கள் மகிழ்வடைய ஆரம்பிப்பீர்கள்.”

அவரவர் வாயை அவரவர்தாம் அடக்க வேண்டும். அதை முதலில் நாம் சிந்தித்து உணர வேண்டும்.

நமக்குள் உருவாகும் சிந்தனைகளுக்கு நாம் தானே பொறுப்பு. “இன்னிக்கு ஓர் அரை மணி நேரம் இதைச் சிந்தியுங்கள்,” என்று பக்கத்து வீட்டுக்காரர் சொல்லியா செய்கிறோம்? எனவே நமது மண்டைக்குள் என்ன சிந்தனை உதிக்க வேண்டும் என்பதை நாம் கட்டுப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டினால் நாம் மகிழ்வாய் இருக்க வேண்டும் என்ற தீவிர சிந்தனை நம்முள் உருவாகி வலுப்பெறும்.

நாம் என்ன சிந்திக்கப் போகிறோம், என்ன பேசப் போகிறோம் என்பதற்கான ஓர் ஒழுங்கை நாம் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால் போதும்; மகிழ்ச்சி நெருங்கிவர ஆரம்பித்துவிடும். ‘இதற்குமேல் என்னால் நொந்து போகமுடியாது’ என்ற அளவிற்கு ஒருவர் மோசமான நிலையை அடைந்து விட்டாலும்கூட அவர் தமது மனோபாவத்தை மாற்றிக் கொண்டால் போதும்! அதன் பயனாய் அவருடைய பேச்சும் தொனியும் நல்லவிதமாய் மாறிவிடும்.

“நல்வார்த்தை சொல், இல்லையென்றால் எதிராகச் சொல்லாதே என்றீர்கள்; அதற்குச் சிந்தித்து தீர்மானம் எடு என்றீர்கள். பிறகு இதென்ன மனோபாவம்?” என்று உங்களுக்குள் கேள்வி எழும்.

“மகிழ்ச்சியாய் இருப்பதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார். ஆனால் என்னை மட்டும் நான் மாற்றிக் கொள்ள முடியாது.” இப்படி ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் அவருடைய மனோபாவம். அவருடைய இம்மனோபாவம் எப்படி மன மகிழ்ச்சிக்கு உதவும்?

அதைத்தான் , மனோபாவத்தை மாற்றிக் கொண்டால் போதும். “பூட்ட கேஸு“ என்று நினைப்பவரும் மாறிவிட முடியும் என்கிறார்கள். சற்று ஒழுக்கமுடன் முறையாய் முயற்சி மேற்கொண்டால் போதும். இதுவும் மிக எளிது.

மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இங்கு வார்த்தைகள் என்ற தலைப்பில் பார்த்துக் கொண்டிருப்பது நாம் நம்மைப் பற்றிப் பிரயோகிக்கும் வார்த்தைகள்.

நமது வார்த்தைகள் நமது சக்தியைப் பாதிக்கும் ஆற்றல் கொண்டவை. நாம் உதிர்க்கும் வார்த்தைகள் நமது ஆழ்மனதிற்குள் புகுந்து படர்ந்து அவையே நமது நடத்தையையும் குணாதிசயத்தையும் உருவாக்குகின்றன. “நாம் எந்த லட்சணத்தில் உள்ள மனிதர்” என்பதை நமது வார்த்தைகள் பிறருக்குப் படம் பிடித்துக் காண்பிக்கின்றன.

நம்முடைய சில வார்த்தைகள் நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருமுறையும் “பார்ப்போம்”, “முயல்கிறேன்” என்று நீங்கள் கூறிக் கொண்டே இருந்தால் உங்களது செயல்பாடுகள் உங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தமாகிறது.

“அந்த வேலையை நல்லவிதமாக முடிக்கப் பார்க்கிறேன்”...

“நாளைமுதல் நேரத்தோடு வர முயல்கிறேன்”...

“மகிழ்வாய் இருக்க முயல்வேன்”...

என்பனவெல்லாம் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று அறிவிக்கின்றன.

அதையே சற்று மாற்றி,

“அந்த வேலையை நல்லவிதமாக முடிக்கப் போகிறேன்”...

“நாளைமுதல் நேரத்தோடு வரப் போகிறேன்”...

“மகிழ்வாய் இருக்கப் போகிறேன்”...

என்று சொல்லிப் பாருங்கள். சிறு மாற்றம்தான். ஆனால் உங்கள் ஆழ்மனது தானாகவே அந்த வார்த்தைகளின் வலிமையை உணரும்.

