KILIYANUR ONLINE

Friday 15 July 2011

ஈட்டிகள் இலக்கியங்கள் மீது...

முஸ்லிம்களாகிய நாம், இன்று ஒரு வறட்சியான காலத்தில் வாழ்கிறோம். ஆம்! அந்த வறட்சி; இலக்கியமில்லா வறட்சி. தமிழகத்தைப் பொறுத்தவரை நூறு ஆண்டுகளுக்கு முன், இறைவனையும் அவன் திருத்தூதரையும் போற்றிப்பாடும் எத்தனை இலக்கியங்கள்! மாலை, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், புராணம், கிஸ்ஸா, மசாலா..... என எத்தனை வகையான பிரபந்தங்கள்! அறபு மொழியைப் பொறுத்தவரை சதக்கத்துல்லா அப்பா, மாப்பிள்ளை லெப்பை ஆலிம், உமர் வலியுல்லாஹு, மஹ்மூதுத்தீபி போன்ற மாமேதைகளின் அறபு மொழிக் கவியாக்கங்கள் எத்தனை எத்தனை?

இன்று அவையெல்லாம் எங்கே போயின?

அறபு மொழியை விட்டு விடலாம். தமிழில் புதிய இலக்கியங்கள் பாட கவிஞர்கள் இல்லையா? இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏன் எழுதுவதில்லை? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பொதுவான ஒரு காரணத்தை நாம் இங்கு பேசுவோம். தமிழக முஸ்லிம் மக்களின் கலாச்சாரத்தை இருபது ஆண்டுகளாக சீரழித்த ஒரு சிறிய கூட்டம் இஸ்லாமிய இலக்கியங்களின்மீது வீசிய அபாண்டமான குற்றச்சாட்டுகள்தாம் - திராவகச் சொல் வீச்சுகள்தாம் காரணம்.

கணைகள்

1.உமறுப்புலவரின் சீறாப்புராணம் பாலைவன அறபு நாட்டை சோலைவன

முல்லை மருதமாக வர்ணித்து பொய் சொல்கிறது. தமிழ் இலக்கிய மரபுகளுக்கேற்ப எழுதுவதாக எண்ணி உமறுப்புலவர் இஸ்லாமிய எல்லைகளைத் தாண்டிவிட்டார்.

2. குணங்குடி மஸ்தான் சாஹிபு, பீர் முஹம்மது அப்பா (ரஹ்) போன்றவர்கள் இந்துக்கள் பயன்படுத்தும் சொற்களையல்லாம் தமது பாட்டில் புகுத்தி ஷிர்க் செய்துவிட்டார்கள். ஞானம் என்ற பெயரில் குர்ஆன் ஹதீஸ் கூறாத எதை எதையோ கூறியதாடு மட்டுமின்றி சாமியார்களைப் போல வாழ்ந்து இஸ்லாமிய விதிகளை மீறிவிட்டார்கள்.

3. இஸ்லாமிய இலக்கியம் என்னும் பெயரில் முஸ்லிம் புலவர்களால் எழுதப்பட்ட இலக்கியங்களெல்லாம் ஷிர்க் கலந்தே எழுதப்பட்டுள்ளன.

4. குர்ஆன் ஷ­ரீபில் கவிஞர்களை இறைவன் தரம் தாழ்த்திப் பேசியிருக்கிறான். இஸ்லாத்தில் கவிஞர்களுக்கோ கவிதைகளுக்கோ முக்கியத்துவம் கிடையாது.

இப்படி அவர்கள் தங்கள் அறியாமையால் கூறிய வாதங்களை மக்கள் கேட்டார்கள். நம்பினார்கள். கவிஞர்களும் கேட்டார்கள். கவிஞர்களுக்கு இவர்கள் கூறும் வாதம் பொய் என்று தெரிந்தாலும் சரி.... நமக்கு எதற்கு வம்பு என இதற்கு ஒதுங்கி பதிலுரைக்காமல் ஒதுங்கிக் கொண்டார்கள். எப்படியோ புதிய இலக்கியங்கள் மலரவில்லை. பழைய இலக்கியங்கள் முதுகுக்குப்பின் தூக்கி வீசப்பட்டன. முஸ்லிம் இலக்கிய உலகுக்கு ஆறுதல் தரும் வி­யமாக சங்கைக்குரிய செய்கு நாயகம் அவர்கள் உமர் (ரலி) புராணம் என்ற காவியத்தை எழுதி வருகிறார்கள். அதிரை தாஹா போன்ற கவிஞர்கள், மரபு இலக்கியம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கவிதையில் சில இலக்கிய நூல்கள் வெளிவந்துள்ளன!

