KILIYANUR ONLINE

Wednesday 22 December 2010

மனம் மகிழுங்கள்

இந்த உற்சாகக் கட்டுரை இந்நேரம்.காமில் வெளியானது இது கிளியனூர் ஆன்லைனில் மீள்பதிவாக வெளியிடுவதில் மகிழ்கின்றோம்.இந்நேரம்.காம்மிற்கு எங்கள் நன்றியை பகிர்கின்றோம்.
- கிளியனூர் ஆன்லைன்
உற்சாகத் தொடர் - 1

இன்பம். மகிழ்ச்சி! ஆண்டிமுதல் ஆள்பவன்வரை, மூட்டை தூக்கும் முனுசாமிமுதல் மூட்டை மூட்டையாய்ப் பணம் வைத்துக் கொண்டிருக்கும் அம்பானிவரை, எல்லோருக்கும் அது பொதுவான தேடல். அனைவரும் அதைத் தேடி அலைந்து, திரிந்து, ஆன்மீகம், பெண் மோகம், போதை என்று என்னென்னவோ முயற்சி செய்துவிட்டு கடைசியில் ஞானமாய் வார்த்தை வரும் - "எல்லாம் மனசுல இருக்குபா!"

மனசு! அதுதான் எல்லோருக்கும் இருக்கிறதே! ஆனால் மன நிறைவு? இன்பம்?

மன மகிழ்வு என்பது என்ன என்பதை எல்லோரும் உணர்ந்து வாழ ஆரம்பித்தால் பாலாறும் தேனாறும் ஓடி, நாடு வளம் பெறும்; உலகம் சுபிட்சம் அடையும்; அமெரிக்கா நல்ல பிள்ளையாகிவிடும்; உலகில் தீவிரவாதம் குறையும் என்றெல்லாம் அதீத நம்பிக்கைக்கு நாம் ஆளாகி விடக்கூடாது. குறைந்த பட்சம், அவரவரும் மெய் மகிழ்வுடன் வாழ்க்கையை அணுகலாம்; உய்யலாம்; சமர்த்தாய் வாழப் பழகலாம். அவ்வளவே!

மனசு, நெஞ்சு, மூளை, இதயம் இவை எல்லாவற்றையும் கூறுபோட்டு, அனாடமி, தத்துவ ஆராய்ச்சி என்றெல்லாம் பண்ணாமல், பொதுவாய் மனசு, மகிழ்ச்சி, அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை அடிப்படையாய் அமைத்துக் கொண்டு,
மனம் மகிழும் முயற்சி, இத்தொடர் அவ்வளவே!. அளவளாவிக் கொள்வோம்.

- நூருத்தீன்



னதிற்கென்று சில மாதிரிகள், வடிவமைப்பு இருக்கிறதாம். எப்படி? தெருவில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று வையுங்கள், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மனம் யோசிக்கிறதா என்ன? சரவண பவன் தோசையோ, பீட்ஸாவோ, அதை உண்பதற்குத்தான் ஆவலே தவிர, செரித்து அது ஜீரணம் ஆகியே தீரவேண்டும் என்று மனம் மெனக்கெட்டுத் தீர்மானமெல்லாம் போடுவதில்லை. உறங்கச் செல்லும் போது, ஃபேனோ, ஏசியோ அட்ஜஸ்ட் செய்து படுத்துக் கொண்டால் போதும், மூச்சுவிட எதுவும் திட்டமெல்லாம் தேவையில்லை. கெடு பாக்கியிருந்தால் தானாய் அது நடக்கும். இவையெல்லாம் உள்ளுணர்வு (subconscious). இப்படிப்பட்ட உள்ளுணர்வுதான் நம் வாழ்க்கையின் பலன்களின் பெரும்பகுதியை நிர்ணயிக்கிறது.

அடிக்கடி நிகழும் வடிவமைப்பு


ஒரு நண்பரை விருந்துக்கு அழைத்திருக்கிறீர்கள் என்று வையுங்கள். "சரியாக ஏழு மணிக்கு வந்து விட வேண்டும்" என்று சொல்லியிருப்பீர்கள். எப்படியும் ஒன்பது மணிக்கு வந்து விடுவார். "என்றைக்கு அவன் நேரத்தோடு வந்திருக்கிறான்?" என்பது மிகப் பரிச்சயமான டயலாக். பலருக்கும் இந்தப் பிரச்சனை உண்டு. அலட்சியமெல்லாம் இருக்காது. ஏதாவது சிறு சிறு முக்கியமற்ற விஷயங்களை முக்கியமாய் முடித்துவிட்டு வருவதே பழக்கமாகியிருக்கும். அல்லது ஏதாவது தடங்கலான நிகழ்வுகள். அப்பொழுதுதான் டூவீலர் பன்ச்சர் ஆகியிருக்கும். கிளம்பும்போதுதான் சலவைக்குப் போய்வந்த சட்டையில் ஒரு பொத்தான் பிய்ந்திருப்பது தெரிய வரும். அல்லது வைத்த இடத்தில் பர்ஸ் இருக்காது. அல்லது இராயப்பேட்டையிலிருந்து தி.நகருக்குச் செல்லும் உங்களிடம் ப்ராட்வேயில் மட்டுமே கிடைக்கும் ஒரு பொருளை வாங்கி வரும்படி உங்கள் இல்லத்தரசி அன்புக் கட்டளை இட்டிருப்பார்.


விருந்திற்கு என்றில்லை, காலேஜிற்கு, ஆபிஸிற்கு, என்று பலதிற்கும் இப்படித்தான். உலகம் திட்டமிட்டு நம்மை இப்படி அலைக்கழிக்கிறது என்று நமக்குத் தோன்றும். அதெல்லாம் ச்சும்மா. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த உள்மனசுதானாம். அது ஏற்கனவே அழகாய்ப் ப்ரோக்ராம் எழுதி வைத்திருக்கும் - "நீ லேட்டாகத்தான் போகப் போகிறாய்". வெளி மனசு பரபரப்பாக நம்மை இயங்க வைத்துக் கொண்டிருந்தாலும் நடப்பதென்னவோ உள்மனசின் கட்டளைப்படிதான்.
அப்படியே தப்பித் தவறி வெள்ளனே எழுந்து கிளம்புவதற்கான ஆயத்தமெல்லாம் சரியாய் நடந்து விட்டாலும், அன்றைக்கென்று ஏதாவது ஊர்வலம் /போராட்டம்/பேரணி என்று திசை திருப்பப்படுவீர்கள். இவற்றுள் எதுவுமே இல்லையா? இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சந்தித்த நண்பன் அன்றுதான் எதிரில் வந்து, "நீ ........ " என்று ரொம்ப தூரம் நீட்டி, கடைசியாய்க் கட்டிப்பிடி வைத்தியம் தொடரும். இப்படி ஏதாவது ஒன்று.


எல்லாஞ் சரி. அது எப்படி நான் எப்போவாவது ரயிலில் போக முடிவெடுத்த அன்றைக்குப் பார்த்து, ரயிலும் லேட்டாகவே வருகிறதே? அப்படியெல்லாம் இல்லை, ரயில்வே அட்டவணையில்தான் ப்ரிண்டிங் மிஸ்டேக்.

நாடக வடிவைமப்பு
சிலருக்கு வாழக்கையில் எதுவுமே சரியாக இருக்காது. எல்லாமே சோக மயம்தான். மார்க்கெட்டில் எதிரில் தென்பட்டிருப்பார் அந்த நண்பர். அன்றைய தினத்தின் உலக மகாக் குற்றத்தைச் செய்து விடுவீர்கள், "அடடே ... பார்த்து ரொம்ப நாளாச்சே, என்ன சௌக்கியமா?"

"அதை ஏன் கேட்கிறே போ!" என்று ஆரம்பித்து கைக்குட்டை நனையும் அளவு சோகக் கதை வெளிவந்து கொட்டும். பொறுப்பற்ற தண்டச் சோறாய்த் திரியும் மகன், அல்லது அடக்கமற்ற மருமகள், இரக்கமேயில்லாமல் வீட்டு வாடகையை ஏற்றிச் சாத்தும் வீட்டுக்காரன், பான் பராக் போட்டு மாடியிலிருந்து அவர் வீட்டு வாசலுக்கு அருகே துப்பும் வில்லன், அக்கிரமக்கார மேனேஜர், சம்பள உயர்வு தராத ஈவிரக்கமற்ற முதலாளி, இப்படி ஏதாவது.


அப்படியே அவரது வாழ்வில் எல்லாம் கனக் கச்சிதமாய் நிகழ்ந்து கொண்டிருந்து என்று வைத்துக் கொள்வோம், ஏதாவது ஒரு அசந்தர்ப்பமான நோய் வந்து பத்து இருபது நாள் படுத்திவிடும். அல்லது அன்றைக்கென்று நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த அவரது மோட்டார் பைக்கைக் கடமை தவறாத காவல்துறை ட்டயர் லாக் செய்திருக்கும். அதுவுமில்லையா, தூக்கிச் சென்றிருக்கும்.

சரி அதற்கெல்லாம் என்ன செய்வது? பார்க்கத்தானே போகிறோம்!

உற்சாகத்தொடர் - 2

“ஸார்... சென்ற வாரம் நீங்கள் எழுதியதை என் மனைவியிடம் படித்துக் காண்பித்தேன். மனம் மகிழ்ந்தார். அடுத்த நாள், ஆழ்வார் பேட்டையிலிருந்து திருவான்மியூர் செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தேன் ஸார். 'டைலர் போன் செய்தான். பொண்ணு பாவாடையெல்லாம் ரெடியாம். வாங்கிட்டு வந்துடுங்க,' என்கிறார் மனைவி. டைலர் கடை திருவல்லிக்கேணியில்! தாங்கள் புதிய உத்திகளுக்கு வழிவகுக்கிறீர்கள், இருந்த நிம்மதியும் போச்சு“ - என்பதாக ஆழ்வார்பேட்டை ராஜ்குமார் கடிதமெழுதினால் அதற்கு என்ன செய்வது?

“இடுக்கண் வருங்கால் நகுக!” வேறென்ன சொல்வது?

இவ்வாரம் மேலும் சில மனமாதிரிகளைப் பார்ப்போமா?

- நூருத்தீன்




விபத்து வடிவமைப்பு

என்னுடைய மாமா ஒருவர் இருந்தார். நம் ஹீரோவும் ஹீரோயினும் “ஜஸ்ட் ஒன் ஸாங்” டூயட் பாட மலேஷியாவிற்குப் பறக்க ஆரம்பிப்பதற்குப் பற்பல வருடங்கள் முன்பேயே தமது சிறு வயதில் அங்குப் பிழைக்கச் சென்றவர். மிகவும் அன்பானவர், பாசமானவர். சுறுசுறுப்பானவரும் கூட. ஒவ்வொரு முறை விடுமுறையில் அவர் இந்தியா வரும் போதும், எங்காவது எப்படியாவது தட்டுக் கெட்டு விழுந்து காலில் அடிபட்டு, சுளுக்கிக் கொள்வார், கட்டுப் போட்டுக் கொள்வார். ஒருமுறை இடறி விழுந்தால் மறுமுறை, சைக்கிளில் இருந்து விழுந்து, இப்படி ஏதாவது ஒன்று நடந்து விடும். எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

அது ஏன் என்றால் சிலருக்கு இப்படி ஒரு மனோ வடிவமைப்பு இருக்கிறதாம். ஏணியிலிருந்து விழுவது, சைக்கிளில் இருந்து விழுவது, மரங்களில் இருந்து விழுவது, ட்டூ வீலரை, கீரை விற்றுக் கொண்டு செல்லும் பாட்டி மேல் மெனக்கெட்டு சென்று இடிப்பது, இப்படி ஏதாவது.

வங்கி அதிகாரி ஒருவர் தம் வாடிககையாளரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கூறினார்:- “நான் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து வருடத்திற்கு ஒன்று என ஐந்து வண்டிகள் வாங்கிவிட்டேன். ஒவ்வொரு முறையும் யாராவது என்னைப் பின்னாடியிலிருந்து இடிப்பதால் வண்டி முழு டேமேஜ் ஆகி விடுகிறது.”

”இப்பொழுது அப்படியில்லையே,” என்றார் கஸ்டமர்.

“இல்லை, இன்னம் கொஞ்சம் நாள் வாழ்ந்து பார்க்க ஆசை. அதனால் வண்டி வாங்கறதை நிறுத்திட்டேன். இப்பல்லாம் பஸ் தான்.”

வெளியில் வந்தபின் கஸ்டமருக்கு "எதற்கும் அந்த மேனேஜரிடம் பஸ் நம்பர் கேட்டிருக்கலாமோ?" என்ற எண்ணம் ஓடியது.

நோய் வடிவமைப்பு

சிலருக்குத் தேர்வு நேரத்தில் சொல்லி வைத்தாற் போல் காய்ச்சல் வந்து விடும், கவனித்திருக்கிறீர்களா? தேர்வு ஜுரம்! பயத்திலோ பதட்டத்திலோ தொடங்கிய அது, பின்னர் வருடா வருடம் கரெக்ட் டைமிற்கு ஆஜராகிவிடும். வேறு சிலருக்கு ஏதாவது ஒரு முக்கிய வாய்ப்பு வந்து சேரும்போதுதான், மூக்கில் ஜல்பு என்று ஏதாவது வந்து காரியத்தைக் கெடுக்கும். ஒவ்வொரு முறையும் அலுவலக வேலை நிமித்தம் பறக்கும் உங்கள் சக அலுவலருக்குப் பதிலாய், அபூர்வமாய் மும்பைக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு வந்து வாய்க்கும்போது, திடீரென்று ஒரு காய்ச்சல் வரும் பாருங்கள், காய்ச்சல் தலைவலியை விட, எரிச்சலில்தான் மண்டை வெடிக்கும்.

சிலருக்கு ஒவ்வொரு திங்கள் கிழமை காலையும் அலுவலுக்கு கிளம்பும் போது, “லீவு போட்டுவிடேன்“ என்பதுபோல் உடம்பு படுத்தும். கிளம்பிச் சென்று மாலை வீடும் திரும்பும்போது, அதெல்லாம் ”போயே போச்”.

ஒழுங்கற்ற வடிவமைப்பு

வெளியூரில் பணிபுரியும்போது கண்டிருக்கிறேன். நண்பர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து அறையெடுத்துத் தங்கியிருந்தார்கள். காலையில் எழுந்து குளித்துவிட்டு அலுவலகத்துக்குப் போகும் அவசரத்தில்தான், இடுப்பில் டவலும், ஒரு கையில் பேண்டும் வைத்துக் கொண்டு, ட்ரையரிலிருந்து கூடைக்கு இடம் மாறிக் குவிந்திருக்கும் துணிக் குவியலில் அண்டர்வேர் தேடிக் கொண்டிருப்பார்கள். ”இதையெல்லாம் நேற்றே மடித்து வைத்திருக்கலாமே,” என்றால், ”ப்ச், நேற்று ஒரே பிஸி” என்று சொல்லிவிட்டு அடுத்து சீப்பு தேடிக் கொண்டிருப்பார். குழந்தைகளற்ற அந்த அறையில் அந்தச் சீப்பு எப்படி சோபா இடுக்கில் சென்று உட்கார்ந்து கொண்டது என்பது ஓர் ஆச்சர்யம்!