இவையெல்லாம் தவிர, வார்த்தைகளுக்கும் நமது நினைவாற்றலுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் அறிவிக்கிறார்கள். மோசமான நினைவாற்றல் என்று எதுவும் இல்லையாம்!

ஆராய்ச்சியாளர்கள் அதை இப்படி விளக்குகிறார்கள் -

“நீங்கள் உண்மையிலேயே எதையும் மறப்பதில்லை. தகவல்கள் உங்கள் மண்டையில் பத்திரமாய்ப் புதைந்திருக்கின்றன. பிரச்சனை அந்தத் தகவலை வெளியில் எடுப்பதில் மட்டுமே.”

ஒருவரை நீண்ட நாள் கழித்துச் சந்திக்கிறீர்கள். அவரது பெயர் சட்டென்று உங்களது நினைவிற்கு வரவில்லை; மறந்து போய்விட்டது! மறுநாள் குளித்துக் கொண்டிருக்கும்போது சோப்பு நீர் கண்ணில்பட்டு எரிச்சல் ஏற்பட, திடீரென்று நினைவிற்கு வந்துவிடுகிறது அவரது பெயர்.

அந்தப் பெயர் உங்கள் தலையிலிருந்து விலகிப்போய் பிறகு இன்று காலை சூரியன் உதயமாகும்போது வந்து புகுந்து கொண்டதா என்ன? எல்லாம் மண்டைக்குள்தான் இருந்தது. உங்களால் அதை உடனே வெளியில் எடுக்க முடியவில்லை.

“என் நினைவாற்றல் மோசம்” என்று நீங்கள் சொல்லிக் கொண்டு இருந்ததாலேயே இப்படி நிகழ்கிறதாம்.

வார்த்தைகள் நமது செயல் திறனை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை. வார்த்தைகள் நமது ஆழ்மனதைத் தாக்க வல்லவை. ஆழ்மனதும் நினைவாற்றலும் என்றாலே அவை பக்கா தோஸ்த்துகள் தாம்.

எனவே தொடர்ந்து நீங்கள் உங்களது ஆழ்மனதிடம் “நான் நினைவாற்றலில் சிறந்தவன்” என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் போதும். உங்களது ஆழ்மனது நீங்கள் பெயர், போன் நம்பர் போன்ற தகவல்களை நினைவில் நிறுத்தப் போகிறீர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிடும். அது உங்கள் நினைவிலிருந்து தகவல்களை கம்ப்யூட்டர் போல் வெளியில் எடுத்துப் போட்டுவிடும்.

இவை அனைத்துடன் சேர்த்து மனைவிக்கு ஏதும் வாக்குறுதி கொடுத்திருந்தால் அதையும் “நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்வேன்.” என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கொள்வது உத்தமம்.


உற்சாகத் தொடர் - 27

மனதில் உறுதி வேண்டும்

- நூருத்தீன்

னதில் உள்ளதை வாய்விட்டுச் சொன்னால் தானே நமக்குத் தெரியும்; ஏதாவது உதவலாம்.”

ஏதோ ஒரு கவலை; அதை மனதிலேயே வைத்துக் கொண்டு வெளியில் கொட்டாமல் உம்மனா மூஞ்சியாய் இருக்கும் ஒருவனைப் பார்த்து அவனது நண்பர்கள் இப்படி உரைப்பதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை நீங்களே சொல்லியிருக்கலாம்; அல்லது உங்களுக்கே நடந்திருக்கலாம். என்ன செய்ய? அனைத்தையும் மனதில் போட்டுப் பூட்ட முடியாது. சில சமயம் மனதிலுள்ள சிந்தனைகளை வாய்விட்டுச் சொல்ல வேண்டியதும் அவசியமாகிறது.

மனதில் ஆக்கபூர்வமான – பாஸிட்டிவ் – எண்ணங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னர் பார்த்தோமல்லவா? அதை வலுவாக்கி உரமேற்றிக் கொள்ள உறுதிமொழி தேவைப்படுகிறது? என்ன உறுதிமொழி? ஒருவிதமான மன உறுதிமொழி. எதற்காக இது?


இந்த மன உறுதிமொழிதான் தரமான சிந்தனைகளை நாம் சிந்திக்கவும் அத்தகு சிந்தனைகளை ஆழ்மனதில் நிலைநாட்டவும் உதவுகிறது; நம்மை நாமே சிறப்பாய் உணர வைக்கிறது; சிறப்பாய்ச் செயல்பட வழிவகுக்கிறது. குழப்புகிறதோ? ஒன்றும் பிரச்சனை இல்லை. சற்றுப் பிரித்துப் போட்டுப் பார்ப்போம்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்; கடும் தலைவலி. “சீக்கிரம் வந்து தொலையாதா?” என்று நீங்கள் பேருந்திற்குக் காத்து நிற்க, தாமதமாய் வந்து சேரும் அதுவோ மக்களை அள்ளி அடைத்துக் கொண்டு வந்து நிற்கிறது. அந்நெரிசலில் முட்டிமோதி ஏறிப் பெரும் அவதியும் எரிச்சலும் தலைவலியுமாக நீங்கள் நின்று கொண்டிருக்கும் போதே ஒரு வித்தைப் புரியலாம்.

