KILIYANUR ONLINE

Thursday, 7 April 2011

நகங்களும் நலம் சொல்லும்

நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.

சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

சமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.

பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.

ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுக்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே. நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.

நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்ப மாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மை தான்.

வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்தஓட்டம் கிடைக்க உதவுகிறது.

நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.

நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் `மானிட்டர்' போலவும் செயல்படும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு இவற்றைக் கண்டுபிடிக்கலாம். நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு...

நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்டு நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.

நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் ரையீரல் நோய்கள் வரலாம்.

மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.

நகங்கள் வெளிறி இருந்தால் ரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.

நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.

கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.

நீலநிறமாக மாறிவிட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.

நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.

மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துக் கொள்வது நலம்.

No comments:

Followers