"நமது சென்சஸ், நமது எதிர்காலம்' - இது, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முத்திரைச் சொல். ஆனால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள், நமது எதிர்காலம் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, வேலையின்மை, குறைந்து வரும் பெண் குழந்தைகள் என, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்தியாவின் மக்கள் தொகை, 102 கோடி. 1991ல், 84.63 கோடியாக இருந்தது. இவ்விரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கும் இடையிலான பத்தாண்டுகளில், மக்கள் தொகை, 21.34 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2001 முதல், 2011 வரையான, பத்தாண்டுகளில், 18.1 சதவீதம் அதிகரித்து, 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,000 ஆண்களுக்கு பெண்களின் எண்ணிக்கை, 933 என்றிருந்தது. இது, கிராமப் பகுதிகளில், 946 ஆகவும், நகர்ப்புறங்களில், 900 ஆகவும் இருந்தது. கடந்த பத்தாண்டுகளில், அறிவியல் வளர்ச்சி காரணமாக, மருத்துவத் துறையில் மாற்றங்கள், நாகரிக வளர்ச்சி காரணமாக, ஆண் - பெண் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது, 1901ம் ஆண்டு, 1,000 ஆண்களுக்கான பெண் குழந்தைகள் எண்ணிக்கை, 972 என இருந்தது. அதன் பிறகு, சில மாநிலங்களில் மெல்ல குறையத் துவங்கியது. ஆனால், கடந்த, 40 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, பெரும்பாலான மாநிலங்களில் குறைந்து கொண்டே வருகிறது.
காலங்காலமாக பெண் தான் எல்லாவற்றுக்கும் பிரக்ருதி என்றபோதும், சமூகத்தில் எல்லாரும் ஆண் குழந்தையைத் தான் விரும்புகின்றனர். ஆண் குழந்தை, சமூகத்தில் அந்தஸ்தை பெற்றுத் தரும், கவுரவத்தின் சின்னம் என்றெல்லாம் கருதப்படுகிறது. மேலும், எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பில், ஆண் குழந்தையை வளர்ப்பது, படிக்க வைப்பது என அனைத்து செலவினங்களும் முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால், பெண் என்றால் வளர்ப்பு, படிப்பு, திருமண செலவு போன்ற அனைத்தும், செலவினங்களாகவே கருதப்படுகிறது. காலங்காலமாக நிலவிவரும் இந்த பாலின பாகுபாடு, கிராமப் பெண்களிடம் தான் அதிகமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில், நகர்ப்புற பெண்களிடமும் அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் நிலவும் இத்தகைய நம்பிக்கையால், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில், மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் முறை, புழக்கத்திற்கு வரும் முன், எந்த குழந்தையாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளும் பழக்கமும், பக்குவமும் பெண்களிடம் இருந்தது. ஆனால், இந்த முறை புழக்கத்திற்கு வந்து பிரபலமடையத் துவங்கிய பின், மக்களின், குறிப்பாக பெண்களின் மனநிலை மாறிவிட்டது. கருவில் இருப்பது ஆண் என்றால் ஏற்றுக் கொள்வதும், பெண் என்றால், கருக்கொலையில் ஈடுபடுவதும், இன்று, சாதாரண நிகழ்வாகிவிட்டது. இதையடுத்து, கருக்கொலைக்கு எதிராக, நடைமுறையில் இருந்த சட்டத்தில், 2003ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டதுடன், இச்சோதனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கான பலன், எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறும் முறை, கிராமப்புற பெண்களைக் காட்டிலும், நகர்ப்புற பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகவுள்ளது. இதன் விளைவாக, கடந்த, 50 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் அதிகளவில் குறைந்து வருகிறது. கடந்த, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஆறு வயது வரையான, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தைகள் என்றிருந்த நிலை, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 914 ஆகக் குறைந்துள்ளது. மேலும், ஆறு வயது வரையான குழந்தைகளின் எண்ணிக்கை, 15.58 கோடி. இது, 2001ம் ஆண்டைக் காட்டிலும், 50 லட்சம் குறைவு.
நம் நாடு சுதந்திரமடைந்த பின், முதன் முறையாக நடந்த, 1951ம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது இருந்த நிலை, பல்வேறு மாநிலங்களில் மாறிவிட்டது. எழுத்தறிவில் முன்னிலை வகிக்கும் கேரளா, இதில் முன்னுதாரணமாக விளங்குகிறது. இம்மாநிலத்தில், கடந்த, 50 ஆண்டுகளாகவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கேரளாவில், 1951ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,028 ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை, 2001ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,058 ஆக அதிகரித்து, தற்போது, 1,084 ஆக உயர்ந்துள்ளது. அரியானா, இமாச்சல பிரதேசம், மிசோராம் போன்ற பல்வேறு மாநிலங்களிலும், தனிநபர் வருமானம் அதிகமுள்ள, "இந்தியாவின் உணவுக் களஞ்சியம்' என வர்ணிக்கப்படும் பஞ்சாப் மாநிலத்திலும், பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டதும், மிகப் பெரியதுமான உத்தர பிரதேச மாநிலத்தில், பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேபோன்று, நாட்டின் தலைநகராகவும், உயர்வகுப்பினர் அதிகமாக வசிக்கும் பகுதியாகவும் விளங்கும் டில்லியிலும், பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்திலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, குறைந்து வந்துள்ளது. தமிழகத்தில், 1901ல், 1,044 ஆகவும், 1951ல், 1,007 ஆகவும் இருந்த பெண்கள் எண்ணிக்கை, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 946 ஆகக் குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மதுரை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில், பெண் சிசுக்கொலை அதிகமாக நடைபெறுவதாக கண்டறியப்பட்ட பகுதிகள். இதையடுத்து, இம்மாவட்டங்களில், 1992ம் ஆண்டு, தொட்டில் குழந்தைத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பின், இத்திட்டம் சரியான கவனிப்பின்றி புறக்கணிக்கப்பட்டது. இத்திட்டம், பெண் சிசுக்கொலை சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாவிட்டாலும், இதனால், சிசுக்கொலை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவும், இவ்வகையான பல அதிர்ச்சி தகவல்களையும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் உணர்த்துவதாகவே இருந்து வருகிறது. ஆனால், எதிர்கால சமூகத்திற்கு சவால் விடுக்கும் வகையில், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவாக குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், மக்கள் மத்தியில் ஏற்படும் மன மாற்றங்களும் தான், இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும். இ-மெயில்: subramani.ps71@gmail.com
Thanks -Dinamalar
பெ.சுப்ரமணியன், சமூக ஆர்வலர்
No comments:
Post a Comment