முதல்பக்கம் » டாக்டர்.அப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்
ஏராளமான புத்தகங்களை படிப்பவர் டாக்டர் அப்துல் கலாம். புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறும் அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
கண்ணீரை துடைப்பதற்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் புத்தகங்கள் துணையாக இருப்பதாக மாணவர்களிடம் கலாம் இங்கு மனம் திறக்கிறார்...
வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அசாம், மேகாலயா, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கு நான் முன்பு சென்றிருந்தேன். அப்போது வடகிழக்கு மாநில மொழிகள் சார்ந்த பல இலக்கியவாதிகளையும், சிந்தனையாளர்களையும் நான் சந்தித்தேன். அவர்கள் இலக்கியப் படைப்புகளையும் தந்திருக்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். மிசோராமில் தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் இசைநாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன்.
அது போன்றே சிக்கிமில் நேபாளி, பூட்டியா, லெப்ச்சா என்ற மூன்று பிரிவினரின் ஒருங்கிணைந்த கலைகளையும் நான் கண்டேன். ஆற்றலும், அழகும் இசைந்திருந்த இசை, நாட்டியங்கள் ஒன்றுபட்ட மனங்களைச் சித்தரித்தது கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். அதுவும் சமுதாயத்தில் நிலவும் வேற்றுமைகளை முன்வைப்பது பொது இயல்பாக இருக்க, பன்முகப் பண்பாடுகள் ஒருமுகமாக இணைத்து வைக்கப்பட்டதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி.
அந்த நிகழ்வுகளில் மிக உன்னதமான ஓர் அனுபவம் மிசோராமில் ஏற்பட்டது. மிசோராமின் தலைநகரான ஐசாலிலிருந்து மாலை 4 மணிக்கு மேல் பொதுவாக விமானப் போக்குவரத்து இல்லை. ஆனால் எனக்கு ஐசாலில் இரவு 9.00 மணிவரை வேலை இருந்தது. அன்றிரவே டில்லி திரும்ப வேண்டிய அவசியமும் இருந்தது. எனவே, நம் விமானப்படையினர் அந்த இரவு நேரத்தில், விமானம் புறப்படுவதற்குத் தேவையான குறைந்தபட்ச ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தனர்.
விமான நிலையத்துக்கு என் குழுவினருடன் நான் வந்து சேர்ந்தேன். கவர்னர், முதல்வர் மற்ற அரசு அலுவலர்களும் வந்து சேர்ந்தனர். அப்போது அங்கே சூழ்ந்திருந்த இருட்டில், விமானத்தில் எரியும் விளக்கு வெளிச்சத்தை மட்டுமே உதவியாகக் கொண்டு ஓர் அரிய காட்சி நிகழ்வதை நான் கண்டேன். விமானத்தின் அருகில், பாதுகாப்பான தூரத்தில் இசைக் கருவிகளோடு ஒரு பாடகர் குழு காத்திருந்தது.
என்னைக் கண்டவுடன், அவர்கள் மிசோராமின் கவிஞர் ரோகுங்கா இயற்றித் தந்திருந்த ஒரு மிக இனிய, அழகிய பிரிவு உபசாரப் பாடலைப் பாடத் தொடங்கினார்கள். அந்தப் பாடலுக்குப் ‘பிரிவின் உலகம்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
அதன் பொருள்:
‘கனத்து விம்மும் இதயத்தோடு
பிரிகிறோம் நாம் இப்போது
நாம் வாழும் உலகத்தில் ‘பிரிவு’ என்பதை
தெய்வப் பிதாவோ விதித்து விட்டார்
ஆனால் இதனினும் சிறந்த உலகில்
நிச்சயம் வாழவே படைக்கப்பட்டுள்ளோம்
வேதனைப் பிரிவுகள் ஏதுமில்லாத
அழியா நகரொன்றில் வாழ்வோம் நாம்’
இந்தியாவின் எல்லையற்ற வாழ்வின் அழகிலும், பாடலின் உணர்ச்சி ததும்பும் இசையிலும், நம் பன்முகக் கலாசாரத்திலும், அவை ஒன்றுபடும் இந்தப் பெரிய நாட்டின் உள்ளத்தொருமையிலும் நான் நெகிழ்ந்து போனேன். பாரதிய ஞானபீடம் இந்த உண்மையை நெருங்கியுணர்ந்து, நம் அரசியல் அமைப்பின் 8-ஆவது பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் சாதனை நிகழ்த்திய எழுத்தாளர்களை மதித்துப் போற்றுவது எனக்கு மகிழ்வூட்டுகிறது.
1950-களில் சென்னை மூர் மார்க்கெட் பழைய புத்தகக் கடையில் 'Light from Many Lamps’ என்ற புத்தகத்தை நான் வாங்கினேன். ஒரு கட்டுரைப் போட்டியில் பரிசாக மு. வரதராசனாரின் ’திருக்குறள் - தெளிவுரை ’ எனக்குக் கிடைத்தது. இந்த இரண்டு நூல்களும் என் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டன. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அவை என் தோழர்கள்.
பலமுறை என்னை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு அவை படித்துப் படித்துப் பழையதாகி விட்டன. எப்பொழுதாவது எனக்குச் சிக்கல்கள் எழுந்தால், இந்த நூல்கள் தந்த மகத்தான மனங்களின் அனுபவங்களால் என் கண்ணீர் துடைக்கப்படுகிறது. மகிழ்ச்சி நம்மை இன்பத்தில் மூழ்கடிக்கிற போதோ, அவை நம் மனதை மெலிதாய் வருடி நம்மைச் சமநிலைக்குக் கொண்டு வருகின்றன. அடிப்படையில் புத்தகங்கள் அமரத்துவம் வாய்ந்தவை.
வளர்ச்சியடைந்த இந்தியா என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்காது. இந்தியக் கலை, இலக்கியம், மனித நேயம், மாண்புமிக்க சிந்தனைகள் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் ஐயாயிரம் ஆண்டின் வளமான பாரம்பரியம் அனைத்தின் ஒன்றுபட்ட வளர்ச்சியையும் அது குறிக்கும்.
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
நன்றி - கல்வி மலர்
No comments:
Post a Comment