சிலருக்கு இயல்பாகவே மேசை, ஃபைல்கள், தலை, கார், என எல்லாமே என்னவோ திருட வந்தவன் கலைத்துப் போட்டு விட்டு ஓடியதுபோல் இருக்க வேண்டும். இரக்கப்பட்டு அக்கறையாக உதவி, அனைத்தையும் ஒழுங்கு படுத்திக் கொடுத்து விட்டுச் செல்கிறீர்கள் என்று வையுங்கள், குளித்து விட்டு வருவதற்குள், சிலவற்றை நிச்சயம் கலைத்து உதவ அந்த உங்கள் நண்பர் கியாரண்டி.

மனதை மகிழ வைப்பதற்கு முன், மனதின் பலவித வடிவமைப்பை அறிந்து கொள்வதற்காகவே பல மாதிரிகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் இந்த ஏதாவது ஒன்றில், அல்லது ஒன்றிற்குமேல் பொருந்திப் போகலாம். இந்த நெகட்டிவ் வடிவமைப்புகளைப் புரிந்து கொண்டால், அடுத்தது எளிது. அதனால் மேலும் சில.

நொடிந்த வாழ்க்கை வடிவமைப்பு

உண்மையிலேயே வாழ்க்கையில் நொடித்துப் போனவர்கள் கதை வேறு. தொழில் நொடித்தோ, அசம்பாவிதங்கள் நிகழ்ந்தோ ஏதேனும் ஒன்று அவர்களைத் தாக்கியிருக்கலாம். இது, அது இல்லை. சம்பாதிப்பதை எல்லாம் தண்ணீராய் இறைத்து, காலி பர்ஸாய் இருப்பவர்கள். வரவிற்கு மீறிய செலவாளிகள். இத்தகையவர்களுக்கு, யதேச்சையாய் சற்றுக் கூடுதலாய் பணம் கிடைத்தாலும், செலவழித்துக் காலியாக்கினால்தான் தூக்கம் வரும். என்ன தான் நடக்கிறது, பணம் எப்படித்தான் காலியாகிறது என்பது அவர்களுக்கே தெரியாது. சம்பளம் இரட்டிப்பானால்கூடச் செலவுக்குப் பட்டியல் தயார். லாட்டரியில் கோடி பெற்றவர்களில் லட்சாதிபதிகளாய் நிலைத்திருப்பவர்கள் எத்தனை பேர்?

மாற்றல் வடிவமைப்பு

ஏதாவது வேலை கிடைத்தால் போதும், என்று நன்றியுள்ள நாலுகால் பிராணியைப்போல் பலர் அலைந்து கொண்டிருக்க, சிலருக்கு ஒரு வேலையில் ஒட்டி உட்கார முடியாது. அதுவும் ஐ.டி. உத்தியோகமும், அதன் கவர்ச்சிகர இலக்க ஊதியமும், பலர் ஒரு வருடம் ஒரு கம்பெனியில் நீடிப்பதையே அதிகம் என்றாக்கி விட்டது. அவர்களுக்கு வேலை மாறிக் கொண்டே இருக்க வேண்டும். பெரிய பிரச்சனை என்று எதுவுமே இருக்காது. மாற வேண்டும். ஓரிடத்தில் நிலையாய் இருந்தால் இருப்புக் கொள்ளாது. “அந்த மானேஜர்! அவன் போடுற சட்டைக் கலர்! சகிக்கலே, மாறிட்டேன்!” இப்படி ஏதாவது அற்ப காரணம்.

வேறு சிலருக்கு வீடு. ஒரு மாதப் பிரயாணம் என்று கிளம்பினாலே மூட்டை, முடிச்சைக் கட்டிக் கிளம்ப ஒரு பாடு ஆகிவிடும் நிலையில், இவர்களோ சர்வ சாதாரணமாய் வீடு மாறிக் கொண்டே இருப்பார்கள். சிறிய அசௌகரியம்கூட தாங்காது. அது எப்படித்தான் முடிகிறதோ!

ஆச்சா? உபரியாகச் சில உண்டு.

சே... இந்த உலகத்தில் எவனுமே சரியில்லே...

இந்த வாழ்க்கையே மோசம். எனக்கென்று ஏன்தான் இப்படி நடக்கிறதோ. இதை விட செத்துப் போகலாம்னு தோணுது...

உலகத்திலே அத்தனை பேருக்கும் நான் இளிச்சவாயன்னு எப்படித்தான் தெரியுதோ...


இவர்கள்போக இன்னும் சிலர் உள்ளனர்...

ஒவ்வொரு முறையும் சரியாக ரயிலை, பஸ்ஸைத் தவற விடுபவர்கள்...

உறவினர் ஒருவர் இருந்தார். ப்ளைட் பிடிக்கக் கிளம்பும்போது அவருடைய தாயார் அறிவுறுத்தி அனுப்பினார்கள், “நண்பர்களிடம் பேசிக்கிட்டே ப்ஃளைட்டை மிஸ் பண்ணிடாதே”. பரிகாசமில்லை, விடைபெற நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தவர் உண்மையிலேயே அன்று ப்ளைட்டை மிஸ் செய்தார்.

போதும் - நிறைய எதிர்மாறான வடிவமைப்புகளைப் பார்த்து விட்டோம். அடுத்து ஆக்கபூர்வ வடிவமைப்புகளைப் பார்ப்போம்.

உற்சாகத் தொடர் - 3

சும்மா நாலு தும்மல் தும்மினாலும், என்ன தான் பயமோ ? உடனே டாக்டரிடம் ஓடுகிறார்கள். நான் சின்ன வயசில தடுப்பூசிக்காகப் போனதுடன் சரி; அப்புறம் இத்தனை வருஷமாச்சு --. டாக்டர் வீட்டு அட்ரஸ் கூடத் தெரியாது எனக்கு.”

கேட்டிருக்கிறீர்களா இதை? அல்லது எப்பொழுதாவது யாராவது எங்காவது பத்திரிகைப் பேட்டிகளில் இப்படிச் சொன்னதைப் படித்துள்ளீர்களா?

”இருந்தாலும் ரொம்ப ஓவர் அலட்டல் இது,” என்று அப்பொழுது உங்களுக்குத் தோன்றியிருக்கும். அவர்கள் மிகைப்படுத்திப் பேசுவதாகவும் எண்ணியிருந்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் சிலருக்கு அப்படி ஒரு பாக்கியம் அமைவதுண்டு.

எப்படி சாத்தியம்?

சாதிப்பது மனதுதானாம்!

அதாவது, அவரது மனதின் பாஸிட்டிவ் வடிவமைப்பாம். அது ஆக்க சிந்தனையுள்ள மனது. அதற்காக அவர்களை, சிக்கன் குன்யா, swine flu வைரஸ்களெல்லாம் வெறுத்து ஒதுக்கி ஓடும் என்பது அர்த்தமில்லை. யதேச்சையாய்த் தாக்கும் சில்லறை நோய்களிலிருந்து வலிமையான மனது நம்மைக் காக்கும் என்கிறார்கள்.

இது ஒன்று!

ஆச்சா?

அடுத்தது, சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க நேரிடுவது.

அது என்னவாம்?

பிடித்த நடிகரின் படம் வெளியான முதல் நாள். தியேட்டர் ஹவுஸ் ஃபுல். லஞ்ச லாவண்யத்தைச் சகட்டு மேனிக்குத் திட்டி ”உருப்படுமா இந்த நாடு” என்று பொருமும் மகா அக்கறையுள்ள சிட்டிசன், கள்ள மார்க்கெட் டிக்கெட்டாவது கிடைக்காதா என்று பரபரப்பாய் அலைந்து கொண்டிருப்பார். அப்பொழுது தான் இவர் பக்கத்தில் அசால்ட்டாய் அவன் வந்து பைக்கை நிறுத்தி விட்டு இறங்க, வேகமாய் அவனை நெருங்குவார் இன்னொருவர். “ஸார் எக்ஸ்ட்ரா டிக்கெட் ஒன்று இருக்கிறது வேண்டுமா?”

இவர் காதில் அது விழுந்து, சுதாரிப்பதற்குள், படம் ஆரம்பிக்கப்போகும் அவசரத்தில் அந்த இருவரும் போயே போயிருப்பார்கள். சிலர், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க நேரிடுவதையும் ஆக்க சிந்தனையுள்ள மன வடிவமைப்பு என்கிறார்கள். பெரும்பாலும் அது அவர்கள் வாழ்க்கையில் அப்படி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

வேறு சிலர் உள்ளனர். தொட்டதெல்லாம் பொன்னாய்த் துலங்கும். மண்ணும் பொன்னாகும். பலர் அதிர்ஷ்டம் என்கிறார்கள். மனோவியலாளர்களோ, ”பிலீவ் மீ. அதுவும் பாஸிட்டிவ் வடிவமைப்பு” என்று அடித்துச் சொல்கிறார்கள்.

சில வருடங்களுக்குமுன் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பலர் திடீரென்று லட்சாதிபதி, கோடீஸ்வரன் என்றெல்லாம் ஆகிவிட்டார்கள். உபயம் ஐ.டி. என்றார்கள்; சாஃப்ட்வேர் என்றார்கள். இது பொதுவாய்ப் பலருக்கு ஒரே நேரத்தில் நிகழும் விதி. அது வேறு.

இந்தச் சிலர் யாரென்றால், ”மனுஷன் குடியிருப்பானா அந்தக் காட்டிலே” என்று நாம் நினைக்கும் ஓர் அத்துவானப் புறநகரில் என்னவோ நினைத்து மனை வாங்கியிருப்பர் ஞான திருஷ்டியெல்லாம் எதுவும் இருந்திருக்காது. ஆனால் சரியாக அந்தப் பகுதியில் வந்து சேரும் வெளிநாட்டுக் கார் கம்பெனி ஒன்று சில ஆயிரம் ரூபாய்களில் வாங்கப்பெற்ற மனைகளை இலட்சங்களில் விலைபேசி வாங்கி, மனைக்குச் சொந்தக்காரர்களை ஓவர் நைட்டில் லட்சாதிபதியாக்கிவிடும்.

அடுத்து, பெரிய நிர்வாக இயல் பட்டமோ அதில் நிபுணத்துவமோ இல்லாத சிலருக்கு, எளிமையான ஓர் இயல்பு இருக்கும். வெளுத்ததெல்லாம் பால் என்பது போல் எல்லோரையும் நம்புவார்கள். மனதில் விகல்பம் ஏதுமில்லாமல் பழகக் கூடியவர்களாய் இருப்பார்கள். எதைச் செய்தாலும் எளிதாய் எடுத்துக் கொண்டு, இனிமையாய்க் காரியமாற்றும் மன வடிவமைப்பு அவர்களுக்கு இருக்கும்.

எதிர்வினை?

அவர்களிடம் பாசம் கொண்ட, எப்பொழுதும் நல்லவிதமாய் அவர்களுடன் பழகும் நண்பர் கூட்டம் ஒன்று விரிவடையும். அவர்களுக்கு உதவ அந்த நட்பு வட்டம் எப்பொழுதுமே ஆர்வமாயிருக்கும். அந்த நட்பு வட்டத்திடம் தமக்கு வேண்டிய உதவிகளை கோரிப் பெறுவது இவர்களுக்கு எளிதாகவே இருக்கும்.

”வெரி நைஸ். கேட்க நல்லாயிருக்கு. இதைப்போல நல்ல ஆக்கபூர்வ வடிவமைப்புகள் என் மனதிலும் ஏற்பட வேண்டும். மாடல் ஆர்டர் செய்தால் எங்காவது கிடைக்குமா?” என்று நெகடிவ்வாளர்கள் யோசிக்கலாம். ”பிறக்கும் போதே கூடப் பிறந்த குணம் சார். அதெல்லாம் நீரைப் பீய்ச்சி அடித்தாலும் போகாது” என்று அவர்களில் வேறு சிலர் சலித்துக் கொள்ளலாம்.

“அப்படியெல்லாம் இல்லை. நாம் மாறினால் நம் வாழ்க்கையும் மாறும்” என்று மனவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஏனாம்?

அதுதான் இயற்கையின் நியதி. பிறக்கும் போதே உடன் பிறந்ததை அப்படி எளிதாய் மாற்றி விட முடியுமா என்ன? எளிதல்ல; ஆனால் சாத்தியம். நிச்சயமாய் சாத்தியம்.

“எப்படி? பிரச்சனையே இல்லையா?”

உண்டு. அதில் பிரச்சனை உண்டு!

தடை!

மாற வேண்டும் என்று நினைக்கும் போதுதான் தடை ஒன்று ஏற்படும். மாற்றம் எளிதாய் நிகழவிடாது அந்தத் தடை தடுக்கும். அது நியதி.

“தொந்தி, தொப்பை, மேல் மூச்சு, கீழ் மூச்செல்லாம் வாங்குகிறது. என்னவோ சிக்ஸ் பேக்காமே அதெல்லாம் வேண்டாம், குனிந்து கால் விரலைப் பார்க்க முடிந்தால் உத்தமம். அப்பொழுதாவது மனைவி, ஏதேனும் கொஞ்சம் காதல் பார்வை பார்க்கக் கூடும்“ என்று ஆசை ஏற்பட, பலநாள் மனப் போராட்டத்திற்குப் பிறகு டயட் முடிவிற்கு வந்திருப்பீர்கள். அந்த வாரம் தான் நெருங்கிய உறவின் திருமணமும் நாலைந்து நாள் வைபவமுமாக ஆடு, கோழியெல்லாம் பலவிதத்தில் வடிவமைக்கப்பட்ட உணவு, பிரியாணி, நெய் ஊறும் பலகாரம் (சைவ உணவாளர்கள் பிஸி பேளா பாத்திலிருந்து குலாப்ஜாமூன் வரை கற்பனை செய்து கொள்ளவும்) என்று உங்கள் முன் தோன்ற……. உங்களது தீர்மானம் காரியக் கமிட்டி கூட்டமெல்லாம் இல்லாமல் தள்ளி வைக்கப்படும்.

ஒருவழியாய் அது முடிந்தால் அடுத்த வாரம் உங்கள் தெருமுனையில் சுத்தமான, சுகாதாரமான பேக்கரி தொடங்கப்படும். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது, மணக்கும் சமூசாவும் பக்கோடாவும் இன்ன பிறவும் உங்கள் தீர்மானத்தைத் தள்ளிப் போட வைக்கும். அதற்கடுத்த வாரம் திடீரென ஒரு வேலை நிமித்தம் மனைவி ஊருக்குக் கிளம்பிப் போக நேரிட………. எந்த ஹோட்டலில் டயட் மீல்ஸ் போடுகிறார்கள்? இப்படியே ஏதோவொரு தடை ஏற்பட்டு, ஏற்பட்டு, டயட் தீர்மானம் என்பது காவிரி ஆணையத் தீர்ப்பாக மாறிவிட்டிருக்கும்.

மாற்றம் நிகழத் தடை இப்படித்தான்.

சம்பாதிக்கும் பணமெல்லாம் தண்ணீராய் இறைந்து விரயமாகிறதே! இந்த மாதம் எப்படியாவது ஒரு தொகையைச் சேமித்து விடவேண்டும் என்று அந்தப் பெண் மேனேஜர் தீர்மானித்து, “இந்த மாதம் புதுப் புடவை, புதுச் செருப்பு, புது லிப்ஸ்டிக், எல்லாவற்றி்ற்கும் நோ!“ என்று அப்படி இப்படி பணம் சேமித்து வைக்கும் போதுதான் அந்தப் படுகோர விபத்து நிகழும். படு பத்திரமாய் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த அவரது ஸ்கூட்டியை இடுத்துத் தள்ளிவிட்டு போயிருப்பான் ஆட்டோக்காரன். இன்ஷுரன்ஸும் இல்லை. மெக்கானிக் பார்த்து விட்டு, ரிப்பேருக்கு அளித்த எஸ்டிமேட் அவரது அந்த மாதச் சேமிப்பையெல்லாம் தாண்டியிருக்கும்! இதில் அவர் பிழை என்ன? ஒன்றும் இல்லை. மாற்றம் நிகழத் தடை, அவ்வளவே!

