பொதுவாகவே, ஒரு நூலகம் என்றால் ஏராளமான புத்தகங்களும், செய்தித்தாள்களும், இன்னபிற தாள் வடிவ தகவல் திரட்டுகளும் குவிந்திருக்கும் ஒரு இடம். ஆனால் இன்று அதன் முகம் மாறிவிட்டது. ஏராளமான தகவல் திரட்டுகளை எளிதில் அடையும் வண்ணம், நவீன தொழில்நுட்பம் அதில் புகுத்தப்பட்டுள்ளது. ஏராளமான விவரங்களில், வேண்டிய விவரங்களை எளிதில் அணுக அந்த தொழில்நுட்பம் பயன்படும்.
இதன்மூலம், காலம் மற்றும் நேரம் மட்டுமல்லாது, இடமும் மிச்சமாகும். இத்தகைய நூலகத்தை பராமரிப்பவர் நூலகர் எனப்படுகிறார். அவரின் பணி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த கட்டுரையில் ஒரு நூலகரின் பணி மற்றும் முக்கியத்துவம் பற்றியும், அதற்கான படிப்பை பற்றியும், உயர்கல்வி பற்றியும், படிப்பிலுள்ள குறைபாடுகள் பற்றியும், அதன் வளர்ச்சி மற்றும் சம்பளம் பற்றியும், கல்வித்துறையில் உள்ள வேலைவாய்ப்பை பற்றியும், கார்பொரேட் துறையிலுள்ள வேலைவாய்ப்பை பற்றியும் மற்றும் ஆலோசனை துறையில் உள்ள வேலைவாய்ப்பை பற்றியும் விரிவாக காணலாம்.
நூலகரின் பணிகள்:
நூலகம் என்றாலே, குவியல் குவியலாக புத்தகங்களும், ஜர்னல்களும் இருக்கும் கட்டிடம் என்ற பழைய அடையாளம் இப்போது மாறிவிட்டது. எந்த நேரத்திலும், எந்த தகவலையும் கிடைக்க செய்வதுதான் தற்போதைய காலத்தின் தேவை என்கிற அளவிற்கு நிலை மாறியுள்ளது. ஒரு நூலகர் தன்னுடைய பழைய பணி சூழலிலிருந்து, தொழில்நுட்ப துணையுடன், அச்சு வளத்திலிருந்து ஆன்லைன் வளம் என்ற நிலைக்கு மாறி பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம், இடநெருக்கடி சமாளிக்கப்படுகிறது. குறைந்த இடத்தில் அதிக பயன்விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே இந்த பணிக்கு, திறமையும், அறிவும் தேவைப்படுகிறது. எனவே இந்த துறையில் பல சிறப்பு படிப்புகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன.
நூலகப் படிப்பு:
லைப்ரரி மற்றும் இன்பர்மேஷன் சயின்ஸ் என்பது ஒரு பட்டப்படிப்பு. இந்த படிப்பானது, இளநிலை மற்றும் முதுநிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில் கற்பிக்கப்படுகிறது. இளநிலை படிப்பு 1 வருட கால அளவு கொண்டது மற்றும் இதைப் படிக்க ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த 1 வருட படிப்பானது, இக்னோ உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்களால், தொலைதூர கல்வி முறையிலும் வழங்கப்படுகிறது.
இந்த 1 வருட தொலைதூர படிப்பிற்கு, பள்ளி இறுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டு சேர்க்கை நடைபெறும். அதேசமயம் முதுநிலை படிப்பாக இருந்தால், இளநிலை படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இளநிலை படிப்பில் சேர, எந்த பிரிவில் படித்திருந்தாலும் அனுமதி உண்டு.
இந்த படிப்பிற்கான பாடத்திட்டத்தில், நூலக நிர்வாகம்(பெறுதல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்டவை), வரவு-செலவு திட்டம், தனிப்பட்ட நிர்வாகம், வரிசைப்படுத்துதல், நெட்வொர்கிங், ஆட்டோமேஷன், தகவல் மூலங்கள், பொருட்களை பாதுகாத்தல், ஆராய்ச்சி முறைமை, பொது நூலகம் மற்றும் கல்வி நிறுவன நூலகம் உள்ளிட்ட பல பிரிவுகள் அடங்கியுள்ளன.
உயர்கல்வி:
டெல்லி பல்கலை போன்ற கல்வி நிறுவனங்களில், முதுநிலை படிப்பில், தகவல் அமைப்பு, அறிவு அமைப்பு, வரிசைப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தல் போன்ற விஷயங்களில் ஆழமான பாடங்கள் உள்ளன. மேலும், மேம்படுத்தப்பட்ட நூலக வரிசைப்படுத்தல்(புத்தகமல்லாத பொருட்கள்), மேம்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் முறைகள், நூலக மற்றும் தகவல் சேவைகளை சந்தைப்படுத்தல், தகவல் சேகரிப்பு மற்றும் மீட்கொணர்தல் மற்றும் பொது நூலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள், கல்வி நிறுவன நூலகம், ஆராய்ச்சி நூலகம், மருத்துவ அறிவியல் நூலகம், வேளாண் அறிவியல் நூலகம் மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நூலகம் பற்றிய விஷயங்களும் உள்ளன.
