KILIYANUR ONLINE

Saturday 20 August 2011

நலம் காக்கும் காய கற்பம் எலுமிச்சை

உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது.

தோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினான். காலஞ் செல்லச்செல்ல எலுமிச்சம் பழத்தில் பொதிந்திருக்கும் எண்ணற்ற சத்துக்களும் மருத்துவ குணங்களும் பலவாறாக உணரப்பட்டு இன்றளவும் அதனைப் பயன்படுத்தும் தன்மை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. இந்திய நாட்டை பொருத்தமட்டில் மக்கள் எலுமிச்சம் பழத்தைச் சமையல் நோக்கிலேயே பயன்படுத்துகிறார்கள். தற்காலத்தில் வணிக நோக்குடன் ஜாம், ஜெல்லி, மார்மலேடு, லெமனைடு, மது பானம் போன்றவற்றையும் பெருமளவில் தயாரிக்கிறார்கள். மற்றும் எலுமிச்சை ரசம், எலுமிச்சை எண்ணெய், கால்சியம், சிட்ரேட் போன்ற பொருட்களும் வணிக நோக்குடன் தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர உலோகத்தால் செய்த கலங்களைச் சுத்தம் செய்ய உலர வைக்கப்பட்ட எலுமிச்சைத் தோல்களைப் பயன்படுத்துகிறார்கள்.

எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது.

மருத்துவ நோக்கில் இன்று எலுமிச்சை பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு. முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும்.

எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.

எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம்.

எல்லா வகையிலும் ஏற்றமிகு பானம்:

எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் பழ வகைகள் அனைத்தையுமே சாப்பிட எல்லாக் காலத்திலும் எந்த நிலையிலும் இயலும் என்று கூறவியலாது.

அவர்கள் நாட்டுத் தட்பவெப்பம் காரணமாக சில பழங்களை சில பருவங்களில் பிடிவாதமாகச் சாப்பிட்டால் அவர்கள் உடம்புக்கு ஒத்துக்கொள்வது இல்லை.

ஆனால் அவர்கள் எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்கிறது. அவர்கள் எலுமிச்சம் பழத்தை விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.

பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மேலை நாட்டில் இருந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது. பச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்ட எலுமிச்சம் பழ ரசம் சிறப்பாகப் பயன்படுகிறது.

இவ்வாறு பச்சைக் காய்கறிகளுடன் எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ளும்போது பச்சைக் காய்கறிகளுக்குள் ஊட்டச்சத்தின் தன்மை அளிக்கிறது. நமது நாட்டில் இயற்கைச் சிகிச்சை மருத்துவ முறையில் எலுமிச்சம் பழம் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. எலுமிச்சையில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதுதான் அதற்குக் காரணம்.

சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது.

நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

பச்சையாகப் பறிக்கப்படும் எலுமிச்சம் பழங்களில் சத்துக்கள் மற்றும் உயிர்ப் பொருட்கள் முழுமை பெறாமலேயே இருக்கக் கூடும்.

மருத்துவ நோக்கில் பயன்படக்கூடிய எலுமிச்சம் பழங்கள் கூடியவரை மரத்திலேயே பழுத்தவையாக இருந்தால்தான் சிறப்பான பயன் கிடைக்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும்.

எலுமிச்சைச் சாற்றைத் தனியாக அருந்தினால் பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும்.

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும்.

எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம்.

எலுமிச்சம் பழரசத்தை பானமாக அருந்த விரும்பினால் ரசத்துடன் போதுமான அளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிக்கலாம்.

பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம்.

சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும்.

எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும்.

எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

எலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.

எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும்.

சற்று உலர்ந்து போன எலுமிச்சம் பழத்தைக்கூட இளம் வெந்நீரில் போட்டு எடுத்தால் பழம் நன்கு துவண்டு அதிக அளவுக்குச் சாறு கிடைக்கும்.

நலம் காக்கும் காய கற்பம்:

எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு.

இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது.

மற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.

நன்றி: தமிழ்க் கதிர்

2 comments:

Unknown said...

எலுமிச்சையின் நன்மைகளோடு,தவறாக பயன்படுத்தினால் உண்டாகும் தீமைகளையும் குறிப்பிட்டது நன்று.பகிர்வுக்கு நன்றி.

கிளியனூர் ஆன்லைன் said...

நன்றி R.ELAN

Followers