அங்கே அப்படியென்றால், மற்றொரு குடும்பத்தில் நிகழ்ந்தது என்ன? அங்கே மனைவிக்கு எப்பொழுதுமே குறை.

“உங்களை என்ன ஹீரோ மாதிரியா டிரெஸ் பண்ணிக்கச் சொல்றேன்? கொஞ்சம் மேட்சா, ஷர்ட், கொஞ்சம் அழகான ஷு, ஒரு நல்ல சலூன் விஸிட், அப்படின்னு நாசூக்கா, டீஸென்ட்டா இருக்கச் சொல்றேன்.” எனக் கணவனிடம் முறையிட,

“எல்லாம் இது போதும். இந்த வயசில என்னத்தை ஸ்டைல்?”

“ஸ்டைலைப் பற்றி யாரு சொன்னது? இப்படி ஏனோ தானோன்னு போட்டுக்காம இருந்தா பத்தாது.”

மனைவி மற்றும் பிள்ளைகளின், அங்கலாய்ப்பு, அன்புத் தொல்லை தாங்காமல் அன்று மேட்சாய் டிரஸ் தெரிந்தெடுத்து, அக்கறையாய் அயர்ன் செய்து அணிந்து தெருவில் இறங்கினார் அவர். பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது அது தோன்றியது. அவசர அவசரமாய் வீட்டிற்குள் வந்து பார்த்தால்…….. சந்தேகமேயில்லை, பேண்ட் பின்னால் தையல் பிரிந்திருந்தது. “எனக்கு இதெல்லாம் சரிப்படாது. அப்போதே சொன்னேனே கேட்டியா?” என்ற இரைச்சல் கேட்டு ஓடிவந்தார் மனைவி.

என்ன பெரிய பிரச்சனை இங்கு?

மாறாதே நீ! அது உனக்கு ஒத்துவராது என்று தடை!

நிகழும்! இப்படியெல்லாம், அல்லது இப்படி ஏதாவது, நிகழும்.

ஆனால் நமக்கு சரிப்படாது என்று பழைய நிலைக்குத் திரும்பிவிடுவதோ, முயற்சிகளை கைவிடுவதோ கூடாது.

உணர வேண்டும்!

என்னவென்று?

மாற்றம் எதிர்ப்புக்கு உட்பட்டது என்பதை உணர வேண்டும்.

எனவே மாற வேண்டும் என்று யோசித்தவுடன் எதிர்ப்புக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்!

உற்சாகத் தொடர் - 4

பொதுவாய் மனிதனுக்கு இருவகையான மனோ வடிவமைப்புகள் உள்ளன. அவையே அவனது குணங்களின் அடிப்படை ஆகும்.

ஒன்று ஆக்கபூர்வமானது (positive),

மற்றொன்று எதிர்மறையானது (negative).

இவை இரண்டும் அடிப்படையான மனித குணங்கள். இவை, நாம் போகிற போக்கில் ‘நானும் வரட்டுமா?’ என்று வந்து சேர்ந்து கொண்டவை இல்லை. மாறாய், மனிதன் பிறந்ததலிருந்தே அவை அவனுள் உருவாகி, வடிவாகி, நிலைபெறுகின்றன.

பிறகு?

அவை விடாப்பிடியாக அவனுடன் ஒட்டிக் கொள்கின்றன. அவனிடமிருந்து போக மறுக்கின்றன.

மனிதன் பிறந்ததிலிருந்தே என்பது ஒரு பேச்சுக்கு சொன்னதில்லை. உண்மையிலேயே அவன் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து தான்.

எப்படி?

ஒரு விளக்கம் சொல்கிறார்கள்…

பிறந்த குழந்தையின் முதல் தகவல் பரிமாற்றம், ‘அன்பார்ந்த அம்மா, அப்பாவே!’ என்று ஆரம்பிப்பதில்லை.

அழுகை!

பசியா? அழுகை!

தாகமா? கத்தி அழுகை!

அப்படி ஆரம்பித்து, ‘சூச்சா, மூச்சா’ போய் ஈரமாய் இருந்தால், பொம்மை வேண்டும் என்றால், ச்சும்மா போரடிக்குது, எரிச்சலாக இருக்கிறது என்றால், அடாசு சீரியலை விட்டு அம்மா எழுந்து வரவேண்டும் என்றால்... அனைத்திற்கும் அழுகை.

கைக்குழந்தை அழுதால், அம்மாக்களுக்கு முதலில் தோன்றுவது, ‘அச்சோ! குழந்தை பசியால் கத்துது பார்!’ அதனால், உடனே பால் புகட்டப்படும். அதிலும் அழுகை அடங்கவில்லை என்றால் தான், பாட்டிகள் சொல்லலாம், “கொஞ்சம் உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் கொடேன்; நீ கொழந்தையா இருக்கச்சே நானும் அதத்தாங்கொடுத்தேன்”.

ஆக, குழந்தையுடன் முதல் பதில் தகவல் பரிமாற்றம், பால், உணவு, தின்பண்டம். மற்ற நேரத்திற்கு வாயில் ‘நிப்பிள்’! சிறு வயதிலிருந்தே இப்படி உணவை ஊட்டி வளர்க்கும் பழக்கம் தான், பின்னர் சிலருக்கு வளர்ந்தபின் அதிகமாய் உணவு உண்ணும் வழக்கமாய் ஆகிவிடுகிறது என்கிறார்கள். நம்ப முடிகிறதா?

நானறிந்த வரையில் சிலருக்கு உணவு வகையைப் பொறுத்து வயிற்றின் கொள்ளளவு மாறுபடுவதை கண்டிருக்கிறேன். சிலருக்கு இடியாப்பம், பாயா, சிலருக்கு பிரியாணி! வேறு சிலருக்கோ அயிரை மீன் குழம்பு என்று எழுதிக் காண்பித்தாலே போதும். அவையெல்லாம் ஒருவர் வளர வளர, நா உண்டுணர்ந்து, மனம் பகுத்துணர்ந்து பரிணாமம் அடைந்ததாய் இருக்கலாம்.

மனோவியலாளர்கள் சொல்கிறார்கள், ‘பொதுவாய்க் குழந்தைப் பருவத்தில் அழுகையை நிறுத்தப் பாலும், உணவும் ஊட்டப்பட்டு வளர்த்ததால் சிலருக்குப் பிற்காலத்தில் அவர்களுடைய எரிச்சல், தனிமை, மன அழுத்தம் ஆகியனவற்றுக்குப் பரிகாரத்தை மது பாட்டிலிலும் சிகரெட்டிலும் காண மனம் உந்துகிறது’ என்று.

அடுத்து,

ஒருவருடைய நிகழ்காலக் குணாதிசயம் என்பது அவருடைய குழந்தைப் பருவ அனுபவங்களின் அடிப்படையைக் கொண்டே வடிவம் கொள்கிறது என்கிறார்கள். குழந்தைகளுக்கு இருப்பதெல்லாம் ‘திறந்த மனது’, ‘காலியான மூளை’. தவறாய் விளங்கிக் கொள்ளக்கூடாது. க்ளீன் சிலேட்போல என்று பொருள். குழந்தைகளுக்கு எவ்விதமான முன் தீர்மானங்களும் இருப்பதில்லை என்பதைத் தான் அப்படி விவரிக்கிறார்கள். நாம் பிஞ்சு மனம் என்கிறோமே அது! நஞ்சு கலக்ககாத பிஞ்சு மனம்! ஆனால் அது படு கூர்மையானது. பஞ்சு நீரை உறிஞ்சுவதைப் போல் அது விஷயத்தைச் சடுதியில் பிடித்துக் கொள்ளும்.

டிவியில் லேட்டஸ்ட் ஹிட் பாட்டுக்கு, நடிகை துக்கடா டிரெஸ்ஸுடன் இடுப்பொடித்து ஆடும் டான்ஸைப் பார்த்துவிட்டு, குட்டி ஜட்டியுடன் குழந்தை ‘தத்தக்கா பித்தக்கா’ என்று பாடி ஆடும்போது பெற்றோர்களுக்கு வாயெல்லாம் பல். போதாததற்கு வீட்டிற்கு வரும் விருந்தாளிகளின் முன்னிலயிலும் மகளை ஆடவிட்டுப் புளங்காகிதம்தான். அதே குழந்தை வளர்ந்தபின், அதே நடிகைகளைப் போல், ஜட்டியை விட ஒரு இன்ச் பெரிய குட்டைப் பாவடையுடன் காலேஜ், ஷாப்பிங் என்று போக ஆரம்பிக்கும் போதுதான், ‘என்ன ஃபேஷன் கர்மம் இது?’ என்று தலையில் அடித்தக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

அதற்கடுத்து -

சிறு வயதில் பெற்றோர்களுடன் ஏற்படும் உறவு தான், ஒருவர் வளர்ந்ததும் அவர் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கை, பிறருடனான உறவு ஆகியவற்றுக்கு அடித்தளமாய் அமைகிறது. பாதி அவர் அறிந்து; பாதி அவர் அறியாமலேயே!

வளர்ச்சியடைந்த ஒரு மனிதனால் தன் பெற்றோர் போல் குணாதிசயம் கொண்ட மனிதர்களுடன் இயல்பாய் உறவு ஏற்படுத்திக் கொள்ள முடிகிறதாம். தன் அப்பாவைப் போல் அக்கறையான கணவன் அமைய வேண்டும் என்று ஒரு பெண் விரும்புவதும் தன் தாயைப் போல் பாசமான மனைவி அமைய வேண்டும் என்று ஆண் எண்ணுவதும் இதன் அடிப்படையில் தான் என்கிறார்கள்.

மற்றோருடன் அன்பாய்ப்ப் பேசி, நட்புறவு கொள்பவர்களாய்ப் பெற்றோர் இருந்தால், பிள்ளைகளுக்கும் அந்த குணம் வந்து அமைகிறது. வசவுச் சொல்லே செந்தமிழாய்ப் பேசும் பெற்றோரைக் கண்டு வளரும் வாரிசும் அப்படியே!

சென்னையில் பேட்டையில் வாழும் சிறுவர்களைப் பார்த்திருப்பீர்கள் – ‘ஆத்தா’ எனும் ‘தாய்’ சொல், கெட்டு குட்டிச்சுவராகியிருக்கும்.

எதற்கெடுத்தாலும் குழந்தைகளைத் திட்டி, குற்றம் சொல்லி, ‘நீ உருப்படாமத் தான் போகப் போறே போ!’ என்று பெற்றோர்கள் வளரும் குழந்தைகளுக்கு நல்லாசி வழங்கியவாறு இருந்தால், அந்தப் பிள்ளைகள் பூரண சுயசிந்தனையுடன் தங்களை உருப்படாமல் ஆக்க உதவும் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

அதற்கு மாறாய், அன்பும், நற்சொல்லும் கேட்டு வளரும் சிறுவர்கள் இயல்பாகவே நல்லொழுக்கம் படர்ந்தவர்களாய் வளர்கிறார்கள். அத்தகையோருடன் உறவும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

எங்கும் எதிலும் விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் இதுதான் பொது நியதி!

மனதின் வடிவமைப்பு, அதன் பல அம்சங்கள் என்று இங்கு இதுவரை கண்டதெல்லாம் மேலெழுந்த சமாச்சாரங்களே. பிரச்சனைகளைப் புரிந்து கொண்டாலே பாதிப் பிரச்சனை தீர்ந்தது போல் தானே! ஆகவே நாம் எந்தவகை என்று தெரிந்து கொண்டால் திருத்திக் கொள்ளலாம். அல்லது...

மேலும் திருத்திக் கொள்ளலாம்.

மன மகிழ்விற்கு முதல் கட்டமாய் மனதார ஒன்றை நம்ப வேண்டும். இதுவரை நாம் பார்த்ததில் அது மிக முக்கியம்.

என்ன அது?

விடாப்பிடியாய்த் தொடரும் எந்தக் கெட்ட குணத்தையும் நம்மால் வெல்ல முடியும்!

ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி உயர்வாகவே கருத வேண்டும்; . நல்லவற்றையே சிந்திக்க வேண்டும். தமது செயல்களை ஆக்கபூர்வமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தடை வரும். உடைத்தெறியப்பட வேண்டிய தடைகள்!

தாண்டினால்?

உள்ளுக்குள் எங்காவது பல்பு எரியும்! நெஞ்சுக்குள் எங்காவது மணி அடிக்கும்! மனதில் மகிழ்ச்சி எட்டிப் பார்க்கும்! புத்துணர்வு உள் நுழையும்!

அப்படியானதும், அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மேம்படுத்தி வளர்த்துக் கொள்ளச் சான்றோர்களுடன் உறவு ஏற்படு்த்திக் கொள்ளச் சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

நான் நமது அரசியல்வாதிகளின் அறிக்கைகளைப் படிக்காமல் இருக்க உபதேசிப்பேன்.

உற்சாகத் தொடர் - 5

நமது மனது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அது உலகத்தை உணர்கிறது. மனது உலகத்தை எப்படி உணர்கிறதோ அப்படித்தான் உலகம் நம்மைப் பிரதிபலிக்கிறது.

குழப்புகிறதோ?

ரொம்ப சிம்பிள்.

நீங்கள் உற்சாகமாய், “குட் மூடில்“ இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் மற்றவர்களிடம் அன்பாய், இனிமையாய், நகைச் சுவையாய்ப் பேசுவீர்கள்.. பதிலுக்கு அவர்களும் உங்களிடம் அப்படியே பிரதிபலிப்பர். நீங்கள் சிரித்து நண்பரின் முதுகைத் தட்டினால் அவர் கத்தி எடுத்துக் கொண்டு உங்களைக் குத்த வரப்போவதில்லை. பதிலுக்கு அவரும் சிரித்தாக வேண்டும். உலகமே அன்று உங்களுக்கு மகிழ்ச்சியாய், இனிதாய்த் தோன்றும்.

நீங்கள் உற்சாகம் குன்றி, வருத்தத்திலும் அழுது வடியும் முகத்துடனும் இருந்தால்? பொறுமைசாலியான நண்பராய் இருந்தால், ஒரு சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்து உங்கள் சோகக் கதையைக் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம். அல்லது, தூரத்திலிருந்தே உங்களைப் பார்த்துவிட்டு ஓடும் பஸ்ஸில் ஃபுட்போர்டில் தாவி ஏறி ஓடிவிடலாம். அதைக் கண்டால் மேலும் சோகம் பெருகி, மேலும் வருத்தப்பட்டு... கஷ்டம்.

நம்மைப் பற்றி நம் மனதிலுள்ள சுயபிம்பம் தான், நாம் எப்படி நடந்துகொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் தான் நாம் யாரிடம் பழகப் போகிறோம், என்ன செய்யப் போகிறோம், அல்லது செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது..

சரி, நம்மைப் பற்றிய பிம்பம் நமக்குள் எப்படி உருவாகிறது?

அது நமது அனுபவங்களின் கலவை. நாம் சந்தித்த வெற்றி, தோல்வி, நம்மைப் பற்றி நாம் நினைப்பது, மற்றவர்களைப் பற்றி நம் மனதில் ஏற்படும் அபிப்ராயம், மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறை, இவையெல்லாம் நம்முடைய சுயபிம்பம் உருவாகும் காரணிகள். அதை மனம் நம்புகிறது. அந்த பிம்பத்தின் கட்டுமானததிற்குள்ளேயே நம்முடைய வாழ்க்கையை அது அமைத்துக் கொள்கிறது.