சரி..... இப்போது விஷ­யத்துக்கு வருவோம். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் சரியானவைதாமா? என்று பார்ப்போம்.

விடைகள்

1. அல்லாஹ் கவிஞர்களை தரம் தாழ்த்தி எங்கும் கூறவில்லை.

கவிஞர்களாகிய அவர்களை வழிகெட்டவர்கள்தாம் பின்பற்றுகிறார்கள் என்ற இந்த இறைவசனம் "அய்யாமுல் ஜாஹிலிய்யா' எனும் அறியாமைக்கால கவிஞர்களையே குறிப்பிடுகிறது. இறைநம்பிக்கை கொண்ட முஸ்லிம் புலவர்களை அல்ல. ஏனென்றால் ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி), ஹள்ரத் முஆவியா (ரலி) போன்ற சஹாபாக்களே கவிதை பாடியுள்ளார்கள். ஹள்ரத் அலி (ரலி) அவர்களின் ""தீவானே அலீ''' என்ற கவிதைத் தொகுப்பு மிகவும் பிரபல்யமானது. அண்ணலாரின் அருமை மகளார் பாத்திமா நாயகியாரே கவிதைபாடி இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? அருமை நாயகம் (ஸல்) அவர்களே ஓரிரு கவிதை வரிகள் பாடியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் கவிஞர்களாக இருக்க அல்லாஹ் கவிஞர்களை தரம் குறைத்துப் பேசுவானா? சிந்திக்க வேண்டும். மேலும் பெருமானாரால் மேடை அமைத்துக் கொடுக்கப்பட்ட ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தும் (ரலி) பெருமானாரால் பொன்னாடை போர்த்தப்பட்ட கஉபுப் புலவரும் (ரலி) சஹாபிக் கவிஞர்கள் என்பதை உணர வேண்டும்.

காரணம்

தமிழ் இலக்கிய உலகில் காப்பியம் என ஓர் இலக்கிய நூல் போற்றப்படுவதற்கு சில இலக்கணங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த இலக்கணங்கள் என்னவென்றால் அந்நூலில் சூரிய உதயம், சூரியன் மறைவு, கதைநாயகர், நீராடும் படலம், நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, குறிஞ்சி முல்லை மருதம் பாலை எனும் நான்கு நில வர்ணனைகள். மேலும் இவைபோன்ற சில முக்கிய விஷ­யங்கள் இடம் பெறவேண்டும். இவையயல்லாம் இல்லையெனில் அந்த நூல் காப்பிய வரிசையில் இடம் பெறாது.

காவியர்களுக்கெல்லாம் காவியரான அகில நாயகரான ரசூல் (ஸல்) அவர்களின் வரலாறும் ஒரு காப்பிய நூல் வரிசையில் இடம் பெறாத வண்ணம் எழுத உமறுப்புலவரின் உள்ளம் இடம் தரவில்லை. எனவே பாலைவனமாகிய அறபகத்தை சோலைவனமாகக் காட்டியுள்ளார். இலக்கியத்தைப் பொறுத்தவரை இது ஏற்றுக் கொள்ளத்தக்கதே என பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தே நாம் பார்க்கலாம்.

உதாரணம்

இஸ்லாத்தையும் எம்பெருமானாரையும் வரைமுறை கடந்து ஏசியதால் கஃபு எனும் புலவரை கண்ட இடத்தில் கதை முடிக்குமாறு கருணை நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். அவரோ ஒரு நாள் நாயகத்தின் சன்னிதியில் வந்து மன்னிப்பு வேண்டி பெருமானார் (ஸல்) அவர்கள் எதிரிலேயே அவர்களைப் புகழ்ந்து கவிதை பாடுகிறார். அதில் அவர் கூறும் புகழ் மொழிகளைக் கேளுங்கள்.