படிப்பின் குறைபாடுகள்:
இன்றைய நிலையில், இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் உள்ள லைப்ரரி மற்றும் இன்பர்மேஷன் சயின்ஸ் படிப்பானது, இன்றைய தகவல் புரட்சி யுகத்திற்கு ஈடுகொடுப்பதாக இல்லை. அந்த பாடத்திட்டங்கள் பழைய தியரி விஷயங்களிலேயே கவனம் செலுத்துகிறதே ஒழிய, நடைமுறை அம்சங்களில் கவனம் செலுத்துவதில்லை. நூலகம் மற்றும் தகவல் சேவைகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பலவிதமான தொழில்நுட்ப மாற்றங்களை, நூலகப் பாடத்திட்டமானது கவனத்தில் கொள்ள வேண்டும். கம்ப்யூடிங் மற்றும் வெப் கன்டென்ட் மேலாண்மை மற்றும் மேம்பாடு ஆகிய விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். டாக்டரேட் ஆய்வில் ஈடுபட விரும்பும் நூலக அலுவலர்கள் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது.
வளர்ச்சி மற்றும் சம்பளம்:
நூலக அலுவலர் என்பவர் மற்ற துறை நிபுணர்களுடன் சமமாக மதிக்கப்பட வேண்டிய ஒருவர். ஒரு கல்லூரியைப் பொறுத்தளவில், தலைமை நூலகர் என்பவர், பேராசிரியருக்கு சமமானவர் மற்றும் பேராசிரியருக்கு நிகரான ஊதியமும் பெறுகிறார். துணை நூலகர் என்பவர் அசோசியேட் பேராசிரியருக்கு சமமாக கருதப்படுகிறார். அதேசமயம் டெல்லி பலகலை போன்ற பெரிய இடங்களில் படித்து, இத்துறையில் பட்டம் பெற்று, பெரிய கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பெரும் சம்பளம் மிக அதிகம்.
கல்வித்துறையில் உள்ள வாய்ப்புகள்:
இன்றைய நிலையில் புதிதாக நூலக அறிவியல் படிப்பை முடித்து வெளிவரும் இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இருக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் பலவிதமான கல்வி நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் நூலக அலுவலர்களின் சேவையை சார்ந்திருக்கும் ஒரு அறிவு தொகுப்பை உருவாக்கும் திட்டம் உள்ளது. இதைத்தவிர, சட்டம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பாடரீதியான நூலகங்கள் அதிகரித்து வருகின்றன.
சட்டத்துறையில் பணிபுரியும் ஒரு நூலக அலுவலர், நூலக அறிவியலோடு, சட்டப் படிப்பையும் முடித்திருக்கலாம். அதேசமயத்தில், மருத்துவ துறையில் பணிபுரியும் நூலகர், அறிவியல் படிப்பில் நன்கு புலமை பெற்றிருக்க வேண்டும்.
கார்பரேட் துறை வாய்ப்புகள்:
இன்றைய நிலையில் பல நூலகர்கள், பாரம்பரிய நூலகம் மட்டுமின்றி, டேட்டாபேஸ் மேம்பாடு, ரெபரன்ஸ் டூல் மேம்பாடு, இன்பர்மேஷன் சிஸ்டம், பப்ளிஷிங், இன்டர்நெட் ஒருங்கிணைப்பு, மார்கெடிங், வெப் கன்டென்ட் மேலாண்மை மற்றும் வடிவமைப்பு, மற்றும் அறிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் தங்களின் தகவல் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி திறன்களை பயன்படுத்துகிறார்கள்.
கார்பரேட் உலகில், கம்பெனிகள், அதிகபட்சமான தகவல்களை சேகரிக்க வேண்டியிருக்கிறது. எனவே அவற்றுக்கு ஒரு விரிவான கன்டென்ட் மேலாண்மை அமைப்பு தேவைப்படுகிறது. உதாரணமாக, வங்கி துறையில் மிகப்பெரிய தகவல் மேலாண்மை தேவைப்படுகிறது. எனவே இத்தகைய வேலையை செய்ய, சரியான முறையில் அதிகப்படியான தகவல்களை ஒருங்கிணைக்கும் திறன்வாய்ந்த நிபுணர்களால் மட்டுமே முடியும். எனவே நூலக அலுவலர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கார்பரேட் துறையில் உள்ளது.
ஆலோசகராக செயல்படுதல்:
பல நூலகங்களுக்கு ஆலோசகராக செயல்படும் வாய்ப்பு இத்துறையில் உண்டு. புத்தகங்களை பரிந்துரைத்தல் மற்றும் கிடைக்கும் இடத்தை முறையாகப் பயன்படுத்த ஆலோசனை வழங்குதல் போன்றவை இதில் அடங்கும். அதேசமயத்தில், புதிய விஷயங்களைப் பற்றி தெளிவான அறிவு இருப்பது அவசியம். ஒருவேளை நீங்கள் அந்தளவிற்கு விஷய அறிவுடன் இருக்கவில்லை எனில், பயனர் ஏமாற்றமடைவார்.
Thanks - Dinamalar
No comments:
Post a Comment