KILIYANUR ONLINE

Saturday 11 June 2011

ஏன் இந்த சிதைவு?

சூட்கேசிற்குள் சிறுவனின் உடலைத் துண்டாக்கி அடைத்துச் சென்ற தமிழரசி என்ற பெண்ணின் வழக்கு, அண்மையில் தமிழக மக்களையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்வது, காதலுக்காக குழந்தைகளைக் கடத்திக் கொல்வது என நம் சமூகத்தில் பாலியல் தொடர்பான குற்றச் செயல்கள் பல்வேறு பரிணாமத்தை அடைந்துள்ளன.

பள்ளியில் படிக்கும் மாணவியை ஆசிரியரே மோசம் செய்து, திருமணம் செய்து கொள்வது.. அதுபோல் மாணவணை ஆசிரியை மணந்து கொள்வது...

இப்படி செய்பவர்களில் பெரும்பாலானோர், மெத்தப் படித்தவர்கள் என்பதுதான் வேதனை.

கை நிறைய சம்பளம், கேட்க ஆளில்லாத தனிமை, அளவற்ற சுதந்திரத்தால் போதையும், கொண்டாட்டமும் அன்றாட வழக்கமாகும் வாழ்க்கை முறை, இன்ப நுகர்வின் உச்சத்தை அடைந்தபின் அங்கு வெறித்து நிற்கும் சூனியத்தைப் பார்த்து திகைத்து நிற்பது.

எங்கு வந்தோம்.. ஏன் வாழ்கிறோம்? ஏன் இப்படி ஆனோம்? எந்தக் கேள்விக்கும் அப்போது இவர்களுக்கு பதில் கிடைப்பதில்லை.

பேதம் கொண்ட மனம் பேதலிக்கிறது. காதலித்து மணந்து கொண்டவர்களுக்கு இப்போது ஒருவரை ஒருவர் பார்ப்பதற்கே போர் அடிக்கிறது.

என்ன செய்யலாம்?


மனதை மாற்றிக்கொள்வதற்கு பதிலாக ஆளை மாற்றத் திட்டம் போடுகிறார்கள். ரகசியமாக தீட்டும் திட்டம் தெரியும்போது, உயிருக்கு, உயிராக காதலித்ததாகக் கூறிக்கொண்ட துணையையே கொல்லவும் துணிகிறார்கள்.

கள்ளக்காதலில் ஏமாற்றம் வந்தால் அவள் அல்லது அவனது அப்பாவிக் குடும்பத்தையோ, குழந்தைகளையோ பழிவாங்கும் அளவிற்கு உன்மத்தம் கொள்கிறார்கள்.

இத்தகைய குற்றங்கள் அப்போதெல்லாம் இல்லையா? இப்போதுதான் நடக்கின்றனவா?

இருந்திருக்கலாம். ஆனால் அவை விதிவிலக்கு களாகவோ, சமூகப் பிறழ்வுக ளாகவோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்திருக்கலாம். இப்படி அன்றாட நிகழ்வுகளாக மலினப்பட்டதில்லை.

ஏன் இந்த அவல நிலை. சமூக உளவியலில் ஏற்பட்டுள்ள இந்த சிதைவுக்கு என்னதான் காரணம்?
எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதை யாரும் ஏற்றுக் கொள்வது இல்லை.

ஒரு வீடு என்றால் அதிகபட்சம் அதில் இப்போது யார் யார் இருக்கிறார்கள்.

கணவன்-மனைவி, பெரும்பாலும் ஒரு குழந்தை, சில வீடுகளில் இரண்டு.

இரண்டு பேரும் வேலைக்குப் போகும் வீடாக இருந்தால், பிரச்சனைக்கு கேட்கவே வேண்டாம்.

தம்பதியர்களுக்குள் சிறு சண்டை வந்தால் கூட, கேட்கவோ, சமாதானம் செய்து வைக்கவோ ஆள் இருப்பதில்லை.

சிறு வாக்குவாதம் கூட பெருநெருப்பாக பற்றி எரியத் தொடங்கும். சொற்களில் சூடேறும் உறவு என்ற மெழுகுவர்த்தி தானாகவே உருகத் தொடங்கிவிடும்.

தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, மூத்தவர், இளையவர் என்று கூட்டுக் குடும்ப நடைமுறைகள் இருந்த காலத்தில், தம்பதியர்களுக்கு இடையே காலையில் ஏற்படும் ஊடல்கள், மாலையில் தாமாகவே கூடலாக மாறிவிடும்.

ஏனென்றால், பெரியவர்களை வைத்துக் கொண்டு சுடுசொற்களை பேச முடியாது.

மௌனமும், நேர இடைவெளியும் சுயபரிசோதனைக்கான அவகாசத்தை அவர்களுக்கு வழங்கும்.
நாம்தான் தவறாக பேசிவிட்டோம் என இரண்டு பேரும் பரஸ்பரம், தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ளும் உன்னத மனநிலை, உளவியல் ஆலோசகர்களின் உதவி இல்லாமலே வாய்க்கும்.

சிறிய இடைவெளிக்குப் பின்னர் இருவரும் மாலை அல்லது இரவு சந்தித்துக் கொள்ளும் பொழுது, காலையில் நடந்த உரையாடல் அற்பமாகத் தோன்றும்.