அந்த சுயபிம்பம் தான், இந்த உலகத்தை நாம் எந்தளவு நேசிக்கப் போகிறோம், அதில் வாழ என்னென்ன முயற்சி எடுக்கப் போகிறோம் என்பதையும், நாம் வாழ்க்கையில் எதை சாதிக்கப் போகிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

நாம் யார் என்று நினைக்கிறோமோ அது தான் நாம்!

அந்த சுயபிம்பம் நம்மை எப்படி வடிவமைகிறதோ அது தான் நாம்!

பள்ளியில், கல்லூரியில் ஏதாவது ஒரு பாடம் படு்த்தியெடுக்கும். ஒருவர் பௌதிகத்தில் வீக்காக இருப்பார். “என்னதான் தலைகீழாக நின்றாலும் இது என் மண்டையில் ஏறாது” என்ற முடிவிற்கே வந்துவிடுவார். ஆரம்பத்தில் ஏதாவது ஒரு பெளதிக விதி சற்றுப் புரியாமல் ஆகி, அதைத் தொடர்ந்து அந்தத் தேர்வில் சற்றுக் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அலர்ஜியாக உருப்பெற்று, ”ம்ஹும்! காப்பி அடிக்கலாமா? பிட்டு அடிக்கலாமா?” என்று குறுக்குவழிக்கு மனம் தயார்பட ஆரம்பித்திருக்கும்.

மனம் மேலும் மேலும் அந்தப் பாடத்தில் அவரைப் பின்தங்க வைக்கும். அப்படியே தப்பித் தவறிச் சற்று நல்ல மதிப்பெண் கிடைத்துவிட்டாலும், ”ஹ! எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்” என்று தான் மனம் நம்பும். அடுத்த தேர்வில் தோல்வி வந்தால், ”அதான் அப்பவே தெரியுமே!” என்றுதான் மனம் நிம்மதி அடையும்.

பௌதிகம், உதாரணம் மட்டுமே! வாழ்க்கையில் ஒருவர் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தில் பின்னடைந்து இருக்கலாம், வீக்காக இருக்கலாம்.

சைக்களில் டபுள்ஸ் அடிக்கும் போது ஒருமுறை விழுந்திருப்பார். அதன் பிறகு தம்மால் டபுள்ஸ் அடிக்க முடியாது என்று முடிவெடுத்து அதையே நம்ப ஆரம்பிப்பார். தாம் மனதளவில் அதைப் பலமாய் நம்புவது மட்டுமில்லாது, பார்ப்பவரிடமெல்லாம் அதைப் பறை சாற்றிககொள்ளவும் செய்வார்.. எதிர் வீட்டு மாமா, அடுத்த வீட்டு வேலைக்காரி, காலையில் பால் சப்ளை செய்பவர் என்று யாரிடமெல்லாம் சகஜமாய்ப் பேசுவாரோ அத்தனைப் பேரிடமும் அவரது பலவீனம் விளம்பரம் ஆகும். எவ்வளவுக்கு எவ்வளவு அவர் அப்படிச் சொல்லிக் கொள்கிறாரோ மற்றவர்களும் அந்த அளவுக்குஅதை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அதைக் கொண்டு மனம் மேலும் தன்னை அப்படியே நம்ப, அவரது பலவீனமான சுயபிம்பம் வலுவடைந்து விடுகிறது.

இதை மாற்ற, நம்மைப் பற்றிய உயர்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

அதற்கு என்ன செய்யலாம்.

மாத்தியோசி!

நம்முடைய பாஸிட்டிவ் தன்மைகளை உணர்ந்து நம்மால் நம் குறைகளைக் களைந்து முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை முதல்படி. தம்முடைய சக்தியையும் வலிமையையும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், அதுவே ஒருவரை வேகமாய் முன்னேற வைக்கும்.

“என்னதான் ஸ்பின் போட்டால்லும் என்ன? துரத்துகிறேன் பார் அதைப் பவுண்டரிக்கு” என்று நினைத்தால் அதுதான் தன்னம்பிக்கை. அம்பயர் கையை வேகமாய் வலமும் இடமும் ஆட்ட வேண்டியது தான்.

மாறாக “இந்த ஸ்பின்னெல்லாம் தாங்குவேனா” என்று நினைத்தால் அம்பயர் ஒற்றைக் கையின் ஒற்றை விரலை மேலே நீட்டி விடுவார்.

“வர வருமானத்திலே எப்படித் தான் குப்பைக் கொட்டுவதோ” என்று நினைத்தால் மாசா மாசம் பற்றாக்குறை தான்.

“எப்படியும் சமாளிச்சுடலாம்” என்று நினைத்துப் பாருங்களேன். மாயம் நிகழும்.

இது இப்படியிருக்க,

தமது வாழ்க்கையில் ஓரளவு தான் நல்லது நடக்கும் என்று சிலரது மனம் தேவையில்லாமல் ஒரு வரைமுறை வைத்திருக்கும். அவரது வாழ்க்கையில் நல்லதே நடந்து கொண்டிருக்கிறது என்று வையுங்கள், ”அதெப்படி எல்லாமே இவ்ளோ சூப்பரா நமக்கு நடந்து கொண்டிருக்கிறது” என்று அவரது மனம் ஆச்சரியமும், இனந்தெரியா பதட்ட நிலையையும் அடைய, அடுத்து ஏதாவது ஒரு தீயது நிகழலாம்.

“அதானே பார்த்தேன். அப்படி நமக்கு எல்லாமே ஒழுங்கா நடந்துட்டாலும்?” என்று அப்பொழுதுதான் மனம் சமாதானம் அடையும்.

மனதை இன்பமாக வைத்துக் கொள்ள வரைமுறை தேவையில்லை. நம்மை விட வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எத்தனைக் கோடி உள்ளார்களோ அதே போல் நமக்கும் கீழே உள்ளவர் கோடி.

எனவே நமது சுயபிம்பத்தை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ள நமது வாழ்க்கையின் தரம், அமைதி, நோக்கம் இவற்றைத் தரமானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

இங்கு ஒன்றை மிகக் கவனமாய் மனதில் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உயர்வான சுயபிம்பம் என்பதற்கும் கர்வம், அகந்தை தலைக்கணம் போன்ற சொற்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை உணர வேண்டும்.

இல்லையென்றால் என்னாகும்?

தரமான சுயபிம்பம் மனமகிழ்வுடன் நாம் வாழ்க்கையில் உயர வழிவகுக்கும்.

மற்றவை? சட்டசபை, நாடாளுமன்றம், என்று எங்காவது நம்மை அனுப்பி வைக்கலாம்.

உற்சாகத் தொடர் - 6

சுயபிம்பம் எனும் சமாச்சாரத்தைச் சென்ற வாரம் பார்த்தோம்.

அதன் விதி -- சுயபிம்பம் “தரமானதாக” இருக்க வேண்டும்.

அதற்கு அடுத்த விதியும் ஒன்று உண்டு.

சுயபிம்பம் “உண்மையிலேயே” தரமானதாக இருக்க வேண்டும்.

என்ன வித்தியாசம்?

சகிக்கவே முடியாத கேரக்டர் உள்ள ஒருவர் -- பொய், புரட்டுவாதம் எல்லாம் மனிதருக்குத் தண்ணீர்பட்ட பாடு. ஆனால் தம்மைப் பற்றி காந்தி, நேரு ரேஞ்சிற்கு மிக உசத்தியாக நினைத்துக் கொண்டு, காந்தி சொல் கேட்டுத் தண்டி யாத்திரைக்கு மக்கள் படை புறப்பட்டுச் சென்றது போல், தம் பேச்சிற்கு ஏற்பவும் மக்கள் ஆடவேண்டும் என்று நினைத்தால், அது அகங்காரம்! “தான்” எனும் அகங்காரம்! FM நேயர்களும் புரியும்படி சொல்வதென்றால் ஈகோ!

ஈகோ உள்ள நிறையப் பேரை உங்களுக்குத் தெரிந்திருக்கும்! ஏனெனில் அரசியலில் இதெல்லாம் சகஜமாச்சே!

“தான்”, “இறுமாப்பு”, “ஆணவம்” போன்ற சில வார்த்தைகள் அகராதிகளில் உள்ளன. அவை நோய் ஆகும். ஆனால் விசித்திரமான நோய். அந்த நோய் யாரிடம் உள்ளதோ அவரைத் தவிர மற்றவர்கள் தான் அந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள். இந்த “ஈகோ”வாசிகளி்ன ஆசையெல்லாம் மிகவும் எளிதானது.

தாங்கள் மட்டுமே எப்பொழுதும் பேசப்படுபவர்களாக இருக்க வேண்டும்; தம்மைச் சுற்றி நாலுபேர் எதையாவது சொல்லிப் புகழாரமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; செய்தியில், மேடையில் தங்களுடைய பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்!

அங்கீகாரத்திற்கு அவர்களின் மனம் ஆலாய்ப் பறக்கும்.

சக மனிதர்கள், அவர்களது நலன் எதுவும் அவர்களுக்கு பொருட்டே இல்லை. இவர்கள் தாம் மேற்சொன்ன இரண்டாவது விதியில் காலியாகிவிடுபவர்கள்!

அதில் பாஸ் ஆக வேண்டுமென்றால், சரியான “அகராதிப் பிடித்த” சொற்களான “தான்”, “இறுமாப்பு”, “ஆணவம்”, ஆகியனவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு, கவனமாகத் தூக்கிக் கடாசி விட்டால் போதும். ஆரோக்கியமான சுயபிம்பம் என்னவென்று தெரிந்துவிடும்!

அப்படி நீங்கள் தரமான சுயபிம்பவாதியாகப் பாஸானவுடன் “ஆத்தா! நான் பாஸாயிட்டேன்!” என்று கூவுகிறீர்களோ இல்லையோ, சில விஷயங்கள் உங்கள் வாழ்வில் நிகழும். கஷ்டப்பட்டு பாஸ் செய்துள்ளீர்கள் boss. எனவே எல்லாம் நல்ல விஷயம் தான்.

முதலாவது தடுக்கவே இயலாமல் ஆனந்தமான மனநிலை ஒன்று உருவாகி, வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வழிவகுக்கும்.

சாதனை என்றதும் நோபல், ஆஸ்கர், அல்லது நடிகருடன் உரசிக்கொண்டு எடுத்த போட்டோ போன்றவை அல்ல. நாலே முக்கால் நிமிடம் பாட்டுப் பாடினால் பெரிய கோடீஸ்வரனாக ஆகிவிடுவேனா என்று அபத்தமாகவும் கேட்கக்கூடாது.

தன்னலமற்ற எந்தச் சிறு உபகாரமும் கூட சாதனையே! ஏனெனில், சுத்தமற்ற மனங்கள் தன்னலத்தை விடுவதில்லை! தானமோ, தர்மமோ; உழைப்போ, உபகாரமோ; தரமான சுயபிம்பவாதி ஆனந்தமாய்ச் செயல்பட ஆரம்பித்திருப்பான். அந்த முயற்சிகளும் சாதனைகளும் பெருமையையும் மனநிறைவையும் அவனது மனதினுள் உண்டாக்கும்!

ஆயினும்.............

“இதெல்லாம் இருக்கட்டும். நான் ஒன்றும் உத்தமபுத்திரன் இல்லையே! என்னிடம் இன்னின்ன குறைகள் இல்லையா? வெளியில் பகிர்ந்துக் கொள்ளக்கூடியவையா அவை? அவற்றைச் சரிசெய்ய முயற்சி செய்வோம்,” என்று அடிமனம் சுயவிமர்சனம் ஒன்று வைக்கும்.

மேற்சொன்ன இரண்டு விதிகளுக்கும் பொருந்தி, தரப் பரிசோதனையில் வென்ற மனதல்லவா? எனவே அது தனது சாதனையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளாது! இயற்கையாய்க் கூடவே உருவாகியுள்ள தன்னடக்கம் காரணம்.

அடுத்தொன்று நிகழும்.

நம்மைப் பற்றி நமக்கே உருவாகும் நல்லபிமானம்! நம்மை நாமே உண்மையாய் மதித்துக் கொள்ளும் நல்லபிமானம். அதன் தொடர்ச்சியாய் நம்மோடு வாழும் மக்களிடமும் மதிப்பு செலுத்தத் தோன்றும். நாம் நம்மை எப்படி மதிப்போமோ அப்படி மற்றவர்களையும் மதிக்கத் தோன்றும்! தரமான சுயபிம்பத்தின் சரியானதொரு அடையாளம் இது.

இத்தகைய நல்ல சுயாபிமானம் ஏற்பட்டுவிட்டால், மற்றவர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அனாவசிய நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உற்சாகத்திற்கும் தேவையானதை செய்துகொள்ள மனம் வழிவகுக்கும். செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.

உங்களுக்குப் பிடித்தமான ஆடை வாங்கலாம்! பிடித்தமான உணவு உண்ணலாம்! (அதற்கு முன் டாக்டரிடம் சென்று BP, சர்க்கரை, கொலஸ்ட்ரால் செக்-அப் செய்து கொள்வது உத்தமம்.) டி.வி. கனெகஷனைப் பிடிங்கிவிட்டு புத்தகம் வாசிக்கலாம்! பிடித்த ஊருக்குப் பிரயாணம் செல்லலாம்!

”சாத்தியமா அதெல்லாம்? சத்தியமாய்ச் சொல்கிறேன், எனக்கு ஈகோவின் ஸ்பெல்லிங் கூடத் தெரியாது. ஆனால், என்னைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்; ஆரோக்கியமாகவும் உணர்கிறேன். ஆனால் கூடவே ஆரோக்கியமாய்க் குத்துக்கல்லாட்டம் என் மாமியாரும் உண்டு. நான் எப்படி பதில் சொல்லும் நிர்ப்பந்தம் இல்லாமல் என் இஷ்டத்திற்கு எதையும் செய்வது?” என்று மருமகள்கள் யாராவது பின்னூட்டம் இடலாம்.

அதற்கு மாமியார், மாட்டுப்பெண் உறவு குறித்த புத்தகங்கள் கிடைக்கின்றனவா என்று வாசகர்கள் தேடிப்பார்க்க வேண்டியது தான்.

இங்கு சொல்லவந்த செய்தி - தரமான சுயபிம்பம் மனமகிழ்வுடனான வாழ்க்கைக்குத் தேவையானதைத் தானாய்ச் செய்ய ஆரம்பித்துவிடும். அதுதான் சாராம்சம்.

மட்டுமல்லாது, அந்த மனிதனின் தரத்தை உலகம் தானாய் உணர ஆரம்பிக்கும். பாராட்டுதல்கள் வரும். தானாய் வரும்!

தன்னைப்பற்றித் தனக்கே நம்பிக்கை இல்லாதவனுக்குத்தான் தம்பட்டமும் ஜால்ராவும தேவைப்படுகின்றன. மனித இனமே தன்னைப் பார்த்து அங்கலாய்க்க வேண்டும் என்று விரும்புகிறான். இதுவோ சுத்தமான மனது. இதற்கெதற்கு பாராட்டும் சால்வையும்?

எனில், பாராட்டு தவறா?

