KILIYANUR ONLINE

Friday 8 April 2011

நேரமில்லை! நேரமிருக்கிறது!

தொழ நேரமில்லை!

ஓத நேரமில்லை!

பசியாற நேரமில்லை!

படிக்க நேரமில்லை!

தூங்க நேரமில்லை!



பர பரவென்ற வேலையால்

பறந்து கொண்டு இருக்கிறேன்!

பணம் உண்டு பையில்

மதிய உணவு இல்லை கடையில்

நேரத்தில் சாப்பிட நேரமில்லை!





படைத்தவனை நினைக்க நேரமில்லை!

பண்பாக இருக்க நேரம் நேரமில்லை!

பழகியவனை பார்க்க நேரமில்லை!

மனைவியிடம் பேச நேரமில்லை!

மக்களிடம் பேச நேரமில்லை!

பள்ளி விட்டு வரும் பிள்ளையை

பாசத்தோடு கொஞ்ச நேரமில்லை!



தாயை கவனிக்க நேரமில்லை!

தந்தையை கவனிக்க நேரமில்லை!

உற்றாரை கவனிக்க நேரமில்லை!

ஏழை வரி கொடுத்து

ஈட்டிய செல்வத்தை

தூய்மையாக்க நேரமில்லை!



நேரமிருக்கிறது!



மனிதா நேரமிருக்கிறது!

உயிர் பிரிய நேரமிருக்கிறது!

மண்ணறைக்கு செல்ல நேரமிருக்கிறது!

மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது!

நல்லடியார்களுக்கும் நேரமிருக்கிறது!

தீயவர்களுக்கும் நேரமிருக்கிறது!



மண்ணறை அழைக்கிறது

நான் தனி வீடாவேன்

புழு பூச்சிகளின் பிறப்பிடமாவேன்

நல்லவர்களுக்கு நிம்மதியளிப்பேன்

தீயவர்களுக்கு நோவினை தருவேன்!

நன்மை தீமை பிரித்தறிந்து

மண்ணறையில் கேள்விக்கும்

மண்ணறையின் வேதனைக்கும்

நேரமிருக்கிறது!



மறுமை கேள்வி கேட்கப்படும் நாள்!

மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்!

மண்ணாகி இருக்கக் கூடாதா? நான்

மறுமையை சந்திக்காமல் இருந்திருப்பேனே!

மனிதன் அலறும் நாளுக்கு நேரமிருக்கிறது!



தந்தையை கண்டு மகன் ஓடுவான்!

மகனை கண்டு தந்தை ஓடுவான்!

மனைவியை கண்டு கணவன் ஓடுவான்!

கணவனை கண்டு மனைவி ஓடுவாள்!

நண்பனை கண்டு நண்பன் ஓடுவான்!

எங்கே ஓடுவார்கள்! நன்மையை தேடி!

மறுமையில் ஓட நேரமிருக்கிறது!



மறுமையில் விவாதம்

மனைவியிடம் கணவன்

உனக்கு வாரி வழங்கினேன்

உன் நன்மையிலிருந்து

எனக்கு கொஞ்சம் கொடு

மனைவி ஒத்துக்கொள்வாள்

நீங்கள் சிறந்த கணவர்தான்

எனக்கும் நன்மைதான் வேண்டும்

பாசமிகு கணவனை பிரிந்து

வெருண்டு ஓடுவாள்

ஓடுவதை காண நேரமிருக்கிறது!



பெற்ற மக்களிடம் ஓடுவான்

பெற்றெடுத்த மக்களே!

நான் சிறந்த தந்தையல்லவா!

துன்பம் தொடாமல் அனைத்து

வளங்களையும் தந்து ஆளாக்கினேன்!

உன் நன்மையிலிருந்து

எனக்கு கொஞ்சம் கொடு

பிள்ளைகள் ஒத்துக்கொள்வார்கள்!

நீங்கள் சிறந்த தந்தைதான்

எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்!

தந்தையிடம் இருந்து

வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்!

காட்சிகளை காண நேரமிருக்கிறது!



உலகைப் படைத்தவனின் கோபம்

உலகம் முழுவதிலும்

அழிவுகள் சிறிது சிறிதாக! பெரிதாக

அழிவுக்கும் நேரமிருக்கிறது!



மனிதனுக்கோ

மறுமை பயம்

மனதில் இல்லை!

சகோதரச் சண்டை,

உடன்பிறந்தார் சண்டை

குலச்சண்டை,

தெருச்சண்டை,

சம்பந்தி சண்டை,

குழந்தைகள் சண்டை,

அடுத்தவன் வீட்டின்

இடத்தை அபகரித்த சண்டை

படிப்பில், அறிவில், ஆற்றலில்,

பணத்தில், அழகில், குலத்தில்

பெருமை, ஆணவம் மேலோங்க

பிறரிடம் ஏளனச்சண்டைகளுக்கு

நேரமிருக்கிறது!



மனிதர்களே பாசமும்

கேள்விக்குறியாகும் நாள்!

உங்கள் செல்வமும்

பலன் தர முடியாத நாள்!

எந்த பரிந்துரையும்

ஏற்றுக் கொள்ளப்படாத நாள்!

இம்மை, மறுமையின் அதிபதி

வல்ல அல்லாஹ்!

நீதி வழங்கும் நாள் -அந்த

மறுமைக்கு நேரமிருக்கிறது!





மண்ணறைகளைச்

சந்திக்கும் வரை

அதிகமாகத்(செல்வத்தை)

தேடுவது உங்கள்

கவனத்தைத்

திருப்பி விட்டது.

பின்னர் அந்நாளில்

அருட்கொடை பற்றி

விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்:102:1,2, 8)



அலாவுதீன்.S



Source : http://adirainirubar.blogspot.com/2010/12/blog-post_13.html

No comments:

Followers