அன்று அவள், முன்னோக்கி வரும் நிலையில் வயிறு ஒட்டிய மெல்லிடையாளாகவும், திரும்பிச் செல்லும் நிலையில் பின்னழகு மிகுந்தவளாகவும் காணப்பட்டாள். அவளிடத்தில் "குட்டை', "நெட்டை' எனும் குறைபாடுகள் எதுவும் இருந்ததாகப் புகார் கூறப்படவில்லை.

அன்று அவள் புன்னகைத்தபோது ஈரப்பற்களைக் காட்டினாள். அந்த ஈரம், இரண்டாம் முறை மதுவை அருந்தியதால் ஏற்பட்ட ஈரம் போலிருந்தது.

1. நாயகத்தைக் காதலி என்கிறார்.

2. பெண்மான் என வர்ணிக்கிறார்.

3. முன்னழகு - பின்னழகு பற்றிப் பேசுகிறார்.

4. மதுவின் ஈரம் பற்றி நினைவு படுத்துகிறார்.

5. இந்தியாவின் வாள் என்று ஓரிடத்தில் போற்றுகிறார்.


இன்னும் இதுபோன்ற பல வர்ணனைகளால் பெருமானாரை அவர்கள் எதிரிலேயே பாடுகிறார்.

பாராட்டு

அறபு இலக்கிய மரபுக்கேற்ப - அறபுகளிடம் இருந்த பழக்கப்படி அவர் வர்ணனை செய்தபோதும், கஃபே நிறுத்தும் உம்பாட்டை? எம்மை "மான்' என்றும் "மீ'னென்றும் வர்ணித்ததுபோதும் - விலக்கப்பட்ட மதுவைப்பற்றி என்முன்னே பாடுவதா? என்றெல்லாம் பெருமானார் அந்தப் புலவரைத் தடுக்கவில்லை. மாறாக, அவர்கள் தமது கவிதைகளைப் பாடி நிறைவு செய்யும்வரை அமைதியாக காது கொடுத்துக்கேட்டு மகிழ்வுற்று தங்களின் பொன்னாடையை அவருக்குப் போர்த்தி கண்ணியம் செய்தார்களென்றால் அண்ணலார் அறியாதவர்களா! கவிதை மரபுக்கேற்ப அவரின் வர்ணனைகளைக் கேட்டு ரசிக்கத்தானே செய்தார்கள். மொத்தத்தில் அந்தக் கவிதையில் உள்ளே இருந்த அன்பை மட்டும்தானே அவர்கள் கவனித்தார்கள்.

அழகுபடுத்தி.....

கவிதைகள் என்பது உணவு வகையில் நாம் சாப்பிடும் கேக் வகை போன்றது. கேக் உணவை மைதா மாவினால், சாப்பிடுவதற்கு ஏற்றவாறு செய்து சாப்பிட்டால் பசி அடங்கிவிடும். ஆனால் அதையே அழகான ஒரு வடிவில் அதன் மேற்பகுதியையும் சுற்றுப் புறத்தையும் வண்ண வண்ணமாக அலங்கரித்துச் சாப்பிட்டால் அதன் சுவையே சுவைதான். அதுபோலத்தான் சொல்லவரும் செய்தியை அழகுபடுத்திக் கூறுவது இலக்கிய மரபு. உமறுப் புலவர் மீது குற்றம் கூறும் இவர்கள் நபித்தோழர் கஉபு (ரலி) அவர்கள்மீதும் குற்றம் கூறத் துணிவார்களா? ஒரு மொழி பற்றி இலக்கியம் பற்றி - இலக்கணம் பற்றி அறியாத இந்த மண்டூகங்கள் வாய்க்கு வந்தவையயல்லாம் பேசினார்கள். நாமும் அதைக்கேட்டு நமது முன்னோர்களான மேதைகளின் அருமையான இலக்கியங்கள் மீதெல்லாம் வெறுப்பை வளர்த்துக் கொண்டோம். என்னே காலத்தின் கோலம்!

ஷிர்க்கா?

2. முஸ்லிம் புலவர்கள் இயற்றிய இஸ்லாமிய இலக்கியங்கள் அனைத்தும் ´ஷிர்க் எனும் இணை வைத்தலைவிட்டும் தப்பவில்லை.