ஜெஸ் லய்ர் (Jess Lair) என்றொரு உளவியலாளர். உளவியல் குறித்த புத்தகமெல்லாம் எழுதியுள்ளார். அதில், “பாராட்டு என்பது மனித ஆன்மாவிற்கு இதமான சூரிய ஒளி போலாகும். அது இல்லாமல் மனிதனால் வளரவோ, பூக்கவோ முடியாது. ஆனால் நாமோ பிறர் மீது குற்றம் குறை சொல்லிச் சொல்லியே, கடுமையான குளிர் காற்றை இறைத்து அவர்கள் வளராமல் உறையச் செய்கிறோம். நம்முடைய சக மனிதர்களுக்குத் தேவையான இதமான பாராட்டுதல்களை அளிக்க ஏதோவொரு விருப்பம் இல்லாமலேயே இருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

பாராட்டு தவறில்லை. அது நேர்மையுடன் இருக்க வேண்டும். ஒரு கோப்பை காபிக்குத் தேவையான சர்க்கரை போல் அளவுடன் இருக்க வேண்டும். இவை இரண்டும் தவறினால் அதன் பெயர் முகஸ்துதி! முகஸ்துதி தப்பு! தப்பு மட்டுமல்ல பாபமும் ஆகும்!

ஆகவே பாராட்டும் அந்தப் பாராட்டை நன்றியுடன் ஏற்றுக்கொள்வதும் தான் நல்லது. மன மகிழ்விற்குத் தேவையானது.

ஏதோ ஒரு நல்ல காரியம் செய்ததற்காக ஒருவர் உங்களுக்கு மனமார நன்றி உரைத்து, உங்களை அளவோடு நேர்மையாய்ப் பாராட்டினால், அதை நளினமாய் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். பாராட்டு சரியான சமாச்சாரத்துக்கா, உண்மையா, முகஸ்துதியா என்பதை உணர்ந்தால் போதும். தீர்ந்தது விஷயம். அதை “நன்றி” சொல்லி ஏற்றுக்கொள்வதுதான் இருவருக்கும் நல்லது.

அதை விட்டுவிட்டு, உங்களிடம் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்தி நினைத்துக் கொண்டு அதை ஏற்காமல் நிராகரிப்பது முறையில்லை. ஏனெனில் உலகில் குறையேயற்ற மனிதன் என்று யாரும் இருக்கிறார்களா என்ன?

உழைத்துப் படித்து தேர்வில் முதல் இடத்தில் வெற்றியடைந்த உங்களை ஒருவர் பாராட்டும்போது, “அப்படில்லாம் இல்லைங்க. குருட்டு அதிர்ஷ்டம். முதல் மார்க் கிடைத்து விட்டது” என்றுச் சொல்வீர்களோ? அப்படிச் சொன்னால், கேவலப்படுவது உங்கள் உழைப்பாயிற்றே? தவிர, மனதார பாராட்ட முனைந்த அவருக்கும் அதிர்ச்சி.

நீங்கள் குருவியாய்ச் சேகரித்து, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அழகாய் இருக்கிறதென்று மனமார ஒருவர் சொல்லும் போது, “என்னத்தை பெரிய வீடு கட்டிட்டேன்“, என்று சொல்வது முறையில்லையே!

உண்மையிலேயே அழகாய்த் திகழும் ஒரு பெண்ணிடம், “இந்த உடையும் உன் தோற்றமும் ஸூப்பர்; மெய்யாலுமே நீ ரொம்ப அழகா இருக்கே,” என்று தோழி மனதாரப் பாராட்டும் போது, கூச்சமாய் இருந்தாலும் மென்மையாய் நன்றியுடன் ஏற்றுக்கொள்வதே முறை. மாறாய், “அப்படியெல்லாம் இல்லை, என் உதடு கொஞ்சம் தடிப்பா இருக்கு. இடுப்பும் பாரேன் பெரிசு,” என்று பதில் அளித்தால் பாராட்டுபவருக்கு ஏற்படும் அதிருப்தி ஒருபுறமிருக்க அடுத்த முறை அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவரின் அத்தனை நிறைகளும் மறைந்து போய், அவரே எடுத்தியம்பிய குறைகள் தான் கண்ணில் பளிச்செனத் தென்படும்.

வேறு யாரிடமாவது அந்தப் பெண்ணை அடையாளம் சொல்ல வேண்டியிருந்தால், “அதாம்பா, உதடு கூட கொஞ்சம் தடிப்பா, இடுப்பு பெரிசா இருக்குமே. அவங்க தான்” என்று அடையாளம் சொல்லுமளவிற்கு ஆகிவிடும்.

பாராட்டுரை என்பது ஒரு அன்பளிப்பு, நன்கொடை. உங்களுக்கு வரும் அன்பளிப்பை அளிப்பவர் முகத்திலேயே நீங்கள் விட்டெறிவது எப்படித் தப்போ, அப்படித் தான் பாராட்டை நிராகரிப்பதும்.

எனவே நேர்மையான பாராட்டுதல்களை, நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

உற்சாகத் தொடர் - 7

நமது சுயபிம்பத்தின் வடிவத்தை நாம் அறிவது எப்படி? நமது மதிப்பை உணர்வது எப்படி?

சுயபிம்பத்தின் வடிவத்தை அறிவது ரொம்பவும் ஈஸிங்க. சுற்றுமுற்றும் பார்த்தாலே போதும். நமது நண்பர்கள் தெரிவார்கள். அவர்களுள் நாம் தெரிவோம். நமக்குத் தெரிந்த பழமொழி தான், “உன் நண்பனைச் சொல்; நீ யாரென்று சொல்கிறேன்.”

இயற்கையாகவே நாம் சில குறிப்பிட்ட வகை மனிதர்களோடு அன்னியோன்யமாய் உறவாட ஆரம்பித்திருப்போம். அவர்கள் யார்? நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அப்படி நம்மை நடத்துபவர்கள்!

பெரிசுகள் சொல்வார்களே, “அதான்யா! இனம் இனத்தோட சேரும், பணம் பணத்தோட சேரும்.”

கொஞ்சம் இலக்கியத்தரமாய்ச் சொன்னால் "சேரிடம் அறிந்துசேர்!"

தரமான வடிவுடைய சுயபிம்பவாதிகள், தாங்கள் சிறப்பான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். அது கர்வமில்லை; நாகரீகமாய், கௌரவமாய் நடத்தப்பட வேண்டும் எனும் நியாயமான விருப்பம். அவர்கள் தங்களைத் தாங்களே தரமானவர்களாய்க் கருதுவதால், தங்களைச் சுற்றித் தரமான பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அது தரமான மக்களை அவர்களுக்கு நண்பர்களாய் உருவாக்கித் தந்துவிடும்.

அதை விட்டு, “நான் பூட்ட கேஸு! எந்த மேட்டரை நான் உருப்படியா செஞ்சிருக்கேன். நமக்கு அறிவே அம்புட்டுதேங்” என்று நினைத்தால் அத்தகைய செயல்பாடுகள் தான் உங்களிடமிருந்து வெளிப்படும். அதற்கேற்பத்தான் உங்களைச் சுற்றி மக்கள் அமைவார்கள்; அதற்கேற்பவே உங்களையும் நடத்த ஆரம்பிப்பார்கள்.

இது சுயபச்சாதாபம்!

இத்தகைய சுயபச்சாதாபம் எத்தனை நாள் நீடிக்கும்? எத்தனை நாள் வரை நீங்கள் மாறாமல் இருக்கிறீர்களோ அத்தனை நாள் வரை! மாற்றம் தொடங்க வேண்டியது உங்களிடமிருந்து தான். சட்டசபையில் யாரும் தீர்மானம் போட்டு வந்து உங்களை மாற்றப் போவதில்லை.

தம்மைக் கண்ணியமாய்க் கருதுபவர்கள், கண்ணியமாகவே நடந்து கொள்வார்கள். கண்ணியவான்களுடனே நட்புப் பாராட்டுவார்கள். அவர்களும் இவர்களைக் கண்ணியமாகவே நடத்துவார்கள்.

பான்பராக் பாஸ்கருக்கு, சல்பேட்டா சங்கருடன் தான் அன்னியோன்யம் ஏற்படுகிறது. தொழிலதிபருக்கு மந்திரியுடன்! வேண்டுமானால் பாஸ்கரும் சங்கரும் கூட மந்திரிக்கு நெருங்கியவராய் இருக்கலாம். ஆனால் அது வேறு சமாச்சாரம். மந்திரியின் அண்டர் க்ரவுண்ட் சமாச்சாரம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது யாதெனில், ”நம்மைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நம்மைச் சுற்றியுள்ள மக்கள் வட்டம்.” உங்கள் சுயபிம்பம் 'க்வாலிட்டி'யானது என்றால் உங்களது நட்பு வட்டமும் 'க்வாலிட்டி' தான்.

உளவியலாளர்கள் ஒரு கருத்துச் சொல்கிறார்கள், "பெண்களின் சுய பிம்பத்தின் தரம் குறைவு."

எப்படி?

உருப்படாதவனையோ, குடிகாரனையோ அவர்கள் கணவனாய் அடையும் போதும் அடித்து உதைக்கும் புண்ணியவானைப் புருஷனாய் அடையும் போதும் “கல்லானாலும் கணவன், புல்லானும் புருஷன்” என்று அவர்கள் அடங்கிக் கிடப்பதற்கு அதுதான் காரணம் என்கிறார்கள். கலாச்சாரம், மண்ணின் மகிமை, பெண்ணின் பெருமை என்பதெல்லாம் அதற்கு நாம் மாட்டும் போலி முகமூடிகள் எனலாம்.

இத்தகைய பெண்கள் “எல்லாம் என் விதி!” என்று சுயபச்சாதாபத்தில் கிடப்பவர்கள். இவர்கள் தங்கள் சுய பிம்பத்தை மாற்றிக் கொள்ளும் வரை அவர்கள் வாழ்க்கை மாறப் போவதில்லை. அப்படி மாறும் போது அவர்கள் வாழ்விலும் மாற்றம் நிகழும். புருஷன் திருந்தலாம்! அல்லது புருஷனேகூட மாறலாம்!

இதெல்லாம் சுய பிம்பத்தின் வடிவம். ஆச்சா?

அடுத்து சுய மதிப்பின் தரத்தைப் பார்ப்போம்.

நம் அனைவருக்கும் மதிப்பு தேவைப்படுகிறது. அன்பு, அக்கறை தேவைப்படுகிறது. பிறர் நம்மை மரியாதையோடு நடத்தவேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. ஏன்?

அது தான் மனதின் இயற்கை வடிவம்!

நமக்கு மதிப்புக் கிடைக்க ஏதும் சிறப்புத் தகுதியோ, பெரும் பதவியோ நமக்கு இருக்க வேண்டிய அவசியமல்லை. அது பிறப்புரிமை போல் அன்பு, அக்கறை சமவிகிதத்தில் கலந்து அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறார்கள். எப்படி?

பிறந்து சில மாதங்களே ஆன கைக் குழந்தை பசியால் அழும்போது தாய் என்ன செய்வார்? ஓடோடிப்போய்த் தாய்ப்பாலோ, புட்டிப் பாலோ புகட்டுவார். அந்தக் குழந்தைக்குத் தேவை பால். அது புகட்டப்பட வேண்டும். அவ்வளவே!

அதற்குமுன் குழந்தையின் முன் சப்பனமிட்டு அமர்ந்து, “இதோ பார் குட்டி! நான் பால் தரவேண்டுமென்றால் நீ சமர்த்தாக இருக்கோனும். கண்ட நேரத்தில் சூச்சா, மூச்சா போகக்கூடாது. ஏபிசிடி சரியாச் சொல்லோனும். அப்பத்தான் கான்வெண்டில் ஈஸியா இடம் கிடைக்கும்,” என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருப்பாரோ? அந்தச் சிசுவின் வயிற்றுக்குப் பாலும் நிபந்தனையற்ற அன்பும் பாசமும் அரவணைப்பும் தேவை. இது அடிப்படையாய் அனைவருக்கும் புரிகிறது; செய்கிறார்கள்.

அதேபோல்தான் வளர்ச்சியடைந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பும் பாசமும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன.

பெரும்பாலோர் என்ன நினைத்துக் கொள்கிறார்கள்? “நாம் சமர்த்தாகவும் புத்திசாலியாகவும் அழகாகவும் சாதாரண மக்களுக்குப் புரியாத வகையில் பேசக் கூடிய அறிவு ஜீவியாகவும் இருந்தால் தான் இதற்கெல்லாம் லாயக்கு; இல்லையெனில் நாம் ஒரு செல்லாக் காசு! நாம் மதிப்பற்றவர்கள்!”

அது தப்பு! அந்த நினைப்பு ரொம்பத் தப்பு!

ஒவ்வொருவரும் அவரவர் மதிப்பை நல்ல விதமாகவே உணர வேண்டும். அதே போல் பிறருடைய மதிப்பையும் நல்லவிதமாகவே கருதி அன்பு செலுத்த வேண்டும்.

“நீங்கள் சந்திக்கக் கூடிய நான்கில் மூன்று பேர், உங்களிடமிருந்து பரிவிரக்கம் வேண்டி ஏங்குகிறார்கள். நீங்கள் அதை அவர்களுக்குக் கொடுங்கள் அவர்கள் உங்களிடம் அன்பு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்” என்கிறார் டேல் கர்னெகி (Dale Carnegie).

அதைச் சற்று மாற்றி நம் ஊரில் “கட்டிப்புடி வைத்தியம்“ என்கிறார்கள்.

ஆனால், ப்ளஸ் டூவில் கோட்டை விட்டுவிட்டு, ஆண்டாண்டு காலமாய்ச் சும்மா ஊர் சுற்றித் திரிந்து கொண்டு, “வீட்டில் இன்னமும் அம்மா நிலா காட்டிச் சோறு ஊட்ட வேண்டும்” என்று நினைத்தால் அது சுய மதிப்பினால் அல்ல? அப்பாவிடம் அதற்கு வேறு அழகான பட்டப் பெயர் உண்டு.

இயற்கையாகவே நம் எல்லோருக்கும் பிறர் மேல் அன்பு, அபிமானம், அக்கறை உண்டு. ஒவ்வொருவருக்கும் அந்த அளவின் விகிதாச்சாரம் மாறும்.

இந்த டிவி சீரியல்கள் இருக்கின்றனவே? அவை என்ன செய்கின்றன? மக்களுடைய 'அந்த' அடிப்படைக் குணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. பிழியப் பிழிய அழும் சோகக் காட்சிகள்; கண்ணீர் வடிய வடியப் பார்க்கும் தாய்க் குலங்கள். என்ன காரணம்? அந்த நிழல் பிம்பங்களின் மேல் ஏற்படும் அன்பு, அக்கறை, பாசம். அந்த நிழல் பிம்பங்களின் தியாகமும் சோகமும் இன்னலும் மக்களின் ஆழ்மனதை அப்படியே ஈர்க்கின்றன. “அய்யோ! பாவம்”, என்று அடிமனதிலிருந்து அக்கறை பீறிட்டு எழுகிறது, கண்ணீர் முட்டுகிறது.
அந்தக் கண்ணீரின் அளவைப் பொறுத்து தொடரின் 'டிஆர்பி' எகிறி, வேறொருவர் பாக்கெட்டில் பணமாய்க் கொட்டுவது தனிக் கதை.

உலகின் ஏதோவொரு மூலையில் பஞ்சம், இயற்கை சீற்றத்தினால் அழிவு, அதனால் நிர்க்கதியான மக்கள்……. எனச்செய்தித்தாளில் படிக்கும் போதும் தொலைக்காட்சியில் காணும் போதும் மனம் பதைத்து உள்ளே வலிக்கிறதே ஏன்? அடிப்படையில் எல்லோருக்கும் உதவ, அனைவரையும் அரவணைக்க மனம் விரும்புகிறது. அவரவர் வாய்ப்பு வசதிக்கேற்ப உதவியானது பொருளாகவோ பணமாகவோ ஆறுதல் வார்த்தைகளாகவோ வெளிப்படுகிறது.

