KILIYANUR ONLINE

Thursday 14 July 2011

வளமான வாழ்க்கை

ஒரு கேள்வி, சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்? நம்மில் பலர் பதில் இல்லாமல் தடுமாறுவோம். ஏன் இந்தத் தடுமாற்றம்? சச்சின் அந்த பாலை அப்படி ஆடியிருக்கக் கூடாது என்று விமர்சனம் செய்ய நேரம் இருக்கிறது. பெண்களைப் பற்றியோ, ஆண்களைப் பற்றியோ பேசுவதற்கு நாள் முழுக்க நேரம் இருக்கிறது. இப்படிப் பலவற்றை விவாதிக்கும் நாம், இதுவரை வாசித்த புத்தகங்கள் பற்றி எத்தனை பேரிடம் பேசி இருக்கிறோம்.



மனிதன் ஒருவன் எத்தனை புத்தகங்களைப் படித்தான் என்பதை வைத்துத்தான். அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும் என்கிறார் ஹென்ரி டேவிட் தாரோ. வாசிப்பின்மூலம் பல சாதனைகள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. புத்தக வாசிப்பால் உயர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். வாசிப்பு என்பது பல நன்மைகளைத் தந்து கொண்டு இருக்க... அதைக் கொண்டாட வேண்டிய இளைஞர்கள், அதைவிட்டுத் தூர விலகி நிற்பது ஏன்? மறந்துபோன வாசிப்பை மீட்டு எடுப்பது எப்படி? வழி சொல்கிறார்கள் கருத்தாளர்கள்.



இளைஞர்கள் புத்தகம் படிப்பது இல்லை என்பது முழுமையான கருத்து அல்ல; அவர்கள் தேர்வு செய்து படிக்கிறார்கள். அதிலும் குறைவாகப் படிக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று மாறுபட்ட பார்வையுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறர் எழுத்தாளர் ஒருவர்.



உரைநடையில் கவிதையின் மென்தன்மையை உணரச்செய்யும் ​படைப்பாளி. முந்தைய தலைமுறையில் ஒரு தகவல் தேவை என்றால், அதை நூலகத்தில் சென்று தேடுவோம். ஆனால், இன்றைய தலைமுறையில் நூலகத்தின் இன்னொரு வடிவமாக இணையம் இருக்கிறது. அதனால் புத்தகத்தைத் தேடிப் போகும் அந்தத் தேடுதல் இன்று இளைஞர்களிடம் இல்லை.

இதற்கு முந்தைய தலைமுறையில் சிறுவயதில் இருந்தே இலக்கியத்திலோ இசையிலோ அல்லது வேறு ஏதேனும் கலைகளிலோ ரசனையை ஏற்படுத்தி, வீடு நம்மை வளர்த்தது. ஆனால், இன்று அந்த நிலை இல்லை, பாடப் புத்தகங்கள் தவிர, வேறு எதுவும் படிக்கத் தேவை இல்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. புத்தகம் படிப்பதால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார்கள் பலர். அது தவறு. எல்லாப் புத்தகங்களும் அதனதற்கான பயனை உடையதுதான். நமக்குத்தான் புத்தகங்களைப் பயன்படுத்தத் தெரிவது இல்லை. என்ன புத்தகங்கள் படிக்கிறீர்கள் என்பதைவிட, எதற்காகப் புத்தகம் படிக்கிறீர்கள் என்பதும் முக்கியம். பலருக்கு 10 பக்கங்கள் படித்தால், அடுத்த சில நிமிடங்களில் படிக்கிற ஆர்வமே வடிந்து விடுகிறது. மேம்போக்காகப் படிக்காமல் ஆழ்ந்து படிக்க வேண்டும். வாசிப்பை அதிகப்படுத்திக் கொள்ள எளிய வழிகள் இருக்கின்றன.

