KILIYANUR ONLINE

Wednesday 31 August 2011

காலம் நமக்கு சாதகம்...

இந்தியாவின் வளர்ச்சி கிராமப்புறங்களில்தான் இருக்கிறது என்றார் காந்தியடிகள். கிராமப்புறங்கள் வளர்ந்தால் இந்தியா வல்லரசாகிவிடும் என்கிறார் டாக்டர் அப்துல் கலாம்.

கிராமங்கள் முன்னேறாமல் நாம் முழு வளர்ச்சியைப் பெற்றுவிட முடியாது. வல்லரசு கனவு காணும் அனைவருக்குமான கலாம் வகுக்கும் பாதை இதோ...

ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் பொருளாதார வளர்ச்சியிலும், அந்நாட்டின் பாதுகாப்பிலும் தான் அடங்கியிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு போட்டித்தன்மை மிக்க பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது இன்றியமையாதது. இருபத்தியோராம் நூற்றாண்டு உலகத்தில் சமூகங்களின் முக்கிய மூலதனம் பணமோ, தொழிலாளர்களின் அளவோ அல்ல. மாறாக அறிவே முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சமூகத்தில் அறிவாற்றலின் சீரான வளர்ச்சி மற்றும் அதன் முறையான பயன்பாட்டின் மூலம் வாழ்க்கைத் தரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும்.

சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு முதலிய அளவீடுகளைக் கொண்டு வாழ்க்கைத் தரத்தை அளக்கலாம். நம் கனவு முன்னேறிய இந்தியா. அதற்கு அடிப்படைத் தேவை அறிவுசார் சமூகம். இந்தியாவில் இயற்கை வளங்களுக்கும், மனித வளத்துக்கும் பஞ்சமேயில்லை. நம் நாட்டிற்கென்று சில முக்கிய போட்டித்தன்மைகள் உள்ளன. நம் நாட்டின் மக்கள்தொகையைச் சுமையாக எண்ணக்கூடாது. ஆனால், இவை அனைத்தும் தனித்தனியான குழுவாக சிதறிக்கிடக்கின்றன.

இன்றுள்ள இந்தியர்களும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிற நாளைய மக்களும் சமுதாய உயர்வு காணாத வரை நம் நாட்டை நாம் முன்னேறிய நாடாக கருதிக் கொள்ள முடியாது. நம் மக்கள் அனைவரும் பாதுகாப்பான மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு நிகழ்காலத்தைப் பெற்றிருப்பதுடன் சிறந்த ஓர் எதிர்காலத்தை முன்னோக்குகிற நிலையில் இருக்க வேண்டும்.

அத்தகைய வளர்ச்சியுற்ற இந்தியாவைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். வளர்ந்து கொண்டிருக்கும் நாடு வளர்ச்சியுற்ற நாடாக வேண்டும் எனில், தன் பொருட்களை பல்வேறு நாடுகளிலும் சந்தைப்படுத்த வேண்டும். போட்டித்திறன்தான் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும். பொருளின் தரம், நல்ல பலன் தரக்கூடிய விலை, குறித்த நேரத்தில் தேவையைப் பூர்த்தி செய்வது ஆகியனவாகும்.

வளர்ந்து கொண்டிருக்கிற, வளர்ச்சியுற்ற நாடுகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதில் கொண்டிருக்கும் போட்டியிடும் ஆற்றல்தான் முன்னேற்ற விதி என்பது. வளர்ச்சியடைந்த இந்தியா என்பதன் பொருள், நம் நாட்டின் பொருளாதாரத்தை உலகிலேயே மிகப்பெரும் பொருளாதார நிலைக்கு மாற்றுவதுதான். மக்கள் வறுமை கோட்டுக்கு மேலாய் வாழ வேண்டும்.

அவர்களுடைய கல்வியும் ஆரோக்கியமும் உயர்தரமாக இருக்க வேண்டும். இந்தியாவின் கிராமங்களுக்கு நகரங்களைப் போன்ற வசதிகள் கிடைக்கிற போதுதான் நாம் முன்னேறிய நாடாக ஆவோம். அப்போதுதான் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயரும் வீதம் குறையும். வேலைவாய்ப்புகள் நகரங்களில் அதிகம் என்பதால், மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயரத் தொடங்கிவிட்டனர்.

பெரும்பாலான நகரங்களில் 50 சதவீதத்துக்கும் மேல், குடிசைப்பகுதிகளாகவும், வசதியற்ற தன்மைகளுடனும் வாழத் தகுதியற்றதாக உள்ளன. அங்குள்ள மக்கள் புறநகர்ப்பகுதிகளில் வசிப்பதால் வேலைக்குப் போய் வருவதிலேயே களைத்து சோர்ந்து விடுகிறார்கள். எனவே சாலை வளையங்கள் மூலம் கிராமத் தொகுப்புகளை இணைத்து ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு போக்குவரத்தை எளிதாக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் கிராமங்கள் தன்னிறைவு அடைய செய்யும்.

தகவல்தொடர்பு தொழில்நுட்பம், விவசாயம், தொழிற்துறை மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் அறிவு உருவாக்கம் மற்றும் அறிவு குவித்தல் எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதைக் கொண்டுதான் ஒரு நாடு வளர்ந்த அறிவுசார் சமூகம் என்ற நிலையை அடைந்துவிட்டதா என்று சோதிக்க இயலும்.

நம் நாட்டின் அடிப்படைப் படிப்பனைகளாக வல்லுனர் குழுக்களால் அடையாளம் காட்டப்படுபவை:
1. தகவல்தொடர்பு தொழில்நுட்பத்துறை
2. விண்வெளி ஆராய்ச்சி
3. பயோ-டெக்னாலஜி
4. வானிலை முன்னறிவித்தல் தொழில்நுட்பம்
5. நவீன தொலை மருத்துவம் மற்றும் தொலை கல்வி
ஆகிய அனைத்தும் தகவல் தொழில்நுட்பத்துறை என்னும் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

நம் இந்தியா தகவல்தொடர்பு சமூகமாக மாறிக்கொண்டுவருகிறது. ஆனால் அறிவுசார் சமூகமாக மாற இத்துறையில் மட்டுமில்லாமல் பலமுனைகளிலும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காணவேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் நமக்குச் சாதகமாக உள்ளன.

உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

- டாக்டர் அப்துல் கலாம்

நன்றி - கல்வி மலர்

No comments:

Followers