ஆச்சரியமில்லை.

அதுதான் அடிப்படை மனித இயல்பு.

விஷயம் யாதெனில் அப்படி நீங்கள் பிறரிடம் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்துவதைப் போல் பிறர் உங்களிடமும் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்த நீங்களும் ஒரு தகுதியான மனிதனே! இதற்கென நாலைந்து பக்க பயோடேட்டாவும் சிறப்புத் தகுதிகளும் தேவையில்லை. அவையெல்லாம் வேலைக்கு அப்ளை செய்ய மட்டுமே!

இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு தரமான மனிதர். அது போதும். சக மனிதர்களிடமிருந்து அன்பும் பாசமும் பெற அது போதுமானதாகும். அது தான் உங்களது அடிப்படை மதிப்பு.

மற்றபடி உங்களுக்கு இலவசமாய்க் கிடைக்கும் டி.வி., முட்டை, பல்பொடி, செருப்பு ஆகியன வந்தடைவது வேறு மதிப்பினால். அதை இத்துடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

உற்சாகத் தொடர் - 8

கிளி ஜோஸ்யம் தெரியுமா?

அதிர்ச்சியெல்லாம் வேண்டாம். இத்தொடரின் பேசுபொருளை மாற்றும் உத்தேசமெல்லாம் இல்லை. கிளி ஜோஸ்யம் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ, அந்தக் கிளியை எல்லோருக்கும் தெரியும். தத்தித் தத்தி வெளியே வந்து, லொட லொடவென்று கஸ்டமரிடம் இஷ்டத்திற்கு அளந்து கொண்டிருக்கும் தன் எஜமானனின் பேச்சையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாமல், கடனே என்று ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, ஓரிரு நெல்மணிகளை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு சமர்த்தாய்க் கூண்டிற்குள் சென்றுவிடும். அடைபட்டுள்ள கூட்டிலிருந்து வெளியே வந்தால் கூட அந்தக் கிளிக்குத் தப்பிப் பிழைத்துப் பறந்துபோகத் தோன்றுவதேயில்லை. அட, இறக்கையை வெட்டியிருந்தாலும் தாவிக்குதித்தாவது தப்பியோட முயலவேண்டுமே! ம்ஹும்! கூண்டு, சீட்டு, நெல், கூண்டு, சுபம், சுகம் என்று வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டது.

ஏன் இப்படி? அதன் மனது அப்படிப் பழக்கப்பட்டு, அதுதான் வாழ்க்கை என்று அதன் மனதிற்குள் முடிவாகிவிட்டது. அதுதான் விஷயம்!

அதைப் போல், நமது சுயபிம்பம் நமக்குள் நம்மைப் பற்றிய ஒரு மனக் கருத்தைக் கட்டமைக்கிறது. அந்த மனக் கருத்துக் கட்டமைப்பு நமது உள்ளுணர்வில் படர்ந்திருக்கிறது. அந்த உள்ளுணர்வு நமது நடத்தையை நிர்ணயிக்கிறது; அந்த உள்ளுணர்வே நமது செயல்பாடுகளுக்கான திட்டங்களை வகுத்துவிடுகிறது. ஆக இவையனைத்தும் நம்முடன் பின்னிப் பிணைந்து விடுகின்றன. புரியலையோ?

எல்லோருக்கும் புரிகிற மாதிரி பார்த்துவிடுவோம்.

நம்மைப் பற்றியே நாம் தப்பான அல்லது தாழ்வான மனக் கருத்தில் இருந்தால், அது அப்படியே நமக்குL உள்ளுணர்வாகப் படிந்துவிடுகிறது. நம் மேல் நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது. அதனால் நம்மை நாமே மேலும் வெறுக்க ஆரம்பித்து, சிகரெட், தண்ணி, என்று கெட்ட சமாச்சாரங்களுடன் நமக்கு உறவு ஏற்படுகிறது. அல்லது அதற்குப் பதிலாக ஓர் ஒழுங்கு முறையின்றிக் கண்டதையும் உண்பது, கண்ட நேரத்தில் உறங்குவது, வண்டி ஓட்டிக் கொண்டு போனால் ஏதாவது விபத்தை நிகழ்த்துவது, அல்லது அவ்வப்போது “எனக்கு உடம்புக்கு முடியலப்பா”” என்று படுத்துக் கொள்வது, இப்படியான நடத்தைகள்.

மனம் போன போக்கிலெல்லாம் ஒருவன் தட்டுக்கெட்டு அலைய முடியாது. அவ்விதம் கெட்டு அலைய அவன் உள்ளுணர்வு தான் திட்டமிட்டு அலைக்கழித்திருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். இதற்குமுன் மன வடிவமைப்புகளைப் பற்றி விளக்கியபோது அதைப் பார்த்தோம். அதன்படித் திரும்பத் திரும்ப ஒருவர் விபத்தில் ஈடுபடுவதெல்லாம் யதேச்சையில்லை; அவரது உள்ளுணர்வு அவருக்கு அளிக்கும் தண்டனையாம். அதற்காக அடுத்த முறை, ப்ளாட்பாரத்தில் நடந்து கொண்டிருப்பவர் மேல் பைக்கை ஏற்றிவிட்டு, “ப்ச்! என் உள்ளுணர்வு என்னைத் தண்டிக்குது பிரதர்”” என்றால் செல்லுபடியாகாது, ஜாக்கிரதை!

ஆக உளவியலாளர்கள் சொல்வது யாதெனில், “பிரதானமாய் நீங்கள் உங்களைப் பற்றி ஆக்கபூர்வமாகவே நினையுங்கள். நல்லன நினையுங்கள்! அதற்காக உங்களது அனைத்துச் சக்திகளையும் பிரயோகப்படுத்துங்கள்; மனம் மகிழ்வீர்கள்“ என்பதாகும்.

அதை விட்டு, ”நான் பூட்ட கேஸ்! எனக்கு நல்லா வேணும்’,” என்று நினைத்தால் உங்களது உள்ளுணர்வு உங்களுக்கு நாசவேலை நிகழ்த்த ஆரம்பித்துவிடும். மனதிலிருந்து மகிழ்ச்சி விடைபெறும். தப்பித்தவறி அப்படியே நல்ல விஷயம் ஏதாவது நடக்க நேர்ந்தாலும், “எனக்கு அதற்கு ஏது கொடுப்பினை?” என்று மனம் முணக, அந்த நல்ல காரியம் நடைபெறாது! நடைபெறாமல் உங்கள் உள்ளுணர்வு உங்களை உந்தி, நீங்கள் தன்னிச்சையாய்ச் செயல்பட்டு அதைத் தடுத்திருப்பீர்கள்.

எனவே நமது மனதை ஆக்கபூர்வமாக, எப்பொழுதுமே 'பாஸிட்டிவ்'வாக வைத்துக் கொள்ள முயலவேண்டும்.

மளிகைக் கடை லிஸ்ட்டெல்லாம் பார்த்திருப்பீர்களே! கொஞ்சம் அலுப்புப் பார்க்காமல் கீழ்க்கண்ட லிஸ்டைப் படித்துப் புரிந்து கொண்டால் நமது மனதிற்கு நல்லது. அதிலுள்ள ஒன்றோ அதற்கும் மேற்பட்ட சங்கதிகளோ நம்மிடம் இருந்தால், நிச்சயம் நாம் திருந்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

• பொறாமை

• நம்மைப் பற்றியே நாம் தவறாய்ப் பேசிக் கொள்வது, எண்ணிக் கொள்வது

• குற்ற உணர்ச்சியிலேயே இருப்பது
• மற்றவர்களைப் பாராட்ட மறுப்பது
• பிறர் அளிக்கும் பாராட்டை ஏற்க மறுப்பது
• நம்முடைய சுய தேவைகளை உதாசீனப்படுத்துவது
• அடிப்படைத் தேவைகளைக் கேட்டுப்பெறாமல் இருப்பது
• அன்பு, பாசம் ஆகியனவற்றைப் பிறரிடம் வெளிப்படுத்த இயலாமற் போவது
• அன்பு, பாசம் ஆகியனவற்றைப் பிறர் அளிக்கும் போது அதை உணர்ந்து மகிழாமலிருப்பது
• மற்றவர்களிடம் குறை காண்பது
• மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பது
• அடிக்கடி நோய்வாய்ப்படுவது


இதையெல்லாம் தாண்டி மீண்டுவர, "மாற்றம்" வேண்டும். ஆனால் அந்த மாற்றம் நமக்குள் நிகழ நாம் முயன்றால் எப்படித் தடை ஏற்பட்டுக் கஷ்டப்படுத்தும் என்று முன்னரே பார்த்தோம்.

தரமற்ற சுயபிம்பத்திற்கான குணம் ஒன்று உண்டு. அந்த மனிதனிடம் உருவாகியுள்ள ஆக்கபூர்வமற்ற குணத்தை (negative attitude) மாறவிடாமல் பொத்திப் பாதுகாக்கும். அதிலிருந்து மீண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மனமானது பழையதையே நினைத்து, புலம்பி, அரற்றிப் பின்னுக்கு இழுக்கப் பார்க்கும். கஷ்டம்தான், ஆனால் செய்யத்தான் வேண்டும்.

எனவே நமக்கு உதவச் சில வழிகளை உரைக்கிறார்கள் உளவியலாளர்கள்.

· பாராட்டை ஏற்றுக் கொள்ளுங்கள் - உங்களைப் பாராட்டுபவர்கள், வாழ்த்துபவர்களிடம் நன்றி பகர்ந்துவிட்டு அவற்றை ஏற்று மனதில் நிரப்பிக்கொள்ளுங்கள்.

· பாராட்டுங்கள் - பைசா செலவழிக்காமல் மனம் உற்சாகமடைய, மற்றவர்களிடம் தென்படும் நல்லவைகளைப் பார்த்து மகிழ்ந்து அவர்களைப் பாராட்டுங்கள், வாழ்த்துங்கள். அவர்களது முகம் மலரும்போது, உங்கள் மனதிற்குள் என்ன நிகழ்கிறதென்று உணருங்கள்.

· உங்களைப் பற்றி நீங்களே நல்லவிதமாகப் பேசுங்கள் - அப்படி ஒன்றுமே இல்லையென்று நினைக்கிறீர்களா; வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்.

· உங்களைப் புகழ்ந்து கொள்ளுங்கள் - ஏதேனும் ஒரு நற்காரியம் செய்துவிட்டீர்களானால் உங்களை நீங்களே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். பசியுடனிருக்கும் ஏழையொருவருக்கு நீங்கள் பன்னும் டீயும் வாங்கித் தந்திருக்கலாம்; பார்வையற்ற ஒருவர் சாலையைக் கடக்க உதவியிருக்கலாம்; மனைவி எழும் முன் குளித்து முடித்து, ஈரத்தலையுடன் நீங்கள் காப்பி போட்டு உங்கள் மனைவிக்குக் கொடுத்திருக்கலாம். எதுவாயிருந்தாலும் உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.

· உங்களையும் உங்கள் செயல்களையும் வேறுபடுத்திக் கொள்ளுங்கள் - ஏதேனும் தவறாய்ச் செய்துவிட்டால், நிகழ்த்திவிட்டால், அந்தச் செயலை மட்டும் வெறுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மறுமுறை அந்தத் தவறை எப்படித் தடுப்பது என்று மட்டும் சிந்தியுங்கள். அந்தத் தவறுக்காக உங்களை நீங்களே திட்டி, மாய்த்துக் கொள்ளாதீர்கள். அது உங்களது சுயபிம்பத்தைக் கெடுக்கும். திருத்தப்பட வேண்டியது உங்களது செயல் தான்.

· உங்களது உடலைப் பேணுங்கள் - புடவையா, சுடிதாரா அல்லது வேட்டியா, சட்டையா விதம் விதமாய் ஏகப்பட்டது இருக்க, அவற்றையெல்லாம் அணிவதற்கு உங்களிடம் இருப்பது ஒரே உடல். அதை ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். உடல் நலமில்லாமல் போனால் எப்படி மனம் மகிழும்?

· நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று மக்களிடம் தெரிவித்துவிடுங்கள் - தெரிவித்து விடுங்கள் என்றால் “மச்சான் நீ கேளேன்,” “மாமா நீ கேளேன்,” என்று அலைந்து அலைந்து சொல்வதில்லை. மாறாக, நீங்கள் உங்களை எப்படி நடத்திக் கொள்கிறீர்களோ, அதைப் போல் மற்றவர்களையும் நடத்துங்கள். அது அவர்களுக்கு வேண்டிய தகவலை தெரிவித்துவிடும்.

· சான்றோருடன் சங்காத்தம் வைத்துக் கொள்ளுங்கள் – நீங்கள் விரும்பும் பெண்ணின் தம்பியை, அந்த வீட்டு வேலைக்காரியை , அவர்களுக்கு சவாரி வரும் ஆட்டோக்காரரை எல்லாம் இதில் சேர்க்கக்கூடாது. அவர்கள் நெசமாலுமே சான்றோராக இருப்பின் அது வேறு தரம்!

· புத்தகம் வாசியுங்கள் – அடாசு டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் இவற்றிலிருந்து விடுதலை பெற்று நல்ல புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

· என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதையே நினையுங்கள் – எப்பொழுதுமே உங்கள் மனதில் நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதையே நினையுங்கள். தானாய் அதை நோக்கி நகர்வீர்கள். மனதிற்கு ஈர்ப்புச் சக்தி உண்டு என்பதை உணர்வீர்கள். ஆனால் கவனம் முக்கியம். எந்த ஊரில் சீட்டுக் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்றெல்லாம் நினைக்கக் கூடாது.

பின்குறிப்பாய் ஒன்று -- இந்நேரத்தில் வெளியாகும் இத்தொடரை வாசிப்பவர்கள், இது பிடித்துப்போய்ப் பிற தளங்களிலும் வலைப்பூக்களிலும்லும் மீள்பதிவு செய்வதைக் காண முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. கூடவே, மேலே பாடத்தில் கூறியுள்ளதைப் போல் இந்நேரத்திற்குக் குட்டியாய் நன்றியொன்று சொல்லிவிட்டுப் பதிந்தால் அந்த வாசகர்கள் வீடுகளில் தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்க இந்நேரம் சிறப்பு வாழ்த்து நல்கும்.

உற்சாகத் தொடர் - 9

சென்ற அத்தியாயத்தில் பாராட்ட வேண்டியதன் அவசியம் பற்றியும் அதை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் பார்த்தோம். சிலர் பாராட்டை எதிர்மறையாய்ப் பிறரிடமிருந்து இழுத்துப் பெறுவார்கள். உளவியல் மொழியில் reverse psychology.

“எனக்கு இந்த கிரிக்கெட் அவ்வளவு சரியாக விளையாட வரலை.”

“ஏன்? நீ நல்லாதானே ஆடறே?”

“அப்படியெல்லாம் இல்லை. பௌலிங் ஓக்கே. பேட்டிங்தான் சொதப்புது.”

“அன்னிக்குக் கூட நீ 45 நாட் அவுட். அதுலே 1 சிக்ஸர், மூன்று பவுண்டரி. பேட்டிங்தான் கலக்குறியே.”

“உனக்கு பெரிய மனசு. பாராட்டி ஊக்கப்படுத்தப் பார்க்குறே.”

“இல்லே இல்லே. உண்மையிலேயே நீ நல்லா தான் ஆடுறே.”

