KILIYANUR ONLINE

Wednesday 3 August 2011

வெற்றிக்கு ஒரு விசா

நமது தன்னம்பிக்கை குறைந்து கொண்டே போவதற்கு பல காரணங்கள் உள்ளன. நமது பெற்றோர் நமக்கு தேவையான அளவிற்கு ஊக்குவிக்கவில்லை. ஆசிரியர்களும் நமது தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் நமது தன்னம்பிக்கையைக் குறைப்பதற்கான பல வேலைகளை அனைவரும் செய்திருக்கிறார்கள். நீ அதைச் செய்யாதே. இதைச் செய்யாதே எனத் தடை போட்டிருக்கிறார்கள்; அப்படிச் செய்தால் நீ அவ்வளவுதான் எனப் பயமுறுத்தியிருக்கிறார்கள். பல நேரங்களில் நம்மை உற்சாகப்படுத்த வேண்டிய நேரங்களில் நம்மை பலவீனப்படுத்தியிருக்கிறார்கள். வெற்றிக் கதைகளைச் சொல்லவில்லை. மாறாக தோல்வி பெற்றவர்களை உதாரணம் காட்டியிருக்கிறார்கள்.
“அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்பது போல் பலமுறை நமது மனதைச் சம்மட்டியால் அடித்து அடித்து நமது தன்னம்பிக்கையைப் போக்கியிருக்கிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இப்படித்தான் ஊக்கப்படுத்த வேண்டும் என அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
இந்தப் போட்டி நிறைந்த உலகத்தில் தன்னம்பிக் கையை வளர்த்துக் கொள்வது எப்படி ?
1. ஒரு நாட்குறிப்பு புத்தகத்தை (டயரியை) எடுத்துக் கொள்ளுங்கள். பள்ளி சென்றநாள் முதல் இது வரை எத்தனை பதக்கங்கள், பட்டங்கள், பரிசுகள், சான்றிதழ்கள் வாங்கியுள்ளீர்கள் எனக் குறித்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கான வெற்றி நாட்குறிப்பு.
2. காலையில் எழுந்தவுடன் நான் தன்னம்பிக்கை மிக்கவன் என ஐந்து முறை உங்களுக்குத் சொல்லிக் கொள்ளுங்கள்.
3. முகம் பார்க்கும் கண்ணாடியில் உங்களது வலது கைப்பக்கத்தில் கண்ணாடியின் மேல் புறத்தில் “என்னால் முடியும” என எழுதிப் வையுங்கள்.
4. “நான் சாதிக்கப் பிறந்தவன். சாதித்துக் காட்டுவேன்” என ஒரு பேப்பரில் பெரிதாக எழுதி கண்ணில் படும்படியான இடத்தில் ஒட்டி வையுங்கள்.
5. எப்பொழுதெல்லாம் வாழ்க்கை டல்லடிப்பது போல் தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் உங்களது வெற்றி டயரியை எடுத்து படித்திடுங்கள். அடுத்ததாக என்ன செய்யலாம்? என மனம் தேட ஆரம்பித்து விடும்.
6. வெற்றி பெற்றவர்களைச் சந்திக்க முயலுங்கள்; வாய்ப்பு கிடைத்தால் கை கொடுத்து விட்டு வாருங்கள்.
7. நட்சத்திர ஹோட்டல் இருந்தால் அதிலுள்ள வரவேற்பு அறையில் போய் கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு வாருங்கள். நாமும் இதில் வந்து தங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என எண்ணுங்கள் அது நம்பிக்கையை அதிகமாக்கும்.
8. உங்கள் கம்ப்யூட்டரில் டெஸ்க்டாப்பில் வெற்றி வாசகங்களை உலவ விடுங்கள்.
9. வீட்டில் நற்சிந்தனைகளைத் தரக்கூடிய சுவரொட்டிகளை ஒட்டி வையுங்கள்.
10. ஐந்து வருடம் கழித்து என்னவாக ஆக வேண்டும் என்பதை நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் அடிக்கடி சொல்லி வாருங்கள்.
11. தோல்விகள் பற்றி கேள்விப் படும் பொழுதெல்லாம் அதில் என்ன நல்ல விஷயம் இருக்கக் கூடும் என ஆராயுங்கள்.
12. ஆடைகள் அணிவதில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
13. நடக்கும் பொழுது சாதாரணமாக நடப்பதை விட சற்று வேகமாக நடந்து வாருங்கள்.
14. மற்றவர்களைப் பாராட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
15. எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ பயிற்சி வகுப்புகள் மற்றும் கூட்டங்களின் போது முதல் வரிசையில் அமருங்கள்.
16. மற்றவர்களைச் சந்திக்கும் பொழுது வாழ்த்துங்கள்.
தன்னம்பிக்கை என்பது நாம் என்ன உணருகிறோம் என்பது தான். இவைகளைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் கடைபிடித்து வாருங்கள். உங்களது தன்னம்பிக்கை எப்படி அதிகமாகாமல் போகிறதென்று பார்ப்போம். முயன்றவனுக்குத் தோல்வியில்லை. வெற்றிப் பாதையில் நடக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

2 comments:

அமர பாரதி said...

அற்புதமான பதிவு. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பெற்றோர்கள் தனக்கு அடங்கி பிள்ளைகள் இருக்க வேண்டுமென்பதற்காக அவர்களின் சுய தன்னம்பிக்கையை சிதைத்து விடுகிறார்கள்.

கிளியனூர் ஆன்லைன் said...

மிக்க நன்றி அமர பாரதி

Followers