முஸ்லிம் புலவர்கள் அனைவரும் இந்தக் குற்றச்சாட்டு கூறுபவர்களைவிட அதிகம் அறிந்தவர்கள். இறையச்ச முள்ளவர்கள். மேலும் இவர்கள் இலக்கியம் செய்த காலத்தில் வாழ்ந்த மார்க்க மேதைகள் எவரும் இவர்களின் இலக்கியங்களை ­ஷரீஅத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்ததில்லை. அதிமேதாவிகளான இவர்களின் பார்வையில் கோளாறு இருப்பதால் அவை தவறாகத் தெரிகின்றன.

காலமறிந்து

3. குணங்குடி மஸ்தான் அப்பா அவர்கள் தாயுமானவர் - வள்ளலார் போன்றவர்கள் இலக்கியம் செய்த காலத்தில் வாழ்ந்தவர்கள். தமிழ் பேசும் மக்களிடம் அதிகம் செல்வாக்குப் பெற்ற அவர்களின் இலக்கிய வடிவங்களிலேயே இவர்கள் எழுதவில்லையயன்றால் முஸ்லிம்களின் மனம் அவர்களின் இலக்கியங்களில் ஈர்க்கப்பட்டுவிடும். ஒவ்வொரு காலத்திலும் மக்களால் மதிக்கப்படும் வி­யங்களில் அதைவிட மதிப்பு வாய்ந்ததைக் காட்டித்தான் இஸ்லாம் வளர்ந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக மூஸா (அலை) அவர்களுக்கு மாந்திரீகத்தை மிகைக்கும் அதேபோன்ற அற்புதமும், ஈஸா (அலை) அவர்களுக்கு மருத்துவத்தை மிகைக்கும் நோய்நீக்கும் அற்புதமும், கவிதைகளில் மிகைத்த அறபு நாட்டில் கவிஞர்கள் வியக்கும் வண்ணம் கவிதை போன்றும் - அதனை மிகைத்த குர்ஆன்­ஷரீபும் இறைவனால் அருளப்பட்டதை எடுத்துக் காட்டலாம். கிரேக்கத் தத்துவதத்தில் முஸ்லிம்களின் மனம் ஈர்க்கப்பட்ட காலத்தில் அதே தத்துவ பாணியிலே நூல்கள் எழுதிய கஸ்ஸாலி (ரஹ்) அவர்களையும் முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

எனவே முஸ்லிம் புலவர்கள் தாம் வாழ்ந்த காலத்திற்கேற்ப - களத்திற்கேற்ப இலக்கியம் செய்தார்கள். பீர் முஹம்மது அப்பா அவர்கள் சித்தர்களின் அடியயாற்றி இலக்கியம் கண்டார்கள். காசிம் புலவர் அருணகிரி நாதரின் திருப்புகழ் வழியில் தமது நூல் யாத்தார். மேலும் மஸ்தான் அப்பா அவர்களின் பாடல்களில் வரும் இந்துக்கள் விளக்கும் தமிழ்ச்சொற்கள் அனைத்தும் ஞானத்தை விளக்கும் தமிழ்ச் சொற்கள். இந்துக்களின் தெய்வங்களைக் குறிப்பிடுவது போன்ற வார்த்தைகள் தத்துவங்களையே குறிப்பிடுவது என்பதை சிந்திக்கும் திறனுடையோர் புரிந்து கொள்வர்.

ஆக, இஸ்லாமிய இலக்கியங்கள் உயர்ந்த நோக்கத்திற்கு மிக உயர்ந்த மகான்களால் மாமேதைகளாகிய புலவர்களால் எழுதப்பட்டன. அவற்றின்மீது இவர்கள் தொடுத்த தாக்குதல்களால் இளைய சமுதாயம் அவைபற்றிய அறிமுகமே அற்றுப்போய் விட்டது. முன்னோர்களின் காலடிச் சுவடுகள் மூர்க்கர்களால் அழிக்கப்பட்டும் போய்விட்டன. முன்னோர்களின் தடம் அறியாமல் பின்வருவோர் எப்படி இலக்கியம் செய்ய முடியும்?

( கலீபா ஆலிம் புலவர் S. ஹுஸைன் முஹம்மது மன்பயீ )

நன்றி - மறைஞானப்பேழை

No comments:

Followers