அப்படியில்லாமல் வாக்கு வாதம் முற்றுகிற நேரத்தில், வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனடியாக தலையிடுவார்கள். இருவருக்கும் அறிவிரை கூறி சாந்தப் படுத்துவார்கள்.

இத்தகைய ரம்மியமான சூழ்நிலை, தற்போதைய குடும்பங்களில் நிலவுவதில்லை.

பெரும்பாலான நகர்ப்புறத்துக் குடும்பங்களில், பெரியவர்கள் வயது முதிர்ந்த பின்னரும் சில ஆண்டுகளுக்கு உயிரோடு இருக்க நேரிட்டால், உடனடியாக அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் அடைத்து விடுகிறார்கள்.

கிராமப்புற குடும்பங்களில் முதியவர்கள் பெரும்பாலும் தனிமையில்தான் வசித்து வருகிறார்கள். பிள்ளைகள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் தங்களது மனைவி மக்களுடன் வசித்து வருகிறார்கள்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் பெற்றோரின் மரணச் செய்தி கேட்டு சென்றால்தான் உண்டு.
இத்தகைய பின்னணியில்தான், தனிமையும் உளவியல் சிதைவும் இளம் தம்பதியர்களை ஆட்கொண்டு, குற்றச் செயல்களாக பரிணாமம் கொள்கிறது.

முதியவர்களையும், உறவுகளையும் சுமையாக நினைத்து தப்பித்து ஓடும் இத்தகைய தம்பதியர்களுக்கு, ஒரு கட்டத்தில் அவர்களே சுமையாகும் அவலம் இப்படித்தான் நேர்கிறது.

சில வீடுகளில், தம்பதியர்களுக்கு பெரியவர்க ளாலேயே பிரச்சனை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், இளசுகள் என்னதான் செய்யும் என்ற கேள்வி சிலருக்குள் எழலாம்.

எல்லா பெரியவர்களும் அப்படி இல்லை என்பது ஒன்று. அப்படி இருக்கும் பெரியவர்களைக் கூட அன்பால் திருத்த முடியும் என்பது மற்றொன்று.

பெண்களை அடிமைப்படுத்தி, அடுக்களையிலேயே வேகவைக்கும் இத்தகைய குடும்ப அமைப்புகள் தேவையா என்பது மற்றொரு சாராரின் கேள்வி.

குடும்பம் என்ற நிறுவன அமைப்பில் பல குறைகள் இருப்பதை மறுக்க முடியாது. குறைந்த பட்ச தனிமனித சுதந்திரம், பெண்களின் நுட்பமான உணர்வுகளுக்கு மரியாதை இவற்றை குடும்பம் என்ற அமைப்பு, பல நேரங்களில் நிராகரிக்கிறது என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லாமல் இல்லை.

அதற்காக குடும்பம் என்ற அமைப்பே தேவையில்லை என்று ஒரேடியாக தகர்த்தெறிய நினைப்பதும் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதையும் உணர வேண்டும்.

ஒரு வீடு பழுதாகி விட்டது என்றால், அதற்கு மாற்றாக மற்றொரு வீட்டை கட்டியபின்புதான், பழைய வீட்டை இடிக்க முடியும். அப்படியில்லாமல், குடியிருக்கும் பழைய வீட்டை இடித்தால் மட்டுமே போதும் என்ற போக்கு விபரீதமானது. அன்றாட வாழ்வை தெருவில் நிறுத்திவிடும்.

மாற்று என்று எதுவும் இல்லாமல், தற்போதைய இருப்பை தகர்ப்பது, சமகால வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்ற உண்மையை உணரவேண்டியது அவசியம்.

ஆக, நவீனம் தந்த தனிமை, இளம் தலைமுறையினர் வாழ்வை திக்குத் தெரியாத காட்டில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது என்பது மட்டும் உண்மை.

எப்படி இருந்தாலும், மனித உறவுகள் மகத்தானவை. வெறும் புலன் நுகர்வும், களியாட்டங்களும் மட்டுமே வாழ்க்கையின் எல்லையாக இருக்க முடியாது.

சம மனிதர்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் மட்டுமே, மனித வாழ்க்கை முழுமையடைகிறது.

ரத்த உறவுகளை புறக்கணித்து, சக மனிதர்களுடன் எந்த தொடர்பும் இன்றி தனிமைப்பட விரும்பும் இளந்தம்பதியர்கள் இந்த கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உறவுகள் மற்றும் சக மனிதர்கள் மீதான நேசத்தால் நிறைந்து வழியும் மனதில் மட்டுமே அமைதி குடிகொள்ளும்.

தற்போதைய காலகட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பார்க்கும்போதே வெறுப்பு கொள்வதைத்தான் காண முடிகிறது. பாசம், நேசம், அன்பு இவைகள் குறுகிக்கொண்டே வருகிறது.
தனிமை நாட்டமும், புலன் நுகர்வு வெறியும், களியாட்ட வேட்கையும் கொந்தளிக்கும் மனதில், அமைதி ஒருநாளும் ஏற்படாது.

உறவுகளை நேசியுங்கள். முதியவர்களை சுமையாக கருதாதீர்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டியாகவும், வடிகாலாகவும் இருப்பார்கள்.

அது ஒன்றே, சமூக உளவியல் சிதைவுகளுக்கான ஒரே சமய சஞ்சீவி.
Thanks - nakkeran

No comments:

Followers