“எனக்கு அப்படித் தோணலே.”

எரிச்சலூட்டும் இத்தகைய உரையாடலை எங்காவது நீங்கள் கேட்டிருக்கலாம், அல்லது அப்படியொருவரை சந்தித்திருக்கலாம். இது போலித் தன்னடக்கப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. நம்மிடம் இந்தக் குறை இருந்தால் என்ன செய்வதாம்? இத்தகைய போலித் தன்னடக்கத்தைத் தவிர்த்துவிட்டு நம்மைப் பற்றிய உண்மையான மதிப்பை உணர்ந்து அதற்கேற்ப உரையாடிப் பழக வேண்டும்.

சிறப்பான சுயபிம்பம் உள்ள மக்கள் போலித் தன்னடக்கம் கொள்ளமாட்டார்கள்; பாராட்டிற்காக அலைய மாட்டார்கள். நேர்மையாய்த் தம்மை வந்தடையும் பாராட்டை உவப்புடன் ஏற்றுக் கொள்ளவார்கள் – மெய்யான தன்னடக்கத்துடன்!



முந்தைய அத்தியாயங்களில் உடல் நலம் பற்றிப் பார்த்தோம். மன நலனுக்கும் உடல் நலனுக்கும் எக்கச்சக்க நட்பு உள்ளதாம்; அவை இணைபிரியாத் தோழிகளாம்.

ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு “அப்செட்“ ஆகும்போது அவருள் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து அவரது உடலினுள் ஒருவகையான ரசாயனம் உருவாகிறது. எந்த விஞ்ஞானி வீட்டில் அப்செட் ஆனரோ தெரியாது – மெனக்கெட்டு வந்து அதை ஆராய்ச்சி செய்திருக்கிறார் பாருங்களேன். கடுமையான பயத்திலோ, அல்லது கோபத்திலோ உள்ள ஒருவரிடமிருந்து இரத்தத்தைப் பரிசோதனைக்காக உறிஞ்சி, சோதனைக் கூடத்திலுள்ள பன்றிகளுக்குச் செலுத்திப்பார்த்தபோது அவை இரண்டு நிமிடங்களில் இறந்துபோனதை அராய்ச்சியாளர்கள் கண்டனர்.

“அட! கொலை செய்ய இது நல்ல உபாயமாக இருக்கே!” என்று ஊசியுடன் கிளம்பிவிட வேண்டாம். ஆராய்ச்சியின் உள்ளார்ந்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை, அது இங்கு முக்கியமும் இல்லை. உடலின் உள்ளே நிகழும் ரசாயன மாற்றம் சிலாக்கியமானதல்ல. அதுதான் முக்கியம்.

ஓர் உயிரைக் கொல்லும் பலம் வாய்ந்த ரசாயனம் நமக்குள் எத்தகைய உபாதைகளையெல்லாம் தோற்றுவிக்கும்? “அளவிற்கதிகமான பயம், கோபம், எரிச்சல், ஏமாற்றம், மன உளைச்சல் ஆகியன தோற்றுவிக்கும் ரசாயனம் மனிதனின் உயிரையும் பதம்பார்க்க வல்லது!” என ஆராச்சியாளர்கள் கவலையோடு தெரித்துள்ளனர்.

யாருக்கு இதெல்லாம் இல்லை? “செத்தேன் நான்,” என்று உடனே கவலையும் பயமும் வேண்டாம். இங்கு நமது நோக்கம் உண்மையை உணர்ந்து அறிந்து கொண்டு மனம் மகிழ்வது.

பயம் ஏற்படின் அது பந்தாய் வயிற்றில் உருள்வதும் கோபம் எல்லை மீறினால் அது தலைக்கேறி வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிப்பதும் - உள்ளும் புறமுமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித மாற்றங்கள் நிகழ்கின்றன. சிலருக்குத் தன் காதல் துணையைக் கண்டதும் வயிற்றில் ஏதோ உணர்ச்சி. “பட்டாம்பூச்சி பறக்குதுபா!”

பயம், கோபம், காதல் என்றில்லை, மனதினுள் ஏற்படும் எந்தவொரு எண்ணமும் ஒவ்வொரு நொடியும் உடலில் வேதியியல் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றது. நீங்கள் காரோட்டிக் கொண்டே செல்லும்போது உங்களுக்காகவே காத்திருந்தது போல் திடீரென்று ஒரு ஆட்டோக்காரன் உங்கள் எதிரே புகுந்து சட்டென்று ப்ரேக்கும் போட்டால் உங்களுக்குள் என்னென்ன நிகழ்கின்றன? உடல் முழுதும் ஒரு மின்சார அதிர்வு ஏற்பட்டு, உடனடியாக மூளை மெஸேஜைக் காலுக்கு அனுப்பிப் ப்ரேக்கை அழுத்தி, அல்லது கைகள் கார் ஸ்டீரிங்கை படுவேகமாய்த் திருப்பி...

என்ன உல்லாச மூடில் அதுவரை இருந்திருந்தாலும் சரி, சட்டென அனைத்தும் தொலைந்து, கெட்டக் கோபத்தில் சன்னலுக்கு வெளியே தலையை நீட்டி, உங்களது கண்ணியத்திற்கேற்ப வாயிலிருந்து வாழ்த்துரை வெளிப்படும். அந்த திடீர்க் கணத்தில் வயிற்றில் ஓர் உணர்ச்சி எழுந்ததே என்ன அது? அதைத் தோற்றுவித்தது எது? அது ஒரு ரசாயனம்.

ஆக, மனதிற்கும் உடலுக்கும் வயர்லெஸ் கனெக்ஷன் உண்டு. இயற்கை WiFi. எனவே மனதில் நிகழும் மாற்றம், உடலில் வெளிப்படுகிறது.

மனஉளைச்சல், சினம், அச்சம் இவற்றையெல்லாம் கிலோ கணக்கில் மனதிற்குள் வைத்துக் கொண்டு, உடல் ஆரோக்கியத்தையும் கூடவே குடித்தனம் வைத்துக்கொள்ள முடியாது; முடியவே முடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் உடல் ஆரோக்கியம் என்பது மன ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு. தீர்க்கப்படாத பிரச்சனைகள் ஏதும் மனதிற்குள் உழன்றால் அதை உடல் ஆரோக்கியம் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

இதெல்லாம் இப்பொழுது படித்தாலும், நாமறியாமல் நமது பள்ளிப்பருவத்திலேயே நமக்கு இது நிகழ ஆரம்பித்துவிடுகிறது. எனது நாலாவது வகுப்பில் ஒருமுறை நான் தேர்வுக்குப் படிக்காதபோது, எனக்குக் காய்ச்சல் வருவதைப் போலாகி, நான் அழுவதைப் பார்த்த என் தந்தை டீச்சரிடம் ஸ்பெஷல் பர்மிஷன் பெற்று, என்னை வகுப்பில் அமர்த்திவிட்டு வந்தார்கள். சிலருக்கு வீட்டுப் பாடம் முடிக்கவில்லை, கணக்கு மண்டையில் ஏறவில்லை என்று ஏதாவது ஒரு காரணம் அமையும்போது, மனது நினைக்கிறது, “சே! உடம்புக்கு முடியாமல் போனால் லீவ் எடுத்து விடலாம்.”

மாயம் நிகழ ஆரம்பிக்கும் உடனே உள்ளுணர்வு உடலுக்குக் கட்டளையிட, தலைவலிப்பது போலிருக்கும்; காய்ச்சல் அடிப்பது போலிருக்கும். பெற்றோர் நெற்றியைத் தொட்டுப் பார்த்து ஓக்கே சொல்லிவிட்டால் போதும், “ஹையா! இன்னிக்கு ஸ்கூலுக்கு மட்டம்.”

என்ன? இதெல்லாம் உங்கள் சிறுவயதில் நடக்கவில்லையா? ஒன்று நீங்கள் பொய் சொல்ல வேண்டும். அல்லது, “அநியாயத்திற்கு நீங்கள் நல்லவர்.”

அடுத்தது -

நமது நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகள் உள்ளனவே..? அவையும் கூட நம்மை நோயில் ஆழ்த்திவிடும்.

உலகெங்கும் உலா வந்த பன்றிக் காய்ச்சல் – அது – தானாய்ப் பரவியது பாதி; பயத்தில் பரவியது மீதி. அதைப்போல் நம் பெற்றோருக்கு நீரிழிவு, இதய நோய், போன்ற குறிப்பிட்ட சில நோய்கள் இருந்திருந்தால், அவை பரம்பரையாய்த் தொடரும் சாத்தியக் கூறுகள் உள்ளன என்ற காரணத்தினாலேயே நமது மனது உடலுக்குக் கட்டளையிட்டு விடுகிறது. நமக்குக் குறிப்பிட்ட வயதில் அந்த நோய்கள் வந்துவிடும் என்று மனதும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராய் இருக்க, உள்ளுணர்வு அதற்கேற்ப உடலைத் தயார் செய்துவிடுகிறது.

எதிர்மாறாய் உடல நலனுக்கும் அப்படியே. சிலர் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா, “எனக்கு ஜலதோஷமே ஏற்பட்டதில்லை. விக்ஸ் வாசனையே எனக்குத் தெரியாது.” அந்த மன வலிமையே அவர்களது உடலுக்குப் போதிய எதிர்ப்புச் சக்தியைத் தோற்றுவித்து, ஜலதோஷத்தை அவர்களிடம் நெருங்க விட்டிருக்காது.

மனதால் உடல்நலம் கெடுவது ஒருபுறமிருக்க, உடல்நலம் கெடுவதில் மனதிற்கு ஒரு சௌகரியமுமிருக்கிறது. இதையும் நமது பால்ய பருவத்திலயே நாம் அனுபவார்த்தமாய்ப் படித்துத் தேர்ந்துவிடுகிறோம்.

குழந்தைகளுக்கு உடல்நலமின்றிப் போகும்போது என்னாகிறது? அது பிறருடைய கவனத்தையும் அக்கறையையும் அவர்கள்பால் முழுதுமாய் ஈர்க்கிறது. ஜுரம், தலைவலி, இருமல் என்று படுத்துவிட்டால், அப்பா, அம்மா காட்டும் பாசம், தாத்தா, பாட்டி காட்டும் அக்கறை, கோபத்தையும் சண்டையையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பணிவிடை புரியும் அண்ணன், அக்கா என்று அடுத்த சிலநாட்களுக்கு அந்தக் குழந்தைதான் வீட்டில் விஐபி.

இது நம் அனைவருக்கும் நமது இளம் பிராயத்தில் ஏதோ ஒருவகையில் நிகழ்ந்திருக்கும். அது நமது மனதிற்கு இதத்தையும் ஆறுதலையும் அளிக்க, நாம் வளர்ந்த பிறகும் அதுவே தொடர்கிறது. மனதிற்கு அன்பும் ஆதரவும் தேவைப்படும்போது அதைப் பிறரிடமிருந்து ஈர்ப்பதற்காய், உடல்நலம் தானாய்க் கெட்டுப்போகிறது. சிலர் செயற்கையாய் அதை முயலலாம். இவையாவும் நாம் உணர்ந்து சுதாரிப்புடன் நடப்பதைவிட நாம் அறியாமலேயே நமக்குள் நிகழ்கின்றன.

“அன்பும் பாசமும் சரியாய்ப் பகிர்ந்துகொள்ளப்படும் மனிதர்களிடையே இத்தகைய உள்ளுணர்வால் உருவாகும் நோய்கள் ஏற்படுவதில்லை. அவர்கள் எப்பொழுதுமே தங்களைப் பாதுகாப்பாகவே உணர்ந்து கொள்வதால் அவர்களது மனதும் மகிழ்கிறது, உடலும் நலமாய் இருக்கிறது,” என்கிறார்கள் மருத்துவர்கள்.

அடக்கிவைக்கப்பட்ட மனக்கிளர்ச்சியும் உணர்ச்சிகளும் உடல்நலனை நிச்சயம் பாதிக்கின்றன.

“என்னைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?”, “நான் யாருக்கும் முக்கியமற்ற ஒரு ஜட வஸ்து”, “மற்றவர்கள் என்னை உதாசீனப்படுத்துவதும் புறக்கணிப்பதும் - அதெல்லாம் எனக்குப் பழக்கப்பட்டு விட்டது”, ”நான் வெளியே சிரிப்பது தான் உங்களுக்குத் தெரிகிறது; உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறேன்”...

இத்தகைய எண்ணங்கள் உங்களது மனதில் தோன்ற ஆரம்பித்தால்….. அது உடல்நலப் பேரழிவின் ஆரம்பம்!

அதற்காக?

இதென்ன சுற்றுப்புறச் சூழல் மாசால் உலகம் நாசமாவதைப் போல் சாதாரண விஷயமா? ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கூட்டம் போட்டுப் பேசிக் கலைவதற்கு? நமது மனம்! நமது உடல்! எனவே, நாம் தீர்வை அறிந்து செயல்படுத்தியே தீரவேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கும் ஊக்கத்திற்கும் அடிப்படை ஆக்கபூர்வ எண்ணங்கள் ஆகும் - positive thoughts. அதுதான் பூஸ்ட். 'Secret of our energy.'

அடுத்தது மிக முக்கியம். “நான் ஆரோக்கியமாய்த் திகழத் தகுதியானவன்” என்பதை நம்ப வேண்டும். மேம்போக்காக அல்ல, அழுத்தந்திருத்தமாய் நம்ப வேண்டும்.

அதற்கு மாறாய் நம்முடைய உள்மனதில், “நான் நல்லவனல்ல”, “நான் ஏகப்பட்ட கெட்டக் காரியங்கள் செய்துள்ளேன்”, “நான் தண்டிக்கப்பட வேண்டியவன்”, போன்ற பின்னடைவான எண்ணங்கள் - negative thoughts - இருந்தால், அதற்கான உன்னத எதிர்வினை தான் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவது. ஒன்று தற்காலிகமாக: அல்லது ஆயுள் முழுதும்.

இதைச் சிறிது தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இஷ்டத்திற்குக் கெட்ட காரியம் செய்துவிட்டு, அதை செல்போனில் படமும் எடுத்து, ப்ளூ ட்டூத்தில் இலவசமாய் ஊரெங்கும் வினியோகித்துவிட்டு, கோர்ட்டில் ஜட்ஜிடம் பாஸிட்டிவ்வாகப் பேசக்கூடாது. சட்டம் கண்ணைக் குத்தும்!

வேலையோ, தொழிலோ, அலுவலோ, ஹாபியோ நமக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். நியாயமான மகிழ்வை வாழ்க்கையில் அமைத்துக் கொள்ளவேண்டும். இவை இரண்டும் இல்லையெனில், மனம் மாமியார் ஆகிவிடும். மருமகளை நச்சரிப்பதுபோல் தொடர்ந்து விடாமல் குறைபட ஆரம்பித்துவிடும்.

உடலோ மனதின் அடிமை. எனவே ஒவ்வாத சூழலில் இருந்து துன்பப்படும் மனதைக் காப்பாற்ற அது எப்படியாவது பாடுபடும். அதற்கு அது தேர்ந்தெடுக்கும் முதல் உபாயம் தனது ஆரோக்கியத்தை இழந்து மனதைக் காப்பதே!

நெடுக உடல்நலம் கெடுதலையும் மனதையும் சம்பந்தப்படுத்திப் பார்த்துக் கொண்டே வந்தோம். நன்றாக ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இதன் அர்த்தம் உலகில் உள்ள அனைத்து வியாதிகளும் மனதால்தான் ஏற்படுகிறது என்பதில்லை. எனவே பைபாஸ் சர்ஜரி தேவைபடும் நோயாளியைப் பார்த்து, “மனைவி ஆட்டுக்கால் சூப் வைத்து உங்களுக்குக் காதலோடு ஊட்ட வேண்டும்,” என்று டாக்டர் சீட்டெழுதித் தரமுடியாது.

