KILIYANUR ONLINE

Tuesday, 28 December 2010

சாதனைகள் பெண்களுக்கு தடையில்லை!

சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந் தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட தினமான 2010 டிசம்பர் திங்கள் 26ந் தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் என்ற முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து இரண்டு படகுகளில் உல்லாசமாக இரண்டு படகுகளில் அருகில் உள்ள தீவினைப் பார்க்க சென்ற சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் விபத்துக்குள்ளாகி 13 பேர்கள் பலியான செய்தி வெளியானது கண்டு அனைத்து உள்ளங்களும் அதிர்ச்சியில் உரைந்தன வென்றால் மிகையாகாது.

அந்தக் கோரச்சம்பவத்தினை ஆராயும்போது கீழ்கண்ட காரணங்கள் தெரிந்தன:
படகில் சென்றவர்கள் உயிர் காக்கும் சாதனமாக லைப்போட் என்ற ரப்பர் டியூப்பினை அணியவில்லை.
படகின் சுமைக்கேற்ப பெண்களும், குழந்தைகளும் படகில் ஏற்றப்படவில்லை.
படகில் ஒரு பக்கமே பளுவான பெண்களும் மறு பக்கம் குழந்தைகளும் அமரச் செய்திருந்தது.
குழந்தைகள் உற்சாகத்தில் அலையினை கையில் தொட முனைந்து அவர்களுடைய பளு படகின் ஒரு பகுதியினை சார்ந்திருந்து சாய்ந்தது.
பெண்கள் குழந்தைகளின் இந்த விளையாட்டுச் செயலினை கட்டுப்படுத்தாதது.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீச்சல் பழக்கமின்மை.
ஆபத்தான நேரத்தில் எப்படி உயிர் காப்பது என ஆண்களுக்கு தெரியாதது.
மற்றொரு படகில் சென்ற சில ஆண்களுக்கும் நீச்சல் தெரியாததால் மீனவர்கள் கரையிலிருந்து வேறொரு படகில் வரும் வரை விபத்தில் சிக்கியவர்களை காப்பற்ற இயலாதது.
இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது என்றாலும் கடற்கரை ஓரத்தில் வாழும் இஸ்லாமிய கிராமங்களில் வாழும் ஊர்களில் இப்படிப் பட்ட விபத்துக்கள் ஏற்படும் போது அதனை தடுக்க என்னன்ன வழிகள் என ஊர் ஜமாத்தார்கள் அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்வதுடன், ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும் கட்டாயமாக நீச்சல் தெரிந்திர ஏற்பாடு செய்வது அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரர்களின் கடமையாகும் என்றால் மிகையாகுமா?

2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி அன்று என் கல்லூரித் தோழனும் பரங்கிப்பேட்டையினைச் சார்ந்த அலி அப்பாஸ் காரைக்காலில் சக தோழர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது சுனாமி அலை வரும் போது அனைவரும் ஒரு மரத்தில் ஏறி தப்பிக்கும் போது நண்பன் அலி அப்பாஸ் மட்டும் மரமேர முடியாததால் அதில் பலியானான் என அறிந்து என் உள்ளம் இன்னும் வேதனையால் துடிக்கிறது.

அதனைப்போன்று இந்த படகு விபத்தில் தன் அருமைக் குழந்தைகளையும், தாய்மார்களையும் விபத்தில் சிக்கி பரிதவிக்க விட்டு விட்டு இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் நிலை எப்படியிருநதிருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

ஆகவே இது போன்ற விபத்துக்களை தடுக்க என்னன்ன வழிகள் என ஆராயந்து நடவடிக்கை எடுத்தால் கடற்கரை ஓர மக்களை சோக இருள் கவ்வாமல் இருக்குமல்லவா?
கண்டிப்பாக ஆண்கள் முதல் குழந்தைகள் வரை நீச்சல் பழகியிருக்க வேண்டும். நீச்சல் நீரிலிருந்து மனிதனை காப்பாற்றுவது மட்டுமல்ல; மாறாக, சிறந்த ஒரு உடற்பயிற்சியாகும். அத்துடன் எவ்வளவு பெரிய டென்சனில் இருந்தாலும் அரை மணிநேர நீச்சலுக்கு சென்று வந்தால் அந்த மன நெருக்கடி ஒரு நிமிடத்தில் பறந்தோடி உற்சாகம மேலோங்கும்.
நீச்சல் செய்பவர்கள் மனதில் எதனையும் சாதிக்கலாம் என ஒரு எண்ணம் ஏற்படும். அதற்கு உதாரணமாக 26.12.2010 அன்று புதுவையில் ஒரு 38 வயது பெண்மனி செய்த சாதனையினை உங்களுக்குச் சொல்லலாமென நினைக்கிறேன். பாண்டிச்சேரி மாநிலம் வில்லியனூரினைச் சார்ந்த குடும்ப நடு வயது பெண்மனி ராணி (38) என்பவர் நீச்சல் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று ஒரு சாதனை செய்ய வேண்டுமென நினைத்து நீச்சல் பயிற்சினை மேற்கொண்டார். ஆழிப்பேரலை நாளன்று பாண்டி முன்னாள் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு நீச்சல் குளத்தில் தலையினை மேலே வைத்துக் கொண்டு கால்களை தரை நோக்கியும் ஆனால், தரையில் படாமலும், நீச்சலிடிக்காமலும் ஒரு கிளோ மீட்டர் தூரத்தினை காலை பத்து மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரை நடந்து சாதனை செய்துள்ளார் என்றால் பாருங்களேன் நீச்சல் சாதனை பெண்களுக்கு விதிவிலக்கல்ல என்பதினை இது காட்டவில்லையா?சிலர் கேட்கலாம் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து உள்ளார்கள் அவர்களால் எப்படி நீச்சல் உடையில் நீந்த முடியுமென்று. இப்போது முஸ்லிம் பெண்களுக்கென உடல் அங்கங்கள் தெரியாது புர்கா வடிவில் நீச்சல் உடைகள் மேலை நாடுகளிலும், அரேபிய நாடுகளிலும் உள்ளன. நமது பெண்களுக்கும் அதனை வாங்கிக் கொடுத்து நீச்சல் பயிற்சி பெண் பயிற்சியாளர்களைக் கொண்டே பயிற்சி கொடுக்கலாம். சென்னை போன்ற நகரங்களில் பெண்களுக்கான தனி நேரங்கள் நீச்சல் குளங்களில் ஓதுக்கப்படுங்கின்றன. குளங்கள் உள்ள ஊர்களிலும். பேரிய கண்மாயல் குளிப்பவர்களுக்கும், ஆற்றங் கரையில் உள்ள முஸ்லிம் பெண்கள், சிறார்களுக்கு நீச்சல் பயிற்சி கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
சிலர் சொல்வார்கள் மீன் குட்டிகளுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும், அவர்களாக பழகிக் கொள்வார்கள் என்று அசட்டையாக. ஆனால், இது போன்று விபத்துக்கள் ஏற்பட்டால் அங்கு ஏற்படும் உயிர் பலிக்கு அவர்கள் மற்றவர்களை குறை சொல்லத்தான் அவர்களுக்குத் தெரியுமேயொழிய அந்த குறைகளை போக்க எடுத்த நடவடிக்கை என்ன என அவர்களுக்குத் தெரியாது.

ஆகவே, வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் முஸ்லிம் ஊர்களில் ஏற்படாதாவாறு நடவடிக்கை எடுப்பது அனைவருடைய கடமையல்லவா சகோதர, சகோதரிகளே?
-டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

No comments:

Followers