KILIYANUR ONLINE

Thursday 1 September 2011

துவக்கப் பள்ளியிலேயே நல்லொழுக்கம்

நல்லொழுக்கத்தை அறிவுறுத்துபவர் நல் ஒழுக்கத்தை கடைபிடிப்பவராக இருக்க வேண்டும். அவ்வகையில் டாக்டர் அப்துல் கலாம் தனிநபர் நல்லொழுக்கத்தை கடைபிடித்து சிறந்து விளங்குகிறார்.

அவர் ஜனாதிபதியாக இருந்த போதிலும் அதற்கு முன்பும் பின்பும் அவர் மிகச்சிறந்த மனிதராக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது கருத்துக்கள் மாணவர்களுக்காக இங்கே...

மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் எனும் அருமையான படைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவேன்



வேதாந்த மகரிஷி அவர்களின் ஞானமும் வாழ்வும் எனும் புத்தகத்தை படித்தேன். அதில், பரமாணுக்கள் கூடிய கொத்து நிகழ்ச்சி அணுவாக (ஆட்டம்) வெளிப்படுகிறது, அணுக்கள் பல இணைந்து கொத்து நிகழ்ச்சி பேரணு (மாலிக்யூல்) எனப்படுகிறது. பேரணுக்கள் பல இணைந்த நிகழ்ச்சியே சிற்றறை (செல்) எனப்படுகிறது. சிற்றறைகள் இணைந்த பல கொத்து நிகழ்ச்சிகள்தான் பல தோற்றங்கள். கோள்கள், பூமி, உயிர்கள் யாவுமே அணுக்கள் கூடி இயங்கும் கொத்து நிகழ்ச்சிகளே. இதைப் படித்தவுடன் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உள்ள சரஸ்வதி வணக்கம் என் கண் முன் தோன்றுகிறது.

இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்புகின்றார்
இடையின்றி தொழில்புரிதல் உலகினிடைப்
பொருட்களெல்லாம் இயற்கையாயின்
இடையின்றி கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொணாதோ?

இதனுடைய அறிவியல் கருத்தைப் பார்க்கும் போது அணுக்களில் பரமாணுக்கள் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. நம் பூமி கதிரவனை சுற்றி வருகிறது. இதுபோல் கதிரவன், பூமி எல்லாமே சுழற்சியின் இயக்கத்தில், நமது அண்டசராசரத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றன. இச்சுற்றல்கள் ஓயாது ஒழியாது நடந்து கொண்டேயிருக்கின்றன. அதே போல் நாமும் ஓயாது, துவளாது முயற்சி செய்தால் இறையருளால் நம்நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பாரதியார் ஒரு விஞ்ஞானி போல் கவிதை பாடுகிறார். நம் உள்ளங்கள் சிலிர்க்கின்றன.

மகரிஷி சொல்கிறார்... “பரமாணுக்களும் அவற்றின் கொத்து நிகழ்ச்சிகளும் பல்வேறு கட்டங்களை அடைந்து அவை சேர்ந்து இணைந்து இயங்கும் விளைவாக உருவம் ஒலி, ஒளி, சுவை, மனம் என்ற ஐவகை நிகழ்ச்சிப் பிரிவுகள் உண்டாகின்றன. எந்த கட்டத்தில் எந்த நிகழ்ச்சி உண்டாகிறது என்று கணித்த முற்கால அறிஞர்கள் ஒவ்வொரு கட்டமாக பிரிந்து விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற பஞ்சபூத தத்துவ இலக்கணமாக கொண்டார்கள்.”

இந்த கருத்து எனக்கு மிகவும் பிடித்தமானது. மாணவர்களை சந்திக்கும் போதெல்லாம், இவற்றை நான் ஆங்கிலத்தில் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு.
நல் ஒழுக்கம் என்பது முழு உலகத்துக்கும் பொதுவானது. உலகில் அமைதி நிலவ வேண்டுமென்றால், நாட்டில் சீர்முறை நிலவ வேண்டும். வீட்டில் சாந்தம் நிலவ வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் மனதில் நல் ஒழுக்கம் உதிக்க வேண்டும்.

ஒவ்வொருவரிடமும் நல் ஒழுக்கம் எப்படி உதிக்கும். இதை மூவரால்தான் செய்ய முடியும். அவர்கள் மாதா, பிதா மற்றும் குரு. ஆரம்ப பள்ளி ஆசிரியர்தான் ஒழுக்கத்தை கற்பிப்பதில் சிறந்தவர். அங்கே தவறவிட்டால் அடுத்த இடம் ஆன்மிக மையங்கள்தான். இளமையில் பெறக்கூடிய நல் ஒழுக்கம்தான் முதுமை வரை நம் துணை நிற்கும்.

மாணவ மாணவிகள் கீழ்க்கண்ட பத்து உறுதிமொழியை தவறாது கடைபிடிக்க வேண்டும். நான் எனது வாழ்க்கையில் நல்ல லட்சியத்தை மேற்கொள்வேன்.
நன்றாக உழைத்துப் படித்து என் வாழ்க்கை லட்சியத்தை அடைய முற்படுவேன். நான் எனது விடுமுறை நாட்களில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுதப்படிக்க சொல்லித் தருவேன். என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்த பட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து மரமாக்குவேன்.

மது, சூதாடுதல் மற்றும் போதை பழக்கங்களுக்கு ஆளாகி துயருரும் ஐந்து பேரையாவது மீட்டு அதிலிருந்து நல்வழிப்படுத்த முயற்சி செய்வேன். துயர்படும் ஐந்து பேரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரை துடைப்பேன்.


நான் ஜாதியின் பெயராலோ மதத்தின் பெயராலோ மொழியின் பெயராலோ எவ்வித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.
நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன். என் தாய் மற்றும் தாய்நாட்டை நேசித்து பெண்குலத்துக்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் அளிப்பேன். நான், நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக சுடர்விட செய்வேன்.

உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...


- டாக்டர் அப்துல் கலாம் -

நன்றி - கல்வி மலர்

No comments:

Followers