ஒரு மாதத்துக்கு நான்கு புத்தகங்கள் என்று படித்தால்கூட, வருடத்தில் 50 புத்தகங்கள் படித்து விடலாம். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும். இந்தப் புத்தகங்களை நீங்களே போய் வாங்கிப் படிக்கவேண்டும். படிப்பதோடு நின்றுவிடாமல் படித்த புத்தகத்தைப் பற்றிபகிர்ந்துகொள்ள வேண்டும். சராசரி வாசகர்கள் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவது இல்லை. ஏனென்றால், எல்லாப் புத்தகங்களும் இணையத்தில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. மேலும் கைகளில் புத்தகங்களைப் புரட்டி, ஒவ்வொரு எழுத்தாக வாசித்து, அதன் மணத்தைச் சுவாசித்து என புத்தகத்துடனான உறவு தரும் சந்தோ­ம் நீட்டிக் கொள்ளலாம். மேலும், எதைப் பற்றி குறிப்பாக பதில் அளிக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

பதில் அளிப்பது எப்படி ?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... கல்லூரி நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு, காதல் வெளிப்பட்ட தருணம். நண்பர்களுக்கு இடையிலான மனஸ்தாபம் எனப் பல சூழ்நிலைகளில் தீர்மானித்து இருக்கும். அலுவல் ரீதியாகவோ, விளையாட்டுத் தனமாகவோ... எந்தச் சூழலிலும் வெளிப்படும் உங்கள் பதில் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போதும், அதற்கு நீங்கள் முழு மனதுடன் பதில் அளிக்கும் தொனியுடன் இருங்கள். கேள்வி வந்து விழுந்த பிறகு, அதற்கு எப்படிப் பதில் அளிக்கலாம் என்பதைத் தீர்மானிக்கலாம். ஆனால், முன்னரே நீங்கள் இறுக்கமான மனநிலையில் இருந்தால், எதிராளி உங்களிடம் கேட்க விரும்பிய கேள்வியைக் கேட்காமலேயே கூடப் போகலாம். ஒரு கேள்விக்கான பதில் உங்களுக்குத் தெரியாவிட்டால், நேர்மையாக எனக்குத் தெரியாது என்று ஒப்புக்கொள்ளுங்கள். அந்த நேர்மைக்கு உங்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் விழும்.அதே சமயம், நீங்கள் பொய் சொல்லி மழுப்புவதை எதிராளி உணர்ந்து விட்டால், அதற்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கட்டாயம். ஏதேனும் தகவல்களைக் கோரும் கேள்விக்குப் பதில் தெரியாத சூழலில், மன்னிக்கவும், எனக்கு அது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஆனால், இன்று மாலைக்குள் அதை நான் கண்டுபிடித்துச் சொல்லிவிடுகிறேன் என்று நீங்கள் பதில் அளிக்கலாம். இது, உங்களுக்கு என்ன தெரியாது என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள் என்பதையும், தெரியாத ஒரு விஷ­யத்தைத் தெரிந்துகொள்ளக் கூடிய தன்னம்பிக்கை நிரம்பியவர் நீங்கள் என்பதையும் எதிராளிக்கு உணர்த்தும்.

அலுவல்ரீதியிலான உரையாடல்களின்போது கேள்விகள் உங்கள் பெர்சனல் வாழ்க்கையை உரசினால், ஸாரி சார்... நாம் எனது பணித்திறனைக் காட்டிலும், பெர்சனல் வாழ்க்கையைப் பற்றி அதிகமாக விவாதிக்கிறோம் என்று நினைக்கிறேன். இதோடு அதை நிறுத்திக் கொள்வோம்! என்று பணிவாக அதே சமயம் உறுதியாக உங்கள் மறுப்பினைப் பதிவு செய்து விடுங்கள். எந்தக்கேள்வி - புதிய உரையாடலுக்கும் ஆரோக்கியமாக முற்றுப்புள்ளி வையுங்கள். நிச்சயமாக நீங்கள் விரும்பும் மாற்றம் நிகழும். உங்கள் கேள்விகளுக்குச் சரியான பதில்களை நான் அளித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் என்பது போன்ற பாசிட்டிவ் பதில்கள் உங்கள் இறுதி வார்த்தைகளாக இருக்கட்டும். எந்த உரையாடலையும் வெற்றிகொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். வெற்றி பெற்றதாக நீங்கள் உணர்வதைக் காட்டிலும் அவர் சொல்வது நியாயம்தானே என்று எதிராளியை உணரவைப்பதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

தகவல்: A.M.I ஸாதிக் B.B.A, திருச்சி.
நன்றி - மறைஞானப்பேழை

No comments:

Followers