“அம்மாங் கூட்டத்தில் புகுந்து நுழைந்து, ஒற்றைக் காலில் நின்று கொண்டு பயணிப்பதே வித்தைதான். இதில் இன்னொரு வித்தையா?” என்று முறைக்காதீர்கள்.

சென்ற வாரம் வார்த்தைகளின் சக்தியைப் பற்றிப் படித்தோமில்லையா? அதையும் மனதிலுள்ள பாஸிட்டிவ் சிந்தனா சக்தியையும் ஒருங்கே உபயோகியுங்கள். அதுதான் வித்தை.

எப்படி?

“தலை அப்படி ஒன்றும் பெரிதாய் வலிக்கவில்லை; நன்றாகத்தான் இருக்கிறது; இன்னும் சற்று நேரத்தில் வலி போயே போய் விடும்.”

இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள். “என்னடா இது அழிச்சாட்டியம்? அநியாயத்திற்குப் பொய் சொல்கிறாயே!” என்று உங்களது உள்மனம் உள்ளிருந்து உங்களை அதட்டும். அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டு, நீங்கள் பாஸிட்டிவான எண்ணத்தையே சொல்லிச் சொல்லி மனதளவில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமாம்.

மெதுவே, மெது மெதுவே, “ஆமாம்! நீ நல்லாத்தான் இருக்கே!” என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் வேர்விட ஆரம்பித்து விடும். வலி குறைந்து போனதை உங்களையறியாமல் நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். சற்று நேரத்தில், முழுவதுமோ அல்லது பெருமளவிலோ, அந்த வலியானது மறைந்து அல்லது குறைந்து போயிருக்கும்.

இது ஓர் உதாரணம் மட்டுமே. அதற்காகக் கையில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டால் இதை முயலக் கூடாது. டாக்டரிடம் ஓடுவதே நல்லது. அவர் அளிக்கும் பில் உங்களது வலியை மறக்கச் செய்துவிடும்!

மேற்சொன்ன உதாரணத்தைப் போல் அந்த வித்தையைப் பலவிதங்களில் நீங்கள் பிரயோகிக்கலாம் –

“உற்றார் உறவினருக்கெல்லாம் என்மேல் மட்டற்ற அன்பும் பாசமும் உண்டு; நானும் அவர்களிடம் அன்பும் பாசமுமாய் உறவாடப் போகிறேன்.”

“அட்டகாசம்! நாளுக்குநாள் என் மன மகிழ்வு அதிகரித்து வருகிறது.”

“நான் மிகவும் ஆரோக்கியமாய் இருக்கிறேன்.”

“இன்று மேட்சில் நிச்சயம் நான் செஞ்சுரி.”

“மேனேஜர் என்ன கொம்பனா? அஞ்சாமல் அசராமல் பதில் பேசப் போகிறேன்.”

“இன்று தைரியமாய் மனைவியிடம் கைச்செலவிற்குப் பணம் கேட்கப் போகிறேன்.”

பாஸிட்டிவ் எண்ணங்கள் என்பதை வார்த்தை வடிவமாக்கி இவ்விதம் மனதால் உறுதிபடக் கூறச் சொல்கிறார்கள் உளவியலாளர்கள் . இப்படியெல்லாம் மன உறுதியிட்டுவிட்டுத் தொலைக்காட்சியில் நியூஸ் பார்க்க உட்கார்ந்து விடக்கூடாது. அது சரி வராது. அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். எதற்கான முயற்சி?

மன உறுதிமொழி என்பது நீங்கள் அடையவேண்டிய விஷயத்திற்கு உங்கள் மனதைத் தயார்படுத்தும் வழியாகும். இத்தகு மன உறுதிமொழியை ஒரு தினசரிப் பழக்கமாக நீங்கள் உருவாக்கிக் கொண்டால் அது எத்தகைய எளிய உபகரணம் என்பதையும் அதன் வலிமையும் உணர்ந்து அசந்து போவீர்கள்.

