இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன. இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது.
இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது.
ஆனால் இவைகளை நம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுக் கழிவுகளை உரமாக இட்டு வளர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
அந்த வகையில் வீடுகளில் எளிதாக வளர்க்கப்படும் அவரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.
அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.
பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.
· மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.
· மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
· சிறுநீரைப் பெருக்கும்
· சளி, இருமலைப் போக்கும்
· உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்
· சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்
· இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.
Mohammad Sultan
No comments:
Post a Comment