விஷயம் என்ன? உடல் ஆரோக்கியமாய்த் திகழ மனதின் பங்கு மிகமிக இன்றியமையாதது. அவ்வளவுதான். அதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும் தான் நமது உடல்நலச் சூழ்நிலையை வடிவமைக்கின்றன. எனவே அதை எத்தகைய உகந்த சூழ்நிலையாய் வடிவமைப்பதென்பது நமது எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் அடங்கியுள்ளது.

தவிர இந்த உடல் ஆரோக்கியம் என்பது இலவச இணைப்பில்லை. அது உங்களது பிறப்புரிமை. ஆரோக்கியம் என்பது என்ன? அது நோயற்ற உடல்நலம் என்பது மட்டுமின்றி, அதையும் தாண்டிப் புனிதமானது. ஊக்கம், உடல் வலிமை, உள்ளுரம், உடலுரம் என்பனவெல்லாம் ஆரோக்கியம் சார்ந்தவை தான். வாழ்க்கை என்பதே போராட்டம் தான். ஆனால், ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது, வாழ்க்கைக்கான போராட்டம் என்பதையும் தாண்டி உங்களால் ஆக்கபூர்வமாகச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, ஊக்கம் உங்களுக்குள் இருக்க வேண்டும்.

மேலே இதுவரை படித்ததை அடிப்படையாகக் கொண்டு நமது மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நாம் உற்று நோக்கினால் நமது உடல் எந்தளவு மனநிலையால் பாதிப்படைகிறது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நமது உள்ளுணர்வானது நமது உடலின் நிலையை ஒவ்வொரு நொடியும் கண்காணித்து வருகிறது. நமது உடலோ மனதின் அடிப்படையிலேயே தொடர்ந்து மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

சுருக்கமாய், நமது மனது தான் நமது உடலின் சிற்பி. நமது உடல் தான் நமது எண்ணங்களின் பிரதிபலிப்பு!

பயம், கோபம், வெறுப்பு, சோகம், அயர்ச்சி, கிலேசம் மற்ற இனந்தெரியா உணர்ச்சி இதில் எந்தவொன்றால் மனம் பீடிக்கப்பட்டாலும் அதை உடல் வெளிக்காட்டிவிடும். ஆக மனதின் நோய் உடலின் நோயாக மாறிவிடும்.

எனவே,
• ஆரோக்கியமானவற்றைச் சிந்தியுங்கள்.
• உங்களது சிந்தனையில் எப்பொழுதும் உங்களை ஆரோக்கியமானவராகவே கருதுங்கள்.
• இன்பமான எண்ணங்களை மட்டுமே மனதில் நிறுவுங்கள்.
• ஆரோக்கிய உடல்நலம் உங்களது பிறப்புரிமை என்பதை உணருங்கள்.
• நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கு அனைத்துத் தகுதியும் உள்ளது. அறியுங்கள்.
• அனைத்திற்கும் மேலாக உங்களை நீங்களே நேசியுங்கள்; அன்பாக நடத்திக் கொள்ளுங்கள்.

உங்களது தற்போதைய நிலை எதுவானாலும் அதை உளப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு சிறப்பான முறையில் மனதை வடிவமைத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதியாக, மிக உறுதியாக நினையுங்கள்.

உற்சாகத் தொடர் - 10

சென்ற அத்தியாயத்தில் மனதிற்கும் நோய்க்கும் உள்ள அன்னியோன்யத்தைப் பார்த்தோம். இங்கு,நோய்க்குச் சம்பந்தமுள்ள நோவைப் பற்றிக் கொஞ்சம் நோகாமல் பார்த்துவிடுவோம்.

நோவு எனும் வலி இருக்கிறதே....... அது பிறர் சுமக்க இயலாதது. நோயுற்றிருக்கும் ஒருவருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் ஆறுதல் கூறலாம்; பணிவிடை செய்யலாம். ஆனால், வலி? அதை அவரவர் தான் சுமக்க வேண்டும். ஒருவரின் நோவை மற்றவரால் முழுதுமாய் உணரக்கூட முடியாது; இதில் சுமப்பது எப்படி? அதனால் தான், “தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும்,” என்பார்கள். "அது என்ன திருகுவலி?" என்று கேள்வி கேட்டால், அது வணங்காமுடிக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கு நமக்கு அது முக்கியமில்லை. முக்கியமானது நோவு.

நம் அவைருக்கும் வலி நல்லது! நோவின் வேதனை அவசியமானது!

“என்ன ஸார், நக்கலா?” என்று கேட்பது புரிகிறது.

“காலையில் தான் பல்லைப் பிடுங்கிக் கொண்டு வந்தேன். நேற்றிரவு வலியில் நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும்,” என்று கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து கோபால் பல்லைக் கடித்துக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம்.

“இன்னைக்கு என்று பார்த்து என் கணவருக்கு உடல் சுகமில்லை. போனால் போகிறது; ஒத்தாசையாக இருக்குமே என்று நான் சமைக்கப் போக, ஸ்டவ்வில் சுட்டுக்கொண்டு எரிச்சலும் வலியுமாக உயிர் போகிறது. நோவு அவசியமா? என்ன பேச்சு பேசுகிறீர்கள்?” என்று அயனாவரத்திலிருந்து வாசுகி திட்டிக் கடிதம் எழுதலாம்.

கேள்வியும் அதிலுள்ள கோபமும் நியாயம் தான். ஆனாலும் நோவு நல்லது!

ஏன்?

நோவு ஒரு communication device. தகவல் தொடர்பு சாதனம்.

எப்படி? பார்ப்போம்.

ஸ்டவ் நெருப்பில் விரல் பட்டு, அந்த வலியை உணர்ந்ததால் தானே உடனே நெருப்பிலிருந்து விலகினீர்கள்?

இல்லாவிட்டால் என்னாகும்?

டிவியில் பாட்டைப் பார்த்துக் கொண்டே அடுப்பில் வேலை செய்ய, விரல் அடுப்பு நெருப்பில் வறுபட்டுக் கருகி, பிறகு திரும்பிப் பார்த்து, “அடக் கண்றாவியே!” என்று அந்த விரலைத் திருகி எறிந்துவிட வேண்டியதுதான்.

நீங்கள் மோட்டார் பைக் ஓட்டிச் செல்லும்போது சைடில் வந்து ஆட்டோக்காரர் இடித்த வேகத்தில் உங்களது காலில் ஒரு பகுதியை அந்த ஆட்டோ பிடுங்கி எடுத்துக் கொண்டு சென்றுவிட, வீட்டிற்கு வந்து இறங்கும் போதுதான் நீங்கள் உணர்வீர்கள், “அதான் பைக் சிக்னலில் நிற்கும்போது சரியாகக் காலை ஊன்ற முடியவில்லையா?”

ஆகவே உடல் நோவு நமக்கு முக்கியம். நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக் கூடாது என்பதை அது நமக்கு அறிவுறுத்துகிறது.

பின்னே?

மனைவியை அன்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அவர் கேட்ட கஸாட்டா ஐஸும் ஆர்டர் செய்து வந்துவிட்ட பின், “மன்னிக்கவும் டார்லிங். என்னால் ஐஸ் சாப்பிட முடியாது. பீட்ஸா கடிக்கும் போது தவறுதலாய் நாக்கையும் கொஞ்சமாய் கடித்து முழுங்கி விட்டேன்,” என்று சைகையில் சொல்ல நேரிடலாம்.

பசி அதிகமாகும் போது வயிறு வலித்து உணர்த்துகிறது. உணவு ருசியாக இருக்கிறது என்பதற்காக ஒரு வெட்டு வெட்டும்போது வயிறு அதற்கும் வலித்து எச்சரிக்கிறது. போதிய தூக்கம் இல்லாவிட்டால், ஏதேனும் உடலுக்கு நிகழ்ந்தால் உடல் உபயோகிக்கும் அவசர உதவி எண் தான் வலி.

நோவு இன்பமானதில்லை; ஆனால் அவசியமானது. மனம் மகிழ்வதற்கும் இந்த நோவுக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது.

நமது மன மகிழ்விற்கு மன நோவும் முக்கியமானது.

எப்படி?

Pain எனும் ஆங்கில வார்த்தையைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது உடல் நோவு, மன வேதனை என்று தான் மொழிபெயர்க்கிறார்கள். உடலின் நன்மைக்காக உடல் நோவு எப்படிச் செயல்படுகிறதோ, உதவுகிறதோ அவ்விதமாகவே மனதிற்கும் மன நோவு பயன்படுகிறது. உடலில் வலி ஏற்பட்டவுடன் தேவைப்படுவதை செய்தோ, தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்தோ உடல் நலன் பாதுகாக்கப்படுகிறது. அதைப் போல்,

நமக்கு ஏதோ ஒரு மன வேதனை நிகழ்கிறது என்றால், என்னவோ எங்கோ சரியில்லை என்று அர்த்தம். யாராவது நம்மைப் புண்படுத்தியிருக்கலாம். எதிர்பார்த்த ஒன்று நிகழாமல் போயிருக்கலாம். அல்லது எதிர்பாராத ஒன்று நிகழ்ந்திருக்கலாம். “ரொம்பப் பிடிச்சிருக்கும்மா. எனக்காகப் பெண் கேளேன்” என்று அம்மாவைச் சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றால், அந்தப் பெண்ணின் கணவர் வந்து கதவைத் திறந்திருக்கலாம். மனம் அடிபடுவதற்கும், வலிப்பதற்கும் காரணத்திற்கா பஞ்சம்? மனதிற்கு ஏதாவது அடி, சிராய்ப்பு ஏற்பட்டு உடனே உள்ளே எங்கோ வலிக்கும். அதைத் தொடர்ந்து எழும் இனந்தெரியா நோவில் ஊண், உறக்கம் எல்லாம் தட்டுக்கெட்டுப் போய் - மகா அவஸ்தை அது!

என்ன மருந்து?


கீழேயுள்ள ப்ரிஸ்கிரிப்ஷனை உணவுக்கு முன்னும் பின்னும், உறங்குவதற்கு முன்னும் பின்னும், சதாசர்வ நேரமும் பிரயோகியுங்கள் என்கிறார்கள்.



* மற்றவர்களுடைய செயல்பாடுகள் உங்களுடைய சுயமரியாதையை அழிக்க அனுமதிக்காதீர்கள்.

* நமது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்களை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

* அவர்கள் எப்படிப்பட்டவர்களோ அப்படியே அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் நமக்கு என்ன அளிக்கிறார்களோ அதை எவ்வித நியாயமும் களங்கமும் கற்பிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.



முடிகிற காரியமா இது என்று கேட்கலாம்? மருந்து எந்த காலத்தில் இனித்திருக்கிறது? ஊன்றிக் கவனித்தால் இதில் மிகப் பெரிய உண்மையும் நன்மையும் அடங்கியிருக்கிறது.

“உலக அழகி மனைவியாக வாய்க்க வேண்டும்; வாய்க்கு ருசியாய்ச் சமைத்துப் போட வேண்டும்; அதி புத்திசாலியாய் இருக்க வேண்டும்; புடவை, நகை ஆசையற்றவளாய் இருக்க வேண்டும்....” என்று கணவனும் “போட்டதைத் தின்று விட்டு லொட்டு, லொசுக்கு சொல்லாத கணவனாய் இருக்க வேண்டும், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஓரக் கண்ணால் கூடப் பார்க்காத யோக்கியவானாய் இருக்க வேண்டும் எள் என்றால் புதுப் புடவையுடன் நிற்க வேண்டும், ...” என்றெல்லாம் மனைவியும் மனதை வருத்திக் கொண்டே இருக்காமல், நமக்கென அமைந்ததை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அப்படியே நேசிக்கக் கற்றுக்கொண்டால்? பிரமாதமோ, சுமாரோ சமைத்துப் போட்டதை அன்புடன் உண்டு பழகினால்? பல கோர்ட்டுகளுக்கு வேலையிருக்காது.

அது இருக்கட்டும்! மற்றவர்களுடைய செயல்பாடுகள் பாதிக்கக் கூடாது என்கிறார்களே, யாரேனும் விடும் பட்டாசு நம் வீட்டுக் கூரையில் விழுந்து வீடு பற்றிக் கொண்டாலோ, ஆசையாய் வாங்கித் தேய்த்துத் தேய்த்துப் பளபளவென்று பராமரித்து வந்த மோட்டார் சைக்கிளை யாராவது திருடிக் கொண்டு சென்று விட்டாலோ... இப்படி மற்றவருடைய செயல்பாடுகள் மனதிற்கு வலிக்காமல் என்ன செய்யும்? சுயமரியாதையை வைத்துக் கொண்டு அழாமல் எப்படிச் சமாளிப்பது?

இதெல்லாம் யதார்த்தம் தான். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கசப்பான அனுபவம் நிகழலாம். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இழக்கும் பல விஷயங்கள் வாழ்க்கையில் நமக்கு முக்கியமே இல்லை. ஆனால் “அதுதான் வாழ்க்கையின் அத்தியாவசியம்“ என்பது போல் காலப் போக்கில் வந்து ஒட்டிக் கொண்டிருக்கும். அதை ஏதோ ஒரு காரணத்தால் இழக்க நேரிடும்போது மனது வலித்துத் துடிக்கிறது.

செல்போன் இல்லாமல் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூட, மக்கள் கூட்டம் பூவுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தது. மகிழ்ச்சிகரமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அது இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துவிடுமோ என்பது போல் தான் பலரது நிலை மாறியுள்ளது. இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படிப் பல.

அதனால் தான் உடலுக்கு வலி எப்படி உதவுகிறதோ, அதைப் போல் நமது மனதைப் பாதித்து வலிக்கும் விஷயங்கள் நமது வாழ்க்கையின் முன்னுரிமைகளை மறுபரிசீலனைச் செய்ய உதவும் என்று குறிப்பிடுகிறார்கள்.

அதற்காகக் கார், செல்போன், சொந்த வீடு, வாழ்க்கைத் துணை இல்லாமல் வாழ வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொள்ளக் கூடாது. அர்த்தம் அது இல்லை.

விஷயம் யாதெனில், வெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் அடிபட்டு, மனம் வலிக்கும்போது அதை உணர்ந்து தங்களது வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியானபடி மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்; முன்னுரிமைகளை சரிசெய்து கொள்கிறார்கள்; எதிர்பார்ப்புகளைச் சீரமைத்துக் கொள்கிறார்கள்; குற்றம் குறை காணும் மனோ நிலையைச் செப்பனிட்டுக் கொள்கிறார்கள்.

உடலுக்கு நோவு உண்டாக்கும் விஷயத்தை எப்படித் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க மாட்டோமோ, தவிர்த்துக் கொள்வோமோ அதைப் போல் மனதிற்கு நோவு உண்டாக்கும் விஷயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடாது. “நான் அப்படித் தான் இருப்பேன், என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன், அது ஏன் வலிக்கிறது? வலிக்கக் கூடாது,” என்று குதர்க்கம் பேசினால், ஸ்டவ் நெருப்பிலிருந்து உடனே விரலை நீக்கிக் கொள்ளாமல், விரலிடமும் ஸ்டவ்விடமும் சண்டையிட வேண்டியது தான்!

தொடரும்....

No comments:

Followers