“இதென்ன? சின்னப் பிள்ளைத்தனமால்லே இருக்கு? இதையெல்லாம் நான் பின்பற்றப் போவதில்லை,” என்று நீங்கள் நினைத்தால் தேவையற்ற தலைவலி உங்கள் தலையைப் படுத்திக் கொண்டுதான் இருக்கும். உங்களது மனவலிமையின் முழு வீரியம் வெளிப்படாமல், நட்டம் உங்களது!

மன உறுதிமொழியைப் பிரயோகிப்பதற்குச் சில தந்திரங்கள் சொல்லித் தருகிறார்கள் உளவியலாளர்கள். அதையும் பார்த்து விடுவோம்.

மனமானது எப்படி நாம் நினைப்பதை நோக்கியே நகரும் தன்மையுடையது என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். நினைவிருக்கிறதா?

“நான் இனி என் கணவன் கேட்காமலேயே கைச்செலவுக்குப் பணம் கொடுப்பேன்; நான் இனி அவரிடம் வாக்குவாதம் செய்யப் போவதில்லை.”

“எனக்கு ஞாபக மறதி இல்லை.”

என்றெல்லாம் உங்களது மனம் உறுதி எடுத்துக் கொண்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? பதில் உங்களுக்கே தெரிந்திருக்குமே? ஆம், அதேதான். “வேண்டாம்”, “இல்லை” என்பதை நோக்கி உங்கள் மனமானது வங்காள விரிகுடாவில் உண்டான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் போல் நகரத் தொடங்கியிருக்கும்.

அந்தக் காலத்தில் மாணவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு ஆசிரியர்கள் ஒரு தண்டனை கொடுப்பார்கள் – imposition.

“நான் இனி பள்ளிக்குத் தாமதமாய் வரமாட்டேன்.”

“நான் இனி வகுப்பறையில் பேச மாட்டேன்.”

என்று நூறு முறை, இருநூறு முறை எழுதச் சொல்வார்கள்.

கைகடுக்க எழுதி எடுத்துவரும் மாணவன் என்ன செய்வான்?

க்ளைமேக்ஸில் திருந்தும் வில்லனைப் போல் திருந்தி விடுவானா?

அப்படிச் சுமுகமாய் வாழ்க்கை நகர்வதில்லை. அதே தவறை அதே மாணவன் மீண்டும் செய்வான். இங்கு பிரச்சனை தண்டனையில்லை; அந்த வாக்கியங்கள். தவறிலிருந்து அவனை விலக்குவதற்குப் பதிலாய் அவன் மீண்டும் மீண்டும் அந்தத் தவறை மேற்கொள்ளவே மேற்சொன்ன imposition வாக்கியங்கள் உதவியிருக்கும்.


எனவே,


நாம் என்ன செய்யப் போகிறோம், என்ன விழைகிறோம் என்பதைத்தான் நேரான முறையில் மன உறுதியாகக் கொள்ள வேண்டும். இது முதலாவது.

இரண்டாவது, இத்தகைய மன உறுதிப்பாட்டை வாய் விட்டுச் சொல்லியோ எழுதியோ வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொல்லியுள்ளதைப் போல் வாய்விட்டுச் சொன்னால்தான் நமது மனமே நமக்கு உதவும். மனதளவில் வெறுமே ஒரு உறுதிப்பாட்டை நீங்கள் நினைத்தால் அதை நினைத்து முடிப்பதற்கு முன்னதாகவே, “அந்தப் புடவை டிஸைன் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியிருப்பார்கள்?”, “இன்று டின்னருக்கு சோளா பூரி சரிவருமா?” என்று மனமானது தாவி ஓடிவிடும்.

ஆனால் அதையே வாய்விட்டுச் சொல்லும் போதோ, எழுதி வைத்துக்கொள்ளும் போதோ உங்கள் புலனுணர்வுகள் இதில் ஈடுபடுகின்றன. எனவே உங்கள் மனவுறுதிப் பிரமாணம் பெரும் உறுதி பெறுகிறது.

மூன்றாவதாக மனதில் நிறுத்த வேண்டியது – கிளிப் பிள்ளை போல் மீண்டும் மீண்டும் இந்த மன உறுதிப்பாட்டைக் கூறிக் கொண்டிருக்க வேண்டும். நாம் பிறக்கும் போது நம்முடன் பிறந்தது, தொன்று தொட்டு தொடர்வது என்று நம் உள்ளும் புறமும் கலந்துவிட்ட விஷயங்களை அவ்வளவு எளிதில் நீக்குவது முடியாது. அதிலிருந்து மீள பிடிவாதமும் விடாமுயற்சியும் தேவை.

ஆக,

நல்லதை நினைப்போம்; நினைத்ததைச் சொல்வோம்; சொன்னதைச் செய்வோம்.



தொடரும்.....






No comments:

Followers